Published:Updated:

காஷ்மீரில் கலைமகள் கடாட்சம்!

சரஸ்வதிதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
சரஸ்வதிதேவி

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் - ஓவியம்: வேதா

ரஸ்வதிதேவி கவிஞர்களின் வாக்கில் வாசம் செய்கிறாள். சொல்லின் செல்வியான இவளைஆராதிக்கப் பயனுடைய சொற்களையே பேச வேண்டும். பேச்சில் வல்லவர்கள், சிறந்த இலக்கண முறையில் நல்லவற்றைப் பேசி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மக்களின் வாழ்வுக்கு நல்வழி எதுவோ, அதைப் பிழையற எழுதி எழுத்துக்குப் பெருமை யும் உயர்வும் கிடைக்கும் வகையில் எழுத்தாளன் திகழவேண்டும். கலாதேவி விரும்பி வாழுமிடம், கவிஞர்களின் வாக்கிலும் எழுத்தாளனின் எழுத்திலும்தான்.

பிரம்மாவின் நாக்கில் வாசம் செய்யும் கலைமகள், பிரம்ம சிருஷ்டியின் மீது கலை ஆதிக்கம் செலுத்துகிறாள். பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் கலைப் படைப்பு கள்தான். கலைகளின் அன்னை, தான் நடமாட தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தாள். எப்படி?

காஷ்மீரில் கலைமகள் கடாட்சம்!

ஒருமுறை அவள் பூவுலகுக்கு வந்தாள். முதன்முதலில் அவளின் கண்ணில்பட்டவை எவை தெரியுமா?

வானை நோக்கி வாழ்கின்ற நிலத்திலே பயிரை வளர்த்து உயிரை காக்கும் உழைப்பாளிகளின் கரங்களும், அதன்பின் கலைவாணர்களின் இன்னிசையும் புலப்பட்டன. தொடர்ந்து, அறிவாளிகளின் நெஞ்சத் துடிப்பு தென்பட்டது. உடனே அவள், தான் நடமாட தகுந்த இடங்கள் இவைதாம் என்று அங்கெல்லாம் கோயில் கொள்ள தீர்மானம் செய்துவிட்டாள். அன்று முதல் பாட்டும் பண்ணுமாய், கலையும் கல்வியுமாய் உலகம் தளிர்க்கலாயிற்று.

‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது’ என்பது அருணகிரி நாதரின் அனுபூதி வாக்கு. அந்த வாக்குக்கு ஏற்ப கடவுள் மனிதனுக்கு மட்டுமே அளித்துள்ள பேசும் சக்தியை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். நம்மைப் பரிசுத்தம் செய்பவள், வாக்குக்கு அதிபதியான வாக்வாதினி. அவளே உண்மை ஒளியைத் தூண்டுபவள். ‘வாக்குதான் இறைவன்’ என்கிறது வேதம்.

சரஸ்வதிதேவி
சரஸ்வதிதேவி

கலாவதி, கலாலாப சதுஷ் ஷஷ்டி, கலாமயி என்றெல்லாம் அம்பிகை பராசக்தி அழைக்கப் படுகிறாள். அதாவது 64 கலைகளின் ரூபமாக இருக்கிறாள் அவள். ஆம், வாக்கும் அர்த்தமுமாக இணைந்தவள் அம்பிகை.

அதைப்போல சொல்லும் சிந்தனையும் முற்றிலும் பிரிக்க முடியாத தன்மை உடையவை. சொல், பொருள், இன்பம் இவை நிறைந்ததுதான் கவிதை. சொல்லிலும், பொருளிலும், சிந்தை யிலும், பேச்சிலும், கவிதையிலும் வாணி வாசம் செய்கிறாள்.

சிருஷ்டித் தொழிலை நடத்துபவர் பிரம்மா.ஞான சக்தி இல்லாவிட்டால் அத்தொழில் என்னாவது? அதனால் அறிவு சக்தியை பிரம்மா தனது பத்தினியாக ஏற்றார். அறிவு சக்தியை ‘சாரதா’ என்று ‘சாம வேதம்’ கூறுகிறது. அவள் அமர்ந்த ‘சாரதா பீடம்’ காஷ்மீரில் உள்ளது.

பாரத தேசத்தின் மணி மகுடமாகத் திகழும் இடம் காஷ்மீர். முற்காலத்தில் மகா பண்டி தர்களின் ராஜ்ஜியமாக காஷ்மீர் திகழ்ந்தது. சம்ஸ்கிருதம் அவர்களின் மொழியாகப் பரிணமித்து இருந்தது. மருத்துவம், வானியல், ஜோதிடம், கணிதம், சட்டம், இசை, இலக்கியம், உளவியல் நுண்கலைகள், பொறியியல், கட்டடக் கலை முதலான பல துறைகளிலும் பல வல்லுநர்கள் காஷ்மீரில் வசித்து வந்தனர். இவற்றுக்கெல்லாம் காரணம் காஷ்மீரில் உள்ள ஸ்ரீசாரதாதேவியின் அருட்கொடையே.

ஒரு காலத்தில் காஷ்மீர் பிரதேசமே ‘பாரத தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது என்றால், அந்தப் பகுதியின் கல்வி கலாசார செழிப்பைச் சொல்லவும் வேண்டுமா? கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கிய காஷ்மீரை, 64 கலைகளின் தலைவி யான கலைமகள் மென்மேலும் மேன்மையுறச் செய்தாள்.

காஷ்மீர் மன்னர்களின் முக்கிய தெய்வமாக விளங் கியவள் ஸ்ரீசாரதாதேவி. அங்கு ஆட்சி செய்த உட்பலா மன்னர்கள், தங்களின் நாணயங் களில் (ஒன்பதாம் நூற்றாண்டில்) சாரதா தேவியின் உருவத்தைப் பொறித்திருந்தனர்.

காஷ்மீரின் ஸ்ரீசாரதா மஹாத்மியத்தின் படி, மாதங்க முனிவரின் மைந்தனாகிய சாண்டில்ய முனிவர், சாரதா தேவியின் அருளைப் பெற தவமிருந்தார். அவரின் தவத்துக்கு மகிழ்ந்த தேவி, அவரைச் சியாமளா என்ற இடத்துக்கு (இப்போதைய குடவாரா மாவட்டம்) சென்று அங்குள்ள கிருஷ்ணன் சுனையில் நீராடுமாறு பணித்தாள்.

அவரும் அங்கு சென்று நீராடி எழும்போது, அவரின் மேனியில் பாதி பொன்னிறமாக மாறி ஒளி வீசியது. இது, அந்தச் சுனை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தின் தெய்விகத்தன்மையை உணர்த்தியது. இதனால் பெரும் மகிழ்வை எய்திய சாண்டில்ய முனிவர், தேவியைப் (தேவியின் மூன்று திருவுருவங்களான சரஸ்வதி, சாரதா, வாக்தேவி என) பலவாறு புகழ்ந்தார். இந்த இடம் இப்போது சோனாடிராங் என அழைக்கப்படுகிறது.

சாண்டில்யர் அதன்பிறகு கௌதம ரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார். அங்கிருந்து சாரதாவனத்துக்குச் சென்றார். அந்த வனத்தில் மிகப் பிரகாசத்துடன் சாரதாதேவி முனிவருக்கு காட்சி அளித்து ஆசி வழங்கினாள். அங்கிருந்த குண்டத்தில் தேவி மறைந்ததாகக் கூறப்படுகிறது.அந்த இடமே ஆதி சாரதாபீடம் என்று அழைக் கப்படுகிறது.

ஸ்ரீசாரதாதேவியின் அருளால் அங்கு கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தில் தேவியின் பெயரால் பெரிய பல்கலைக்கழகம் நடந்துவந்தது. அதில் பல தேசங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வந்தனர். அங்கு மிகப் பெரிய நூலகமும் இருந்ததாம். அந்தக் காலத்தில் பல இடங்களிலிருந்தும் மிகப்பெரிய பண்டிதர்கள் காஷ்மீரத்தில் இருந்த சாரதா சரஸ்வதி ஆலயத்துக்குச் சென்று அனைத்து பண்டிதர்களுடனும் விவாதம் செய்வார்களாம்.

அது மிகப்பெரிய பெருமை தரும் சாதனை யாகக் கருதப்பட்டது. எவர் வெற்றி பெறுவாரோ அவரே சர்வக்ஞர். எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர் எனும் பட்டத்தைப் பெறுவார்.

சரஸ்வதிதேவி
சரஸ்வதிதேவி

ஆதிசங்கரர் தம் இளமைப் பருவத்திலேயே காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்த ஆலயத்தில் தங்கி, பல பண்டிதர்களை வென்று பெருமை பெற்றவர். இப்படி அந்தச் சாரதா பீடம் அதன் புகழுக்கும் தெய்விகத்துக்கும் சிறப்புற்று விளங்கியது. மாபெரும் அறிஞர்கள் பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பெரும் விவாதங்களும் சொற்பொழிவுகளும் அங்கு நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இந்த பீடத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் கதவுகள் உண்டு.

ஆனால் எல்லோராலும் அதன் உட்பகுதிக்கு - கருவறைக்குச் செல்ல முடியாது. வாதத்தில் வென்றவர்கள் மட்டுமே அவ்வாறு உள்ளே செல்ல முடியும். அப்படி செல்லுமுன், சாரதாதேவி அவர்களின் ஞானத்தைப் பரிசோதித்ததாக நம்பப்படுகிறது.

ஆதிசங்கரர் ஒருவரே, சாரதா பீடத்தின் தெற்கு வாயில் வழியாகச் சென்று, உள்பகுதிக்கும் சென்று சர்வக்ஞ பீடம் ஏறினார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய பெருமை மிகுந்த சாரதா பீடம், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. நீலம் மாவட்டம் நீலம் நதிக்கரையில், `கிஷன் கங்கா' என்று இந்தியர்களால் அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப் பாளர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு திகழ்கிறது. அக்காலத்தில் பேரும் புகழுடன் விளங்கிய இக்கலைக் கோயில் இன்று மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

சம்ஸ்கிருத பண்டிதர்களின் ஆதார சுருதியாக விளங்கிய இந்த சாரதா தேசம் - பீடம்- கலைக்கோயில், முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு ஆங்காங்கே சுவர்கள் மட்டுமே தெரிகின்றன.

பாரதத்துக்கு மணிமகுடமான கலையரசி யின் திருக்கோயில், கட்டாந் தரையாக இன்று காட்சியளிப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது. அவளின் ஆலயமும் அந்தப் புண்ணிய பூமியும் மீண்டும் புத்துயிர் பெற அன்னை சாரதாதேவி அருள் புரியட்டும்!

ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதரின் அடிச்சுவட்டில்...

ர்நாடக சங்கீத மும்மணிகளில் ஒருவரான நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சிதர் (1775- 1835), பல தலங்களில் அருளும் அறுவகை சமயக் கடவுளர் மீதும் தம்முடைய கிருதிகளில் பாடியுள்ளார். காஷ்மீர் சரஸ்வதிதேவி மீதும் கலாவதி ராகத்தில் அவர் பாடியுள்ள கிருதி ஒன்று உள்ளது.

அதிலுள்ள சிற்ப அமைப்பின்படி சரஸ்வதியே இக்கட்டுரையின் முகப்பில் காட்சியளிக்கிறாள். இக்கட்டுரையின் எழுத்தாளர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் முயற்சியில் `ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்' எனும் தல வரலாற்று ஆய்வு நூல் விரைவில் வர இருக்கிறது. ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதிகள் குறித்து விவரம் அறிந்தவர்கள், தகவல் பகிரலாம்.

(தொடர்புக்கு: 90032 32722)

மங்கலம் அருள்வாள்!

காஷ்மீரின் சரஸ்வதிதேவி மீது ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் அருளிய கலாவதி ராகத்தில் அமைந்த கிருதி இது.

காஷ்மீரில் கலைமகள் கடாட்சம்!

பல்லவி

கலாவதீ கமலாஸன யுவதீ

கல்யாணம் கலயது ஸரஸ்வதி

அனுபல்லவி

பலா பலா மந்த் ரார்ண ரூபிணி

பாரதீ மாத்ருகா சரீரிணி

மலாளி விதாரிணி வாணி வாக்வாணீ

மதுகர வேணீ வீணாபாணீ

சரணம்

சரத் ஜ்யோத்ஸ்னா சுப்ராகாரா

சசிவதனா காச்மீர விஹாரா

வரா சாரதா பராங்குச தரா

வரதா பய பாச புஸ்தக கரா

ஸுராச் சித பதாம்புஜா சோபனா

ச்வேத பங்கஜாஸனா ஸுரதனா

புராரி குருகுஹ ஹ்ருதய ரஞ்ஜனீ

முராரி ஸ்நுஷா நிரஞ்ஜனி

கருத்து: கலைகளுக்கு இருப்பிடமான பிரம்மனின் தேவியான சரஸ்வதி மங்கலத்தை அளிக்கட்டும். அவள் சக்தி வாய்ந்த பெண்மை ரூபமான மந்திர எழுத்துக்களின் வடிவானவள். பாரதி; பாவங்களை விரட்டும் நாவுக்கரசி. கருங்கூந்தல் உடையவள்.

வீணையை ஏந்தியவள். நிலவு போன்று வெண் மேனியள். சந்திரமுகி; காஷ்மீரத்தில் வசிப்பவள்; சாரதாதேவி; சிறப்புடையவள். அங்குச பாசம் ஏந்தி, வரத அபயங்களுடன் திகழ்பவள். வரம் அருள்பவள். தேவர் களால் தொழப்பெறும் பாதங்களுடன் காட்சியளிப்பவள். வெண் தாமரையில் இருப்பவள். சிவன், குரு குகனுக்கு மகிழ்ச்சி அளிப்பவள். திருமாலின் மருமகள்.