திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

சக்தி கொடு! - 16

விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
விநாயகர்

கார்த்திகை விநாயகர் விரதம்!

வி.ஆர்.சுந்தரி, ஓவியங்கள்: இளையராஜா

டியும் முடியும் காண முடியாதபடி சிவபெருமான் ஜோதி வடிவமாக விஸ்வரூபமெடுத்த நாளே திருக்கார்த்திகை. திருவண்ணா மலை, அண்ணாமலையார் தலத்தில் பரணி தீபமும், மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும். அதேநாளில் கிராமங்களில் `சொக்கப்பனை’க்குத் தீயிட்டு சிவபெருமானை ஜோதி வடிவமாகத் தோன்றச்செய்து வழிபடுவோம். இல்லங்களில் தீபவிளக்கு ஏற்றிவைத்து தீபத் திருநாளைக் கொண்டாடுவோம். இப்படியான மகிமைகள்கொண்ட தீபத் திருநாளால் சிறப்பு பெறும் மாதம் கார்த்திகை.

முருகப்பெருமானை பாராட்டிச் சீராட்டி வளர்த்த கார்த்திகை நட்சத்திரப் பெண்களின் நினைவாக முருக வழிபாடும் கார்த்திகை மாதத்தில் பிரசித்தம். மேலும், முழுமுதற் கடவுளான பிள்ளையாரை வழிபடுவதற்கும் உகந்த மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் கணபதியை வழிபடக் கடைப்பிடிக்கும் முக்கியமான இரண்டு விரதங்களை அறிந்துகொள்வோம்...

விநாயகருக்கும் சஷ்டி விரதம்

ஷ்டி விரதம் என்றால் அது முருகப்பெருமானுக்காகத்தான். ஆனால், விநாயருக்கும் சஷ்டி விரதம் உண்டு. அதுவே, ‘விநாயக சஷ்டி விரதம்’ ஆகும். கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை எண்ணிச் செய்யப்படும் விரதம் இது.

21 இழைகளாலான நோன்புக் கயிற்றை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்வார்கள்.

ஞான இந்திரியம் - 5: உடம்பு, வாய், கண், மூக்கு, காது.

கர்ம இந்திரியம் - 5: கை, கால், மலத் துவாரம், சிறுநீர்த் துவாரம், வாய். (வாய் கண்டதைச் சாப்பிடாது; அப்போது அது ஞான இந்திரியம். ஆனால், கண்டதைப் பேசும். அப்போது அது கர்ம இந்திரியம்).

செயல்பாடுகள் - 5: சுவை, ஒளி, ஊறு (தொடு உணர்ச்சி), ஓசை, நாற்றம்.

பூதங்கள் - 5: தீ, நீர், காற்று, ஆகாயம், மண்.

சஷ்டி விரதம்
சஷ்டி விரதம்

மனம் - 1

இவற்றைக் கூட்டினால் 21 வரும். இந்த 21-ம் நம்மிடம் உள்ளன.

‘என்னிடம் உள்ளவற்றை உன்னிடம் சமர்ப்பித்து விட்டேன். என்னை ஆட்கொண்டு எனக்கு அருள்செய்வாயாக’ என்று பிள்ளையாரிடம் மனமுருகி வேண்டிக்கொள்வதைக் குறிக்கவே,

21 இழைகள் கொண்ட காப்புக் கயிறு கட்டி இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த விரத காலத்தில் அனுதினமும் பிள்ளையார் துதிப்பாடல்களைப் பாடி, அவருக்கு அறுகம்புல்லும் கொழுக்கட்டையும் சமர்ப்பித்து மனதார வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பார்கள் பெரியோர்கள். மேலும், ஞானச் செல்வத்தை அருளும் உன்னத விரதம் இது.

தூர்வா கணபதி விரதம்

கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று, அறுகம்புல்லின் மீது விநாயகரை வைத்து, அவரை தியானித்துச் செய்யும் விரத வழிபாடு இது. அறுகம்புல்லுக்கு அதிக மகத்துவம் உண்டு.

எமனின் மகன் அனலன். அவன் தவமிருந்து பிரம்மதேவனை தரிசித்து வரம் பெற்றவன். யாரும் அறியாமல் அவரவர் உடல்களில் புகுந்து, அவர்களின் ஜீவசக்தியைத் தனதாக்கிக் கொள்வான். அவனால் பாதிக்கப்பட்டவர்கள் நடைப்பிணமாக அலைந்தார்கள்; சக்தியில்லாமல் விழுந்தார்கள். அனைவரும் நடுங்கிப்போய் விநாயகரிடம் முறையிட்டனர்.

விநாயகர்
விநாயகர்

அவர்களின் குறை தீர்க்கும் வகையில் அனலனைத் தன் துதிக்கையால் தூக்கி விழுங்கி விட்டார் விநாயகப் பெருமான். பெயருக்குத் தகுந்தாற்போல் அனல் மயமாகவே இருந்த அனலன், விநாயகரின் வயிற்றுக்குள் போனதும் விநாயகரின் உடல் கொதிக்க ஆரம்பித்தது.

விநாயகரின் திருமேனியைக் குளிரச்செய்ய முயற்சிசெய்தார்கள் தேவர்களும் முனிவர்களும். மிகவும் குளிர்ச்சியான சந்திரனின் அமுதக் கற்றைகளை விநாயகர்மீது பொழிந்தார்கள். பாலை ஊற்றினார்கள். பாம்புகளை எடுத்து விநாயகரின் திருமேனி முழுவதும் சுற்றினார்கள். எதுவும் பலனளிக்கவில்லை.

அப்போது ரிஷிகள் ஒவ்வொருவரும் 21 அறுகம் புல்லை எடுத்து, விநாயகரின் திருமேனியில் சாற்றியதும் விநாயகரின் திருமேனி குளிர்ந்தது.

அனலனை யானை முகன் அழித்து, அறுகம் புல்லின் மேன்மையை வெளிப்படுத்தியது கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று. அதனால் தூர்வா கணபதி விரதம் உண்டானது என்பர். நோயில்லா வாழ்வை அளிக்கக் கூடியது இந்தத் தூர்வா கணபதி விரதம்.

கார்த்திகையில் கணபதிக்கு உரிய விரதங்களைப் பார்த்தோம். இனி, கார்த்திகேயனுக்கான விரத மகிமையைத் தெரிந்துகொள்வோம்.

முருகனைக் கும்பிட்டு...

வ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டாவதைப்போல, நாரதருக்கும் ஓர் ஆசை தோன்றியது. முனிவர்களிலேயே மிகவும் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்பதே நாரதரின் ஆசை. இதை நிறைவேற்றிக்கொள்ள விரும்பிய நாரதர், விநாயகரின் திருவடிகளில் போய் விழுந்தார்.

“ஐந்து கரத்து எந்தையே. முனிவர்களிலேயே மிகவும் உயர்ந்த நிலையை அடியேன் அடைய வேண்டும். அதற்கான வழியைத் தாங்கள் கூறியருள வேண்டும்” என்று கைகூப்பி வேண்டினார்.

நாரதரைக் கனிவுடன் பார்த்தார் கணபதி. “நாரதா! கவலை ஏன்? என் இளவல் கந்தனை எண்ணி கார்த்திகை விரதம் இருந்து வழிபாடு செய். இந்த விரதத்தை நீ 12 ஆண்டுகள் சிரத்தையுடன் கடைப்பிடித்து கந்தனை வழிபட்டால், நினைத்தது நடக்கும்” என்று சொல்லி வழிகாட்டினார்.

விநாயகர்
விநாயகர்

வழியை அறிந்தவுடன் நாரதர் சும்மா இருக்க வில்லை. கணபதியை வணங்கி எழுந்தார்; பூமிக்கு வந்தார். கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று நண்பகல் வேளையில் மட்டும் உணவு உண்டார். மறுநாள் கார்த்திகை நட்சத்திர நாளன்று அதிகாலையில் எழுந்தார். நீராடினார். ஐம்புலன்களையும் அதனதன் வழியில் போகாமல் அடக்கி, அவற்றை ஆறுமுகன் திருவடிகளில் அடைக்கலமாக வைத்தார். முறைப்படி விரதம் இருந்து முருகக்கடவுளை வழிபட்டார். தண்ணீரை மட்டுமே உணவாகக் கொண்டார். இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து முருகனின் திருவடிகளையே தியானித்தார்.

மறுநாள் ரோகிணியன்று பொழுது விடிவதற் குள் நாரதர் நீராடி, முழுமனதோடு உள்ளம் உருகி முருகனை வழிபட்டார். அதன் பிறகு, வந்திருந்த முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார்.

விரதம் முடித்து உணவு உண்டவர்கள், அன்று பகல் பொழுதில் தூங்கக்கூடாது; தூங்கினால் மிகுந்த பாவம் உண்டாகும். இதை அறிந்த நாரதர் அன்று பகல் பொழுது தூங்காமலேயே இருந்தார். இந்த முறைப்படி, 12 ஆண்டுகள் மாதம்தோறும் கார்த்திகை விரதமிருந்து, அதன் பலனாக முனிவர்களில் உயர்ந்தவர் என்ற நிலையை அடைந்தார்.

மாதம்தோறும் கார்த்திகை விரதம் இருப்பதாகத் தீர்மானித்தால், கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதத்தைத் தொடங்கவேண்டும். மாதாமாதம் விரதம் இருக்க முடியாத நிலையில், கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளிலாவது தவறாமல் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் அற்புத விரதம் இது!

- வளரும்...