புரட்டாசி மாதம் வந்துவிட்டால் போதும்; நமக்கு நன்கு தெரிந்தவர்கள்; நம் வீதியில் இருப்பவர்கள்; நன்கு கல்வி கற்றவர்கள்; வசதி வாய்ப்பு மிக்கவர்கள் என்று பலரும் சாதாரண மஞ்சள் ஆடையை அணிந்து, நெற்றியில் திருமண் காப்பு அணிந்து, கைகளில் திருமண் காப்பாலும் மலர்ச்சரங்களாலும் அலங்கரிக்கப் பட்ட ஒரு சொம்பைத் தூக்கியபடி, வீதிவீதியாக ‘கோவிந்தா... கோவிந்தா!’ என்று குரல் கொடுத்தபடி வருவார்கள்.

குறைந்தபட்சம் ஏழு வீடுகளிலாவது கோவிந்தனின் திருநாமத்தை முழங்கி, பிக்ஷை எடுப்பார்கள். பிறகு, நடையாய் நடந்து போய்த் திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளைப் பக்தியுடன் தரிசித்து, காணிக்கை செலுத்திவிட்டுத் திரும்புவார்கள். புரட்டாசி மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வுக்கான காரணம் என்ன... தெரிந்துகொள்வோமா?

மன்னர் தொண்டமானுக்கு ஏழுமலையானி டம் அதீத பக்தி. அதன் காரணமாக அவருக்கு அற்புதமான ஆலயம் அமைத்து, நாள்தோறும் தங்கமலர்களால் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

சக்தி கொடு! - 12

அற்புதமான அந்த வழிபாடு முறையாக நடந்து வந்தது. ஒருநாள், வழக்கப்படி அரசர் செய்த வழிபாட்டின்போது, அவர் அர்ச்சித்த தங்கமலர்களுடன் மண்ணால் செய்யப்பட்ட மலர்களும் வந்து விழுந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று எண்ணிய மன்னர், அதன் பிறகு எந்தவிதமான அஜாக்கிரதைக்கும் இடம் கொடுக்காமல், மிகுந்த பாதுகாப்போடு, பூஜையைச் செய்தார். அப்போதும் முன்போலவே, தங்க மலர்களுடன் மண்ணால் செய்யப்பட்ட மலர்களும் வந்து விழுந்தன.

மன்னரின் மனக்கவலை அதிகரித்தது. மன்னர் செய்த பூஜையில் மண் மலர்கள் எப்படி வந்தன. அடியார் ஒருவரின் மன அல்லலைத் தீர்ப்பதற்காக, மலை மேல் நிற்கும் பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல் அது.

ஒரு கிராமத்தில், குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார் (அந்தக் கிராமத்தின் பெயர் - குருவை; குயவரின் பெயர் - பீமையா என்று ஒரு தகவல் உண்டு). அந்தக் குயவர் நேர்மை தவறாதவர்; மறந்தும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்; எந்த நேரமும் ‘கோவிந்தா... கோவிந்தா!’ என்று, மனத்தாலும் நாவாலும் தெய்வ நாமாவை முழக்குபவர்.

இவ்வாறு நற்குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான அக்குயவரை, ஊனமும் இருப்பிட மாகக் கொண்டது. ஆம் ! அந்தக் குயவர், இயற்கையிலேயே கால் ஊனமானவர். இருந்தாலும் மன ஊக்கத்தோடு மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலை, மிகுந்த பொறுப்போடு செய்து வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் குறையில்லாமல் தூய்மையான பக்தியோடு வழிபாடு செய்த குயவருக்கு, திருவேங்கடவனின் திருவருள் தரிசனம் கிடைத்தது, புரட்டாசி மாதம் சனிக் கிழமையன்று!

கைப்பேசி கீறல் விழுந்து அழுக்காக இருந்தாலும், உள்ளே உள்ள ‘சிம் கார்டு' நல்லதாக இருந்தால், இணைப்பு கிடைக்கிறதல்லவா! அதுபோல், உடற்குறை இருந்தாலும் நற்குணங்களின் இருப்பிடமான குயவரின் மனது, பெருமாளை வசீகரித்து இழுத்துவிட்டது.

ஆம், அடியாரைத்தேடி ஆண்டவனே வந்துவிட்டார்!

குயவரின் கனவில் வந்து தன் திருவடிவை முழுமையாகக் காட்டி காட்சியருளி மறைந்தார்.ஏழுமலையான் அவ்வாறு காட்சி கொடுத்த தினம் - புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை நேரம்!

குயவருக்கு மெய்சிலிர்த்தது; தான் கனவில் தரிசித்த சுவாமி யின் வடிவை அப்படியே செய்ய விரும்பினார்.

சக்தி கொடு! - 12

மண் பாண்டங்களைச் செய்து பழக்கப்பட்டவர் அல்லவா! ஏழுமலையான் வடிவத்தையும் அப்படியே மண்ணால் செய்துவிட்டார். மண்ணில் நீரைக் கலந்து பிசைந்து உருவாக்கிய விக்கிரகமா அது...தூய்மையான பக்தியையும் கலந்து உருவாக்கிய விக்கிரகமாயிற்றே! தெய்வச் சாந்நித்தியத்துடன் விளங்கியது.

அந்த ஏழுமலையான் திருவுருவை வைத்து, தினந்தோறும் மலர்கள் தூவி வழிபாடு செய்யத் தொடங்கினார் குயவர். அதுமட்டுமல்ல, பெருமாள் கனவில் வந்து தரிசனம் தந்த சனிக் கிழமையன்று (வாரா வாரம்) விரதம் இருந்து பகவானை வழிபட்டு வந்தார்!

மண் பிசைந்து பாண்டங்கள் செய்யும்போதும் மாலவன் நினைவுதான். சில நேரங்களில் கண்களைமூடி, அப்படியே மாலவனின் வடிவில் மனதை இழந்து விடுவார் அந்தக் குயவர். அந்த நிலையில் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல், களிமண்ணையே பூக்களாகப் பாவித்துப் பகவானுக்கு அர்ச்சனையும் செய்வார்.

அப்படி, தன்னை மறந்த நிலையில் அவர் செய்த செயல், நாளாக நாளாக... நாள்தோறும் செய்யும் வழக்கமான வழிபாடாகவே மாறிவிட்டது. களிமண்ணையே மலர்களாகப் பாவித்துக் கமலக்கண்ணனை, அவர் வழிபாடு செய்யட்டும்.

நாம்... தான் செய்யும் வழிபாட் டில், தங்க மலர்களோடு களிமண் மலர்களும் இருந்ததாகக் கண்டு, மன்னர் தொண்டமான் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாரல்லவா... அவரிடம் செல்லலாம் வாருங்கள்!

“பெருமாளே... கோவிந்தா! அடியேன் செய்யும் வழிபாட்டில், மண்ணால் ஆன மலர்களும் இருக்கின்றனவே, எப்படி இது. துயரம் தீர்ப்பாய் தெய்வமே” என்று கலங்கினார் மன்னர். கலங்கிய மன்னரின் கனவிலும் வந்து நின்றார் பகவான்.

“பக்தா! எம் பக்தனான குயவன் ஒருவன் செய்யும் வழிபாடு நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. அவன் செய்யும் அந்த வழிபாட்டை நீயும் சென்று பார். உன் பூஜையின்போது நிகழும் மாறுதலுக்கான காரணம் புரியும்” என்று சொல்லி மறைந்தார்.

கனவு கலைந்தது. மனக்கலக்கத்துக்கான விளக்கத்தை மாலவனே வந்து சொன்னபின், மன்னர் சும்மாயிருப்பாரா? பகவான் குறிப்பிட்ட குயவரைப் பார்க்கத் தீர்மானித்தார். சேனாவீரர் முதலான படைகளுடன் போனால், பரபரப்பு உண்டாகித் தன் செயலுக்கு இடையூறு வந்து விடுமே என்ற எண்ணத்தில், கும்பல் இல்லாமல் சென்றார் மன்னர்.

அதற்குள்ளாக, குயவரின் கனவில் தோன்றிய திருவேங்கடவன், “பக்தா! உன் பக்தியின் பெருமையை மற்றவர் கூறக் கேட்கும் நாளன்று, உனக்கு யாம் முக்தியை அளிப்போம்” என்றுகூறி மறைந்தார்.

சக்தி கொடு! - 12

குயவர் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்த மன்னர், குயவரின் பார்வையில் படாமல் மறைந்திருந்து, அவரின் செயல்களை நோட்டமிடலானார். குயவர் தன் வழக்கப்படி, தான் மண்ணால் செய்து வைத்திருந்த திருவேங்கடவன் விக்கிரகத்தின் அருகில் அமர்ந்து, மண் பாண்டங்களைச் செய்தவாறே கண்களை மூடி மண்ணால் ஆன மலர்களைத் தூவி வழிபாடும் செய்யலானார்.

அதைப் பார்த்த மன்னருக்கு மனம் கசிந்தது. கண்களில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன.

‘நாம் பொன்னாலான மலர்களைத்தூவி பூஜை செய்கிறோம்; நம்மைவிட யார் உயர்வான பூஜையைச் செய்துவிடப்போகிறார்கள் என்று எண்ணினோமே... இந்தக் குயவர் செய்யும் தூய்மையான வழிபாடல்லவா உயர்ந்தது! ஆகா... ஆகா... நம் அறியாமையை உணர்த்துவதற்காகவே, வேங்கடவன் நம் கனவில் வந்து காட்சி தந்து அருள்புரிந்திருக்கிறார்; தூய்மையான இந்த வழிபாட்டையும் காட்டியிருக்கிறார்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட மன்னர், மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு வெகுவேகமாகப் போய், குயவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

“ஐயா! உங்களின் வழிபாட்டை வேங்கடவன் ஏற்றுக்கொண்டுவிட்டார்” என்று சொல்லி, தான் கனவில் கண்ட நிகழ்வுகளையும் விவரித்து முடித்தார் மன்னர். குயவருக்கு மெய் சிலிர்த்தது.

“பெருமாளே! இந்த எளியவனுக்கும் முக்தி கிடைக்க அருள்புரிந்துவிட்டாயே” என்று நாத்தழுதழுக்கக் கூவினார். அதே விநாடியில் குயவருக்கு முக்தி கிடைத்தது.

பார்த்துக்கொண்டிருந்த மன்னர் பரவசத் தோடு அரண்மனைக்குத் திரும்பினார்; ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டு, திருமலைக்குச்சென்று தெய்வ வழிபாட்டிலேயே மனதைக் கரைத்து முக்தியும் பெற்றார்.

உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் குறையில்லாமல் தூய்மையான பக்தியோடு வழிபாடு செய்த குயவருக்குப் புரட்டாசி சனிக் கிழமையன்று, பெருமாள் கனவில் வந்து அருள் புரிந்தார் அல்லவா!

அதை முன்னிட்டே ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையன்றும், அடியார்கள் திருவேங்கடவனை எண்ணி விரதம் இருக் கிறார்கள்; கைகளில் சொம்பைத் தாங்கி, வீடுவீடாகச் சென்று இறையருள் வேண்டிப் பிக்ஷை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் பார்த்ததைப் போல, செல்வந்தர்களும் படிப்பாளிகளும் இதில் அடங்குவார்கள்.

அதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமானோர் நடைப்பயணம் மேற்கொண்டு, திருப்பதியை நோக்கிச் செல்வதை இன்றும் காணலாம்.

ஆனால் நம்மில் பலருக்கு ஓர் எண்ணம் உண்டு. `புரட்டாசி வந்தா போதும்பா! நாமத்தைப் போட்டுக்கிட்டு, கையில ஒரு சொம்ப தூக்கிக்கிட்டுப் பிக்ஷை எடுக்க வந்துருவாங்க.....” என்று ஏளனமாக எண்ணிப் பேசுவதும் உண்டு.

சற்று யோசித்துப் பாருங்கள்!

மஞ்சள் துண்டு கட்டி, நாமம் இட்டுக்கொண்டு ஏழெட்டு வீடுகளிலாவதுபோய், நாம் பிக்ஷை கேட்போமா?

அடியார்கள் அவ்வாறு போய்ப் பிக்ஷை கேட்பது, அகங்காரம் நீக்கி ஆண்டவன் அருள் பெற முயல்வதைக் குறிக்கிறது! நாமும் அவ்வாறு செயல்பட்டு, பாத யாத்திரை மேற்கொண்டு, திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்கிறோமோ இல்லையோ... அவ்வாறு செல்பவர்களைக் கேலி பேசி இகழாமல் இருந்தாலே போதும்; இறையருள் கிடைக்கும்.

மேலும், புண்ணிய புரட்டாசியில் அந்தப் புருஷோத்தமனின் புகழைப் பாடி வரமும் அருளும் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism