Published:Updated:

சக்தி கொடு! - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்!

ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்

வி.ஆர்.சுந்தரி, ஓவியம்: ம.செ

சக்தி கொடு! - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்!

வி.ஆர்.சுந்தரி, ஓவியம்: ம.செ

Published:Updated:
ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்
ஆதி காவியம் என்று போற்றப்படுவது ராமாயணம். ராமாயணம் என்றாலே, அது ஆதிகவியான வால்மீகி முனிவர் எழுதியதையே குறிக்கும்.

நமக்குத் தெரிந்த கம்ப ராமாயணம் தவிர, இன்னும் பல ராமாயணங்கள் உண்டு. ராம சரிதமானஸ் எனும் துளஸி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உள்பட 120 ராமாயணங்கள் உள்ளன.

இவை தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் ராமாயணம் பற்றிய தகவல்கள் உண்டு. இத்தகைய அற்புதமான ராமாயணத்தைச் சந்தக் கவியான அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களில் மற்றவர்கள் சொல்லாத பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். வரும் ஶ்ரீராம நவமியை முன்னிட்டு (2.4.2020- வியாழன்), ஶ்ரீராமனின் மகிமையை நினைவுகூர்ந்து போற்றும் விதம், அருணகிரிநாதரின் திருப்புகழ் சிறப்பிக்கும் ராமாயணத் தேன் துளிகளில் சில இங்கே உங்களுக்காக!

ராமாயணம்
ராமாயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்புகழின் முதல் பாடலிலேயே `முத்தைத்தரு...’ என ஆரம்பித்த அருணகிரிநாதர், ‘பத்துத் தலை தத்தக் கணை தொடு’ என்று தொடங்கி, ராமாயணத்தை விவரிக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஶ்ரீராமனின் திரு அவதாரம்

ராவணனின் கொடுமை தாங்காத தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தசரதருக்கு மகனாக வந்து உதிக்கிறார் மஹாவிஷ்ணு. இதை அருணகிரிநாதர் எப்படி பாடுகிறார் தெரியுமா?

மேலை வானொருரைத் தசரற்கொரு

பாலனாகி யுதித்து... (ஆலகால படப்பை திருப்புகழ்) - என அழகுபடச் சொல்கிறார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மஹாவிஷ்ணு தசரதருக்கு மகனாக அவதரித்தார். இதில் ‘ஒரு பாலனாகி’ என்று அருணகிரிநாதர் சொல்வதற்கு ‘ஒப்பற்ற குழந்தையாக’ என்று பொருள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தை வருக ரகுநாயக வருக...

ராமரை, கோசலாதேவி மிகுந்த அன்புடன் வளரத்து வருகிறாள். ராமர் தளர் நடையிட்டு, நடக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ... ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்!

எந்தை வருக ரகுநாயக வருக

மைந்த வருக மகனே இனி வருக

என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம

இங்கு வருக அரசேவருக முலை

உண்க வருக மலர் சூடிட வருக

என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்

(தொந்தி சரிய திருப்புகழ்)

பால் குடிக்கக் கோசலை, ராமரை அழைக்கும் இந்த வர்ணனையில் பலவிதக் கருத்துகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்மிகமும், அருந்தமிழின் பெருமையும், அருணகிரிநாதரின் தமிழ் வன்மையும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியவை.

இந்தப் பாடலில் ‘வருக’ எனும் வார்த்தை பத்து முறை வருகிறது. ‘பிள்ளைத் தமிழ்’ நூல்களில் உள்ள பத்துப் பருவங்களில் ‘வருகைப் பருவம்’ ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் உண்டு. அதில் ஒவ்வொரு பாடலும், ‘வருக வருகவே’ என முடியும். அதன்படி ‘வருக’ என்பதைப் பத்து முறை அமைத்த அருணகிரிநாதரின் இந்தப் பாடல், ஒரு வருகைப் பருவமாகவும் அமைந்திருக்கிறது. சிலர், பிள்ளைத் தமிழ் நூல்களில் பருவத்துக்கு ஒரு பாடலாக, பத்துப் பாடல்களுடன் முடித்திருப்பார்கள். அதன்படி பார்த்தால் இது ‘பிள்ளைத் தமிழ்’ பாடலாகவும் கருதப்படும்.

‘வருக’ என்பதைப் பத்து முறை அவர் பயன் படுத்தியதில், மற்றொரு கருத்தும் உண்டு. மஹா விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லும்போது தச (பத்து) அவதாரங்கள் என்போம். நமக்காகப் பத்து முறை இறங்கி வந்த ஸ்வாமியை, அருணகிரி நாதரும் பத்து முறை ‘வருக’ என அழைக்கிறார். ராம அவதாரம், தசாவதாரத்தில் ஒன்றுதானே!

யாகம் காக்கப் புறப்பட்டான்!

ராமரின் இளமைப் பருவத்தில் ஒப்பற்ற தவசியான விஸ்வாமித்திர முனிவர் வந்தார். அவரது யாகத்தைக் காக்க, ராம-லட்சுமணர் அவருடன் காட்டுக்குக் கிளம்பினர். இதை இரண்டே வரிகளில் அருணகிரிநாதர் சொல்வார்.

மேலை வானொருரைத் தசரற்கொரு

பால னாகியுதித்தொர்

முனிக்கொரு வேள்விக்காவல் நடத்தி.

(ஆலகால படப்பை திருப்புகழ்).

அடுத்து மற்றுமொரு அழகையும் காண்போம். அகலிகை கல்லாகிக் கிடந்ததாக வால்மீகி சொல்லவில்லை. ஆனால், கம்பர் சொல்கிறார். அவரை அடியொற்றி அருணகிரி நாதரும் அப்படியே செய்கிறார். ஆனால், அதிலும் தனது தனித் தன்மையை நிலைநாட்ட அருணகிரிநாதர் தவறவில்லை.

யாகத்துக்குக் காவலாக மட்டுமன்றி, கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடக்கும் அகலிகையின் துயரத்தைத் தீர்ப்பதற்காகவும் ராமர், விஸ்வா மித்திரருடன் காட்டுக்குச் சென்றார்- என முன்கூட்டியே தெளிவாகச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

கல்லிலே பொற்றாள் படவேயது

நல்லரூ பத்தே வரக் கானிடை

கௌவை தீரப் போகும் இராகவன்

(கொள்ளையாசை திருப்புகழ்)

இந்த வரிகளில், ‘கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறினாள்’ என்பது தெளிவாக இல்லையே என நினைப்பவர்களுக்குக் கீழ்க் காணும் வரிகள் மூலம் விளக்கம் தருகிறார்.

க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமலபத மாயன் - (குலைய திருப்புகழ்) என்று பாடி ராமரின் திருவடித் தாமரைகளைப் புகழ்கிறார் அருணகிரிநாதர். இதைப்போல, சீதா கல்யாணத்தின்போதும் ஓர் அற்புதமான நிகழ்ச்சியை அருணகிரி நாதர் சொல்கிறார்.

ராமன் - சீதா திருக்கல்யாணம்!
ராமன் - சீதா திருக்கல்யாணம்!

ராமன் - சீதா திருக்கல்யாணம்!

வரும் எடுக்க முடியாத, மிதிலையில் இருந்த வில்லை, ஒரு நொடிப் பொழுதில் ராமர் எடுத்து முறித்துவிட்டார். அவர் அதைத் தன் காலில் வைத்து வளைத்ததையோ, நாண் ஏற்றியதையோ யாருமே பார்க்கவில்லை. ராமர் வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். வில் முறிந்த ஓசையைக் கேட்டார்கள். அவ்வளவுதான். வில் வளைக்கும் நிகழ்ச்சி அவ்வளவு சுலபத்தில் சீக்கிரமாக நடந்து விட்டது. இதை அப்படியே நேரில் பார்ப் பது போல காட்டுகிறார் கம்பர்.

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்

மடுத்து நாண் நுதிவைத்தது நோக்கார்

கடுப்பினில் யாரும்அறிந்திலர் கையால்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

- என்று பாடியுள்ளார் கம்பர். இதையே இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நமக்கருகில் கொண்டு வருகிறார் அருணகிரிநாதர். கம்பர், ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்றாரே தவிர, வில் உடையும் ஒலியை அவர் பதிவு செய்யவில்லை. அந்தக் குறையை அருணகிரிநாதர் நீக்குகிறார் அருணகிரியார்.

`சிலை ‘மொளுக்’ கெனமுறிபட மிதிலையிற் சனகமனருள்' (திருவினைப் புணரரி - திருவிடைக்கழி திருப்புகழ்).

ராமர் அந்த வில்லை முறித்தபோது ‘மொளுக்’ கென்று சத்தம் கேட்டதாம். பல காலமாக யாராலும் அசைக்கக்கூட முடியாமல் இருந்த அந்த வில், மிகுந்த பலசாலியான ராமருக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘மொளுக்’கென உடைந்துவிட்டது. அதுமட்டுமல்ல இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள்.

அதாவது, அந்த வில் ‘படீர்’ என உடைந்தது எனச் சொன்னால், ராமர் கொஞ்சமாவது கஷ்டப்பட்டிருப்பார் என்று தோன்றும். ஆனால், அப்படியல்ல... ராமர் மிகவும் சுலபமாக வில்லை முறித்தார். இதை நம் மனதில் பதிய வைக்கவே அருணகிரிநாதர், ‘மொளுக்’ என்ற வார்த்தையைப் போட்டார்!

சக்தி கொடு! - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்!

வில் வளைத்தல் என்பது சீதா கல்யாணத் துக்காகவே. ஆனால், அதன் பிறகு பல பாடல்களைத் தாண்டித்தான், சீதா கல்யாண நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் கம்பர். அவர் இயற்றிய ‘இராமாவதாரம்’ என்ற பெரும் காப்பியம் அதற்கு இடம் கொடுத்தது. ஆனால், எட்டு வரிகள் கொண்ட திருவிடைக்கழி திருப்புகழில் அருணகிரிநாதர் அப்படிச் செய்ய முடியாது. ஆகவே அருணகிரி நாதர்,`சிலை ‘மொளுக்’கென முறிபட மிதிவையிற் சனக மனருள்திருவினைப் புணரரி’ என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

அன்னையின் சொல்லை...

சீதா கல்யாணத்துக்குப் பிறகு முக்கியமான நிகழ்ச்சி - ராமரின் பட்டாபிஷேகம் தடைப்பட்டு, அதற்குக் காரணமான கைகேயியின் சொல்லை ராமர் மீறாமல் இருந்தது. இதை அருணகிரி நாதர் சொல்லும் அழகைப் பாருங்கள்.

திண்சிலை முறியாவொண்

ஜானகி தனங்கலந்தபின்

ஊரில் மகுடங் கடந்தொரு

தாயர் வசனம் சிறந்தவன்

(ஶ்ரீபுருஷமங்கை தல திருப்புகழ்)

வலிமையான வில்லை முறித்து, அழகு, அறிவு, நற்குணம் ஆகியவற்றில் தலைசிறந்தவளான சீதையைத் திருமணம் புரிந்த ராமர், அயோத்திக்குத் திரும்பினார். 12 வருடங்களுக்குப் பிறகே ராமருக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு ஆனது. ஆனால், கைகேயி தடுத்துவிட்டாள். ராமர், அவள் வாக்கை ஒப்புக்கொண்டு தலைசிறந்து விளங்கினார் என்பதே இந்த வரிகளின் கருத்து. அதனால்தான் அருணகிரிநாதர் `ஒண் ஜானகி தனங் கலந்தபின்...’ என்று கூறினார். இந்தப் பாடலில் வரும், ‘ஒண்ஜானகி, ஜானகி தனம்’ என்ற வார்த்தைகள் அற்புதமானவை.

ஒண் ஜானகி- இயற்கையான அழகு வாய்ந்தவள்!

அதெல்லாம் சரி. குணம் எப்படி என்ற கேள்வி வருகிறதல்லவா? அதற்கும் அருணகிரிநாதர் பதில் சொல்கிறார். ‘ஜானகிதனம் கலந்தபின்’ என்ற வார்த்தைகள் அதை விளக்குகின்றன.

`தனம்’ என்ற சொல்லுக்கு செல்வம் என்பது பொருள். அன்பு, இரக்கம், பொறுமை ஆகியவையே ஜானகி (சீதை)யிடம் இருந்த செல்வங்கள். அவளுடைய அன்பு- சுந்தர காண்டத்திலும், இரக்கம்- யுத்த காண்டத்திலும், பொறுமை - அயோத்தியா காண்டத்திலும் வெளிப்பட்டதை வால்மீகியும் கம்பரும் விவரித்துள்ளனர்.

இதையே ‘ஒண் ஜானகி தனம் கலந்தபின்’ என்ற வார்த்தை களால் அருணகிரிநாதர் வெளிப் படுத்துகிறார். சரி, அனுமனை எப்படிப் பாடுகிறார் அருணகிரி நாதர்? அதையும் பார்க்கலாம்...

கவச அனுமன்
கவச அனுமன்

கவச அனுமன்

பரிதிமகன் வாசல் மந்திரி அனுமனொடு (சுருளளகபார திருப்புகழ்)

எனப் பாடுகிறார். எல்லாவிதத்திலும் உயர்ந்தவரான ஆஞ்சநேயர், சுக்ரீவனின் மந்திரியாக இருந்தார் என்கிறார் அருணகிரிநாதர். இது என்ன புதுக் கதை! இதற்குரிய காரணத்தை அறிந்தால், அருணகிரிநாதரின் ஆழ்ந்த புலமை நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சூரியபகவானிடம் மாணவராக இருந்து கல்வி கற்றவர் அனுமன். கல்விப் பயிற்சி முடிந்ததும், ‘‘குருதேவா! தங்களுக்குக் குருதட்சணை அளிக்க விரும்புகிறேன்.அனுமதி தாருங்கள்!’’ என வேண்டினார். சூரிய பகவான் மறுத்தார். ஆனால், அனுமன் விடவில்லை. கடைசியில் சூரிய பகவான், ‘‘சரி! உனது வேண்டுகோளை ஏற்கிறேன். ஓர் உதவி செய். என் அம்சமான சுக்ரீவனுக்கு நீ மந்திரியாக இருந்து நல்வழி காட்டு. அதுவே குருதட்சணையாக இருக்கட்டும்!’’ என்றார். ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்டார். இப்படி அனுமார், சுக்ரீவனுக்கு மந்திரியானார்.

இதைத்தான் ‘பரிதி மகன் வாசல் மந்திரி அனுமன்’ என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். மேலும் அவர் அனுமனுக்கு ஒரு பட்டமும் தருகிறார். ‘கவச அனுமன்’ என ‘முருகுசெறி’ திருப்புகழில் குறிப்பிடுகிறார். இந்தப் பட்டத்தை வேறு யாரும் ஆஞ்சநேயருக்குத் தரவில்லை.

சுக்ரீவனுக்கு ராமருடன் தோழமை உண்டாக்கி அவனைக் காத்தது, சீதையிடம் மோதிரம் தந்து அவள் உயிரைக் காத்தது, சுக்ரீவன் சீதையைத் தேடக் குறித்த கெடு தாண்டியதும் உயிரைவிடத் தீர்மானித்த வானர வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களின் உயிரைக் காத்தது, யுத்த களத்துக்கு மருத்துவ மலையைக் கொணர்ந்து ராம-லட்சுமணர்கள் உயிரைக் காத்தது - எனப் பல வகைகளிலும் ‘கவச’மாக இருந்து உயிர் காத்ததால், ஆஞ்சநேயரைக் ‘கவச அனுமான்’ என்கிறார் அருணகிரிநாதர்.

ராவணன் வாழ்வு முடிந்தது. விபீஷணன் அரசனானான். வெற்றித் திருமகளைப் பெற்ற ராமர், திருமகளின் அவதாரமான சீதையை அடைந்தார். இந்த விவரத்தை அருணகிரிநாதர் அழகாகப் பாடுகிறார்.

பாவியிராவணனார் தலைசிந்திச்

சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்

பாவையர்தோள் புணர் மாதுலர்... (தோலோடு மூடிய... திருப்புகழ்)

- என்கிறார் அருணகிரியார். ‘தன் உயிருக்கு நிகரான சீதாதேவியை வெற்றியுடன் மீட்டுக் கொண்டார் ராமர்’ என திருப்புகழின் மற்றொரு பாடலும் சொல்கிறது.

ஆவியேயான ஜானகியை ஆடலுடன்

அழைத்தேகொள் மாயோன்!

சீதையைச் சிறை மீட்ட ராமர், அயோத்தி வந்தார். பட்டாபிஷேகம் ஏற்று, ‘ராம ராஜ்ஜியம்’ என்று எல்லோரும் புகழும்படி ஆட்சி புரிந்தார். இதை அருணகிரியார், `சீதை சிறையிலாமலே கூடிபுவனி மீதிலே வீறு திறமியான மா மாயன்' (புலையனான திருப்புகழ்) எனப் போற்றிப் பாடுகிறார்.

அருணகிரிநாதரின் வாக்கில் இருந்து வெளிப்பட்ட ராமாயணத்தைப் பார்த்தோம். சீதையுடன் சேர்ந்த ஶ்ரீராமர், நம் அனைவரின் குடும்பங்களிலும் முழுமையான அருளைப் பொழிய வேண்டுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism