கற்பலகையில் இருந்த மூன்று கட்டளைகளில் இரண்டை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டான் கடைக்குட்டிப் பிள்ளை. அடுத்து மூன்றாவது கட்டளை பாக்கியிருந்தது.

கடைக்குட்டியின் வாழ்வையே மாற்றிவிடுவதாகத் திகழ்ந்தது அந்த மூன்றாவது கட்டளை. ஆம், பெரிய மாளிகையின் உப்பரிகையில் மூன்று பெண்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் இளவரசி யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால், இளவரசியை அவரே கைப்பிடிக்கலாம் என்றிருந்தது மூன்றாவது கட்டளையில்.
இளவரசியை எப்படிக் கண்டுபிடிப்பது? பெண்களை நோக்கினால் மூவரும் அச்சு அசலாக ஒரே மாதிரியான தோற்றத்துடனும் ஆடை அலங்காரத்துடனும் இருந்தனர். கடைக்குட்டிப் பிள்ளை திகைத்தான். இப்போது, அவனால் மூத்த சகோதரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட தேனீக்களின் ராணி உதவ முன்வந்தது.
அந்த ராணித் தேனி மிகச் சரியாக இளவரசியை அவனுக்கு அடையாளம் காட்டியது. கடைக்குட்டிப் பிள்ளை மகிழ்ந்தான். இளவரசியை மணந்துகொண்டு அந்த நாட்டுக்கே இளவரசன் ஆனான். அங்கிருந்த பறவைகள், விலங்குகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடின. யாருக்கும் தீங்கு செய்யா நல்ல மனமும், அனைத்து உயிர்களின் மீதான அக்கறையும் அந்த இளைஞனுக்குப் பெரியதொரு பரிசை - இளவரசன் எனும் பதவியை அளித்தன. ஆம், இயற்கையை நாம் பாதுகாத்தால் அவை நம்மை காப்பாற்றும்.
சீனப் பழமொழி ஒன்று உண்டு. `வெயிலுக்கு ஒதுங்க நிழல் தரும் மரங்கள் இல்லையெனில், சுட்டெரிக்கும் வெயிலை ஏன் குற்றம் சொல்லவேண்டும்? மரத்தை வளர்க்காத அல்லது பாதுகாக்காத உன்னைத்தான் கண்டிக்க வேண்டும்' என்கிறது அந்தப் பழமொழி. நீங்களும் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என் செல்லங்களே. இயற்கை உங்களுக்கு வரப்பிரசாதமாகும்!
மதமும் - இயற்கையும்
மதத்திற்கும் இயற்கைக்கும் அப்படி என்ன தொடர்பு? பஞ்ச பூதங்களும் இயற்கையின் அங்கம்தான். அவற்றைத் தெய்வமாக வணங்கும் மதக் கோட்பாடு களும் இருக்கத்தானே செய்கின்றன. காளையை, கருடனை இறைவனின் வாகனங்களாக தரிசிக்கின்றன சில வழிபாட்டு முறைகள். `அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம் பிள்ளை வேண்டி' என்றெல்லாம் பல விஷயங்கள் உண்டு அல்லவா? மதமும்-இயற்கையும் இப்படித்தான் ஒன்றோடு ஒன்று உறவாடுகின்றன.
மனித இனத்தின் கடவுள் வழிபாடு மதக் கோட்பாடின் அடிப்படையாகும்! மதத்தின் நம்பிக்கையூட்டும் வழிகாட்டல், பெரியவர்களின் அறிவுறைப்படி நிகழும் வேண்டுதல்கள் நேர்த்திக் கடன்கள் ஆகியவை இன்றியமையாதவை.

ஓருமுறை `இயற்கையைத் தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள். அதேநேரம் ஆடு, மாடு, கோழிகள் ஆகியவற்றைப் பலிகொடுக்கிறீர்கள். இது நியாயமாகுமா? இறை வழிபாட்டில் இதுபோன்ற உயிர்ப்பலிகள் தேவைதானா?' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கேட்டார்.
ஆசாரங்களைப் பின்பற்றும் மனிதர்கள் அவரவர் வாழ்க்கை முறைப்படி சாதாரண மனிதர்களாக தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழ்ந்தனர். காடு, மலைகள், குக்கிராமங்கள், பாலைவனங்கள் போன்றவற்றில் வாழும் மனிதர்களோ அவரவர் தொழிலின் அடிப்படையில், `இறைவனுக்குப் பிடிக்கும்' என விலங்குகளைப் பலியாகக் கொடுத்தனர்.
நமக்குப் பிடித்தமானவர்கள் வீட்டுக்கு வரும் போது, அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்து விருந்து படைக்கிறோம் அல்லவா? அதுபோலவே இதுவும். அதேநேரம், தலைமுறை தலைமுறையாய் இருக்கும் சிலவற்றை மாற்ற வேண்டும் என்று ஒருதரப்பு சொல்வதும் நியாயம்தான்.
சரி, இன்றைய நிலை எப்படி?
ஒரு நெல்லை விதைத்தால் நூற்றுக்கணக்கான நெல்மணிகளைக் கொண்ட கதிர் வளரும். இன்றைக்கோ விளைநிலத்தைக் கூறுபோட்டு வீட்டு மனைகளாக விற்கின்றனர். மரத்தை வெட்டுபவனுக்கும் நிழல் தருபவை மரங்கள். இருப்பினும் இன்றளவும் நிறைய மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.
கால்நடைகளை வளர்ப்பதுவும் அவை நமக்கு ஈட்டித்தரும் பொருளுக்காகத்தான். கறவை குறைந்துவிட்டால் செல்லமாக வளர்த்த பசுவையும் அடிமாடாக விற்கும் நிலைமை.
அன்று நம் வீட்டைச் சுற்றி மரங்களும், நல்ல காற்றும், சுகமான நிழலும் கிடைத்தன. நிலம் செழிக்கவைக்கும் மழை, நல்ல ஆரோக்கியம், உள்ளத்தில் நிறைவு எல்லாம் இருந்தன. இன்றோ, சுத்தமான காற்றைச் சுவாசிக்க பூங்காவுக்குச் செல்லும் நிலை. அன்று இயற்கையை இறையாக மதித்தனர் மக்கள். இன்றைக்கு... `இயற்கையா, அப்படியென்றால் என்ன' என்று கேட்கும் நிலைமை! விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்றிவிட்டு, மாடித் தோட்டம் அமைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் சூழல்!
இந்த நிலைமையை மாற்ற என்ன செய்யலாம்?

தனி மனிதனாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி... எண்ணங்கள், செயல் பாடுகளில் உள்ள குறைகளைக் களைந்து, நல்ல கருத்துகளையும் நடைமுறைகளையும் உலகம் முழுமையும் எடுத்துரைக்க வேண்டும். பல்வேறு வழிகளிலும் இயற்கையைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதுபற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
`வாழு... வாழவிடு என்பதற்கு ஏற்ப, இயற்கையை வாழவைப்போம்; நாமும் அதனுடன் இணைந்து வளமாக வாழ்வோம்' என்றும் கண்ணை இமைகள் காப்பது போன்று நாம் இயற்கையைக் காக்கவேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
மார்ட்டின் லூதர் கிங்கிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
“நாளை மரணிக்கப் போகிறோம் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், உங்களுடைய கடைசி ஆசை என்னவாக இருக்கும்?''
இந்தக் கேள்விக்கு சட்டென்று அவர் சொன்ன பதில்:
“ஒரு மரம் நடுவேன்”
- மலரும்...
கனவிலும் நினைவிலும் அம்மா!
செளம்யா - ஸ்வாமினி கிருஷ்ணாம்ருத ப்ராணா. இவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் 1959-ம் ஆண்டு பிறந்தவர். இவர், அன்பு உலகை வெல்லும் என்பதில் அதிகமான நம்பிக்கை கொண்டவர். மட்டுமன்றி சிறு வயது முதல் `உலக வாழ்க்கை என்பது பொருளற்றது' என்பதை பல அனுபவங்கள் மூலம் அனுபவித்து உணர்ந்தவர். ஒரு நிலையில், தனக்குள் ஆன்மிக நாட்டம் அதிகமாவதை அறிந்தார். விரைவில் பாரதத்துக்கு வந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கணேஷ்புரி ஆசிரமத்தில் தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். இந்த ாலகட்டத்தில் அம்மாவைப் பற்றியும் தெரிந்துகொண்டார். அதுமுதல் அம்மாவை அடைந்து, அவருடைய ஆன்மிகப் பாதையில் ஐக்கியமாக சித்தம் கொண்டார்.
1982-ம் ஆண்டு வள்ளிக்காவு வந்தடைந்தார். அதன்பிறகு கனவிலும் நினைவிலும் சதா சர்வ காலமும் அம்மாவின் ஜபம்தான். இன்று அவருடைய ஆசிரமத் திருநாமம் `ஸ்வாமினி கிருஷ்ணாம்ருத ப்ராணா'.
இவர் எளிமையாகவும் நகைச்சுவை மிகுந்த வரிகளிலும் அம்மாவை வெவ்வேறு வடிவில் உருவகப்படுத்தி புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவற்றில் `அம்மாவைப் போல் அன்பு செலுத்தும் வேறொரு மனிதரைக் கண்டதில்லை. தொடக்கத்தில் அம்மாவைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. விரைவில், தம்மைப் புரிந்துகொள்ளும் ஞானத்தை அம்மா வழங்கினார். அவர் இறைவனிடம் ஒன்றிவிட்ட ஜீவன் முக்தை. தான் பெற்ற அந்த நிலையை பலரும் அடைய வேண்டும் என்பதே அம்மாவின் நோக்கமும், சங்கல்பமும். இதை நான் நன்கு உணர்ந்தேன். அது போதும்!' என்று பரவசப்படுகிறார்.