Published:Updated:

சக்தி கொடு! - 9

கோதை ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
News
கோதை ஆண்டாள்

`கோதை ஆண்டாள்...'

காவியங்கள், காப்பியங்கள், இதிகாச - புராணங்கள்... எவ்வளவு... எவ்வளவு! அனைத்தும் அறவுரைகளாலும் அறிவுரைகளாலும் நிறைந்தவை. அவை அனைத்திலும் முதலும் முடிவுமாக, ‘தெய்வத்தை அடை. அதற்கு முயற்சி செய்’ என்பதே இலக்காக, இலட்சியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தெய்வத்தை அடையவேண்டும் என்பது, இறந்தபின் அடையப்படும் நிலையல்ல. இங்கு, பூவுலகில் இருக்கும்போதே தெய்விகநிலையை அடைவதாகும். அந்த நிலையை அடைந்தவர்கள் பலர். அவர்களின் அனுபவ மொழிகள் பாடல்களாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் ‘நாச்சியார் திருமொழி’யைச் சிறிதளவு அனுபவி்க்கலாம்.

சக்தி கொடு! - 9

ஆடிப்பூரத்தில் வந்துதித்த கோதை நாச்சியார், அருளிச் செய்த பொக்கிஷம் அது. ஆம், ‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே’ என்றுபோற்றித் துதிக்கப்படும் ஆண்டாளே, ‘நாச்சியார் திருமொழி’யைப் பாடியளித்தவர். ஆண்டாளை ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்’ எனப் போற்றிப் பாடுவார் கண்ணதாசன்.

ஆண்டாள் தமிழை ஆண்டாளா... எப்படி?

தமிழில் ‘ழ’ எனும் எழுத்து மிகவும் உயர்ந்தது; தமிழுக்கே உண்டான பெருமை அது. அப்படிப்பட்ட ‘ழ’கரத்தை அதிகமாக ஆண்டு, பாடல் பாடியவர் ஆண்டாள். ஆம்! நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களிலேயே, அதிக அளவில் ‘ழ’கரம் இடம்பெற்றுள்ள பாடலைப் பாடியது ஆண்டாள்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து

பாழியந் தோளுடை பத்மநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழேதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

திவ்வியப் பிரபந்தப் பாடல்களில், ‘ழ’கரம் அதிகமாக இடம்பெற்ற பாடல் இதுவே.

அதுமட்டுமல்ல, இன்றைய நிலையில் அதிகமாக - அவசியமாகத் தேவைப்படுவதையும் இந்தப் பாடல் அருளும். மழை வேண்டி பாடப்பட்ட இப்பாடலை நாம் அனைவரும், ஒரு முறையாவது மனம் ஊன்றிப் படித்து வேண்டினால், ஆண்டாள் அருளாலும் ஆயர்குலாதிபனான கண்ணன் அருளாலும் மழை பெய்யும்!

வாருங்கள்! தான் கண்ணனின் கைத்தலம் பற்றிய கனவை, ஆண்டாளே ஒரு நேர்முக ஒளிபரப்பாகவே வர்ணிக்கிறார். அதை தரிசிக்கலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூரணக் கும்பம் வைத்துத் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மணப்பந்தல் இடப் பட்டு, ஏராளமான முத்துச்சரங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. கண்ணன் வருகிறார். அவரை வரவேற்று, முகூர்த்த நாளும் குறிக்கப்படுகிறது. கண்ணனோடு அமர்ந்திருக்கிறார் ஆண்டாள். பாணிக்கிரகணம் எனும் கைத்தலம் பற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அக்னி வலம் வருதல், அம்மி மிதித்தல் ஆகியவை நடைபெறுகின்றன.

சக்தி கொடு! - 9

ஆஹா... என்ன அற்புதமான கனவு! பலசுருதியுடன் - பலனுடன் கூடிய பதினோரு பாடல்கள் கொண்ட இக்கனவிலிருந்து, ஒருசில பாடல்களை தரிசிக்கலாம்!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.

கண்ணன் வருகையையும் அப்போது கண்ணனை வரவேற்ற வைபவங்களையும் சொல்லும் பாடல் இது.

`ஆயிரம் யானைகள் புடைசூழ, ஆண்டாளை மணம்செய்து கொள்ள வருகிறார் கண்ணன்.அவரை எதிர்கொண்டு, நீர் நிறைந்த பூரண கும்பங்களை வைத்து, தோரணங்கள் எல்லாம் கட்டிக் கண்ணனை வரவேற்பது போல், கனவு கண்டேன் தோழி' என்கிறார் ஆண்டாள்.

கண்ணன் வந்தாகிவிட்டது. நாள் பார்த்து மணம் பேசி முடிக்க வேண்டாமா? அதற்குண்டான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்.

திருமணம் நாளைக்கு என்று நிச்சயம் செய்யப்படுகிறது. நீண்ட நாள் என்றால், பொறுக்கமுடியாது. சரி! இன்றே திருமணம் என்று வைத்துக்கொள்ளலாமே! அப்படிச்செய்தால், மிதமிஞ்சிய ஆனந்தத்தால், தாகம் எடுத்தவன் விரைவாகத் தண்ணீர் குடித்துப் புரையேறுவது போல் ஆகிவிடும் என்பதற்காகவே, இன்றே திருமணம் என்று சொல்லாமல், `நாளை திருமணம்' என்றார்களாம்!

பேசி முடித்தல் எனும் இவ்வைபவம், பாளையுடன் கூடிய பாக்கு மரங்கள் நடப்பட்ட அழகு மிகுந்த பந்தலின் கீழே நடக்கிறது.

அந்தப் பந்தல் அழகை விஞ்சும் விதமாக, கண்ணன் வருகிறார்; சிங்கம் போல மிடுக்கோடு வருகிறார்; பெரிய பிராட்டியான மாதுவை மார்பில் தாங்கியவர் வருகிறார்.

கோபால ஆயர்களோடும் பசுக்களோடும் எந்தவிதமான பேதாபேதமும் இன்றி, அன்போடும், கருணையோடும், எளிமையோடும் பழகி அருள்புரிந்த கோவிந்தன் வருகிறாராம்!

கண்ணனின் அற்புதத் திருநாமங்களில் இதுவும் ஒன்று. ஏராளமாக மழையைக் கொட்டி கோபாலர்களையும் பசுக்குலத்தையும் பெரும் தீங்குக்கு உட்படுத்தத் தேவேந்திரன் முயன்றபோது, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, அனைவரையும் கண்ணன் கட்டிக் காத்தது, மிகவும் பிரபலமான நிகழ்வு.

சக்தி கொடு! - 9

‘கோவர்த்தன கிரிதாரி கோபால கிருஷ்ண முராரி’ - என பஜனைகளில் பாடுவது தெரிந்ததுதானே! மலையைக் குடையாகப் பிடித்து அனைவரையும் கண்ணன் கட்டிக்காத்த இவ்வைபவம் கண்டு, தேவேந்திரன் கர்வம் அடங்கிப்போனார்; கூடவே கண்ணனுக்கு ஓர் அற்புதமான பட்டாபிஷேக வைபவத்தையும் நடத்தி, கோவிந்தன் எனத் திருநாமமும் சூட்டினார்.

இவ்வைபவத்தை ‘கோவிந்த பட்டாபிஷேகம்’ எனப் பாகவதம் விரிவாகவே கூறும். எளிமை, கருணை, ஆற்றல் என கண்ணனின் சகல குணங் களையும் உள்ளடக்கிய திருநாமம் ‘கோவிந்தன்’ !

அப்படிப்பட்ட திருநாமம் கொண்ட கண்ணன், காளையைப்போல வருகிறாராம். இந்திரனுடைய கர்வ பங்கத்தைச் சொல்லி நிறைவுபெற்ற இப்பாடலைத் தொடர்ந்து, அடுத்த பாடல் கர்வம் நீங்கிய இந்திரனைச் சொல்லித் தொடங்குகிறது; மேலும் பல வைபவங்களையும் சொல்கிறது.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.

தேவேந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் கூட்டமாக வந்து, ஆண்டாளைப் பெண்பேசி முடிக்கிறார்கள்.

‘நல்ல காரியம் செய்வதற்கு இடையூறு மிகப் பல உள’ என்பதற்கு இணங்க, இடையூறுகள் எல்லாம் நீங்க மந்திரம் சொல்லி, தூய்மையான புடவையை உடுத்திவிடுகிறார்கள்.

கிருஷ்ணாவதாரத்தின் போது, யசோதையின் பெண்ணாக அவதரித்த துர்கை, ஆண்டாளுக்கு நாத்தனார் என்ற முறையில் வந்து, ஆண்டாளுக்கு மணமாலை சூட்டிவிடுகிறார்.

அடுத்து, நான்கு திசைகள் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்படுகிறது.வேதத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்களும் அதன்படியே நல்லொழுக்கத்தோடு வாழ்பவர்களுமான உத்தமர்கள், பல்லாண்டு பாடுகிறார்கள்.

மணமாலை அணிந்த கண்ணன், நீராடி கையில் பவித்திரம் அணிந்து ஆசாரத்தோடு வருகிறார்; கையில் கங்கணம் கட்டப்படுகிறது.

மங்கலப் பொருள்களான தீபம்- ஜொலிக்கும் பூர்ண கும்பம் ஆகியவற்றை ஏந்தி, இளமங்கையர் வந்து எதிர்கொள்கிறார்கள். வடமதுரை தலைவரான கண்ணன், பாதுகைகள் அணிந்து, எங்கும் அதிரும்படியாக வந்தார் - என்றெல்லாம் தான் கண்ட கனவை விவரித்துக்கொண்டு வந்த ஆண்டாள், வந்த கண்ணன் தன் கைத்தலம் பற்றிய கனவை விவரிக்கிறார்.

எப்படி தெரியுமா?

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்.

`மத்தளம் - சங்கம் முதலான மங்கல வாத்தியங்கள், இடைவிடாமல் முழங்குகின்றன; முத்துமாலைகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழே, மது முதலான அசுரர்களை அழித்தவரும் மதுசூதன் எனும் திருநாமம் கொண்டவரும் மணம்கொள்ள உறவுமுறை கொண்டவருமான கண்ணன் வந்து, என்(ஆண்டாள்)கைத்தலம் பற்றினார்' என்கிறார்.

இங்ஙனம், ‘கைத்தலம் பற்றும்’ வைபவத்தை விவரிக்கும் ஆண்டாள், அதன் பிறகான வைபவங்களையும் விரிவாகவே வர்ணித்திருக் கிறார்.

தான் கொண்ட திருமணத்தைத் தெய்வமே நேருக்கு நேராகச் சொல்வதைப் போன்ற அரும் பாடல்கள் நிறைந்த ‘நாச்சியார் திருமொழி’, நமக்குக் கிடைத்த அருள் பொக்கிஷம். அதை அளித்த ஆண்டாள் அருளாலும்; அவர் கைத்தலம் பற்றிய கண்ணன் கருணையாலும் சிறப்பான வாழ்வைப் பெறுவோம். நம் இல்லத்தில் எப்போதும் மங்கலம் நிறைந்திருக்க, இந்தப் பாடல்களை அனுதினமும் பாடித் துதிப்போம்.

- தொடரும்...

`கோவிந்தன்' எளிமை, கருணை, ஆற்றல் என கண்ணனின் சகல குணங்களையும் உள்ளடக்கிய திருநாமம் இது!