Published:Updated:

சிவ மகுடம்!

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம்!

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

விண்ணில் ஜொலிக்கும் தாரகைகளின் துணையோடு, மிகக் கம்பீரமாகத் தன்னுடைய ஆகாய ஊர்வலத்தைத் தொடங்கியிருந்தான் சந்திரன். அந்த ஊர்வலத்தைக் கொண்டாடும் விதம் தேவர்கள் வானில் சுடர்ப்பூக்களைச் சொரிகிறார்களோ என்று எண்ணும்படி, ஆங்காங்கே மினுங்கும் பிரகாசத்துடன் தொடர்ச்சியாக வாண வேடிக்கை காட்டியபடி எரிந்து தோய்ந்து, பின்னர் வைகை தீரத்து மணற்பரப்பில் வந்து வீழ்ந்தன சிறுசிறு விண்கற்கள்.

சிவ மகுடம்!

`ஐந்தெழுத்து மந்திரம்!'

இவ்விதம் சந்திரன் மெள்ள மெள்ள நடுவானை நோக்கி முன்னேறத் தொடங்கியிருந்த வேளையில்தான், பூமிச்சந்திரன் போன்று பொலிந்த தன் திருமுகத்தின் பிறைநுதலில் திருநீற்றை அணிந்துகொண்டார் திருஞானசம்பந்தர். அவ்வாறு அணியும்வேளையில் அவரின் பவளவாய் இதழ்கள் தன்னிச்சையாகவே முணுமுணுத்தன நமசிவாய மந்திரத்தை!

வினை தீர்க்கும் மாமந்திரம்; துன்பங்களைப் பொசுக்கும் தூய மந்திரம்; அனைத்துக்குமான ஆதி மந்திரம் - நமசிவாய எனும் திருவைந்தெழுத்து மந்திரம்.

சொற்றுணை வேதியனும் பெரும் சோதியனுமாகிய சிவ பெருமானின் பொற்றுணைத் திருவடியைப் பற்றிக்கொண்ட அடியவர்களுக்கெல்லாம் பக்கத் துணையாகித் திகழ்வது ஐந்தெழுத்து மந்திரம்.

வீடுபேற்றுக்கு வழிகாட்டும் முதல்வன் சிவபிரான். அவரின் அருள்வழியே உறுதியான பற்றுக்கோடு. சத்தியமான அந்தச் சைவ வழியில் சென்று அந்தத் தென்னாடுடையானின் கழல்களை அடைய முயலும் எளியோருக்கெல்லாம் நல்வழிகாட்டுவது நமசிவாய மந்திரம்.

பூக்களில் விலைமதிப்பற்ற ஆபரணமாகத் திகழ்வது இதழ்கள் நிறைந்த கமலமாம். பசுக்களுக்கான ஆபரணம் - இறைவருக்கான அபிஷேகத்துக்குப் பஞ்சகவ்யம் வழங்குவதாம். ஆள்வோருக்கான பெரும் ஆபரணம் அறநெறி தவறாமல் ஆட்சிபுரிவதாம். அதுபோல், நம் நாவுக்கு ஆபரணம் திரு ஐந்தெழுத்தை ஓதுவதே ஆகும்.

கோபுரம் போன்று விறகுகளை அடுக்கி வைத்திருந்தாலும், அவற்றை உண்ணும்விதம் விறகின் ஊடே நெருப்பு புகுந்துவிட்டால் விறகுகளில் ஒன்றும் மிச்சமிருக்காது; எல்லாம் சாம்பலாகும். அதேபோல், நம் பாவச் சுமைகள் எவ்வளவு அதிகமெனினும் அவற்றைப் பொசுக்க வல்லது, மகிமை மிகுந்த ஐந்தெழுத்து மந்திரம்.

இங்ஙனம் பெரும் பாவத்தையும் கொடும் தீமைகளையும் சுட்டெரிக்கும் அற்புத மந்திரத்தைத் துணையாகக் கொண்ட அடியார்களை வேறு நெருப்பும் கனலும் அண்டமுடியுமா என்ன?

திருஞானசம்பந்தப் பிள்ளையும் நெற்றி நிறையத் தூய திருநீறு பூசி நமசிவாய மந்திரத்தைக் கவசமாக்கிக்கொண்டது. மந்திரம் ஓதிய அவரின் இதழ்களில் சிறு புன்னகையும் தோன்றியது.

மொட்டவிழும் மல்லிகையைப் போன்று செவ்விதழ் பிரித்து முத்துப்பற்கள் பளிச்சிட பிள்ளை காட்டிய புன்முறுவல், அடுத்து நிகழப்போகும் ஏதோவொரு சம்பவத்தை உணர்த்துவதாகப்பட்டது அவரின் அருகிலிருந்த அணுக்கர்களுக்கு!

`அன்று அப்பன் நகைத்தார், திரிபுரம் எரிந்தது; இன்று பிள்ளை சிரிக்கிறார்... நிகழப்போவது என்னவோ?’ ஒருவேளை பிள்ளையின் அருகில் நாம் இருந்திருந்தால், நமக்கும் இப்படித்தான் எண்ணத் தோன்றியிருக்கும்! மிகச் சரியாக இதே வேளையில் அரண்மனை மாளிகையில் மங்கையர்க்கரசியாரும் விபூதியை நெற்றிக்கு இட்டுக்கொண்டார்.

சிவ மகுடம்!

`உயர்ந்தவர் யார் சம்பந்தரே?'

மாமன்னருக்கு அதிகப்படியான பணிகளும் ஆலோசனைகளும் தொடர்வதாகத் தகவல். ஆகவே, அரசியாரின் அறைக்கு மாமன்னரின் பிரவேசம் இருக்காது என்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, நெற்றி நிறையத் திருநீறு இட்டுக்கொண்டு, ஐந்தெழுத்துத் தியானத்தில் லயிக்கச் சித்தமானார் பாண்டிமாதேவியார்.

மன்னர் வருவதாக இருந்திருந்தால்... திருநீற்றை நெற்றிக்கு அணியாமல், வழக்கம்போல் சந்தனக் குழம்பில் இட்டுக் குழைத்துத் தன் மேனியில் இட்டுக்கொண்டிருப்பார். `எதன் பொருட்டும் சமயக் கொள்கை சார்ந்து மாமன்னருக்கு தர்மச் சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை’ என்பது தேவியாரின் திடச்சித்தம் அல்லவா?!

தரையில் கிடத்தப்பட்டிருந்த பலகை ஆசனத்தில் அமர்ந்தவர், கண்களை மூடினார் சிவ தியானத்துக்காக. ஆனால் மனது விழித்துக்கொண்டது. மனத்திரையில் சீர்காழிப் பிள்ளையின் திருமுகம் தோன்றியது. தேவியாருக்குள் தாய்மை உணர்வு பொங்கிப் பெருகியது.

அதேநேரம் `என் ஈசனே என் வேண்டுதலின் பொருட்டு ஆலவாய்க்கு எழுந்தருளியிருக்கும் இந்தப் பிள்ளைக்கு எவ்வித இடர்ப்பாடும் நேர்ந்துவிடக்கூடாது’ என்று சிந்தைநிறைய வேண்டுதலைச் சமர்ப்பித்துக்கொண்டார்.

`எத்தகைய கடுமையான பணி... சமணர்களின் போர்வையில் திகழும் அதர்மவாதிகளையும் அவர்களால் இயக்கப்படும் சமணம் சார்ந்த கூட்டத்தையும் மதுரை மண்ணில் எதிர்த்துக் களமாடுவது எளிதல்லவே. ஆபத்து நிறைந்த இந்தப் பணியை இந்தப் பிள்ளையால் நிறைசெலுத்த இயலுமா?’

சாமானியர்களுக்கு இப்படித்தான் எண்ணத்தோன்றும். ஆனால், பாண்டிமா தேவியார் சாமானியர் அல்லவே. சிறந்த மதியூகி - நுண்ணறிவு மிகுந்தவர் அல்லவா! மட்டுமன்றி அவர், திருஞான சம்பந்தரைத் தன் பிள்ளையாகவே அல்லவா நேசிக்கிறார்!

`திரு ஆலவாய்க்குத் திருஞானசம்பந்தர் வந்துவிட்டார்’ என்ற செய்தியைக் கேட்டதுமே அவருள் எழுந்த தாய்மைப் பெருக்கைச் சொல்லில் வடிக்க இயலுமா என்ன?

தேவியாரின் இந்த நிலையை `கைமிக்குத் தழைத்துப் பொங்கி விம்மிய மகிழ்ச்சி’ என்கிறார், பெரியபுராணம் அருளிய சேக்கிழார் பெருமான்.

பிற்கால ஞானநூல்களில் ஒன்று நால்வர்மணி மாலை. இதை அருளிச் செய்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். இந்நூலில் இவர், நம் பேரரசியார் மங்கையர்க்கரசியாரின் நிலையை எப்படிச் சித்திரித்து, என்ன கேட்கிறார் தெரியுமா?

`இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு

முலைசுரந்த அன்னையோ முன்நின் - நிலைவிளம்பக்

கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா

இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு?’ எனப் பாடுகிறார்!

சீர்காழித் திருக்குளத்துப் படித்துறையில் சிறு குழந்தையான ஞானசம்பந்தர் அழுததைக் கண்டபின்னர் முலைசுரந்த சீர்காழி இறைவி பெரியநாயகி ஒருபுறம்; திருஞானசம்பந்தரைப் பார்க்காமலேயே அவரின் நிலையைப் பற்றிக் கேட்டதுமே முலைசுரந்த பாண்டிமாதேவி மறுபுறம். `இவர்களில் உயர்ந்தவர் யார் என்று நீரே சொல்லும் சம்பந்தரே’ என்று பாடிப் பரவுகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

அடடா... திருஞானசம்பந்தப் பிள்ளையின் மீதான பாண்டிமா தேவியாரின் தாய்மைப் பாசத்தை உணர்ந்துகொள்ள இதைவிட வேறு என்னவேண்டும்!

அத்தகைய அன்புப்பிள்ளை குறித்து எவ்வித தீர்க்கதரிசனமும் முன்யோசனையும் இல்லாமலா பாண்டிமாதேவியார் அவரை மதுரைக்கு விஜயம் செய்ய வைத்திருப்பார்?! `இதனை இதனால் இவன் முடிக்கும்’ என்ற பெரியோர்தம் வாக்குக்கு இணங்க ஆய்ந்தறிந்தபிறகே, திருஞானசம்பந்தப் பிள்ளையிடம் தன் வேண்டுதலை முன்வைத் தார் என்றே சொல்லவேண்டும்.

ஆம்! பாண்டிய மண்டலத்தில் மீண்டும் சைவம் தழைக்கவேண்டும். அதன் பொருட்டு தாம் தொடங்கியுள்ள திருப்பணி நிறைவுபெற ஏற்ற அருளாளர் திருஞானசம்பந்தரே என்ற உறுதி தேவியாருக்குள் அதீதமாக இருந்தது.

ஆயினும் தாய்மைக்கே உரிய பரிதவிப்பும் எழாமலில்லை. ஆகவே, தென்னாட்டின் பொருட்டும் பாண்டிய தேசத்தின் மக்களுக் காகவும், பிள்ளை ஞானசம்பந்தரின் நலன் வேண்டியும் ஆலவாய் இறைவனை வேண்டித் துதிக்க ஆரம்பித்தார் பாண்டிமா தேவியார்.

அப்போதுதான் அந்த அரவம் கேட்டது. தொடர்ந்து ஏதோ விபரீதத்தை உணர்த்தி எச்சரிக்கும் தொனியிலான பேரிகை முழக் கங்களும் துந்துபி ஓசைகளும் தொடர்ந்து ஒலித்தன!

பதற்றத்துடன் எழுந்த தேவியார், விரைந்து சென்று சாளரத்தை நெருங்கினார். மேற்குமலைத் தொடர் தீரத்துத் தென்றலை மிக வசதியாய் வரவேற்று அறைக்குள் உள்புகச் செய்யும் விதமாகவும் மிகுந்த வேலைப்பாடுகளுடனும் அமைந்திருந்த அந்தச் சாளரம், திருஞானசம்பந்தர் உறைந்துள்ள திருமடம் இருக்கும் திசை நோக்கி அமைந்திருந்தது.

தேவியார் வெளியே நோக்கினார். வீதிகளில் மக்கள் ஏதேதோ ஓலமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமடம் இருக்கும் சாலையை நோக்கியே செல்கிறார்கள் என்பதைக் கணிக்க முடிந்தது. அந்தத் திசையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார் பாண்டிமாதேவியார்.

சற்றுத் தொலைவில் திருமடம் அமைந்திருந்த இடத்துக்கு நேர் மேலே ஆகாயப் பரப்பில் பெருவெளிச்சம் புலப் பட்டது. பெருந்தீ பற்றிக்கொண்டதால் எழுந்த வெளிச்சம் அது!

`செய்யனே ஆலவாய் ஐயனே!’

கைவர்கள் மந்திரத்தால் ஏவினார்களோ அல்லது தந்திரத்தால் - சூழ்ச்சியால் செய்த காரியமோ தெரியாது... திருமடம் தீப்பற்றி எரிந்தது. அன்று வாயுபுத்திரனின் வாலில் இட்ட தீ லங்காபுரியையும் வாலில் தீயிட்டவர்களையும் அல்லவா எரித்தது!

இங்கே, இப்போது வைக்கப்பட்ட இந்த நெருப்பில் பொசுங்கப் போவது யார்? குடிகள் செய்யும் பாவமும் புண்ணியமும் மன்னனின் கணக்கில் அல்லவா சேரும். எனில், பாதகர்கள் செய்த பாவம் பாண்டியரை அல்லவா பழிதீர்க்கும்!

எப்பேர்ப்பட்ட துன்பமாயினும் தமக்கு இழைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்வார்கள் அடியார்கள். தன்னைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏதேனும் துன்பமெனில், பெருங்கோபம் கொள்வார்கள். திருஞானசம்பந்தருக்கும் சீற்றம் வந்தது.

`மடத்துக்கு இடப்பட்ட நெருப்பு, தன்னை மட்டுமல்ல உடன் வந்த அடியவர்களின் ஆயுளுக்கும் அல்லவா பாதகம் விளைவிப்பது. தவத்தில் சிறந்த சிவனடியார்கள் துயிலும்போதும் பாதகம் விளைவிப்பது பெருங்குற்றம் அல்லவா’

பிள்ளை சிந்தித்தது... விளைவு பதிகம் பிறந்தது!

செய்யனே திருஆலவாய் மேவிய

ஐயனே அஞ்சல் என்றருள் செய்எனைப்

பொய்யராம் அமணர் கொளுவுஞ்சுடர்

பையவே சென்று பாண்டியற் காகவே!

பாண்டியர் மாளிகையில், மிதமிஞ்சிய பணிகளின் காரணமாக தாமதமாகவே தமது அந்தரங்க அறைக்கு வந்து சேர்ந்து, பஞ்சணையில் சரிந்திருந்த கூன்பாண்டியரின் செவிகளிலும் மக்கள் எழுப்பிய ஓலமும் பேரிகை முழக்கங்களும் விழுந்தன.

ஆனாலும் அவரால் சட்டென்று எழுந்துகொள்ள முடியவில்லை. புரண்டு படுத்தார். உடல்நிலையில் ஏதோ மாறுபாடு... அவரையும் அறியாமல் சற்றே முணுமுணுத்தார்... அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி எழுந்தது!

- மகுடம் சூடுவோம்...