Published:Updated:

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

கணபதி
பிரீமியம் ஸ்டோரி
கணபதி

கணபதியே வருவாய் அருள்வாய்

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

கணபதியே வருவாய் அருள்வாய்

Published:Updated:
கணபதி
பிரீமியம் ஸ்டோரி
கணபதி

வி.ஆர்.சுந்தரி

ணையற்ற பண்டிகைகளால் நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்தும் மாதம் ஆவணி. இரண்டு தெய்வ அவதாரங்கள் நிகழ்ந்த மாதமும்கூட. ஆம், கண்ணன் அவதரித்த இந்த மாதத்தில்தான் கணபதியின் அவதாரமும் நிகழ்ந்தது.

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

தனக்குமேல் ஒரு நாயகன், அதாவது தலைவன் இல்லாதவன் ஆதலால் விநாயகன் என்று பெயர் நம் பிள்ளையாருக்கு. நம் வாழ்வில் நிகழும் சுபகாரியங்கள் அனைத்திலும் முதல் இடம் பிடிப்பவர் இவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

ஒருமுறை சிவபெருமானும் அம்பிகையும் திருக்கயிலாயத்தில் உள்ள சித்திர மண்டபத்தில் புகுந்து, அங்கிருந்த மந்திரங்களின்மீது அருள் பார்வையைச் சார்த்தினார்கள் (அனைத்து மந்திரங்களின் மூலங்களும் அங்கு இருக்கும்). அம்மையப்பனின் பார்வை கடாட்சத்தால் அங்கிருந்த மந்திரங்கள், உயிர்நிலை பெற்று ஒளிவட்டமிட்டது. அந்த வட்டத்திலிருந்து வெளிப்பட்ட தண்டம் ஒன்று ஒலியாகத் தழைத்தது. அந்த ஒளி-ஒலி இரண்டிலுமிருந்து உதித்தது ஒரு திருவடிவம். அந்த வடிவம்தான் வரத கணபதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒளிவட்டத்தின் பெயர் பிந்து. தண்டத்தின் பெயர் நாதம். பிந்து நாதத்திலிருந்து - அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ஓம் என்று ஒலிக்கும். `ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. பிள்ளையாரின் அவதாரம் நிகழ்ந்த முறை இதுவே. இதை நினைவுறுத்தும் விதமாகவே (பிந்து நாதமான) பிள்ளையார் சுழி போடுகிறோம்.

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

இப்படி, பிள்ளையாரின் திருஅவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று. அந்தத் திருநாளையே விநாயகர் சதுர்த்தி யாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இந்த வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் திங்கட்கிழமை (2.9.19) அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது. அற்புதமான இந்தத் திருநாளில், வெவ்வினையைத் தீர்க்கவல்ல விநாயகரை வழிபடுவது எப்படி என்று தெரிந்துகொள்வோமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூஜை செய்யும் முறை

இமவான் மகள் என்பதால் பார்வதிதேவிக்கு உமையவள் என்று திருப்பெயர் உண்டு. ஒருமுறை அவளுக்கு அவள் தந்தை இமவான், விநாயக சதுர்த்தி பூஜைமுறைகள் குறித்து உபதேசித்தார். அந்த முறையையே உங்களுக்கும் சொல்லப்போகிறேன்.

விநாயக சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, காலை நேரத்துக்கு ரிய நித்ய கர்மாக்களை முடிக்க வேண்டும். பின்னர், பூஜைக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூஜை செய்யவேண்டிய இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டு, பூஜா மண்டபம் ஒன்றைச் சிறிய அளவில் அமைக்கவும். அதற்குள் பிள்ளை யாரை எழுந்தருளச் செய்யலாம்.

பூஜா மண்டபம் தயாரானதும், சுத்தமான இடத்திலிருந்து தூய்மையான மண்ணைக் கொண்டுவந்து, அதிலுள்ள கற்கள், சிறு சிறு வேர்கள் ஆகியவற்றை நீக்கி, அந்த மண்ணைக் கொண்டு பிள்ளையாரின் வடிவத்தை முறைப்படி அமைக்க வேண்டும்.

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

அடுத்ததாக, தூய்மையான நீரில், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடுவதாக பாவித்துக் குளிக்க வேண்டும்.

நீராடியபிறகு அவரவருக்குரிய ஆசார முறைப்படி நெற்றிக்கு இட்டுக்கொண்டு பூஜையறைக்குச் செல்ல வேண்டும்.

பிறகு, விநாயக சதுர்த்தி பூஜை தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்று அந்தப் பிள்ளையார் பெருமானையே மனதார வேண்டிக்கொண்டு பூஜையைத் தொடங்கலாம். அகில உலகமும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று நம் பிரார்த்தனை அமைவது சிறப்பு.

பிள்ளையாருக்கு அறுகம்புல், வெள்ளெருக்கு மாலை முதலானவற்றை அணிவித்து, கரும்பு, மோதகம், அவல், பொரிக்கடலை முதலானவற்றைப் பிரியத்துடன் சமர்ப்பித்து, நமக்குத் தெரிந்த பிள்ளையார்துதிப் பாடல்களைப் பாடி அர்ச்சித்து வழிபட வேண்டும். பின்னர் தூபம் மற்றும் தீபாராதனை செய்து வணங்க வேண்டும்.

பூஜை முடிந்ததும் அவசியம் செய்யவேண்டியது...

இவ்வாறு பூஜை முடிந்ததும் அனைவரும் அவசியம் செய்யவேண்டிய ஓர் அற்புதமான செயலைப் பற்றி விநாயகர் புராணம் சொல்கிறது.

`பிரணவ வடிவமான விநாயகரை தியானித்தபடி ‘ஓம்’கார மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். அவ்வாறு பத்து முறை ஜபம் செய்தபிறகு, ஒரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பத்து தர்ப்பணங்கள் செய்தபிறகு, ஒரு ஹோமம் செய்ய வேண்டும். பத்து ஹோமங்கள் செய்த பிறகு அன்னதானம் செய்ய வேண்டும்’ என்கிறது விநாயகர் புராணம்.

ஆனால், எல்லோராலும் இப்படியான விரிவான பூஜையைச் செய்ய முடியாமல் போகலாம். எனினும் வசதிவாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் செய்யலாம்; கண்டிப்பாக பலன் உண்டு. இயலாதவர்கள், எளிய முறையில் கணபதியை நம்பிக்கையோடு கைதொழுங்கள்; உங்களின் கவலைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சக்தி கொடு! - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை!

இவ்வாறு விநாயக சதுர்த்தியன்று தொடங்கிய பூஜையை அடுத்த மாதமான புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி வரையிலும் தினம்தோறும் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.

அதன்பிறகு, மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை மேள-தாளத்துடன் விநாயக நாமசங்கீர்த்தனம் செய்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் சேர்க்க வேண்டும். இப்படி ஒருமாத காலம் விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. பால், பழம் மட்டும் சாப்பிடலாம். ஆசை, கோபம் ஆகியவற்றை அடியோடு நீக்க வேண்டும். இப்படி 30 நாள்கள் விரதம் இருந்து 31-வது நாளன்று ஏழைகளுக்கு உணவிட்டு, அவர்களோடு அமர்ந்து உண்ண வேண்டும். குறைந்தபட்சம் 21 ஏழைகளுக்காவது உணவிட வேண்டும். ஒருமாத காலம் விரதம் இருக்க முடியாதவர்கள், விநாயக சதுர்த்தி அன்று மட்டுமாவது, விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள் கணபதியை வழிபட்டால், மும்மூர்த்திகளையும், முப்பெருந்தேவியரையும், முப்பது முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் ஒருங்கே கிடைக்கும். அப்படியான புண்ணியபலனை வரும் விநாயகர் சதுர்த்தியில் நீங்களும் பெற்று பலனடையுங்கள்.

- தொடரும்...

கணபதி தியான ஸ்லோகம்

ஒம் கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

கருத்து: ஆனை முகத்தனை, பூத கணங் களால் வழிபடப்படும் இறைவனை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை அருந்துபவனை, உமை மைந்தனை, துயரங்களை நீக்கும் காரணனை வணங்குகிறேன். தடைகளைப் போக்கும் விக்னேஸ் வரரின் திருவடியை வணங்குகிறேன்.

மாங்கல்ய பலம் அருளும் விரதம்

மாங்கல்ய பலமும் மங்கல வாழ்வும் அருளும் விரதம் ஒன்றும் ஆவணியில் வரும். அதுதான் கருடபஞ்சமி விரதபூஜை. இதன் மகிமையை சூதபெளராணிகர் சனகாதி முனிவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று மேற்கொள்ளப்படும் விரதம் இது (இந்த வருடம் 3.9.19 செவ்வாய்க்கிழமையன்று வருகிறது).

சகோதரர்களைக்கொண்ட பெண்கள் இந்தத் தினத்தில் அதிகாலை எழுந்திருந்து நீராடித் தூய்மையான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். பிறகு சதுரமான சிறியதொரு மண்டபம் அமைத்து, ஐந்து வண்ணங்களால் கோலமிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத் தின் நடுவில் ஓர் ஆசனத்தைப் போட்டு அதில் நுனி வாழையிலையில் ஏறத்தாழ இரண்டு கிலோ அரிசியைக் கொட்டி அதன் மீது தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்புப் பதுமையை வைக்க வேண்டும். இயலாதவர்கள் மண்ணால் ஆன பதுமையை வைத்து பூஜிக்கலாம். பதுமையுடன் மஞ்சளால் செய்யப்பட்ட கெளரி பிம்பத்தை வைக்க வேண்டும்.

பின்னர், அம்பாள் துதிப்பாடல்கள் பாடி, சர்க்கரைப்பொங்கல் முதலான நைவேத்தியங் களைச் சமர்ப்பித்து முறைப்படி வழிபட வேண்டும். வரலட்சுமி விரதத்தைப் போன்று, இதிலும் பூஜிக்கப்பட்ட சரடைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் உண்டு. பத்து வருடங்கள் ஆவணி மாதம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வரும் பெண்களின் இல்லங்களில் மங்கலம் நிறைந்திருக்கும்; அவர் களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

என்னென்ன நைவேத்தியங்கள் படைக்கலாம்?

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர் வண்

டெச்சில்ப யறப்பவகை பச்சரிசி பிட்டுவெள

ரிப்பழமி டிப்பல்வகை தனி மூலம்

மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு

விக்கினச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே.

எனப் போற்றுகிறது திருப்புகழ் பாடல். அவ்வண்ணமே கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய நிவேதனப் பொருள்கள் படைத்து வழிபட்டால் விநாயகரின் பேரருளைப் பெறலாம்.

விநாயகருக்கு உகந்த பத்திர புஷ்பம்

மேதகு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை

வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி

யேதமில் கத்திரி வன்னி அலரி காட்டாத்தி

யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி

மாதுளையே உயிர்தேவதாரும் அருநெல்லி

மன்றுசிறு செண்பகமே கெந்தளி பாதிரியே

ஓதரி யவநுகு இவையோர் இருப்பத்தொன்று

உயர் விநாயக சதுர்த்திக்குரைத்த திருபத்திரமே.

இந்தப் பாடலில் இருந்து... மாசிப்பச்சை, நதுங்கை, ஆந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்திரி, வன்னி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, மால்பேரி, அம்புகாந்தி, மாதுளை, தேவதாரு, நெல்லி, செண்பகம், கெந்தளி, பாதிரி ஆகியன விநாயக பூஜைக்கு உகந்த இலைகள், பூக்கள் என்பதை அறியலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism