Published:Updated:

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

சாவித்திரி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
சாவித்திரி விரதம்

சாவித்திரி விரத மகிமைகள்!

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

சாவித்திரி விரத மகிமைகள்!

Published:Updated:
சாவித்திரி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
சாவித்திரி விரதம்

- நமசிவாயம்

சர்வமங்கல நாயகியாம் அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டு, ஆயுள் பங்கம் கொண்ட கணவன் சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் மகிமையைப் புராணங்கள் சிறப்பிக்கின்றன.

மகாபாரதத்திலும் தேவிபாகவதத்திலும் சாவித்திரியின் பெருமைகள் சொல்லப் படுகின்றன. மகாபாரதம்-வனபர்வத்தில், 299-ம் அத்தியாயத்தில் மார்க்கண்டேய உபதேசத்தில் சாவித்திரியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. இந்த சாவித்திரி உபாக்கியானத்தை யார் படிக்கிறார்களா, கேட்கிறார்களோ, அவர் களுக்கு எல்லாவித நலன்களும் கிடைக்கப் பெறும் என்பார்கள் ஆன்றோர்கள்.

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் அனுஷ்டிக்கப்படுகிறது சாவித்திரி நோன்பு. இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு என்றும் போற்றுவர். இந்த வருடம் 14.3.21 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவித்திரி விரத தினம் வருகிறது.

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

விரத பூஜை நியதிகள்

சாவித்திரி விரத புண்ணிய நாளில் ஒரு கலசத்தின் மீது தேங்காய் மாவிலை வைத்து, கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறைக் கட்டவேண்டும். அதையே அம்பிகையாக பாவித்து வழிபடவேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்தும் வழிபடலாம்.

இந்த வழிபாட்டில் காரடை சமர்ப்பணமும் நோன்புச் சரடு பிரார்த்தனையும் முக்கியத்துவம் பெறும். வனத்தில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்தபோது, சாவித்திரி அங்கு கிடைத்த கார் அரிசியையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணெய்யுடன் சேர்த்து, இறைவன் - இறைவிக்குச் சமர்ப்பித்து வழிபட்டாள் என்பதால், இந்நாளில் அதுவே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

அம்பிகை வழிபாட்டின்போது ‘உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

சத்தியவான் சாவித்திரி சரித்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மாங்கல்ய பலம் கிடைக்கும்; பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவர்; உடல் நலிந்திருக்கும் கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் மங்கல தேவியான அம்பிகையை வழிபட்டு சர்வமங்கலங்களும் பெற பிரார்த்திப்போம்.

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

சரடு கட்டிக்கொள்ளும் புனித நேரம்

இந்த வருடம் காரடையான் நோன்பு 14.3.21 (பங்குனி 1-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் பிற்பகல்

3:30 முதல் 4:30 மணிக்குள் பூஜை செய்து, சுமங்கலிப் பெண்கள் சரடு கட்டிக்கொள்ளலாம். இந்தப் புனித வேளையில் பழையத் தாலிச் சரடை மாற்றிக் கட்டிக்கொள்ளலாம். இதனால் சகல விருத்திகளும் ஏற்படும்.

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

கல்யாண வரமும் மாங்கல்ய பலமும் அருளும் ஆலயங்கள்!

லிங்க ராஜா ஆலயம்!

காலதேவனால் பறிக்கப்பட்ட கணவனின் இன்னுயிரைப் போராடி மீட்டவள் காரிகை சாவித்திரி. அவளின் பெரும் புகழை நிலைநிறுத்தும் ஆலயம் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள லிங்க ராஜா ஆலயம் ஆகும். சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் பயணித்து நேரடியாக புவனேஸ்வரை அடையலாம்.

பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட இக்கோயில், கலிங்கத்து ஆலயங்களுக்கு உன்னத உதாரணம்.

பிரமாண்ட மண்டபங்கள் - கோபுரங் களுடன் கூடிய ஆலயத்தின் கருவறை அமைந்துள்ள பகுதி ஶ்ரீமந்திர் எனப்படு கிறது. கருவறையில் சுமார் எட்டடி விட்டத் துடன் அமைந்த வட்ட வடிவ கருங்கல் ஆவுடையாருடன் திகழ்கிறார் ஸ்வாமி.

இதில் விசேஷம்... ஆவுடையாராக சிவனும், மையத்தில் சாளக்கிராமமாய் விஷ்ணுவும் இழைந்து ஒரே உருவாய்க் கருவறையில் காட்சி தருகின்றனர். இதை உறுதி செய்வதுபோல், ஆலயத்தில் வில்வம், துளசி இரண்டும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

இந்தக் கருவறை தெய்வம் கற்புக்கரசி சாவித்திரியின் பிரதிபலிப்பே என்றும் ஒரு நம்பிக்கை இங்கே நிலவுகிறது. வட்ட வடிவக் கல் அமைப்பு பெண்ணைக் குறிக்கும் அமைப்பாக விளங்குவதால் இந்த நம்பிக்கை. அதேபோல், இந்தக் கோயிலில் சாவித்திரிக்கும், யமதருமனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

சாவித்திரி விரத நாளில், பெண்கள் இங்கே குவிகிறார்கள். அன்னை சாவித்திரியை வழிபட்டு விட்டு, லிங்கராஜனையும் தொழுத பின்பு, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பரமேஸ்வர் கோயில் அருகில் அமைந்திருக்கும் பெரிய ஆலமரத்தைச் சுற்றி மங்கல மஞ்சள் கயிறு கட்டி தங்கள் தாம்பத்தியம் நிலைத்திருக்க வேண்டுகின்றனர்! தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்!

தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்!

காஞ்சியிலிருந்து கலவை போகும் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது சுமங்கலி திருத்தலம். மகா பெரியவாளின் அபிமான க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று.

இக்கோயில் அளவில் மிகச் சிறியது என்றாலும் கீர்த்தியில் பெரிது. கருவறையில், எட்டுப் பட்டைகளுடன் கூடிய லிங்கத் திருமேனியராக எழிற் கோலம் காட்டுகிறார் அருள்மிகு சத்தியநாதேஸ்வரர். பல்லவர்கள் எழுப்பிய கோயில்களில்தான் இதுபோன்ற லிங்கத் திருமேனியை தரிசிக்க முடியும். அடுத்து, தெற்கு நோக்கிய சிறிய கருவறையில் சுமங்கலி அம்மன் காட்சி தருகிறாள்.

சத்தியவானுக்கு அருள் புரிந்ததால் இங்குள்ள ஈசனுக்கு ஶ்ரீசத்தியநாதேஸ்வரர் என்று பெயர்; சாவித்திரிக்கு சுமங்கலி வரம் அருளியதால் இங்குள்ள அம்பிகைக்கு சுமங்கலியம்மன் என்ற பெயர் அமைந்தது.

சத்தியவான்- சாவித்திரி மட்டுமன்றி, காகபுஜண்டர், கண்ணுவ முனிவர், புலத்தியர் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஜீவசமாதியாக இந்தத் தலத்தில் எழுந்தருளியிருப்பதாக நம்பிக்கை.

இந்த சுமங்கலி திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும்; பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலியாய்த் திகழும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

மஞ்சள் கயிறு கட்டினால் கல்யாண வரம் கைகூடும்!

அம்பிகை பஞ்சாக்னியின் நடுவில் தவமிருக்கும் திருத்தலம் மாங்காடு. சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரவாயல் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ளது. மகாமேரு தரிசனம் இத்தலத்தின் சிறப்பம்சம்.

திருமணம் தடைப்படும் பெண்ணோ அல்லது ஆணோ இங்கு வந்து மஞ்சள் கயிறு வாங்கிக் கட்டிவிட்டு அம்பாளை வேண்டிக்கொண்டால், விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பெண்ணோ பிள்ளையோ வரமுடியாத நிலையில், பெற்றோரே அப்படிச் செய்து வேண்டிக் கொள்ளலாம். அதேபோல், திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதியர், இந்தக் கோயிலுக்கு வந்து தொட்டில் வாங்கி அம்பாள் திருவடியில் வைத்துப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டு கட்டிவிட்டுச் சென்றால், அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்யாண வரம் கிடைக்கும்... மாங்கல்ய பலம் கூடும்!

ஐந்து வெள்ளிக்கிழமைகள் விளக்கேற்றினால்...

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ளது திருமங்கலக்குடி. இத்தலத்து அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமங்களாம்பிகை; தலத்தின் பெயர் திருமங்கலக்குடி; தீர்த்தம் - மங்கல தீர்த்தம்; விமானம் - மங்கல விமானம்; தல விநாயகரும் ஶ்ரீமங்கல விநாயகர். ஆக பஞ்ச மங்கலங் களால் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்தத் தலம்.

இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததன் பொருட்டு அரச தண்டனைக்கு ஆளான அமைச்சர் ஒருவரின் உயிரைக் காத்தவர் ஆதலால் இத்தல ஈசனுக்கு ஶ்ரீபிராணநாதேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பிகை மாங்கல்ய பலம் அருளும் மங்கலாம்பிகையாய் அருள்கிறாள்.

ஜாதக தோஷங்களால் பிரச்னைகள் சூழும் வேளையிலும், உயிராபத்து ஏற்படும் காலத்திலும், கணவர் நோய்வாய்ப்பட்டு அவதியுறும் காலத்திலும்... இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட இங்கு வந்து அம்பாளை வேண்டிக்கொள்கிறார்கள் பெண்கள்.

தொடர்ந்து 5 வெள்ளிக் கிழமைகள் அன்னையின் சந்நிதியில் தீபமேற்றி அர்ச்சித்து வழிபடுகின்றனர். அவளின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடுகளை பிரசாதமாகப் பெற்று அணிந்து கொள்கின்றனர். அம்பிகையின் அருளால் பிரச்னைகள் தீர்ந்ததும் அம்பிகைக்குப் புடவை சாத்தி வழிபடுகின்றனர். அதேபோல், புதிதாக திருமண மாங்கல்யம் வாங்குபவர்கள், அதை அம்பிகையின் திருப் பாதங்களில் சமர்ப்பித்து வணங்குவதும் வழக்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism