Published:Updated:

விஜயதசமியில்... கூத்தனூரில்... எழுத்தறிவிப்போம் உங்கள் குழந்தைக்கு! #Navarathri

சக்திவிகடன் சார்பில் விஜயதசமி அன்று கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் எழுத்தறிவிக்கும் வைபவம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் குழந்தையுடன் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு.

Goddess Saraswati
Goddess Saraswati

பாரத தேசமெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் முக்கியமானது நவராத்திரி. ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரி வைபவங்கள் வருகின்றன. அதில் சாரதா நவராத்திரி என்னும் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் நவராத்திரி மிகவும் புகழ்பெற்றது. நவராத்திரிப் பண்டிகையின் கடைசிநாள் விஜய தசமி. இந்த நாளில் வித்யாரம்பம் எனப்படும் அட்சராப்யாசம் செய்வித்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதென்பது நம் பாரம்பர்யம்.

Saraswathi
Saraswathi

அட்சராப்யாசத்தைத் தமிழில் 'எழுத்தறிவித்தல்' என்று சொல்லலாம். அட்சரம் என்றால் எழுத்து என்று பொருள். குழந்தைக்கு எழுத்தை அறிவிக்கும் வைபவம் என்பதே இதன் பொருள். குழந்தைக்கு முதன்முதலில் எழுத்தறிவிப்பதன் மூலம் நல்லமுறையில் அவர்கள் வாழ்வில் கல்வித் தொடங்கிவைக்கிறோம்.

பொதுவாக ஐந்துவயதில் எழுத்துச் சொல்லிக் கொடுப்பதே சரியானது என்கின்றன சாஸ்திரங்கள். 'ஐந்துவயதில்தான் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்' என்று ஆயுர்வேதம் உறுதியாகச் சொல்கிறது. இந்த வயதில் குழந்தைகள், தாங்கள் அறிந்துகொள்ளும் அனைத்தையும் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் தன்மையைப் பெறுகிறார்கள். பயிருக்குத் தேவையான நேரத்தில் நீர்பாய்ச்சுவதைப் போல குழந்தைக்குக் கல்வி தேவைப்படும் நேரத்தில் அதைப் பெற்றோர்கள் தொடங்கிவைக்கவேண்டும் என்கின்றனர்.

Saraswati
Saraswati

பொதுவாக அட்சராப்யாசம் தொடங்கும்போது வேதத்தில் இருந்துதான் முதன்முதலில் குழந்தைக்குச் சொல்லித் தருவார்கள். குழந்தைக்கு 'வேதம் என்றால் என்ன' என்று அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதிலிருந்து தொடங்குவதுதான் என்பதுதான் சரி. 'நமசிவாய' - என்னும் இச்சொல் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஐந்தெழுத்து மந்திரத்தையே முதன்முதலில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.

சிவநாமம் மட்டுமில்லை, 'ஓம் நமோ நாராயணா' என்று நாராயணன் திருநாமத்தைச் சொல்லியும் தொடங்கிவைக்கலாம். அவரவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தின் பெயரையும் குழந்தைக்கு அறிவிக்கலாம். 'ஓம் ஶ்ரீ கணபதயே நம்' என்றோ ஓம் ஹ்ரீம் நம' என்றோ போற்றி வழிபடலாம். 'ஹ்ரீம் 'என்பதற்கு 'அம்பாளுக்கு இஷ்டம்' என்று பொருள். இவ்வாறு இறைவனின் நாமங்களோடு தொடங்கும் கல்வி குழந்தைகளுக்கு வளரும் காலத்தில் எப்போதும் தெய்வ சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டிக்கொண்டேயிருக்கும்.

Saraswati
Saraswati

அட்சராப்யாசம் - எப்படிச் செய்வது ?

ஒரு தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் அரிசி எடுத்துப் பரப்பிக் கொள்ளவேண்டும். ஆசாரியன் வழிகாட்ட, தகப்பனார் குழந்தையின் விரல்பிடித்து அரிசியில் எழுதவேண்டும். அரிசிக்கு அக்ஷதை என்றும் பூரணம் என்றும் பெயர்கள் உண்டு. 'அக்ஷதை' என்றால் 'உடையாதது' என்று பொருள். இப்படிப்பட்ட அக்ஷதையில் பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரையும் அமருமாறு அழைத்து புஷ்பம் சமர்பித்து ஷோடசோபசாரம் செய்து ஆராதனம் பண்ணி, தீபம் காட்டி வழிபட வேண்டும். அப்போது குழந்தைக்கு இந்த மூன்று தெய்வங்களின் அருளும் ஸித்திக்கும். தேவியர் மூவரும் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகியோரின் அம்சங்களே. எனவே சகல தேவதைகளின் சாட்சியாக நாம் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கிறோம்.

அட்சராப்யாசம் செய்ய உகந்த நாள்...

நல்ல நாள் பார்த்து வீட்டில் ஆசாரியனை அழைத்து அட்சராப்யாசம் செய்யலாம். ஆனால் அட்சராப்யாசம் செய்ய உகந்த மேலான நாள் என்றால் அது நவராத்திரி உற்சவத்தின் போது வரும் விஜயதசமித் திருநாளே. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜய தசமி வருகிறது. அன்றுதான் 'வித்யாரம்பம்' என்னும் அறிவை ஆரம்பிக்கும் வைபவத்தைச் செய்கிறோம். விஜயதசமி அன்று தொடங்கும் கல்வி மென்மேலும் பெருகும் என்பது ஐதிகம். எழுத்தறிவு மட்டுமல்ல கலைகள் தொடங்கவும் இந்த நாள் மிகவும் ஏற்றநாள்.

Koothanoor
Koothanoor

கூத்தனூரில் அட்சராப்யாசம்!

கூத்தனூரில்தான் அன்னை சரஸ்வதி கோயில்கொண்டருளுகிறாள். இங்கு அன்னை சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மேற்கரங்களில் அட்சமாலையும் அமிர்த கலசமும் தாங்கி, கீழ்க்கரங்களில் சின்முத்திரையும் புத்தகமும் ஏந்தி எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சியருளுகிறாள்.

Saraswati
Saraswati

புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று இந்தத் தலத்தில் அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து அட்சராப்யாசம் செய்து பிறகு பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இத்தனை சிறப்புமிக்க இந்தத் தலத்தில் உங்கள் குழந்தைக்கும் அட்சராப்யாசம் செய்ய ஒரு வாய்ப்பு. சக்திவிகடன், ஶ்ரீ கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினருடன் இணைந்து விகடன் வாசகர்களுக்காக கூத்தனூரில் 'அட்சராப்யாச வைபவம்' ஒன்றை நடத்த இருக்கிறார்கள். இதில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை. அட்சராப்யாசத்துக்கான அனைத்துப் பொருள்களும் கோயில் அறங்காவலர் குழுவால் வழங்கப்படும். இந்த வைபவத்தை கோயில் செயல் அலுவலர் பா. வெங்கடகிருஷ்ணனின் அனுமதியுடன் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த டாக்டர் G. கணேசன், N. பிச்சை, திருமதி.G.ஜெயலெட்சுமி ஆகியோர் சக்திவிகடனுடன் இணைந்து ஒருங்கிணைக்கின்றனர்.

Books
Books

இதில் கலந்துகொள்ள வாசகர்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை நிரப்புவதுதான். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த வைபவத்துக்கு வாசகர்கள் (குழந்தைகள்) தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வான வாசகர்களைத் தொலைபேசியில் அழைத்து விகடன் தரப்பிலிருந்து பதிவை உறுதிசெய்வார்கள்.

வாருங்கள் கல்விக் கடவுளின் சந்நிதியில் உங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்போம்.

நீங்களும் உங்கள் குழந்தையும் கலந்துகொள்ள...