தொடர்கள்
Published:Updated:

பறக்கும் நிமிடங்கள்!

துளித்துளி கடல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
துளித்துளி கடல்கள்!

துளித்துளி கடல்கள்!

இது வேகமான காலமல்ல. மிக வேகமான காலம். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை நிற்க நேரமின்றி அல்லது யோசிக்க மனமின்றி வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! அவர்களின் வாழ்க்கை வேகத்தை, மூவர் மூவராக மோட்டார் பைக்குகளில் செல்லும் வேகத்தைக் கொண்டு கணிக்கலாம்.

துளித்துளி கடல்கள்!
துளித்துளி கடல்கள்!


எல்லாவற்றிலும் ஓர் அவசரம். எல்லாவற்றி லும் பொறுமையின்மை. அதனால் எல்லா செயல்களிலும் ஏற்படுகிற பதற்றம். அந்தப் பதற்றம் உடம்பிலும் மனதிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுகிறது என்பதை அவர் களால் அறிய முடியவில்லை!

அது ஒரு வகையில் அவர்களுடைய முழுமையான தவறும் இல்லை. இளமையின் வேகம் என்பதும் இளங்கன்று பயமறியாது என்பதும் எல்லா தலைமுறை மனிதர்களும் கடந்து வரும் பாதைதானே!

இருப்பினும் எந்த ஒரு காரியத்திற்கும் முயற்சி செய்து... காத்திருந்து… நீண்ட பயணம் செய்து பெறவேண்டிய தேவைகளை இன்றைய நவீன அறிவியல் மாற்றிவிட்டது! இருந்த இடத்தில் இருந்தபடியே எல்லாமும் செய்ய முடிகிறது, தொடுதிரை வழியாக விரல் நுனிகளால்! இந்த அறிவியல் சாத்தியமே வேகமான வாழ்வில் பொறுமையின்மையைப் புகுத்தி, எல்லா கணங்களையும் இன்ஸ்டண்ட் ஆக்கி மனப் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

நிமிஷங்கள் இறக்கை கட்டிப் பறக்கும் இந்த வேகமான வாழ்வில், சற்றே பொறுமையையும் விழிப்பு உணர்ச்சியையும் கடைப்பிடித்தோமானால் மனதில் பதற்றமின்றி அன்றாட பணிகளைச் செய்ய முடியும். நம் கனவுகளை, இலக்குகளை நோக்கி நிதானமாக நடைபோட்டு வெற்றிகளை ஈட்ட முடியும்.

டென்னோ என்பவர் ஜென் துறவி. அவர் இன்னொரு மூத்த ஞானியிடம் 10 ஆண்டுகள் மாணவராக இருந்து, ஜென் பாடங்களைப் பயின்று, செயல்முறை பயிற்சியில் தேர்ந்து வெளியேறி, தனியாக ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அவரிடம் பல புதிய மாணவர்கள் சேர்ந்து ஜென் போதனைகளைப் படிக்கத் தொடங்கினார்கள்.

டென்னோவுக்குத் தன் குருநாதரான `நானின்' எனும் மூத்த ஞானியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவரைச் சந்திப்பதற்காக ஒரு மலைப்பிரதேசத்தில் இருந்த அவருடைய ஆசிரமத்திற்குப் பயணம் தொடங்கினார்.

அது மழைக்காலம். கால்களில் மரக்கட்டை காலணிகள் அணிந்துகொண்டு, ஜென் மதத்தின் அடையாளமான ஒரு வட்ட வடிவக் குடையைப் பிடித்தபடி நடந்து சென்றார். நானின் துறவியின் ஆசிரமத்தை அடைந்த டென்னோ, வாசலில் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு, பக்கத்தில் வட்ட வடிவக் குடையை வைத்துவிட்டு, குருநாதர் அமர்ந் திருக்கும் அறைக்குள்ளே சென்றார்.

சீடனைப் பார்த்த குருநாதர் புன்னகைத்தபடி “எப்படி இருக்கிறாய்?” என்று விசாரித்துவிட்டு கீழே அமரும்படி பணித்தார். டென்னோ அமர்ந்தார்.

நானின் கேட்டர்: “வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. நீ குடை பிடித்துக்கொண்டு தானே வந்தாய்?”

“ஆம் குருவே!” என்றார் டென்னோ.

“மரக்கட்டைச் செருப்புகளை அணிந்து கொண்டுதானே வந்தாய்?” என்றார் நானின். “ஆம் குருவே!” என்றார் டென்னோ. “குடையை வெளியில் வைத்தாயா?” எனக் கேட்டார் குரு. “ஆம் குருவே!” என்றார் டென்னோ.

“செருப்புக்கு அருகிலே வைத்தாயா?” இந்தக் கேள்விக்கும் “ஆம் குருவே!” என்று பதில் சொன்னார் டென்னோ.

“சரி அந்தக் குடையை உன் மரக்கட்டைச் செருப்புக்கு எந்தப் பக்கமாக வைத்தாய்... இடது பக்கமா? வலது பக்கமா?” என அடுத்த கேள்விக்கணையை நிதானமாக வீசினார் நானின் துறவி.

இந்தக் கேள்விக்கு டென்னோவால் சட்டென்று பதில் சொல்ல இயலவில்லை. அப்போதுதான் டென்னோவுக்கு ஒன்று புரிந்தது. ஒவ்வொரு நிமிடமும் நிதானமாக விழிப்பு உணர்வுடன் வாழ்வதே ஜென் கற்பிக்கும் முக்கிய போதனை! விழிப்பு உணர் வும் நிதானமும் இருந்தால் தன்னால் குருநாதர் கேட்ட கடைசி கேள்விக்கும் சரியாகப் பதில் சொல்லி இருக்க முடியும் என்பதை உணர்ந்த டென்னோ அதற்குப் பின்பு, அதே குருவிடம் மீண்டும் ஆறு வருடம் ஜென் பாடங்களைப் பயின்றார் என்பது வரலாறு!

இந்தக் கதையிலிருந்து நாம் அறிய வேண்டிய படிப்பினை இதுதான்: ஒவ்வொரு நிமிடத்தையும் விழிப்பு உணர்வோடும் நிதானமாகவும் கடந்தால் நாள்கள் அழகாகும்.

அழகான நாள்களின் தொகுப்பு, ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்! கணங் களை உற்றுக் கவனிப்போம்! தினங்களை அழகாக்கி வாழ்வின் பயணம் தொடர்வோம்!

- பருகுவோம்…