மாத்ரு தேவோ பவ... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்... மாதாச பார்வதி தேவீ... என்றெல்லாம் ஞான நூல்கள் அனைத்தும் ஒருமுகமாக அன்னையின் பெருமையையே பாடுகின்றன.

ஆம்! தெய்வ வழிபாட்டிலும், சக்தி வழிபாடுதான் முதன்மை பெற்றுள்ளது. இதிகாசங்களும் புராணங்களும் அம்பிகையின் பெருமையை விரி வாகவே பேசுகின்றன. குறிப்பாக, தேவி பாகவதமும் தேவி மஹாத்மியமும் அம்பிகையின் அருளாடலைப் பரவசத்தோடு விவரிப்பதுடன், பல அற்புதமான துதிகளையும் கொண்டிருக்கின்றன.

சக்தி கொடு! - 13

`அதெல்லாம் சரி! ஞான நூல்களில் சொல்லப் பட்டவை எல்லாம், அந்தக் காலத்தில் அதாவது இதிகாச - புராண காலத்தில் நடந்திருக்கலாம். விஞ்ஞானம் பரந்துவிரிந்து ஆகாயம் அளாவிப் பறந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், நடக்குமா' என்ற எண்ணம் வேண்டாம். தற்போதைய கலியுகத்திலும் எண்ணற்ற அருளாடல்களை நடத்தியிருக்கிறாள் அம்பிகை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெல்லைச் சீமையில் தென்காசிக்கு அருகிலுள்ள ஊர் செங்கோட்டை. அந்த ஊரில் அமைந்திருந்த ஆதிசுமைதாங்கிக் கல் அருகில், பூலாவுடைய தலைவனார் என்பவரும் அவர் மகன் பாண்டியத் தலைவனார் என்பவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களின் பார்வை அவ்வப்போது ஓர் இடத்திலே குத்திட்டு நின்றது. காரணம்?

ஏறத்தாழ 11 வயதுள்ள பெண் குழந்தை ஒன்று, அங்கே நின்று கொண்டிருந்தது. சிவந்த வடிவமும் காதுவரை நீண்ட கண்களோடும் இருந்த அக்குழந்தை, தெய்வகடாட்சத்துடன் திகழ்ந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தையும் மகனும்... ஏதோ ஒன்று தங்கள் மனத்தில் நறுமணம் பரப்பியதை உணர்ந்தார்கள்.

பூலாவுடைய தலைவனார் மென்மையாக, “யாரும்மா நீ. நீண்டநேரமாக இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயே... என்ன வேண்டும் உனக்கு?” எனக் கேட்டார்.

குழந்தை பதில் சொன்னாள்: “இங்கே யார் வீட்டிலாவது வேலைசெய்து பிழைக்கலாம் என்று வந்திருக்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`குழந்தை மாடிக்குச் சென்ற சில விநாடிகளில், மாடி அறையிலிருந்து பெண்கள் பலர் குலவையிடும் ஓசை கேட்டது. சென்று பார்த்தால், அறை முழுவதும் வெண்புகைப்படலம் நிறைந்திருந்தது...'

“எங்கள் வீட்டுக்கு வருகிறாயா... வேலையும் தந்து, வேளாவேளைக்கு உணவும் போடுகிறோம்” என்றார் பூலாவுடைய தலைவனார்.

ஒப்புக்கொண்ட குழந்தை, அவர்களைப் பின்தொடர்ந்தது. தலைவனாரின் வீட்டுக்குச் சென்ற குழந்தை, அங்கே பல காலம் வேலை பார்த்தது. குடும்பத்தினர் அனைவர் மனங்களிலும் குழந்தையின் நடவடிக்கைகளும் கனிவான பேச்சும் முழுமையாக இடம்பிடித்தன.

ஒருநாள், குழந்தையை அழைத்த தலைவனார், “அம்மா! மாடியைப் பெருக்கி மெழுகி, கோலம் போட்டு, விளக்கேற்றிவிட்டு வா!'' என்றார்.

சக்தி கொடு! - 13

குழந்தை மாடிக்குப் போனது. குழந்தை போன ஒரு சில விநாடிகளில் மாடியிலிருந்து பெண்கள் பலர் குலவையிடும் ஓசை கேட்டது. கீழே இருந்தவர்கள் அனைரும் திகைத்துப்போய், மாடிக்கு ஓடினார்கள். மாடி அறை முழுவதும் இனிமையான நறுமணம் கமழும், மென்மையான வெண்புகைப்படலம் நிறைந்திருந்ததே தவிர, பெண் குழந்தையைக் காணோம். அனைவருக்கும் வியப்பு. ஓரிரு நொடிகளில் அசரீரி கேட்டது.

“தேவலோகத்தைச் சேர்ந்தவளான நான் ஒரு பெண் தெய்வம். பிரம்மதேவர் ஒருமுறை தேரில் போய்க்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தேரின் அச்சு முறிந்தது. இந்த விஷயம் தெரியாமல் பிரம்மன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது நான், தேர் மறிச்சு விழாமல் (நிலைகுலைந்து விழுந்துவிடாதபடி), காப்பாற்றி வந்தேன்.

தேர் நின்றதும் பிரம்மதேவர் இறங்க, நான் கையை எடுத்தேன்; தேர் விழுந்தது. நிலைமையை உணர்ந்த பிரம்மதேவர், `தேவீ! என் ரதம் மறிச்சு விழுந்துவிடாமல், உன் கையை வைத்துக் காப்பாற்றியதால், இன்றுமுதல் உனக்கு ‘வண்டி மறிச்சி அம்மன்’ எனும் திருநாமம் வழங்கட்டும். பூவுலகில் இதே திருநாமத்துடன் விளங்கி, அடியார்களுக்கு அருள் செய்து வா. எப்போதும் திருவிழாக் கோலத்தோடு விளங்குவாய்' எனக்கூறி மறைந்தார்.

அதன்பிறகு இங்கு வந்தேன். அடக்கம், கருணை, வீரம், இரக்கம் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கும் உன்னிடம் (பூலாவுடைய தலைவனாரிடம்), விவரம் தெரியாதவளைப்போல அடைக்கலம் தேடி வந்தேன். நீ இப்போது எனக்குத் தேவையான ஆகாரத்தைப் படைத்துவிட்டு, உடனே மாடியை விட்டுக் கீழே இறங்கிப் போ. சற்று நேரம் கழித்து வா” என்று பெண் குரல் கூறி முடித்தது.

சக்தி கொடு! - 13

உடனடியாக அந்த அறையில் ஆகார வகைகளைப் படைத்துவிட்டு, அனைவருடனும் கீழே இறங்கினார் தலைவனார். சற்று நேரம்

சென்றது. அனைவரும் பின்தொடர தலைவனார், மாடிக்குச் சென்று பார்த்தார். அம்பிகைக்கென படைக்கப்பட்டவை அனைத்தும் மாயமாய் மறைந்துபோயிருந்தன.

அனைவரும் வியப்பில் ஆழ்ந்த நேரத்தில், அம்பிகை நேருக்குநேராகத் தரிசனம் அளித்தாள். கண்களில் கண்ணீர் வழியக் கைகளைக் கூப்பி, அனைவரும் தரையில் விழுந்து வணங்கினர்.

அவர்களுக்கு அருளாசி வழங்கிய அன்னை, “அன்பனே! உன் நற்குணங்களால் மகிழ்ந்த நான், இதுவரை உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டும் பணியாற்றிவந்தேன். இனி, அனைவருக்கும் அருள்புரிந்து, பிரம்மதேவர் வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

அதற்காக உன் இல்லத்தின் அருகிலுள்ள காலி மனையில், எனக்காக ஓர் ஆலயம் அமை. அருகிலேயே நான் நீராடுவதற்கு ஒரு கிணறு தோண்டு. அதில் இளநீர் போலச் சுவையான நீரைத் தருவேன். அனைவருக்கும் அருள்புரிவேன்” என்ற அம்பிகை, மறைந்தாள்.

சக்தி கொடு! - 13

அம்பிகை சொன்னபடியே, ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது; கிணற்றையும் உண்டாக்கி னார்கள். அம்பிகை, ‘வண்டி மறிச்சி அம்மன்’ எனும் திருநாமத்தில் இன்றும் செங்கோட்டையில் அருள்புரிந்து வருகிறாள்.

‘வண்டி மறிச்சி அம்மன்’ எனும் அத்திருநாமம் மருவி, ‘வண்டிமலச்சி அம்மன்’ எனத் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. நம் மலங்களை (தீமைகளை) எல்லாம் நீக்கி அருள்புரிவதால், அத்திருநாமமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தென்காசி - குற்றாலத்தின் அருகேயுள்ள இந்தச் செங்கோட்டை ‘வண்டி மறிச்சி அம்மன்’ ஆலயத் தில், நவராத்திரி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் விதவிதமான அலங்காரத்தில், நேருக்குநேராகத் தரிசனம் தருவதைப்போலக் காட்சி அளிப்பாள் அம்பிகை.

நவராத்திரித் திருவிழாவின்போது, இரு அற்புத மான வைபவங்கள் நடைபெறும். முதலாவது: ஆயிரம் பேர் அமரக்கூடிய பந்தல் ஒன்றை, அம்பிகை சந்நிதிக்கு மேற்கில் அமைத்து அதில் பெண்கள் வரிசையாக அமர்ந்து, திருவிளக்குப் பூஜை செய்வார்கள்.

பெண்கள் அனைவரும் அம்பாளின் திருநாமங் களைச் சொல்லிச் செய்யும் அந்த வழிபாட்டைப் பார்த்தால், மணித்வீபத்தில் அம்பாளுக்கு ஆயிரக் கணக்கான தேவலோகப் பெண்கள் செய்யும் வழிபாட்டை நேரில் தரிசித்த அனுபவம் கிடைக்கும்.

இரண்டாவது வைபவம்: நவராத்திரியை யொட்டி இக்கோயிலில் நிகழும் அன்னதானம்.அன்னை மீனாட்சியின் கல்யாணத்தின்போது, மலை போல் அன்னம் குவிக்கப்பட்டிருந்ததாக, ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்ற காட்சியை, இக்கோயிலின் அன்னதான வைபவத்திலும் தரிசிக்கலாம்! அன்னதானத்தில், எந்தவிதமான பேதா பேதமும் இல்லாமல், மக்கள் வரிசையாக அமர்ந்து உண்ணும் காட்சி, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்.

நம் இல்லத்திலும் அம்பாளின் அருள் நிறையட் டும்; சகல வளங்களும் பொங்கிப் பெருகட்டும். அதற்கு அருளும்படி அந்த அம்பிகையை வணங்கித் தொழுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism