நம் தமிழ் மாதங்கள் அனைத்துக்கும் ஆன்மிகச் சிறப்புகள் பல உண்டு. அவ்வகையில் மாசி மாதமும் மிகவும் புண்ணியமானது. மகா சிவராத்திரி, மாசி மகம், ஹோலி போன்ற வைபவங்களால் மேன்மை பெற்ற மாதம் மாசி.
எல்லா ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து அருள்செய்யும் அம்பிகை, திரு அவதாரம் செய்த மங்கலத் திருநாள், ‘மாசி மகம்’. மாசி மகத்தன்று உபதேசம் பெறுவது மிக மிகச் சிறந்தது. மந்திர உபதேசம் முதலானவற்றை இந்த நாளில் பெற்றால், அதற்குத் தனிச் சிறப்பும் பலனும் உண்டு. புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிக்கலாம். உதாரணம்: கம்ப்யூட்டர் கோர்ஸ், சங்கீதக் கலை, பரதம் முதலானவை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதன் விருப்பங்கள் நிறைவேற திருஈங்கோய்மலை எனும் தலத்தில் தவமிருந்து அகத்தியர் அருள் பெற்றது, குடந்தை சக்கர தீர்த்தத்தில் எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம், பிரகலாதனைக் கொல்ல வந்தவள் வெந்துபோனது என மாசி மாதத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் பல உண்டு.
அதுமட்டுமா? அன்னதானத்தின் பெருமையை விளக்குவதுடன், பிரம்மஹத்தி போன்ற கொடும் பாவங்களைப் போக்கி, பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் இந்த மாதத்தில்தான். இந்த ஏகாதசிகளின் சிறப்பை விளக்கும் கதையைப் படிப்பது பெரும் புண்ணியம் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஷட்திலா ஏகாதசி
மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். இது பற்றிய விவரங்கள் புலஸ்திய மகரிஷியால் கூறப்பட்டன.
ஒருமுறை தால்ப்யர் என்ற முனிவர், புலஸ்தி யரை தரிசித்து, ‘‘மகரிஷியே! பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம், அடுத்தவர் பொருள்களைத் திருடியதால் ஏற்பட்ட பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்... தயவுசெய்து சொல்லுங்கள்!’’ என வேண்டினார்.

புலஸ்தியர் விளக்கினார். ‘‘தால்ப்யரே! மாசி மாத ஆரம்பத்தில், பசுமாடு சாணமிடும்போது, அது தரையில் விழாத படி கைகளில் ஏந்தவேண்டும். அதனுடன் எள் - பருத்திக்கொட்டை ஆகியவற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒருபக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப்பதத்துடன் இருந்தால், நம் பாவம் அனைத்தும் விலகும்!’’ என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறையைப் பற்றியும் கூறினார்.
‘‘பூசணிக்காய், தேங்காய், கொய்யாப் பழம், கொட்டைப் பாக்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியை பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும்.
Also Read
எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது, அதே நிலையில் நீராடுவது, எள்ளை தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய்வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது ‘ஷட் திலா’ (ஷட்-ஆறு; திலம்-எள்) எனப்படுகிறது. இந்த பூஜையை முறைப்படி செய்தால், நீங்கள் சொன்ன பாவங்கள் எல்லாம் விலகும்!’’ என்றார் புலஸ்தியர்.
இனி, ஏகாதசியின் மகிமையை அறிவோம்.
பெண் ஒருத்தி தர்மங்கள் அனைத்தையும் பொறுப்புடன் செய்து வந்தாள். ஆனால், அன்னதானம் செய்வதில் மட்டும் அவளுக்கு விருப்பம் இல்லை. அன்னதானத்தின் பெருமையை அவளுக்கு உணர்த்த எண்ணி, ஒருநாள் பெருமாள் சந்நியாசி வேடத்தில் அவளது வீட்டுக்கு வந்தார். அவரை வணங்கி வரவேற்றாள் அந்தப் பெண். அவளது உபசரிப்பை ஏற்ற சந்நியாசி, சற்று நேரத்தில் தனது பிக்ஷைப் பாத்திரத்தை அவளிடம் நீட்டி, ‘‘அம்மா! பிக்ஷை போடு!’’ என்றார்.
அதுவரை அன்னதானமே செய்யாதிருந்த பெண்ணுக்கு அடங்காத கோபம் வந்தது. ஒரு மண் கட்டியை எடுத்து பிக்ஷைப் பாத்திரத்தில் போட்டாள். உடன் சந்நியாசியாக வந்திருந்த ஸ்வாமி மறைந்தார். அதன் பிறகும், அந்தப் பெண்மணியின் மனம் அன்னதானத்தில் ஈடுபடவில்லை. ஆனால், மற்ற தானங்களையும் விரதங்களையும் முறையாகச் செய்து வந்தாள். அதன் பலனாக அவள், மனித உடம்புடன் சொர்க்கத்தை அடைந்தாள்.
அங்கே அவளுக்கு ஓர் அழகான அரண்மனை அளிக்கப்பட்டது. அதன் அழகில் மயங்கிய அவள், அதைச் சுற்றிப் பார்த்தாள். ஏராளமான பணிப் பெண்கள் மற்றும் நிறைய வசதிகளுடன் இருந்தது அந்த அரண்மனை. இருந்தும் அங்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. எனவே, பசியால் வாடினாள் அவள்.
அப்போது அவள் எதிரில் துறவி வேடத்தில் (ஏற்கெனவே வந்ததைப் போல) வந்தார் ஸ்வாமி. அவரை வணங்கி, ‘‘முனிவரே! நான் செய்த விரதங் களுக்கும் தவத்துக்கும் ஏற்றபடி, இங்கே எனக்குச் சுகம் கிடைக்கவில்லை. பசி என்னை வாட்டுகிறது. இதற்கு என்ன காரணம்?’’ என்று வருத்தத்துடன் கேட்டாள். ‘‘பெண்ணே! நீ பூலோகத்தில் எல்லாவிதமான தானங்களையும் செய்தாய். அதன் பலனாக மானிட உடம்புடன் சொர்க்கத்துக்கு வந்திருக் கிறாய். ஆனால், நீ அன்னதானம் செய்யவில்லை. அதனால்தான் சொர்க்கத்துக்கு வந்தும் பசிக்கு உணவு கிடைக்காமல் வருந்துகிறாய்’’ என்று பதில் சொன்னார் துறவி.
‘‘துறவியே! உடல்கொண்ட உயிர்கள் எல்லாம் உணவைத் தேடும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. ஆகவே என் பசி தீரவும் ஏதாவது வழி சொல்லுங்கள்’’ என்று வேண்டினாள் அவள்.
‘‘கவலைப்படாதே! உன்னை தரிசிப்பதற்காக தேவலோகப் பெண்கள் வருவார்கள். அப்போது நீ அறைக்குள் போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொள். அவர்கள் கதவைத் தட்டுவார் கள். நீ திறந்துவிடாதே! ஷட்திலா ஏகாதசி விரதம் இருந்த புண்ணிய பலனைத் தந்தால் மட்டுமே கதவைத் திறப்பதாகச் சொல்!’’ என்று வழிகாட்டி மறைந்தார் துறவி. அப்படியே செய்தாள் அந்தப் பெண்.
Also Read
தாழிட்ட அவளது அறைக் கதவைத் தட்டினார்கள் தேவலோகப் பெண்கள். ‘‘ஷட்திலா ஏகாதசி விரதப் பலனை எனக்குத் தந்தால்தான் கதவைத் திறப்பேன்’’ என்றாள் அவள். பலர் மறுத்துத் திரும்பினார்கள். ஒருத்தி மட்டும், ஷட்திலா ஏகாதசிப் பலனை அளித்தாள். அக்கணமே, பசியால் வாடிய பெண்ணின் முன்னால், உணவுப் பொருள்கள் குவிந்தன. அவள் பசி தீர்ந்தது!
என்னதான் வாழ்க்கை வசதிகள் இருந்தா லும், பலருக்கு உணவைக் கண்டால் மிகவும் வெறுப்பாக இருக்கும். இதற்கு ‘அன்ன துவேஷம்’ என்று பெயர். ஷட்திலா ஏகாதசி விரதம் இருந்தால், அன்ன துவேஷம் நீங்கும். பசியால் துயரம் உண்டாகாது. ‘பளிச்’சென்று சொல்ல வேண்டுமானால், சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது.
ஜயா ஏகாதசி!
மாசி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசி ‘ஜயா ஏகாதசி’ எனப்படும்.
ரதிதேவியைவிட மிகவும் அழகானவள் புஷ்பவந்தி. குயிலினும் இனிய குரல் வளம் கொண்டவள். அவள் கணவன் மால்யவான். கந்தர்வ தம்பதியான இருவரும் தேவேந்திர சபையில் ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். ஒருநாள்... தேவேந்திர சபை யில் அவர்களது நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அனைவரும் மெய்ம்மறந்து ரசித்துக் கொண் டிருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல; புஷ்பவந்தியும் மால்யவானும் கூடத் தங்களை மறந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் மோகப் பார்வையை வீசிக்கொண்டார்கள். பாடல் தவறிப்போனது. அபஸ்வரம் தலை நீட்டியது. அவையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள். இந்திரனுக்குக் கடுங்கோபம் மூண்டது.
‘‘புஷ்பவந்தி, மால்யவான்... நீங்கள் இருவரும் பேயாகி, பூமியில் திரியுங்கள்’’ என்று சாபம் கொடுத்தான். சாபம் பலித்தது. கந்தர்வ தம்பதி, பேய் வடிவம்கொண்டு பூமியில் திரிந்தார்கள். பல்லாண்டுகள் பலவிதமான துயரங்களை அனுபவித்தார்கள்.
ஒரு நாள்... இருவரும் உணவு ஏதும் கிடைக்கா மல், அலைந்து அல்லல்பட்டு ஓர் அரச மரத்தின் அடியில் வந்து தங்கினார்கள்.
‘‘தேவலோகத்தில் திவ்வியமான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே...’’ என்று வாய்விட்டுப் புலம்பினார்கள். இரவு முழுவதும் அவர்கள் உறங்கவில்லை.
மறுநாள் பொழுது விடிந்தது. பேய்களாக இருந்த அவர்கள் கோர வடிவம் நீங்கி பழையபடி கந்தர்வ வடிவத்தை அடைந்தார்கள். காரணம்?
அவர்கள் உபவாசம் இருந்த அந்த நாள் ‘ஜயா ஏகாதசி’ நாள்!
இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் அவர்கள் தங்கியிருந்தது ஓர் அரச மரத்தின் அடியில். அந்த ஜயா ஏகாதசியின் பலனே, அவர்களின் பேய்த் தன்மையை நீக்கியது.
பேய்க்கும் நற்கதியைத் தரக் கூடிய ஏகாதசி இது. தீய குணங்கள் என்னும் பேய்களை நீக்குவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
- இன்னும் வரும்...
கடலாடும் திருவிழா!
மாசிமகத் திருநாள் கடலாடும் விழா வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதமான இந்த நன்னாளில் கடலில் நீராடுவது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலிச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும்
அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய்
என்னும் திருஞானசம்பந்தரின் பாடல் இதை வலியுறுத்தும்.
மாசியில் மகத்துவம் பெற்ற திருத்தலங்கள்!
அகத்தியர், ஈங்கோய்மலைக்கு வந்து அகண்ட காவிரியில் மூழ்கி, `ஈ' வடிவம் கொண்டு பூஜை செய்தது மாசி மாதப் பௌர்ணமி அன்று. ஆகையால், அந்த தினத்தில் அகண்ட காவிரியில் நீராடி ஈங்கோய் மலையில் ஸ்வாமி தரிசனமும் வழிபாடும் செய்வது மிக மிக விசேஷம். (ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவ்வாறு செய்வது விசேஷமே.)
அண்ணாமலையாரே பிள்ளையாய் வந்து வல்லாள மகாராஜா தம்பதிக்குத் தன் கையால் பிரேத சம்ஸ்காரம் செய்தது மாசி மாதத்து மக நட்சத்திர நாளில்தான். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று இந்த நிகழ்ச்சி, ஒரு திருவிழாவாக நடைபெறும்.
குருவைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட தோஷத்தின் விளைவால், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கடலில் தள்ளப்பட்டு தவித்தார் வருணன். அவருடைய பிரார்த் தனைக்கு இணங்கி சிவனார் கடற்கரைக்கு எழுந்தருளி வருணனை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்தது ஒரு மாசி மகத்தன்று.
வருணனின் பாசம் அறுத்த அந்த இடம் ‘பாசமறுத்த துறை’ என்றே பெயர் பெற்று விளங்குகிறது. சிதம்பரத்திலிருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது. மாசி மகத்தன்று இந்த இடத்தில் ‘தீர்த்தோற்சவம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மீனாட்சியின் அருளால்...
தாய் தந்தையை இழந்த ஸ்ரீராகவேந்திரர், மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள தளவாய் தெருவில், தம் தமக்கை வேங்கடாம் பாளின் வீட்டில் வசித்தார். அப்போது அவர், இருவேளையும் மீனாட்சியம்மனை தரிசிப்பது வழக்கம். ராகவேந்திரரின் பக்தியால் மகிழ்ந்த அம்பாள், ‘நீ இருக்கும் இடத்தருகில் நான் எப்போதும் இருப்பேன்’ என்று வாக்குறுதி தந்தாளாம். அதன்படி மந்திராலயத்தில் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்துக்குப் பக்கத்திலேயே மீனாட்சியம்மன், மாஞ்சாலம்மனாக கோயில் கொண்டிருப்பதாக ஐதிகம்.
மீனாட்சியம்மன் கோயில் மடைப் பள்ளியில் பணிபுரிந்த ஸ்ரீநிவாஸன், ஸ்ரீமீனாட்சியின் அருளால், மீனாட்சி துதிப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்போது இவருக்குப் பதிலாக அம்பிகையே சமைத்ததுடன், வெளிச்சத்துக்காகத் தனது மூக்குத்தியைப் பயன்படுத்தியதாகவும் கூறப் படுவது உண்டு.
காஞ்சி காமகோடி பீடம் மற்றும் சிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கி 15 பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடி பார்வை பெற்றார்.