நவம்பர்-12; ஐப்பசி - 26 அன்னாபிஷேகம்

ன்னம்! உணவு இல்லையேல் உலகமே இல்லை. அதனால்தான் உணவின் மகிமையை அன்னத்தின் பெருமையை ஞான நூல்கள் அனைத்துமே சிறப்பாக விவரிக்கின்றன. அவற்றில் சில தகவல்களைப் படித்து மகிழ்வோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அரும்பசி களைவோர்'

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் ‘அரும்பசி களைவோர்’

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை... (மணிமேகலை)

கருத்து: மணிமேகலை காப்பியத்தின் இந்தப் பாடல் கடும்பசிக்கு உணவளித்து அதை நீக்குபவர்களை, ‘அரும்பசி களைவோர்’ என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்டவர்களிடம்தான், உலகின் தூய்மையான வாழ்க்கை உள்ளது என விளக்குகிறது.

`நெடுங்காலம் வாழும் ஐவர்'

பஞ்சப் பொழுதின்கண் பாத்துண்பான் காவாதான்

அஞ்சா துடைபடையுட் போந்தெறிவான் - எஞ்சாதே

உண்பது முன் ஈவான் குழவி பலி கொடுப்பான்

எண்பதின் மேலும் வாழ்வான் (சிறுபஞ்ச மூலம்)

கருத்து: பஞ்ச காலத்தில் பலருக்கும் பகிர்ந்துகொடுத்த பிறகு தான் உண்பவன், தன்னிடம் உள்ள பொருளைப் பாதுகாத்து அப்படியே வைக்காமல் அடுத்தவருக்கு உதவுபவன், அஞ்சாமல் போரிடுபவன், ஒருநாளும் தவறாமல், தான் உண்பதற்குமுன் அடுத்தவருக்கு உணவளிப்பவன், பசித்த குழந்தைகளுக்கு உணவளிப்பவன் ஆகிய ஐவரும், 80 வயதுக்கு மேலும் (நீண்ட நெடுங்காலம்) நலமாக வாழ்வார்கள்.

தவத்தைக் காட்டிலும் சிறப்பானது...

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் (திருக்குறள்-225)

கருத்து: தவ வலிமை உடையவரின் ஆற்றல், பசியைப் பொறுத்துக்கொள்வது. ஆனால், அதுவும் அப்பசி நோயை உணவளித்துப் போக்குபவரின் ஆற்றலைவிடத் தாழ்ந்ததுதான்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (திருக்குறள்-226)

கருத்து: ஏதுமற்ற ஏழையரின் கொடிய பசி நோயைப் போக்க வேண்டும். அதுதான், பொருளுடையோர், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவும்படியாகச் சேமித்துவைக்கும் இடமாகும்.

அன்னமிடுவது உன்னத விரதம்!

அன்னம் ந நிந்த்யாத் தத்வ்ரதம்

அன்னம் ந பரிசக்ஷீத தத்வ்ரதம்

அன்னம் பஹு குர்வீத தத்வ்ரதம்

ந கஞ்ச ந வஸதௌ ப்ரத்யாசக்ஷீத தத்வ்ரதம்

(தைத்திரீய உபநிஷத்)

கருத்து: உண்ணும் உணவைப் பழிக்கலாகாது; அது விரதமாகும். உணவை எறியக் கூடாது; அது விரதமாகும். உணவை ஏராளமாக உண்டாக்க வேண்டும்; அது விரதமாகும். யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லாதிருப்பாயாக; அது விரதமாகும்; அதாவது அனைவருக்கும் அன்னமிடு!

அன்னாபிஷேகம் எதற்காக?

ன்னத்தைப் பற்றி அரும்பெரும் நூல்கள் சொன்னதைப் பார்த்த நாம், அந்த அன்னத்தை ஏன் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

`தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சு நீர் வான் உடு மாலை கரையற்ற நந்திக்குக் கலை திக்குமாமே' என்கிறது திருமந்திரம். அதாவது, ஆவுடையார் என்பது பூமி; சிவலிங்கம் என்பது ஆகாயம்; மேகங்கள் இந்த ஆகாயலிங்கத்துக்குக் கடலிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டுபோய் அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாயலிங்கத்துக்கு மாலையாகவும் திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன (சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம் இதுவே) என்பது இந்தப் பாடலின் பொருள்.

ஆக, அனைவரும் அனைத்தும் `ஆண்டவன்’ எனும் ஒரே ஓர் ஆகாயத்தின் கீழ்தான் உள்ளோம். ஆகாய வடிவாக விளங்கும் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்வது, அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னம் அளிப்பதற்குச் சமம்.

சிவலிங்கத்துக்கு உண்மையான விளக்கம் சொன்ன திருமூலருக்கு, ஐப்பசி மாதத்தில்தான் குருபூஜை. அதனால் தானோ என்னவோ, சிவலிங்கத்துக்கு ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

தஞ்சை பெரியகோவில் பிரகதீஸ்வரர்
தஞ்சை பெரியகோவில் பிரகதீஸ்வரர்

இனி, சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்வதற்கான உண்மைக் காரணத் தைப் பார்க்கலாம்.

சந்திரன் - தட்சனுடைய மருமகன். ஒருமுறை சந்திரனிடம் கோபம்கொண்ட தட்சன், “நாளொரு கலையாகத் தேய்ந்துபோய், நீ அழியக் கடவது” எனச் சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். சாபம், சந்திரனை பாதிக்க ஆரம்பித்தது. பயந்து போன சந்திரன், சிவபெருமானை தியானித்துக் கடுந்தவம் செய்தான்.

தவத்தின் பலனாக, சிவபெருமான் காட்சி கொடுத்தார்; சந்திரனுக்கு சாப விமோசனம் தந்து, சந்திரனைத் தலையில் சூடிக்கொண்டார். சந்திரனும் சாபம் தீர்ந்து முழுக்கலைகளுடன் பிரகாசிக்கத் தொடங்கினான். அந்தத் திருநாள் ஐப்பசி பெளர்ணமி திருநாள். ஆம்! இந்த நன்னாளில்தான் சந்திரன் பூர்ணமாக - முழுக்கலைகளுடன் பிரகாசிப்பான்.

சக்தி கொடு! - 14

சந்திரன் அவ்வாறு தவமிருந்து, தன் சாபத்தைத் தீர்த்துக்கொண்ட தலம் ‘திங்கள் ஊர்’, அதாவது ‘திங்களூர்’ என்று சந்திரன் பெயராலேயே அழைக் கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ‘ஐப்பசி மாதத்தில்தான், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்’ என்ற வானவியல் தகவலும் உண்டு. சந்திரன் இல்லையேல், ஆரோக்கியத்தை அளிக்கும் பலவிதமான சக்திகள் இருக்காது. சந்திரனுடைய ஆற்றலால்தான், மரம் - செடி - கொடி - மூலிகைகள் பலவும், பல அபூர்வமான ஆற்றலைப் பெற்று பெரிதும் பயனளிக்கின்றன.

நவகிரகங்களுக்கு உண்டான தானியங்களில், சந்திரனுக்கு உண்டான தானியம் - அரிசி. அதன் காரணமாகவே, ஆகாயவடிவாக - உலகையே தனக்குள்கொண்ட வடிவமாகக் காட்சியளிக்கும் சிவ லிங்கத்துக்கு - உலகம் முழுவதும் அன்னம் படைக்குமுகமாக, அன்னாபிஷேகம் செய்கிறோம்.

சற்று ஆழமாக, கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு சாதப்பருக்கையும் சிவலிங்கம் போலவே காட்சி அளிக்கும். ஆக, அன்னத்தைத் தெய்வ வடிவாகவே - பரம் பொருளாகவே ஞான நூல்கள் சொல்லும் காரணம் புரிந்திருக்குமே! எனவே, அன்னா பிஷேகத்தின்போது சிவ பெருமானைத் தரிசிப்பது, கோடிக்கணக்கான சிவலிங்கங்களைத் தரிசித்த பலனை அளிக்கும்.

‘சாதம்’ என்ற சொல்லுக்குப் ‘பிறப்பு’ என்பது பொருள்; ‘சோறு’ என்ற சொல்லுக்கு ‘முக்தி’ என்பது பொருள். இதன்படி சாதத்தைப்படைத்து, சோற்றை - அதாவது முக்தியை வேண்டுவதே அன்னாபிஷேக வைபவம்.

நாமும் சாபம், நோய் முதலான துயரங்களைத்தீர்த்து, சர்வ மங்கலங்களையும் அருளி, உயர்வைத் தரும் அன்னாபிஷேக வைபவத்துக்கு இயன்றவரை உதவுவோம். அத்திருநாளன்று அன்னாபிஷேக ஆண்டவனை தரிசித்து அல்லல்கள் நீங்கப் பெறுவோம்.

- வளரும்...

கங்கையில் சென்றது கிணற்றில் கிடைத்தது!

காசியும் தமிழகத்தின் அவிநாசியும் ஒன்றே என்பார்கள் பெரியோர். இதை மெய்ப்பிக்கும் ஒரு தகவல். அவிநாசி சிவாலயத்துக்கு வடப்புறத்தில் வசித்த வள்ளல் தம்பிரான் என்ற அன்பர், ஒருமுறை காசிக்குச் சென்றார். அவர், வழிச்செலவுக்கான பணத்தை ஒரு சிறிய உருளையில் போட்டுவைத்திருந்தார். அவர் கங்கையில் நீராடும்போது, ஆற்றோடு சென்றுவிட்டது அந்த உருளை.

சிவபெருமான்
சிவபெருமான்

காசியிலிருந்து திரும்பிய பிறகு, அவிநாசி ஆலயத்துக்குச் சென்றவர், சுவாமியை வழிபட்டு வலம்வரும்போது, அந்தக் கோயிலின் கிணற்றில் காசியில் தொலைத்த தன் கை உருளையைப் பார்த்தார். காசிக் கங்கையே அவிநாசியில் கிணறாக உள்ளது என்று உணர்ந்துமகிழ்ந்தார். இந்த மகிமையை `புக்கொளி மாலை' எனும் நூல் விவரிக்கிறது.

காசியில் தவசி வராகன் ஐந்நூறு கைத்தண்டுள் வைத்தது தவறி

ஓசைசேர் கங்கை வீழ்ந்து அமிழ்ந்திடவும் உறுதியரவன் அவிநாசி

பேசிய காசிக்கிணற்றினில் தண்டு பிறங்கிடக் கண்டு உளம் மகிழ்ந்தான்

வாசிய காசிவிசேடப் புக்கொளியில் வளர் பெருங்கருணை நாயகியே!

- க.மெய்யப்பன், நெல்லை-2