Published:Updated:

சலிப்பும் சந்தோஷமும்

நீதி கதை
பிரீமியம் ஸ்டோரி
நீதி கதை

சக்திதர்

சலிப்பும் சந்தோஷமும்

சக்திதர்

Published:Updated:
நீதி கதை
பிரீமியம் ஸ்டோரி
நீதி கதை

ம் மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை உயர்த்தும் தன்மை கொண்டவை. தாழ்வான சிந்தனை நம்மைத் தாழ்த்திவிடும். இதற்கு உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் பல உதாரணங்கள் உள்ளன.

இந்திரன் ஒருமுறை பூலோகத்துக்கு வந்தான். வனத்தில் ஒருவன் தவம் இருப்பதைக் கண்டான். அந்த மனிதன், இதுவரை செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகத் தவம் செய்து கொண்டிருந்தான். நீண்ட கால தவத்தால் அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்துவிட்டது. இந்திரனின் வரவால் அவன் தவம் கலைந்தது.

இந்திரனைக் கண்டதும் “நான் முக்தி அடைய இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்?” என்று கேட்டான் மனிதன்.

அவன் செய்த பாவங்களில் பெரும்பாலானவை நீங்கிவிட்டதை அறிந்த இந்திரன் “இன்னும் பத்து ஆண்டுகளில் நீ முக்தி அடையலாம்” என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் மனிதன் சலிப்புடன் “என்ன... இன்னும் பத்து ஆண்டுகளா?” என்றான். உடனே அவன் நரகத்துக்குப் போய்விட்டான்.

இந்திரன் அதே வனத்தில் மற்றொருவனைக் கண்டான். அவனும் தவம் செய்ய வந்தவனே. ஆனாலும் அதுபற்றிய பிரக்ஞை இன்றி சந்தோஷமாக மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்கு தன்னுடைய தவறுகள் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால், அவனுக்குக் கொஞ்சம் ஆன்மிக தாகம் இருந்தது.

அவனும் இந்திரனிடம், ``நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்?’’ என்று மகிழ்ச்சியுடன் கேட்டான். இந்திரன் அவனுடைய பாவ புண்ணியக் கணக்கு களைப் பார்த்துவிட்டு, “இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும்” என்றான்.

இதைக் கேட்ட அந்த மனிதன் “அட, வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா!” என்று சொல்லிவிட்டுத் தாவிக் குதித்து மகிழ்ந்தான். என்ன விந்தை, அடுத்த நொடியில் அவன் சொர்க்கத்துக்குச் சென்றுவிட்டான்.

இந்தக் கதையில் உள்ள நீதி... யாரும் தன்னையும் தன் செயல்களையும் வெறுக்கக் கூடாது. தன்னால் முடியாது என்று நினைப்பவன், சலித்துக் கொள்பவன் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் செயலைத் தொடங்கும் முன்னரே தோற்றுவிடுவான்.

அதேநேரம் திறமை இல்லாத ஒருவன் `தன்னால் முடியும்’ எனும் நம்பிக்கையோடும் சந்தோஷத்துடனும் ஒரு செயலைத் தொடங்கினான் எனில், அதில் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். இதையே ‘புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றிகாண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலியில்லை’ என்று பாடினார்கள் போலும்!

- சக்திதர், சென்னை-61

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism