Published:Updated:

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

சமயபுரம் மாரியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மகிமைகள்!

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

சமயபுரம் மகிமைகள்!

Published:Updated:
சமயபுரம் மாரியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
சமயபுரம் மாரியம்மன்

குருவாயூரப்பன் திரை போட்டு மூடியிருந்த சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தார். எப்போதும் பார்க்கும் அம்பிகைதான். ஆனால், இன்று ஏனோ மனத்துக்குள் அப்படியோர் எதிர்பார்ப்பு அம்மனை தரிசிக்க!

எப்போது கிரகணம் முடியும் முழு நிலவென ஜொலிக்கும் அம்பாளின் திருமுகத்தைக் காணலாம் என்று குருவாயூரப்பனின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தொலைவில் அவரின் தாத்தா அமர்ந்து ஜபித்துக் கொண்டிருந்தார். மூடியிருந்த அவரின் விழிகளில் விழிஉருட்டல் கூட இல்லாத ஆழ்ந்த தியானம்.


ஆக, தனக்கு மட்டும் ஏன் இன்று இந்தப் பதற்றம் என்ற சிந்தனை குருவாயூரப்பனுக்கு. கிரகணம் விலகும் வேளை நெருங்கியது. இன்னும் சில நிமிடங்களில் அன்னையின் சந்நிதியைச் சுத்தி செய்து தரிசனம் செய்துவிடலாம்.

அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது. ஆலயத்தில் பேரமைதி சூழ்ந்திருக்க, திடுமென நாத ஓசைகள் எழுந்தன. அதுவும் எப்படி... துந்துபியும் மத்தளமும் யாழும் இன்னபிற வாத்தியங்களும் ஒருசேர முழங்கின! குருவாயூரப்பன் வியப்புடன் தாத்தாவை நோக்கினார். ஆனால் அவரின் தியான நிலையில் சிறு அசைவுகூட இல்லை.

`எனில், அவரின் காதுகளில் நாத ஓசை எதுவும் விழ வில்லையா? எனக்கு மட்டும்தான் கேட்கிறதா? இது கனவா நனவா...’ எனும் சிந்தனை எழ, மனத்துக்குள் அப்படியொரு சிலிர்ப்பு. அந்தச் சிலிர்ப்பு நிலையிலிருந்து அவர் மீள்வதற்குள் வேறோர் அற்புதம் நிகழ்ந்தது.

ஆம்! சட்டென்று குளிர்ந்த காற்று அவரைக் கடந்து சந்நிதிக்குள் புகுவதுபோல் வீசியது. சில நொடிகள்தான் அந்த உணர்வு. சந்தனத்தையும் மீறிய நறுமணம் கலந்த அந்தக் காற்று தந்த குளுமையை இதுவரை அவர் அனுபவித்ததேயில்லை. காற்றின் சலனத்தைத் தெரிவிப்பதுபோல் சந்நிதியின் திரைச்சீலை ஒருமுறை ஆடி அசைந்து நின்றது. குருவாயூரப்பன், ‘அம்மா’ என்று வாய்விட்டு அலறிவிட்டார்!

சத்தம் கேட்டு தாத்தா ஓடிவந்து சுவரில் சாய்ந்திருந்த குருவாயூரப்பனைத் தாங்கிப் பிடித்தார். பிற ஊழியர்களும் ஓடோடி வந்து விசாரித்தனர். அன்பர் குருவாயூரப்பன், சுதாரித்துக்கொண்டு நிகழ்ந்தவற்றைக் கூறினார். அவரின் முகத்தில் ஒளிர்ந்த தேஜஸைப் பார்த்த துமே தாத்தாவுக்கு சகலமும் புரிந்தது.

அவர் மென்புன்னகையோடு “எல்லாம் நம் சமயபுரத்தாளின் விளையாட்டுடா... அவள்தான் உனக்குத் தன்னோட பிரசன்னத்தை உணர்த்தியிருக்கா. நீ பாக்கியசாலிடா...” என்றார். குருவாயூரப்பன் சிலிர்த்தார்.

அன்றைய நாளில் பிற சுத்திகள் எல்லாம் முடித்து அம்பிகையை தரிசனம் செய்தபோது, அம்பாள் புன்னகை பூத்தவளாகத் தெரிந்தாள். குருவாயூரப்பனுக்கு, தன் மேல் வீசிய குளிர்ந்த காற்று நினைவுக்கு வர, உள்ளம் சிலிர்க்க கண்ணீர் பெருக அந்தத் தாயை வணங்கித் தொழுதார்.

அன்றைக்கு சமயபுரத்தாளை தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருமே அம்மனின் இன்முக தரிசனத்தைப் பற்றியே பேசிக் கொண்டார்கள்!

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

தோ... சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா தொடங்கிவிட்டது. அந்த அன்னையின் ஆலயத்தில் கைங்கர்யம் செய்து வரும் அன்பர் குருவாயூரப்பனைச் சந்தித்தோம்.

“சமயபுரம் மகமாயிக்குக் கைங்கர்யம் செய்யும் ஆறாவது தலைமுறை நான். நடைபழகிய நாள்களிலிருந்தே தாத்தாவின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆலயம் வருவேனாம். பத்து வயதிலேயே சகல கைங்கர்யங்களும் பழக்கமாகி விட்டன.

‘இது விக்கிரகம் இல்லை. நம் தாய்... லோகமாதா... நம்ம ஆத்துல இருக்கிற பெரியவாளைப் பாத்துக்கிறாப்பல அன்போடும் மரியாதை யோடும் பக்தியோடும் பாத்துக்கணும்’ என்று அவர் சொல்லிக்கொடுத்த வரிகள் அப்படியே என் மனத்தில் பதிந்துவிட்டன.

என்றைக்கு பூஜைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டேனோ அன்றிலிருந்தே அந்த வார்த்தைகளைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டேன். ஆறுகால பூஜைல நாலுகால பூஜையில் நான் கலந்துக்க முயல்வேன்.அம்பாளுக்கு என் கையால நைவேத்தியம் செய்யறதுன்னா மிகவும் பிரியம். அம்மாவுக்குக் குழந்தை கையால ஊட்டிவிடற சந்தோஷம் இல்லையா அது!

நான் இவ்வளவு உரிமையா சொன்னாலும் அவள் எனக்கு மட்டுமா அம்மா? அவள் லோக மாதா ஆயிற்றே... சர்வ சுதந்தரி அல்லவா?

மகாமாரியா அமர்ந்து ஆட்சி செய்கிற பீடம் இது. அதனால்தான் இந்தத் தலத்தை மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமை பீடம்னு சொல்கிறார்கள். கருவறைக்கு மேலே இருக்கும் விமானமே இக்கோயிலின் விசேஷத்தைச் சொல்லும். ஆமாம்... இந்தக் கோயிலில் உள்ள விமானம் ராஜகோபுரம் போலவே இருக்கும். இதை ராஜகோபுர விமானம்னு சொல்லுவாங்க. இப்படியான விமானம் அமைந்திருந்தால், அந்தக் கோயிலில் அருளும் தெய்வத்தின் வலிமை எல்லையில்லாததுன்னு பொருள்.

அதனால்தான் இவளை சர்வ சுதந்தரின்னு சொன்னேன். ஆக, இங்கே வந்து நீங்க எது கேட்டாலும் கிடைக்கும். இந்த உலகத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லைன்னு சொல்லுகிற காரியங்களை எல்லாம் சாத்தியப்படுத்துகிறவள் இந்த மாரி. எல்லோரும் கைவிட்டாலும் இந்த அம்பிகையே துணைன்னு நம்பி வரலாம்’’ என்ற குருவாயூரப்பன், ஓர் அருள் சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``போன வருஷம் சரியா பூச்சொரிதலுக்கு மூணு நாள் முன்னாடி ஒரு தம்பதி காரைக்குடில இருந்து வந்தாங்க. அந்த அம்மாவுக்கு வயது 56 இருக்கும். பார்க்க, உடல் நிலை ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டவங்க மாதிரி இருந்தாங்க. சந்நிதில வந்து நின்ற கணத்திலேர்ந்து அவங்க கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையா கொட்டுது; கூப்பிய கைகள் நடுங்குது.

அவங்களைத் தனியா அழைச்சு பிரசாதம் கொடுத்து ஆறுதல்படுத்தி, ‘என்ன விஷயம்’னு விசாரிச்சேன்.

அவங்க இதயத்தில் அடைப்பு. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்களாம். ஆனாலும், அவங்க உடம்பு அதைத் தாங்காதுன்னும் அதனால எதுவும் நடக்கலாம்னும் சொல்லியிருக்காங்க.

‘எனக்கு எதுவும் நடக்கிறதுக்கு முன்னாடி இந்த அம்மாவைக் கண்ணார தரிசனம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன். இப்ப, அம்மாவை தரிசனம் பண்ணிட்டேன். இனி எனக்கு எது நடந்தாலும் கவலை இல்லை’ன்னு அந்த அம்மா சொன்னாங்க.

தன்னைத் தேடி வந்தவங்களை வெறும் கையோட அனுப்புறவளா சமயபுரத்தாள். வரங் களையும் நல் வாழ்வையும் தருபவள் அல்லவா?

‘அதெல்லாம் நீங்க பயப்படவே வேண்டாம். மாரிக்கு மிஞ்சின மருத்துவர் இல்லை. தைரியமா போங்க. அடுத்த வருஷம் பூச்சொரிதலுக்கு முன்னாடி ஆரோக்கியமா வருவீங்க’ன்னு தைரியப்படுத்தி அனுப்பினேன்.

இதை நான் அவரிடம் ஒப்புக்குச் சொல்ல வில்லை. இந்தச் சந்நிதிக்கு அன்றாடம் வரும் பக்தர்கள் அருள்பெற்ற அனுபவங்கள் எனக்குத் தெரியும். ஆகவே, இந்த உலகமே கைவிட்டாலும் இந்த அம்பாள் கைவிடவே மாட்டாள் என்கிற பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் தான் அந்த அம்மாவிடமும் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அந்த அம்மா இரண்டு நாள்களுக்கு முன்னாடி வந்திருந்தாங்க. அடையாளமே தெரியலை. அவ்வளவு கம்பீரமா இருந்தாங்க. நல்லபடியா அறுவை சிகிச்சை முடிந்து ஒரு சிக்கலும் இல்லாமல் உடல் தேறினார்களாம்.

‘சமயபுரத்தாள் கூடவேயிருந்து காப்பாத் திட்டா’ என்று சொன்னபோது அவரின் கண்களில் அப்படியொரு மகிழ்ச்சி. அம்பாளை தரிசனம் செய்த நொடியில் அவரின் முகத்தில் பூரண நிம்மதி. அது சமயபுரத்தாள் கொடுத்த வரம்!

பிள்ளைக்குத் திருப்தி என்றால் சமயபுரத் தாளுக்கும் மகிழ்ச்சிதானே. அந்த அம்மாவை அனுப்பிவிட்டு வந்தவன், அம்பாளைப் பார்த்தேன்... அவளின் திருமுகத்திலும் அப்படியோர் ஆனந்தச் சிரிப்பு.

அனுபவபூர்வமாகவே சொல்கிறேன்... இந்த ஊர் மக்களுக்குத் தெரியும்... ஆத்தாளை சொந்த அம்மாவாகவே வணங்கித் தொழும் அடியார்கள், இந்த மகமாயி எப்போது சந்தோஷமாக இருக்கிறாள், எப்போது அவளின் திருமுகம் வாடியிருக்கும் என்பதைப் பார்த்த உடனேயே சொல்லிடுவாங்க.

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

தைப்பூசம் அன்று அம்பாள் பொறந்த வீடான கொள்ளிடக் கரைக்கு போய் தீர்த்தவாரி காண்பாள். அப்போது பார்த்தால், அவள் முகம் அப்படி ஜொலிக்கும்.

‘பார்த்தியா, எல்லாப் பெண்களையும்போல அம்பாளுக்கும் பிறந்த வீட்டுக்குப் போறதுன்னா சந்தோஷத்தை’ என்று தங்களுக்குள் பேசிக் கேலி செய்துகொள்வார்கள்.

அதேநேரம், திரும்பி வரும்போது அவள் முகத்தில் ஒருவித அசதியும் களைப்பும் தெரியும். அன்றைக்கு அவள் சகோதரனான ஶ்ரீரங்கநாதனின் சீர் வந்து சேர்ந்ததும் அவளின் முகத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் திரும்ப வந்துடும்.

இதை எல்லாம் அர்ச்சகர்கள் மட்டுமல்ல, இங்க வாழும் பக்தர்கள் பலரும் கவனிச்சு சொல்லியிருக்காங்க. இவைதான் அம்பாள் பிரத்யட்சயமாக இங்கே வாசம் செய்கிறாள் என்பதற்கான சாட்சிகள்’’ என்றவரிடம் பூச்சொரிதல் விழா பற்றிக் கேட்டோம்.

``மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பூச்சொரிதல் நடக்கும். அன்று அவள் முகத்தைப் பார்க்கணுமே... அடடா, ஆனந்தம் தாண்டவமாடும்! அடுத்த நாளிலிருந்து அம்பா ளோட விரதம் தொடங்கும். பங்குனி கடைசி ஞாயிறு வரை விரதம் இருப்பாள். விரதம்னா விரதம் அப்படி ஒரு விரதம்.

சர்வ ஜகன்மாதாவான இவள் ஏன் விரதம் இருக்கணும்? தாய் தன் பிள்ளைகளுக்காக இருக்கும் விரதம் இது. இந்த மாதத்தில் சமயபுரத்தில் பலரும் அம்பாளோட சேர்ந்து இந்த விரதம் இருப்பாங்க.

விரதம் இருக்கிற 27 நாள்களில் அம்மனுக்கு ஒரு வேளை மட்டும் நைவேத்தியம். அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை மட்டுமே நைவேத்தியம் செய்வோம்.

தன் பிள்ளைகள் ஆயுசுக்கும் ஆரோக்கியமா இருக்கணும்ங்கிற ஆசையில் நம் அன்னை மேற்கொள்ளும் விரதம் இது.

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

தோ, மாசி கடைசி ஞாயிறு முதல் தன் விரதத்தைத் தொடங்கிவிட்டாள் சமய புரத்தாள். இன்றைக்கு இந்த உலகத்தில் எத்தனையோ நோய்களும் பிரச்னைகளும் புதிது புதிதாகத் தோன்றி மக்களை வாட்டுகின்றன. அவை அனைத்திலிருந்தும் நாம் விடுபடவேண்டும்; சகல நன்மைகளும் பெற வேண்டும் என்று நமக்காக விரதம் இருக்கிறாள் நம் அன்னை.

நாமும் சமயபுரத்தாளைச் சரணடைவோம். அம்மாவுடன் சேர்ந்து விரதம் இருந்து வழிபடுவோம். `தளர்வறியா மனம் வேண்டும்; நல்லன எல்லாம் அருள வேண்டும்' என்று நம் அன்னையை வேண்டிப் பணிவோம்’’ என்று உள்ளம் உருக நிறைவுசெய்தார் குருவாயூரப்பன்.

துன்பம் வரும் சமயத்தில் பிள்ளைகள் துடிப்பதைப் பொறுக்காமல் சடுதியில் வந்து அருள் செய்பவள் இந்த மாரியம்மன். ஆகவேதான் ஞானநுல்களும் ஆன்மிக ஆன்றோர்களும் இந்த அன்னையைச் சமயபுரத்தாள் என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

நாமும் நாளும் வழிபடுவோம். ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, கண்ணபுரத்தாள் என்றெல்லாம் தோத்திர நூல்கள் போற்றும் சமயபுரத்தாளை வணங்கி வரம் பெறுவோம்!

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

சமயபுரத்தாளை வழிபட...

அம்பாளுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்துவைத்தால் தீராதவியாதிகளும் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

`தேவி கட்க மாலா’ எனும் அற்புத ஸ்தோத்திரம் உண்டு. கட்கம் என்றால் ஆயுதம். இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் அம்பிகையின் பாதுகாப்பு எப்போதும் நம்மைச் சுற்றியிருக்கும்.

இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி சமயபுரத்தாளை வழிபடலாம். நம்பிக்கையோடு இந்த அம்மனை வேண்டிக்கொண்டால், கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமண வரம், குழந்தைபேறு, கடன் நிவர்த்தி, செல்வச் செழிப்பு, ஆரோக்கியம் மேம்பாடு என எதைக் கேட்டாலும், நம் எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே கொடுத்து மகிழ்விப்பாள் சமயபுரத்தாள்.

விரதம் தொடங்கினாள் சமயபுரத்தாள்!

வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

விரத நாள்களில் சமயபுரம் வந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும், வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே அம்மனை வழிபட்டு வரம் பெறலாம்.

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இளநீர், மோர், பானகம், வெள்ளரிப் பிஞ்சு, துள்ளுமாவு ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து துள்ளுமாவு செய்வார்கள். பூஜைக்குப் பின்னர், அந்தப் பிரசாதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகித்து நாமும் உண்ணலாம். இதனால், சகல நன்மைகளும் உண்டாகும். சமயபுரத்தாள் எப்போதும் நம்முடன் இருந்து நம்மைக் காப்பாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism