Published:Updated:

சக்தி கொடு! - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

வி.ஆர்.சுந்தரி

சக்தி கொடு! - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்

வி.ஆர்.சுந்தரி

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்
அம்பாளின் அனுக்கிரகம் முழுநிலவின் தண்ணொளி போன்று பூமியைச் சூழ்ந்து நல்லனவற்றையே விளைவிக்கும் அற்புத நாள் சித்ரா பெளர்ணமி. நம் நாட்டில் நடை பெறும் விழாக்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பெருமை வாய்ந்தது. அவற்றில் அழகர் ஆற்றில் இறங்கியருளும் மதுரைச் சித்திரைத் திருவிழாவை அறிவோம். அதேபோல், விழுப்புரம் அருகில் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவும் ஒன்று. இது சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒருவகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கக்கூடியது. இது, ரசாயன - மருத்துவத் துறையில் உபயோகப்படுகிறது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப் படுவதைக் கண்டுபிடித்தவர்கள் சித்த புருஷர்களே. இதனால் சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ எனப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி, குருவருளும் திருவருளும் பொங்கிப் பெருகும் திருநாளைத் தன்னகத்தே கொண்ட சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பிணிக்கு மருந்தாகும் மகேசனையும், மகேஸ்வரியையும், மகாவிஷ்ணுவையும், சித்தர் பெருமக்களையும் போற்றும் இந்த மாதம் முடிவதற்குள், உலகையே உலுக்கிவரும் தொற்று நோய்ப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கட்டும் எனும் பிரார்த்தனை யோடு, சித்ரா பெளர்ணமி திருநாளின் மகத்துவத்தைச் சொல்லும் ஒரு கதையைக் காண்போம்.

குருநாதர் வியாழ பகவானும் மற்ற தேவர்களும் சூழ்ந்துவர, கயிலையை வணங்கிவிட்டுப் பூலோகம் புறப்பட்டான் தேவேந்திரன். பூவுலகில் ஆங்காங்கே புண்ணிய தீர்த்தங்களில் நீராடித் தல யாத்திரை செய்தவாறு கடம்ப வனத்தை (மதுரையை) நெருங்கினான்.

அதன் எல்லையைத் தொட்டதுமே அவனுக்கு மேனி சிலிர்த்தது; மனம் இளகியது. ஏதோவொரு பரவசம் அவனுக்குள் கிளர்ந்தெழுந்தது. அதேநேரம், அதுவரையிலும் அவனைப் பற்றிக் கொண்டிருந்த பிரம்மஹத்தி தோஷமும் விலகியதை அவனால் உணர முடிந்தது. இந்திரனுக்குத் தலை கால் புரியவில்லை.

‘‘குருநாதா! குருநாதா! என்னைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி விலகியது’’ எனக் கூவினான்.

‘‘தேவேந்திரா! இங்கு ஏதோ புண்ணிய தீர்த்தமும் புனிதத் தலமும் இருக்க வேண்டும். அவை என்னவென்று கண்டுபிடி!’’ என்றார் தேவகுரு. தேவேந்திரன் கடம்ப வனத்துக்குள் நுழைந்தான். அங்கிருந்த அதிசயங்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு மெய்சிலிர்த்தது. திரும்பி வந்த ஒற்றர்கள் அவனை வணங்கி, ‘‘தேவ மன்னா! இந்தக் கடம்ப வனத்தில் மிகவும் தூய்மையான ஒரு (பொற்றாமரைக்) குளம் இருக்கிறது. அதன் கரையில் கடம்பமர நிழலில் ஈடு இணை சொல்ல முடியாத ஜோதி வடிவில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது’’ என்றார்கள்.

இந்திரனுக்கு ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. கைகளைத் தலைக்கு மேல் கூப்பினான். இந்திரனுக்கு வழிகாட்டியபடி ஒற்றர்கள் முன்னால் போனார்கள். ஆனந்த நிலை சற்றும் கலையாமல், அவர்களைப் பின்தொடர்ந்தான் தேவேந்திரன். குளத்தில் நீராடி, அதன் கரையில் உள்ள சிவலிங்கத்தை ஆயிரம் கண்களையும் அகல விரித்தபடி தரிசித்தான். முழுமையான அன்பினால் தன்னிலை இழந்தான். தலைவனான சிவபெருமானை ஒருபோதும் மறக்காத தேவேந்திரன், ஸ்வாமிக்கு பூஜை செய்ய விரும்பினான். தேவர்களில் சிலரை அழைத்து, ‘‘சொர்க்கத்திலிருந்து பூஜைக்கு வேண்டியவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என ஏவினான்.

தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, ‘‘சிவபெருமானுக்கு ஒரு விமானம் அமைக்க வேண்டும்!’’ என்றான். ‘நாம் குளித்த குளத்தில் உள்ள பூக்களை எடுத்து வந்து ஸ்வாமிக்கு பூஜை செய்யலாம்’ என்ற எண்ணத்தில் குளத்துக்குப் போனான். அங்கே ஒரு பூகூட இல்லை. மனம் வெதும்பியது. அப்போது அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவபெருமான் திருவருளால் அந்தக் குளத்தில் பொன்னாலான தாமரைப் பூக்கள் மலர்ந்தன. கூத்தாடினான் தேவேந்திரன். இதனால் அது, ‘பொற்றாமரைக்குளம்’ எனப்பட்டது.

சிவபெருமான்
சிவபெருமான்

அங்கிருந்து பொற்றாமரை மலர்களைப் பறித்துக்கொண்டு சிவன் சந்நிதியை அடைந்தான் தேவேந்திரன். அப்போது சூரியக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தீண்டிப் படர்ந்தன. தேவேந்திரன் தனது குடையால் நிழல் கொடுக்க எண்ணினான். அந்த நேரத்தில் ஆகாயத்திலிருந்து, சூரிய மண்டலம் போல் ரத்தின விமானம் ஒன்று கீழே இறங்கியது. எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு கணங்களும் அந்த விமானத்தைத் தாங்கிக்கொண்டிருந்தன. அந்த விமானத்தைச் சிவபெருமானுக்குச் சார்த்தி, வழிபாட்டைத் தொடங்கினான் வானவர் தலைவன்.

அப்போது தேவர்கள் தூய்மையான ஆடைகள், ரத்தின ஆபரணங்கள், சந்தனம், கங்கை நீர், வாசம்வீசும் மலர்கள், மலர் மாலைகள், பழங்கள், தேன், தூபம், தீபம், நைவேத்தியத் திருவமுது ஆகியவற்றை இந்திரன் முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள்.

இந்திரன் மறுபடியும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விபூதி, ருத்திராட்சங்களை அணிந்தான். சிவாகம விதிப்படி சிவபெருமானை பூஜித்தான். வலம் வந்து வணங்கினான் (பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் இந்த இடத்தில் உள்ள சிவத் துதி எளிமையான தமிழில் மிகவும் அருமையாக உள்ளது).

சிவலிங்கத்தில் இருந்து சோமசுந்தரக் கடவுள் வெளிப்பட்டார். புன்னகை புரிந்தவாறு தேவேந்திரனிடம், ‘‘உனது விருப்பம் என்ன, சொல்!’’ என்றார். அவரை வணங்கி எழுந்த இந்திரன், ‘‘கருணையின் இருப்பிடமே! இந்தத் திருத்தலத்தின் எல்லையை நெருங்கியதும் என் பிரம்மஹத்தி தோஷமும் தீவினைகளும் என்னை விட்டு விலகின. தங்களை வழிபடும் புண்ணியம் பெற்றேன். நாள்தோறும் இதைப் போலவே தங்களை வழிபட விரும்புகிறேன்!’’ என்றான்.

‘‘தேவேந்திரா, உனது விருப்பம் நிறைவேறும். ஆனால், நீ சித்திரை மாதப் பௌர்ணமி அன்று இங்கு வந்து வழிபட்டால் போதும். ஆண்டு முழுவதும் வந்து பூஜித்த பலன் கிடைக்கும். நீ சொர்க்கலோகத்துக்குச் சென்று நலமுடன் வாழ்ந்து வா!’’ என்று அருள்புரிந்த சோமசுந்தரப் பெருமான், சிவலிங்கத்தில் ஐக்கியமானார்.

சிவலிங்கத்தின் அருகில் உட்கார்ந்தான் இந்திரன். ஸ்வாமியை இதயத்தில் நிறுத்தி, பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபம் செய்தான். குரு வணக்கம் செய்து தேவலோகத்தை அடைந்தான்.

தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் தீர்த்த ஸ்வாமி, மதுரையில் அம்பிகை மீனாட்சி உடனுறை சொக்கநாதப் பெருமான் என்ற திருநாமத்துடன் இன்றும் நமக்கு தரிசனம் தருகிறார். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் வந்து வழிபடுவதாக ஐதிகம்.

யாகங்களால் அவதரித்த புண்ணியர்

ள்ளம், உடல், நாடி, நரம்பு என அனைத்திலும் மஹா விஷ்ணுவைப் பதித்தவர் யக்ஞ நாராயண தீட்சிதர். அவருக்கு மஹா விஷ்ணு, ‘‘தீட்சிதரே! உமது பரம்பரையில் நூறு சோமயாகங்கள் முடிந்ததும் நான் தோன்றுவேன்!’’ என வாக்கு தந்திருந்தார். அது நிறைவேறியது. யக்ஞ நாராயண தீட்சிதர் காலத்தில் 31 சோம யாகங்கள், கங்காதர தீட்சிதர் காலத்தில் 27 சோம யாகங்கள், கணபதி தீட்சிதர் காலத்தில் 32, வல்லப தீட்சிதர் காலத்தில் 5, லட்சுமண பட்டர் காலத்தில் 5 என அந்தப் பரம்பரையில் நூறு சோம யாகங்கள் செய்து முடிக்கப்பட்டன. நூறாவது யாகத்தை முடித்த ஶ்ரீலட்சுமண பட்டருக்கு மகனாக அவதரிக்கத் திருவுளம் கொண்டார் விஷ்ணு.

லட்சுமண பட்டரின் மனைவி இல்லம்மாள். இவளின் தந்தை சுசர்மா, விஜயநகர அரசக் குடும்பத்துப் புரோகிதராக இருந்தவர். லட்சுமண பட்டர், மனைவியுடன் காசியில் வாழ்ந்து வந்தார். இல்லம்மாள் கருவுற்றிருந்தபோது. காசியில் பெருங்குழப்பமும் வெளிநாட்டுக்காரர்களின் முற்றுகையும் ஏற்பட்டது. காசியை விட்டு மக்கள் வெளியேறினர். அவர்களுடன் லட்சுமண பட்டரும் மனைவி சகிதம் வெளியேறினார்.

வழியில் சம்பாரண்யம் (இது மத்தியப் பிரதேசத் தில் ரெய்ப்பூர் ஜில்லாவில் உள்ளது) என்ற காட்டில் இல்லம்மாள் ஏழு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றாள். குறைமாதக் குழந்தை ஆனதால், அது பேச்சு மூச்சற்று இருந்தது. தாயார் விக்கித்துப் போனார். குழந்தையை ஒரு வன்னி மரத்தடியில் வைத்துக் காய்ந்து போன சருகுகளால் மூடிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார்கள். இருள் சூழத் தொடங்கியது. லட்சுமண பட்டர் மனைவியுடன் காட்டிலேயே தங்கினார்.

பொழுது விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தார் கள். ‘‘நான் உங்களுக்குப் பிள்ளையாகத் தோன்றி இருக்கிறேன். என்னை மரத்தடியில் வைத்துவிட்டுப் போகாதீர்கள்!’’ என்று அசரீரியாக ஸ்வாமி அறிவுறுத்தினார். லட்சுமண பட்டரும் மனைவியும் குழந்தையை விட்டுவிட்டு வந்த இடத்துக்கு அவசர அவசரமாகப் போனார்கள். அங்கே மரத்தடியைச் சுற்றி நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ஆனால், எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் குழந்தை சிரித்துக்கொண்டி ருந்தது. இல்லம்மாளுக்குப் பாசம் பீறிட்டது. ‘‘இது என் குழந்தை! என் குழந்தை!’’ என்று கைகளை நீட்டிக் கத்தினாள்.

‘‘இது உன் பிள்ளைதான் என்றால், இந்தப் பெரும் காட்டுத்தீ உனக்கு வழி விடட்டும்!’’ என்றார் லட்சுமண பட்டர்

அந்த விநாடியே காட்டுத்தீ விலகி வழிவிட்டது. பாய்ந்து போன இல்லம்மாள் பாலகனை எடுத்துப் பாலூட்டினாள். அந்தக் குழந்தைதான், ஞான ஆச்சார்ய புருஷர்களில் ஒருவரான ஶ்ரீவல்லபாசார்யர். வேதம், பகவத் கீதை, பாகவதம் ஆகிய நூல்களின் ஒருமித்த கருத்தை வெளியிட்டு, பக்தி வெள்ளத்தைப் பெருக்கெடுத்தோடச் செய்தவர் இவர். ஶ்ரீவல்லபாச்சார்யார் சித்திரை மாதம் - தேய் பிறை ஏகாதசி அன்று திரு அவதாரம் செய்தவர்.