
ஆசிரியர் பக்கம்
அன்பான வணக்கம்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நம் சக்தி விகடன் பிறந்ததும் ஓர் இனிய தமிழ்ப் புத்தாண்டில்தானே!
`சோப கிருது’ வருடம் தொடங்கவிருக்கிறது. `இந்த வருடத்தில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்’ என்கிறது சித்தர் இடைக்காடரின் பாடல். எல்லோர் இல்லங்களிலும் இறையருள் நிறைந்திருக்கட்டும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும்.

மங்கலம் பொங்கும் ‘தாரண’ தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கியது உங்கள் சக்தி விகடனின் ஆன்மிகப் பயணம், இன்று 20-வது ஆண்டில் வெற்றிகரமாக நடை போடுவதற்கு முழுமுதற் காரணம், இதைச் சரியான திசையில், சரியான விதத்தில் வழிநடத்தும் வாசகர்களாகிய நீங்கள்தான் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு இதழ் வெளியாகும்போதும், அது பற்றிய உங்களின் கருத்துக்களை, மேலான ஆலோசனைகளை உடனடியாக எங்களோடு பகிர்ந்துகொண்டு, அடுத்தடுத்த இதழ்களை இன்னும் இன்னும் மெருகேற்றி வருவது நீங்கள்தான். எனவே, இந்த இனிய தருணத்தில் முதற்கண் உங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.
இதழுக்கு இதழ் ஆன்மிகம் தொடர்பான பல புதுப்புது விஷயங் களைக் கொடுத்து வந்தாலும், தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஆண்டுச் சிறப்பிதழ் முதல் புதிய தொடர்களுடன் - புதிய பொலிவுடன் சக்தி விகடன் வெளியாகும். அவ்வகையில், இந்தச் சிறப்பிதழிலும் நான்கு புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன.
சாஸ்திரங்கள் விவரிக்கும் மனதின் சூட்சுமங்கள் குறித்து பல அபூர்வ தகவல்களைக் கோத்து மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் எழுதும் தொடர் `மனம்... நான்... கடவுள்!.
ஜகம் புகழும் ஸ்ரீராமனின் கதைகளைச் சிலிர்ப்புடன் விவரிக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் எழுதும் தாரக மந்திரம்.
ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் எழுதும் பலன் தரும் பரிகாரக் கோயில்கள்.
ஸ்ரீசமர்த்த ராமதாசரின் சரிதத்தை விவரிக்கும் இல.சைலபதி எழுதும் `குருவே திருவே’ புதிய தொடர்.
இங்ஙனம் புதிய தொடர்கள் புதுப்பொலிவுடன் வெளியாகும் இந்த இதழுடன்... நடுப்பக்கத்தில் அழகிய ஸ்ரீராமன் வண்ணப்படத்துடன் கூடிய சோபகிருது வருடத்துப் பஞ்சாங்கம், சோபகிருது புத்தாண்டு ராசிபலன்களுடன் சக்தி ஜோதிடம் ஆகிய இரண்டு இணைப்புகளும் உண்டு.
அன்பு வாசகர்களே! ஒவ்வொன்றையும் படியுங்கள்; ரசியுங்கள்; இந்த இதழ் குறித்த உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, எங்களை வழிநடத்துங்கள்!
உங்களின் அன்பும் ஆதரவுமே எங்களின் வரங்கள்!
மிக்க அன்புடன்,
ஆசிரியர்.