Published:Updated:

சக்தி கொடு! - 18

மார்கழி மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்கழி மகிமைகள்

மார்கழி மகிமைகள்!

வி.ஆர்.சுந்தரி

கிருஷ்ண பரமாத்மா, கீதையில் உயர்வாகச் சொல்லும் மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்வார்கள்.

மனிதர்களான நம் கணக்குப்படி ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களின் பகல் நேரம் உத்தராயனம் என்றும், இரவு நேரம் தட்சிணாயனம் என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்கள் உத்தராயனம்; ஆடி முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாதங்கள் தட்சிணாயனம். இந்த முறைப்படி மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்தம். இதை அனுசரித்தே நாம் பல விதங்களில் தெய்வ வழிபாடுகளைச் செய்துவருகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மார்கழி பீடை மாதமா பீடுடைய மாதமா?

ழங்காலம் முதல் மார்கழியை தெய்வ வழிபாட்டுக்குச் சிறந்த மாதமாகக் கருதிப் போற்றுவ தால், அந்த மாதத்தில் வேறு எந்தவிதமான மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.

‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்தது’ என்பார்கள். சாதாரணமாக மங்கல நிகழ்ச்சிகளைப் பிள்ளையாரைத் துதித்து ஆரம்பித்து, ஆஞ்சநேயரைத் துதித்து முடிப்பார்கள். பஜனைகளில் இப்படிச் செய்யப்படுவதைப் பார்த்திருக்கலாம். அதாவது, ஆரம்பித்த காரியம் மங்கலகரமாக முடிந்தது என்பதையே, ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்தது!’ என்று முன்னோர்கள் சொன் னார்கள். அதன்படி, மார்கழியில் மட்டுமே விநாயகர் பூஜை தொடங்கி ஆஞ்சநேய ஜயந்தி வரை, அனைத்து தெய்வ வழிபாடு களும் நடக்கின்றன எனலாம்.

மார்கழி மகிமைகள்
மார்கழி மகிமைகள்

இப்படிப்பட்ட ‘பீடு’ (பெருமை) நிரம்பிய மார்கழியை, பீடை மாதம் என்று எண்ணும் வழக்கம் எப்படியோ மக்களிடையே பரவி விட்டது. அது தவறு. மார்கழி மாதம் பீடுடைய மாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்கழிப் பிள்ளையார்

மார்கழி மாதம் முழுவதும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து, தினசரி கர்ம அனுஷ்டானங்களை முடித்துக்கொள்வார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப்பகுதியைச் சாணத்தால் மெழுகி மாக்கோலம் போட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, பூக்களைத் தூவி அவரிடம் வேண்டுவார்கள். ‘விக்கினங்களை நீக்கும் விக்னேஸ்வரா... எங்கள் வீடுகளில் அசுர மற்றும் பூத-பிசாசுகளின் தொல்லையால் எந்தவிதமான துயரமும் நேராதபடி காப்பாற்று’ என்பதே அப்போது செய்யப்படும் வேண்டுகோள். இப்படி விநாயகர் காவலாக இருப்பதால், எந்தவிதமான தீய சக்திகளும் வீட்டுக்குள் நுழையாது என்பது நம்பிக்கை.

தீய ஆன்மாக்கள் எறும்பாகவும் ஊர்வனவாகவும் மாறி, நாம் வாயிலில் போட்டுவைத்திருக்கும் மாக்கோலத்தின் பச்சரிசி மாவைச் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுமாம். மேலும், மெழுகிக் கோலம் போட்ட வீட்டுக்கு, தேவர்கள் வந்து ஆசீர்வாதம் செய்வார்களாம்.

மார்கழி மகிமைகள்
மார்கழி மகிமைகள்

மார்கழி முதல் தேதி தொடங்கி இப்படிச் செய்யப்படும் விநாயக வடிவங்களை, தைப்பொங்கலுக்குப் பிறகு ஒரு நல்ல நாளில், ஓரிடத்தில் வைத்து பூஜை செய்து, கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத் தியம் செய்வார்கள். பிறகு பிரத்யேகமாகச் செய்யப்பட்ட சிறிய தேர் ஒன்றில் எல்லா விநாயக வடிவங்களையும் வைத்து அலங்கரிப்பார்கள். பின்னர் வாத்திய கோஷத்துடன் சென்று சுத்தமான ஒரு நீர்நிலையில் அவற்றைப் போடுவார்கள்.

இங்ஙனம், மார்கழியில் பிள்ளையார் பிடித்துவைத்து பூஜை செய்தால் வறுமை நீங்கும்; வியாதி போகும்; செல்வம் சேரும்; விரும்பும் பேறுகள் கிடைக்கும் என்பது முன்னோர் கண்டறிந்த உண்மை.

மார்கழியின் அதிகாலை சுபவேளை...

மார்கழி மாதம் பிறந்துவிட்டால், கிராமப்புறங்களில் புது உற்சாகம் பிறந்துவிடும். அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனின் நாமாவளிகளையும் பாடல்களையும் பாடியபடி வாத்தியங்களுடன் `வீதி பஜனை’ செய்து வருவார்கள். அதற்கு முன்னதாகப் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் சாணம் கரைத்துத் தெளித்துப்பெருக்கிக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில், வீதியில் போட்ட கோலத்தின்மேல் பறங்கிப்பூ அல்லது பூசணிப்பூ வைப்பார்கள்.

மார்கழியின் அதிகாலையில் வீசும் காற்றில் ஏராளமான சக்திகள் இருக்கின்றன. அவை, நம் தேகத்தின் வாத - பித்த ரோகங்களைச் சரிசெய்து நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. இதை உணர்ந்ததாலேயே, நம் முன்னோர் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வழிபாட்டில் ஈடுபடச் சொன்னார்கள். குறைவற்ற செல்வம் என்பது, நோயற்ற வாழ்வுதானே!

கனவால் கிடைத்த காவியம்!

மார்கழி என்றால் கோதை ஆண்டாள் இல்லா மலா! சூடிக்கொடுத்த அந்தச் சுடர்க்கொடியின் மகத்துவத்தையும் அவள் அருளிய திருப்பாவையின் மகிமையையும், அவளைத் திருவரங்கன் ஆட்கொண்ட திருக்கதையையும் நாம் அறிவோம். பிற்காலத்தில், மாமன்னன் ஒருவன் தான் கண்ட கனவின் காரணமாக ஆண்டாளின் சரிதத்தைக் காவியமாக்கிய சம்பவம், பலரும் அறியாதது!

மார்கழி மகிமைகள்
மார்கழி மகிமைகள்

15-ஆம் நூற்றாண்டில் மாமன்னர் ஒருவர் கண்ட கனவு, ரசம் ததும்பும் அற்புதமான ஒரு காவியத்தை நமக்குத் தந்தது.

விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தவர் சக்ரவர்த்தி கிருஷ்ண தேவராயர். தமிழ்நாட்டில் பல பகுதிகள் இவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. அப்போது, கிருஷ்ண தேவராயர், ‘கோதை பிறந்த ஊர்... கோவிந்தன் வாழும் ஊர்’ என்று பக்தர்களால் துதிக்கப்படும் வில்லிபுத்தூர் தலத்தைத் தரிசித்தார். அதன் வளமையும், அந்த திவ்ய க்ஷேத்திரத்தின் மகிமையும் கிருஷ்ண தேவராயரின் உள்ளத்தில் குடிபுகுந்தன. அங்கிருந்து கிளம்பிய கிருஷ்ண தேவராயர், ஸ்ரீகாகுளம் எனும் ஊரை அடைந்தார். (ஸ்ரீகாகுளத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருநாமம் திருவேங்கடம் உடையான்).

ஒருநாள் அவர் கனவில் திருவேங்கடமுடையான் தரிசனம் தந்தார். ‘‘கிருஷ்ண தேவராயா! நீ வடமொழியில் பல நூல்கள் எழுதியிருக்கிறாய். ஆனால், உன் தாய்மொழியான தெலுங்கில் ஒரு நூல்கூட எழுதவில்லை. தெலுங்கில் ஒரு காவிய நூலை நீ எழுதவேண்டும்.

துவாபர யுகத்தில் சுதாமா (குசேலர்), மிகுந்த பக்தியுடன் எனக்கு மாலை சூட்டி வழிபட்டான். இருந்தாலும், ஆண் மகன், பெண் ஒருத்தியிடமிருந்து மாலை பெறுவது அல்லவா சரியானது? இந்தக் குறையைப் பிற்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் என்ற பெண் தீர்த்துவைத்தாள். அவள், பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் வந்து மாலையிட்டு, என்னை மகிழ்வுறச் செய்தாள். அந்த ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் ஒரு காவியமாக்கு’’ என்றார்.

கனவு கலைந்தது. சங்கு சக்கரங்களுடன் காட்சியளித்த கார்மேக வண்ணனின் வடிவமும், வாக்கும் கிருஷ்ண தேவராயரின் சிந்தனையில் சிறகடித்தன.

‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே’ என்று துதிக்கப்பட்ட ஆண்டாள் குறித்த காவியத்தைத் தெலுங்கில் எழுதினார் கிருஷ்ண தேவராயர். அதன் பெயர் ‘ஆமுக்த மால்யதா’. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்க்கையை 900 பாடல்களில் விவரிக்கும் இது, தெலுங்கின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சுந்தரகாண்டம் சர்வரோக நிவாரணி!

ற்புதங்கள் நிறைந்த மார்கழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வைபவம், அனுமன் ஜயந்தி. ஆம்! மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில்தான் (சிலர் சுவாதி நட்சத்திரம் என்றும் சொல்வார்கள்) ஆஞ்சநேயரின் அவதாரம் நிகழ்ந்தது.

ஆஞ்சநேயரின் மகிமை குறித்து, மகான்கள் பலர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீமதுசூதன சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற மகான் `பற்றற்ற நிலையுடன் பலனை எதிர்பார்க்காத பக்தர்கள்' என்று பிரஹலாதன், ஆஞ்சநேயர், கோபிகைகள் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இவர்களில் சிகரமாக இருப்பவர் ஆஞ்சநேயர்.

‘‘ஆஞ்சநேயா! எவ்வளவு காலம் என் கதை இந்த பூமியில் சொல்லப்படுகிறதோ, அதுவரை உன் புகழும் மேலோங்கியிருக்கும். அவ்வளவு காலம் நீயும் இங்கே வாழ்வாய்! உனக்கு மூவுலகங்களை மட்டுமல்ல, என்னையே கொடுத் தாலும், நான் கடனாளியாகத்தான் இருப்பேன்.'' என்று அனுமனிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ராமபிரான், ``உன் விருப்பம் எதையும் எப்போதும் நிறைவேற்றி வைப்பேன்’’ என்று அருளியிருக்கிறார்.

சாட்சாத் பரமேஸ்வரரின் அம்சமே ஆஞ்ச நேயராக வந்து, மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமருக்குக் கைங்கர்யம் செய்தது என தியாகராஜ ஸ்வாமிகள் கூறுகிறார்.

`அந்தகாரி நீ செந்த ஜேரி அனுமந்துடை கொலுவலேதா’ (எந்தராநி-கீர்த்தனம்)

கருத்து: காலனுக்குக் காலனான பரமேஸ்வரன் உன் சமீபத்தில் வந்து அனுமனாகக் கைங்கர்யம் செய்யவில்லையா?

தியாகராஜர் மட்டுமல்ல, அருணகிரிநாதரும் இதையே கூறுகிறார் (ருத்ரர் சிறந்த அனுமன் என்றும்...).

ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனாதேவி, அவருக்கு சுந்தரன் என்று பெயரிட்டார். அதனால்தான் ஆஞ்சநேயர் வரலாற்றையும் அவர்தம் வீரதீரச் செயல்களையும் கூறும் பகுதிக்கு ‘சுந்தர காண்டம்’ என்று வால்மீகி பெயரிட்டார் போலும்!

ஆஞ்சநேயரின் பண்புகளை விளக்கும் சுந்தர காண்டம் ஒரு சர்வரோக நிவாரணி. எந்த விதமான கஷ்டமாக இருந்தாலும் சரி; சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் அந்தக் கஷ்டம் நீங்கும் என்பது பலரது நம்பிக்கை.

சுந்தர காண்டத்தை முழுமையாகப் பாராயணம் செய்ய முடியாதவர்கள், கீழ்க்காணும் கம்ப ராமாயணப் பாடலை பாடினால் போதும், சுந்தர காண்டம் பாராயணம் செய்த பலன் கிட்டும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு

அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான்

அவனெம்மை அளித்துக் காப்பான்.

இந்தப் பாடலில் `ஐந்து' எனும் எண்ணை ஐந்து முறை பயன்படுத்தி, பஞ்சபூதங்களால் ஆஞ்சநேயரைப் பாராட்டுகிறார் கம்பர்.

காற்று, தண்ணீர், ஆகாயம், மண், தீ - இவையே பஞ்ச பூதங்கள். வாயு பகவானின் மகனான ஆஞ்ச நேயர், கடலைத் தாண்டி, ஆகாயத்தின் வழியாக ராமருக்காக இலங்கை சென்று, பூமாதேவியின் (மண்) மகளான சீதையைக் கண்டு, ராவணனுடைய லங்கா நகரத்தில் தீயை வைத்தார். அவர் நம்மைக் காப்பார்!

`எல்லாம் சரி, மார்கழி மகிமைகளில் திரு வாதிரையையும் வைகுண்ட ஏகாதசியையும் விட்டு விட்டீர்களே...’ என்று கேட்கத் தோன்றுகிறதா?!

அற்புதமான அந்தத் திருநாள்கள் குறித்த விசேஷத் தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்!

- வளரும்...

மார்கழிக் கோலத்தில் பூ வைப்பது ஏன்?

முன்னோர்கள் காலத்தில் திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை / பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டுமொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழிக் கோலத்தில் பூ
மார்கழிக் கோலத்தில் பூ

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்துகொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.