விழாக்கள் / விசேஷங்கள்
திருத்தலங்கள்
தொடர்கள்
சக்தி ஜோதிடம்
Published:Updated:

சக்தி கொடு! - 10 - ஆயர்பாடி மாளிகையில்...

ஆயர்பாடி மாளிகையில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயர்பாடி மாளிகையில்

வி.ஆர்.சுந்தரி

ண்ணன்! காண்பவர்களின் கண்களையும் கருதுபவர்களின் உள்ளங்களையும் தன் வசப்படுத்தும் தெய்வ வடிவம். நிர்வாகத்திறமை, எளிமை, கருணை, இரக்கம், அடியார்களுக்காக தான் அல்லல்பட்டு அவமானப்படுவது, குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுவது, முனிவர் களாலும் அளந்தறிய முடியாத ஞானத்தெளிவு என, அனைத்தும் கொண்டு ஆயர்குல அதிபராக அவதரித்த தெய்வம்!

சக்தி கொடு! - 10 -  ஆயர்பாடி மாளிகையில்...

‘ஆயர் குலத்தினில் தோன்றுமணி விளக்கை’ என, ஆண்டாளால் துதிக்கப்பட்ட கண்ணனை, அங்கிருந்தே தரிசிக்கலாம் வாருங்கள்.

ஆம்! கம்சனால் சிறையில் அடைபட்டிருந்த வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்த கண்ணனை, கண்ணன் சொற்படி வசுதேவர் கொண்டுபோய் கோகுலத்தில் விட்டுவிட்டு, அங்கிருந்து ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரும்பினார். அங்கே கோகுலத்தில் யசோதையின் அருகிலிருந்த கண்ணன், தன் இனிய குரலால் அழுகுரல் எழுப்ப... அதன்பின் நடந்ததைப் பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.

“ஆஹா... ஆஹா... கோடிசூர்யப் பிரகாசத்தோடு ஜொலிக்கும் இந்தக் கண்ணனை, நாம் மட்டும் பார்த்தால் போதுமா. ஆய்ப்பாடி அத்தனையும் அல்லவா காணவேண்டும்” என்ற ஆர்வத்தில், குழந்தையின் அருகில் வர வேண்டியவர்கள் வெளியில் ஓடுகிறார்கள் பரபரக்க.

கால்கள்தாம் ஓடுகின்றனவே தவிர, மனம் என்னவோ யசோதையின் பக்கத்தில்தான் (கண்ண னிடம்) இருக்கிறது. கால்களுக்கும் மனத்துக்குமான இந்தப் போராட்டத்தில் சிக்கிக்கொண்ட உடம்பு, ‘பொத்’தென்று கீழே விழுகிறது.

சக்தி கொடு! - 10 -  ஆயர்பாடி மாளிகையில்...

கோபியர்களின் வாக்கெல்லாம், `குழந்தை... குழந்தை’என்ற கோஷம் மட்டுமே. அந்தக் கோஷம் சற்று நேரத்தில் ஆய்ப்பாடியின் மூலை முடுக்கெல்லாம் பரவி எதிரொலித்து, ஒரு பெரும் முழக்கமாக மாறுகிறது. ஆயிரம் ஆயிரமாக ஆண்களும் பெண்களும் குழந்தையைக் காணப் படையெடுத்து வருகிறார்கள். வருபவர்களும் சும்மா வரவில்லை; வரும்போதே பாடிக்கொண்டும் பறையின் தாளத்துக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டும் வருகிறார்கள்.

கண்ணனைக் காண வருபவர்கள் நிலை இதுவென்றால், கண்ணனைக் கண்டவர்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. கண்ண னைக் கண்ட பெண்கள், தங்கள் வீடுகளுக்குச் சென்று உறிகளை முற்றத்திலே உருட்டி விடுகிறார்கள்; வீட்டுத் திண்ணையிலே பானைகளை வைத்துக்கொண்டு, வருவோர் போவோர்க்கெல்லாம் நெய், பால், தயிர் ஆகியவற் றைத் தானம் செய்கிறார்கள்.

கன்னிப்பெண்கள் தலைக்கேசங்கள் அவிழ, தங்கள் வீட்டுவாசலிலேயே நாட்டியம் ஆடுகிறார்கள். மொத்தத்தில், ஆய்ப்பாடிவாசிகள் அறிவழிந்துபோய் விட்டார்களாம்.

உண்மைதான்! அறிவு ஆண்டவனை அடைய உதவாது; அன்பு மட்டுமே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்; அவனை நம்மிடம் அழைத்து வரும். கோகுலவாசிகளான கோபாலர்கள் அனைவரும் அன்பில் ஆழங்கால் பட்டவர்கள். அப்படிப்பட்ட அவர்களைத் தேடி கண்ணன் சென்றதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது!

இவ்வாறு ஊரே, கண்ணன் அவதரித்ததில் மகிழ்ந்திருக்க, யசோதையின் நிலை என்னவென்று பார்க்கலாம்.

தனக்குப் பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, அழகா, இல்லையா என்றெல் லாம் தாயுள்ளம் காணத்துடிக்கும் அல்லவா! மெள்ளத் திரும்பிய யசோதை கண்ணனைத் தன் கண்களால் குளிரக் கண்டு, தன் கரங்களால் பகவானுடைய தங்கத் திருமேனியை அப்படியே அணைத்துக்கொண்டாள்.

ஆஹா! சொல்லமுடியாத ஆனந்தம் விளைந்தது. திடீரென்று மின்சாரம் பாய்ந்ததுபோல், ஒரு புளகாங்கிதம் - மெய்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது யசோதைக்கு. மகான்களும் யோகிகளும் கடுந்தவம் செய்து... சமாதி நிலையில், இடைகலை - பிங்கலை எனும் நாடிகளின் வழியாக, புருவ மத்தியிலே பிரம்மதேஜஸ் - அதாவது தெய்விக சாட்சாத்கார நிலையை அடையும் அனுபவத்தை, யசோதை அனுபவித்தாள்.

சக்தி கொடு! - 10 -  ஆயர்பாடி மாளிகையில்...

அதுமட்டுமா, கண்ணனின் திருமேனியை அருகில் நெருங்கி, கண்களால் மேலும் பருகினாள். எல்லையில்லா ஆனந்தத்தோடு, கண்ணனுக்குப் பால் ஊட்டினாள்; கண்ணனைத் தொட்டுத்தொட்டு ஆனந்தமடைந்தாள். இப்படிப்பட்ட யசோதையால், உலகிலுள்ள புண்ணியசாலிகள் அனைவரும் வெல்லப் பட்டார்கள் என்கிறது நாராயணீயம்.

இவ்வாறு கண்ணன் அவதாரத்தை எல்லோரும் மகிழ்வாகக் கொண்டாடியதையும் கண்ணனின் பாலபருவ லீலைகளையும் புலவர்கள் மட்டுமல்ல, மகான்கள் பலரும் விரிவாகவே வர்ணித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்ணனைப் பலவிதமாகவும் அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் அனுபவித் ததை நாமும் அனுபவிக்கலாமே!

ஒருநாள், யசோதையின் வீட்டில் ஏக அமர்க்களம். இங்கும் அங்குமாகப் பணியாளர்கள் ஓடியாடிப் பணி செய்துகொண்டிருந்தார்கள். வெண்பட்டாடை கட்டி மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்ட யசோதை, தயிர் கடைய உட்கார்ந்தாள். அவள் மடியில் படுத்தவாறே, பகவான் ‘ஜம்’மென்று பால் குடித்துக்கொண்டு இருந்தார்.

அந்தநேரம் பார்த்து அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கியது. அதைப் பார்த்ததும், தன் மடியில் இருந்த கண்ணனைப் ‘பளிச்’சென்று கீழே இறக்கி விட்டுவிட்டு, பாலைப் பார்க்க ஓடினாள்.

பகவானுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பாற்கடலில் இருந்து தன்னை யாரோ பலவந்தமாக இறக்கிவிட்டதைப்போல் இருந்தது அவருக்கு.பானையிலிருந்த வெண்ணெயை மட்டும் திரட்டி எடுத்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த அம்மிக்குழவியை எடுத்துத் தயிர்ப்பானையைத் தூள்தூளாக்கினார்.

இந்நிகழ்வை நாராயணீயத்தில் பாடும்போது, ‘குருவாயூரப்பா! கோபம் கொண்ட தாங்கள், (தயிர் கடையும்) மத்தை எடுத்துத் தயிர்ப்பானையை உடைத்தீர்களாமே’ என நாராயண பட்டதிரி பாட, குருவாயூரப்பனும் ‘ஆம்!’ என்று தலையை அசைத்து ஒப்புதல் கொடுத்தாராம்.

அப்போது பட்டதிரிக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘ஸ்ரீசுகாசார்யர், பகவான் அம்மிக்குழவியால் பானையை உடைத்ததாகப் பாடியிருக்கிறார். நாமோ, மத்தினால் உடைத்ததாக மாற்றிப் பாடி விட்டோமே’ என்ற எண்ணத்தில், பகவானி டமே கேட்டுவிட்டார்;

`குருவாயூரப்பா! பிரம்ம நிஷ்டரான சுகாசார்யர் வாக்குக்கு விரோதமாகப் பாடிவிட்டேனே. இது தவறல்லவா” எனக் கேட்டார்.

அதற்குப் பொருத்தமான பதிலைச் சொன்னார் குருவாயூரப்பன்.

“பட்டதிரி! சுகர் பாடியது சத்தியம் தான். ஆனால் நீ பாடியதிலும் தவறில்லை.

முதலில் அம்மிக்குழவியால் பானையை உடைத்தேன்; கோபம் குறைய வில்லை. பிறகு, மத்தையும் எடுத்துப் பானையைத் தூள்தூளாக்கினேன்” என்று சமாதானம் சொன்னாராம்!

உள்ளே போயிருந்த யசோதை, பானை உடைந்த ஓசை கேட்டு, ஓடிவந்தாள். தயிர்ப்பானை உடைந்து, தயிர் தரையெல்லாம் வெள்ளைவெளேரென்று பரவிக் கிடந்தது. கோபம் தாங்கவில்லை யசோதைக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள்; கண்களாலேயே அளந்து கண்ணனைத் தேடினாள்.

கண்ணனோ, தனியானதோர் இடத்தில் ஓர் உரலின் மேல் உட்கார்ந்து கொண்டு, ஒரு பூனைக்குட்டிக்குத் தன் கையிலிருந்த வெண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிக்கொண்டிருந்தார்.

பார்த்தாள் யசோதை; எப்படியாவது கண்ணனைக் கட்டிப்போடவேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள்; மெள்ள மெள்ளக் கண்ணனை நெருங்கினாள்; கட்ட முயன்றாள்.

ஊஹூம்! கயிறின் நீளம் போதவில்லை; இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது. சற்று நீளமான வேறொரு கயிற்றையெடுத்துக் கண்ணனைக் கட்ட முயன்றாள் யசோதை. அப்போதும் இரண்டு அங்குலம் குறைவாகவே இருந்தது; கட்ட முடியவில்லை கண்ணனை.

மேலும் மேலும் நீளமான கயிறுகள் கொண்டு வந்தாலும், இரண்டங்குலம் இடைவெளி மட்டும் அப்படியே இருந்தது. யசோதைக்கு உடம்பெல்லாம் வியர்த்து, திக்கற்றவள் போல் நின்றாள்.

அது என்ன கணக்கு இரண்டங்குலம்?

‘யான்-எனது’ எனும் அபிமானமே - செருக்கே அந்த இரண்டு அங்குலம்; காமம், குரோதம் எனும் தீய குணங்களே அந்த இரண்டு அங்குலம்; நல்வினை, தீவினை எனும் இரு வினைகளே அந்த இரண்டங்குலம்!

உடல் முழுதும் வியர்வையோடு தலை கலைந்து கிடக்க, மலர்கள் தரையில் உதிர்ந்து கிடக்க, செயலற்று நின்ற யசோதையின் நிலையைக் கண்டு பகவானுக்குப் பாவமாக இருந்தது. `சரி! கட்டுப்படுவோம்' என்ற எண்ணத்தில் பகவான் கட்டுப்பட்டார். பகவானை, அவர் இருந்த உரலிலேயே கட்டிவிட்டு அகன்றாள் யசோதை. ஆம்! யசோதை தன் செயலற்று நின்றபோது, அவளுடைய தூய அன்புக்குக் கட்டுப்பட்டார் கண்ணன்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து; ஆயர்குலவாசிகள் அனைவருக்கும் ஆராத இன்பத்தை வாரி வழங்கிய கண்ணன், நம் அனைவரின் உள்ளங் களிலும் இல்லங்களிலும் எழுந்தருள வேண்டுவோம். ஆரோக்கியம், அமைதி, நிம்மதி, ஒற்றுமை ஆகிய மாபெரும் செல்வங்கள் நான்கினையும் வாரி வழங்க பிரார்த்திப்போம்!

- தொடரும்...