வி.ஆர்.சுந்தரி

‘நீர் இன்றி அமையாது உலகு’ - என்கிறது குறள். நீர் இல்லாவிட்டால் யாருக்குமே உலக வாழ்க்கை இல்லை என்பது இதன் கருத்து. நீரின் மகிமையைக்கூறாத ஞான நூல்களே இல்லை எனலாம். வாய்மையைச் சொல்லும்போதுகூட, முதலில் நீரின் செயலைச் சொல்லிவிட்டு, அதன் பிறகே வாய்மையை உணர்த்துகிறார் வள்ளுவர்.

‘புறந்தூய்மை நீரான் அமையும்;

அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்’

- திருக்குறள்

நதியிலோ குளத்திலோ நீராடும்போது, மூன்று பிடி மண்ணை எடுத்துக் கரையில் போட்டுவிட்டு, நீராடவேண்டும் என்ற விதிமுறைகூட உண்டு. போன தலைமுறைவரை, அவ்வாறு நீராடிய அன்பர்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த நற்செயல் தொடர்ந்திருந்தால், நதி மற்றும் குளங்களைத் தூர்வாரச் சொல்லிக் கூக்குரல் இட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரி... முன்னோர்கள் நீராடியதைப் பார்த்த நாம், அவர்கள் நீராடிய புண்ணிய காலத்தையும் பார்க்கலாம்!

ஷஷ்டிர் வர்ஷ ஸஹஸ்ராணி

கங்காயாமன்வகாஹனம்

ஸ்நாநமேகந்து

காவேர்யாம்துலாயாந்து திவாகர.

`அறுபதாயிரம் வருடங்கள் கங்கையில் நாள்தோறும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்தப் புண்ணியம், துலா மாதத்தில் காவிரியில் ஒருநாள் நீராடினால் கிடைக்கும்' என்பது ரிஷிகளின் வாக்கு.

சக்தி கொடு
சக்தி கொடு

துலா மாதம் என்பது இங்கே ஐப்பசியைக் குறிக்கும். காவிரியில் நீராடுவதற்குக் காலம் இடம் பார்க்க வேண்டாம்தான். எனினும் ஞானநூல்கள் `ஐப்பசி மாதம் மாயூரத்தில் துலா ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்' என விரிவாகவே கூறுகின்றன. காரணம், அவ்வளவு புண்ணியம் நிறைந்தது துலா மாதமாகிய ஐப்பசி.

ஐப்பசி மாதத்தில் மற்ற 29 நாள்கள் காவிரியில் நீராடத் தவறினாலும், மாதத்தின் கடைசி நாளாவது காவிரியில் அவசியம் நீராடவேண்டும். அதனாப் பெரும்புண்ணியம் வாய்க்கும். அந்த நாளன்று நடக்கும் விழாதான் ‘கடைமுக ஸ்நானம்’ எனப்படுகிறது.

‘துலா ஸ்நானம்’ என்பது இவ்வளவு முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன?

கண்வ முனிவர் என்பவர் கங்கையில் நீராடும் விருப்பத்துடன் போய்க் கொண் டிருந்தார். வழியில் ‘கன்னங்கரேல்’ என்று கறுத்த உருவத்துடன் பெண்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த முனிவர் பரிவோடு, “யார் நீங்கள், ஏன் இந்தக்கோலம்” எனக் கேட்டார். வந்தவர்கள் பதில் சொல்லத் தொடங்கினார்கள்.

“மா முனிவரே! கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய நதிகள் நாங்கள். ஏராளமானவர்கள், தங்களின் பாவங்கள் தீர எங்களிடம் மூழ்கி நீராடுகிறார்கள்.

அவர்களின் பாவங்கள் எல்லாம் எங்களிடம் சேர்ந்ததால், நாங்கள் இப்படிப்பட்ட குரூரமான வடிவங்கள் கொண்டவர்களாக மாறிவிட்டோம். மற்றவர் பாவங்களை எல்லாம் கழுவித் துடைக்கும் நாங்கள், எங்கள் பாவங்களைக் கழுவித் துடைத் துக்கொள்வதற்காகவே, காவிரியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம்” என்றனர்.

ஆம்! கங்கை முதலான புண்ணிய நதிகளும் தங்களிடம் சேரும் பாவங்களை நீக்கிக்கொள்ள, துலா மாதத்தில் காவிரிக்கு வருகிறார்கள்!

அவர்கள் மட்டுமா? தேவர்கள், முனிவர்கள், சப்த கன்னிகள் எனப் பலரும் வந்து, துலா மாதத்தில் காவிரியில் நீராடுகிறார்கள். ஆகவே, துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடுவது என்பது அளவிலா புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும். மாதம் முப்பது நாள்களும் நீராட இயலாதவர்கள், குறைந்த பட்சம் மூன்று நாள்களாவது காவிரியில் நீராடுவது நல்லது. அதுவும் இயலாவிட்டால், கடைசி நாளிலாவது நீராட வேண்டும்.

துலா ஸ்நானம், துலா நீராடல் என்றதும் கடை முழுக்கு, முடவன் முழுக்கு என இருவிதமான முழுக்குகளைப் பிரசித்தமாகச் சொல்வார்கள். இவற்றில் ‘கடை முழுக்கு’ என்பதைப்பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ‘முடவன் முழுக்கு’ என்பதைப் பார்ப்போம் இனி !

கடை முழுக்கைத் தொடர்ந்தே முடவன் முழுக்கு பற்றிய, அபூர்வமான தகவல் இடம் பெறுகிறது. மாயூரத்தில் நடக்கும் துலா நீராடல் மகிமையைப் பற்றி பலரும் சொல்லக்கேட்டார், முடவர் ஒருவர். அவருக்கு மாயூரம்போய் ‘துலா’ நீராடல் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டானது. உடனே புறப்பட்டுவிட்டார் அவர்.அவரால் வேகமாக நடக்கமுடியுமா என்ன?

துலா மாதம் பிறந்ததுமே நடக்கத் தொடங்கிய அவர், மெள்ள மெள்ள ஒருவழியாக மாயூரத்தை அடைந்தபோது, ஐப்பசி மாதம் முடிந்து, கார்த்திகை முதல்நாள் வந்துவிட்டது.

முடவர் மனம்வருந்திப் புலம்பினார்; “தெய்வமே! இது என்ன திருக்கூத்து. அடியேன் இங்கு வந்து சேர்வதற்குள் துலா மாதம் முடிந்து விட்டதே... ஒருநாள் தாமதமாக வந்ததால், என் பாவச்சுமையைக் கழுவ முடியாமல் போய் விட்டதே” என்று வாய்விட்டுப் புலம்பினார்.

சக்தி கொடு
சக்தி கொடு

‘வேண்டத்தக்கது அறிவோய் நீ. வேண்ட முழுதும் தருவோய் நீ’ எனத் திருமுறைகள் சொல்லும் வாக்கு, அங்கே உண்மையானது. ஆம்! அந்த அடியாரின் புலம்பலுக்குச் சிவபெருமான் பதில் அளித்தார்.

“பக்தா, கவலைப்படாதே. கார்த்திகை மாதம் முதல்நாள் காவிரியில் முழுகி நீராடினாலும் பலன் உண்டு” என்று அந்தத் தூய்மையான அடியாருக்காக விதியைத் தளர்த்தியது தெய்வம்.

அந்த அடியாரும் சிவபெருமான் கருணையை நினைந்து உள்ளம் உருகியபடி நீராடினார். இவருக்கு இறைவன் அருள் செய்ததைக் குறிக்கும்

முகமாகவே, ‘முடவன் முழுக்கு’ என்று, கார்த்திகை மாதம் முதல்நாள் விசேஷமாகச் சொல்லப் படுகிறது.

‘நம்மில் பலருக்கு உடலில் ஊனமில்லா விட்டா லும், பலவிதமான கஷ்டங்களாலும் அவற்றால் விளையும் துயரங்களாலும், மனம் என்பது மிகவும் துன்பப்பட்டுப் போயிருக்கிறது. அந்தத் துன்பங்கள் தெய்வ அருள் இல்லாமல் விலகாது’ என்பர் பெரியோர்.

மாயூரம் சென்று துலா நீராடல் செய்து நம் மனத் துன்பங்களை நீக்கி அருள்செய்யுமாறு இறைவனை வேண்டுவோம்.

நீரின் பெருமை, நீர் நிலைகளின் மகிமையும் பராமரிப்பும், நீர் நிலைகளின் தெய்வத்தன்மை எனப் பலவிதங்களிலும் முன்னோர்கள் பாடம் நடத்தியிருக்கிறார்கள்.

உணர்வோம், செயல்படுவோம், உயர்வோம்!

- வளரும்...

ஒப்பிலியப்பனுக்கும் உண்டு சுப்ரபாதம்!

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு தெற்கில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவிண்ணகரம் - ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயில்.

108 திருப்பதிகளில், விண்ணகரங்கள் எனப்படுபவை 6. ஒப்பிலியப்பன்கோவிலும் அவற்றில் ஒன்று. மற்றவை: சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுரம் விண்ணகரம், பரமேச்சுர விண்ணகரம்.

ஸ்ரீஒப்பிலியப்பன்
ஸ்ரீஒப்பிலியப்பன்

இங்கு கருடன், காவிரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு எம்பெருமான் காட்சி அளித்ததாகப் புராணம் கூறுகிறது. இங்கே ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு உப்பில்லாத பண்டங்களே படைக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த தகவல். வேறுபல விசேஷங்களும் இத்தலத்துக்கு உண்டு.

திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியைப் போலவே இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. இதை இயற்றியவர் ஸ்ரீராமதேசிகாச்சார்ய சுவாமிகள். இங்கு எம்பெருமானைத் துளசியால் பூஜிப்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நடைபயணமாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் புண்ணியம் பெறுவர் என்பது ஐதீகம்.

- கே.கீர்த்தனா, முசிறி