Published:Updated:

பதவி யோகம் அருளும் பரமன்! - ஹர ஹர மகாதேவா!

சேய்ஞலூர்
பிரீமியம் ஸ்டோரி
சேய்ஞலூர்

சேய்ஞலூர் சிவ தரிசனம்

பதவி யோகம் அருளும் பரமன்! - ஹர ஹர மகாதேவா!

சேய்ஞலூர் சிவ தரிசனம்

Published:Updated:
சேய்ஞலூர்
பிரீமியம் ஸ்டோரி
சேய்ஞலூர்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலம் சேய்ஞலூர். திருஞானசம்பந்தர் பாடிய தலம் இது. சேய் ஆகிய முருகப் பெருமான், சிவபெருமானை வழிபட்ட நல்ல ஊர் என்பதால்... சேய்+நல்+ஊர் என்பது சேய்ஞலூர் என்றானது. தற்போது, சேங்கனூர் என்றழைக்கப்படுகிறது.

இந்த ஊரில் எச்சதத்தன் - பவித்ரை தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் விசார சர்மர். ஐந்து வயது நிரம்பியபோதே முற்பிறவிப் பயனால் சந்த மறை மற்றும் ஆகமங்களை உணர்ந்து பக்தியில் ஊறித் திளைத்தான் விசார சர்மர்.

சேய்ஞலூர்
சேய்ஞலூர்
பதவி தரும் பரமன்
பதவி தரும் பரமன்

ஒரு நாள்! மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் பசு மாடுகளை அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு மனம் வருந்தி னான் விசார சர்மர். ஊர் மக்களிடம் இருக்கும் அனைத்து பசுக்களையும் மேய்க்கும் வேலையைத் தாமே செய்யத் தொடங்கினான்.

பசுக்கள் தினமும் நன்கு புல் மேய்ந்து, மடி பெருகி நிறைய பால் அளிக்கத் தொடங்கின. ஊரில் அனைவரும் மகிழ்ந் தனர். குழந்தைக்குரிய மனப் பக்குவம் மாறாத விசார சர்மர், சிவபக்தியினால் மண்ணியாற்று மணலில் சிவலிங்கம் அமைத்து, தாமே பொழிந்து பெருகும் பசுக்களது பாலைக் கொண்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டான்.

ஊரில் சிலர், ‘பசும்பாலைக் கறந்து மணலில் கொட்டி வீணாக்கு கிறான் இந்தச் சிறுவன்’ என்று அவன் தந்தையிடம் புகார் செய்தனர். இதைக் கேட்டு எச்சதத்தன் கோபமுற்றார். மறுநாள், அங்குள்ள ‘குரா’ மரத்தில் ஏறி ஒளிந்திருந்து மகன் பூஜை செய்யும் முறையைக் கண்டார்.

கோபத்துடன் மரத்திலிருந்து இறங்கி... திருமஞ்சனத்துக்காக விசார சர்மர் வைத்திருந்த பால் குடத்தை காலால் எட்டி உதைத்தார். தன்னை மறந்த நிலையில் பூஜையில் ஈடுபட்டிருந்த விசார சர்மர், சிவபூஜைக்குத் தடை ஏற்படுத்துவது யார் என்றுகூட பார்க்காமல், அங்கிருந்த ஒரு கோலை எடுத்து எச்சதத்தனது காலில் வீசினான். அது, இறையருளால் ‘மழு’வாக மாறி எச்சதத்தனின் கால்களை வெட்டி, அவரை கீழே விழும்படி செய்தது. விசார சர்மரோ சற்றும் பதற்றமடையாமல் தமது வழிபாட்டைத் தொடர்ந்தான்.

சேய்ஞலூர் சிவ தரிசனம்
சேய்ஞலூர் சிவ தரிசனம்


இந்த நிலையில், விசாரசர்மருக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், ‘`நம் பொருட்டால், ஈன்ற தாதை (தந்தை) விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம்!’’ என்று அருளி, கருணையுடன் அவனைத் தழுவி, உச்சி மோந்து மகிழ்ந்தார். இறைவனின் திருக்கரங்கள் தீண்டியதும், விசாரசர்மரின் மாயாமலங்கள் நீங்கி சிவ மயமான ஒளிவடிவம் பெற்றார். அவரைத் தன் தொண்டர்களுக்கெல்லாம் தலைவன் ஆக்கினார் சிவனார்.

அத்துடன், ‘`எமக்கு நிவேதனம் செய்த பொருட்களும், யாம் உடுத்திய ஆடைகளும், சூடிய மாலைகள் முதலானவையும் இனி உனக்கே உரிமை உடையன. உனக்குச் ‘சண்டீசம்’ எனும் பதம் தந்தோம்’’ என்றும் அருள் புரிந்தார். அதற்கு அடையாளமாகத் தன் சடை முடியினின்று கொன்றை மாலையை எடுத்து, விசாரசர்மருக்குச் சூட்டினார். சண்டீசப் பதம் என்பது தெய்வீகத் தன்மையுடைய ஒரு பதவி.

இங்ஙனம் சண்டிகேஸ்வரருக்குப் பதவி கிடைத்த தலம் ஆதலால், இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை, `பதவி தரும் பரமன்’ என்றே போற்றுகிறார்கள் பக்தர்கள். இவரை வழிபட்டால் பதவி யோகம் அருள்வார் என்பது நம்பிக்கை. இறைவனின் திருப்பெயர் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர்; அம்பிகை - அருள்மிகு சகிதேவி.

சேய்ஞலூர் கணபதி
சேய்ஞலூர் கணபதி
சேய்ஞலூர் அம்பிகை
சேய்ஞலூர் அம்பிகை
சேய்ஞலூர் சகி அம்பிகை
சேய்ஞலூர் சகி அம்பிகை
முருகன்
முருகன்
குரு
குரு


சேயோனாகிய முருகன் வழிபட்ட தலம் இது என்று பார்த்தோம் அல்லவா? அவர் இங்கு சிவவழிபாடு செய்ய காரணம் என்ன?

தந்தைக்கு முருகப்பெருமான் பிரணவ உபதேசம் செய்த திருக்கதையை அறிவீர்கள் அல்லவா. அந்த நிலையில் பரமனுக்கே குருவாக இருக்கும் நிலை முருகப்பெருமானுக்கு. அதனால் உண்டான சிவ அபவாத தோஷத்தைப் போக்கிக் கொள்ள, முருகன் இந்த ஊரில் தங்கியிருந்து பூஜை செய்தாராம். அவர் அமைத்த தீர்த்தம் குமார தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அவர் நீராடிய நதியை சுப்ரமணியா நதி எனப் போற்றுகின்றன பண்டைய புராணங்கள். தற்போதும் உள்ள மண்ணியாறுதான் அந்த நதி என்கிறார்கள்.

இவ்வாறு இங்கு சிவபூஜை செய்த முருகப்பெருமானுக்கு ஒரு தைப் பூச தினத்தன்று சிவபெருமான் காட்சி கொடுத்தார். மைந்தனின் தோஷத் தையும் போக்கி அருளினார் என்கின்றன புராணங்கள். மட்டுமன்றி முருகப்பெருமான் சூரனை சம்ஹரிக்க தென்னகம் நோக்கி வந்தபோது, சேனைகளுடன் அவர் தங்கியிருந்ததும் சிவனாரிடம் இருந்து ருத்ர பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதும் இந்தத் தலத்தில்தானாம்.

இந்த இடத்தில் முருகப்பெருமானுக்காக தேவ தச்சன் ஒரு நகரை நிர்மாணித்துத் தந்தாராம். அது குமாரபுரி என வழங்கப்பட்டது என்ற தகவலும் உண்டு. இங்கே தனிச் சந்நிதியில் அழகு மிளிர அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். அருணகிரியார் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.

ஒருமுறை ஆதிசேஷனும் வாயு பகவானும் `தங்களில் பெரியவர் யார்’ என்று பலப் பரீட்சையில் இறங்கினர். மேரு மலையைச் சுற்றிவளைத்து இறுக்கிக் கொண்டார் ஆதிசேஷன். அவர் பிடியிலிருந்த மலையைத் தன் பலத்தால் அசைக்க முயன்றார் வாயு பகவான்.

அப்போது அந்த மலையின் அங்கமான கந்தமாதன பர்வதத்தின் சிகரங்கள் சில பெயர்ந்து சிதறின. அவை ஏழு இடங்களில் விழுந்தனவாம். அவற்றுள் சத்தியம் எனும் சிகரம் விழுந்து நிலைப் பெற்ற இடம் சேய்ஞலூர். பிற்காலத்தில் அது சத்திய கிரி என்று பெயர்பெற்றது. இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனும் சத்தியகிரீஸ்வரர் எனும் திருப்பெயரை ஏற்றார்.

பரமனே இங்கு தம் திருக்கரத்தால் உருவாக்கிய தீர்த்தம் இந்தத் தலத்தின் சிறப்பு. சத்திய தீர்த்தம் எனப்படுகிறது. இன்றைக்கும் ரிஷிகள் பலரும் இங்கே மரங்களாகவும் விலங்குகளின் வடிவிலும் உறைந்திருந்து பரமனைப் பூஜிப்பதாக நம்பிக்கை.

இங்குள்ள ஆலயம், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகும். காலத்தால் சிதைவுபடத் தொடங்கிய நிலையில் புனர்நிர்மாணம் செய்தார்களாம். கட்டுமலை போன்ற அமைப்பில் திகழ்கிறது கருவறை. உள்ளே சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்கிறார் சத்தியகிரீஸ்வரர்.

முருகப்பெருமானின் தோஷம் நீங்கிடவும், விசாரசர்மருக்குப் பெரும் பதவி வாய்க்கவும் அருள் பாலித்தவர் ஆயிற்றே. ஆகவே, இவரை தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்; பதவி யோகம் வாய்க்கும் என்கிறார்கள்.

ஸ்வாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் வடக்கு நோக்கி அருள்கிறாள் அம்பிகை சகிதேவி. தம்மை வழிபடும் அன்பர்களுக்குக் கருணையோடு வரங்களை வாரி வழங்கும் கற்பகமாய் அருள்கிறாள் இந்த அன்னை.

இந்தத் தலத்துக்கு வந்து புண்ணிய நீராடி வழிபடும் அடியவர்களுக்கு, குரு தோஷத்தை நீக்கி தர்மார்த்த காம மோக்ஷத்தை வழங்குகிறாராம் இறைவன். அவருக்குச் சகியாய் உடன் நின்று அம்மையும் அருள் கிறாள். அம்மையும் அப்பனும் இங்ஙனம் அனுக்கிரகம் செய்வது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்.

இந்தத் தலத்தின் மகிமையைச் சொல்லும் வேறொரு அருள் சம்பவமும் உண்டு.

சிபிச் சக்ரவர்த்தி அரசாண்ட காலம் அது. ஒருமுறை சிபிச் சக்ரவர்த்தி, தம்முடைய கிரக தோஷத்தைப் போக்கிக்கொள்ள 360 வீடுகளைக் கட்டி, பசுக்களுடன் பூதானம் செய்தாராம். அப்போது, தானம் பெறுவோரில் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தார். அதனால் மன்னன் மனம் கலங்கி இறைவனை வேண்டினார்.

இந்தச் சூழலில், சேய்ஞலூரின் இறைவனும் இறைவியுமே அந்தணத் தம்பதியாக வந்து மாமன்னரின் தானத்தை ஏற்று அவரின் மனக்குறையைத் தீர்த்து அருள்பாலித்தார்களாம். இன்றைக்கும் அந்த வீடு `சுவாமி வீடு’ என்ற பெயரில் திகழ்கிறது. அங்கே அம்மையும் அப்பனும் முறையே சிவலோகநாயகி - கயிலாயநாதர் எனும் திருப்பெயர்களில் குடிக்கொண்டுள்ளதாகப் போற்றுகின்றனர்.

நாரத மகரிஷி மூலம் இத்தலத்தின் மேன்மையை அறிந்த அரிச் சந்திர மகாராஜாவும் இந்தத் தலத்துக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டு, தைப்பூச தீர்த்தோத்சவம் நடத்திவைத்தார் என்கின்றன ஞானநூல்கள்.

அற்புதமான இந்தத் தலத்துக்கு நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று வாருங்கள். சகிதேவியின் திருவருளால் சகல கவலைகளும் தீரும்; ஐயன் சத்தியகிரீஸ்வரரின் பேரருள் உங்களுக்கு அரணாகும்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், திருப்பனந்தாள் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சேங்கனூர் ஆலயம் உள்ளது.

சண்டிகேஸ்வரர் தரிசனம் அறிய வேண்டிய தகவல்கள்!

எல்லா சிவாலயங்களிலும் சண்டேசருக்கென தனிச் சந்நிதி இருக்கும். இது, வடக்குப் பிராகாரத் தில்... மூலவர் கருவறைக்கு வெளிப்புறம் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.

சிவாலய மூர்த்திகளில்... தட்சிணாமூர்த்தி, நடராஜர் மற்றும் சண்டேசர் ஆகியோர் தெற்கு நோக்கி வீற்றிருப்பார்கள். சண்டேசர் எப்போதும் தியானத்தில் இருப்பார்.

சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய சிவ நிர்மால்ய (சிவ பெருமானுக்கு அணிவித்த) பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து, ‘சிவதரிசனப் பலனைத் தர வேண்டும்’ என்று அவரைப் பிரார்த் தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமய நூல்களின் விதி.

இதை அறியாத பலர், தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசர் சந்நிதியில் எடுத்துப் போடுகின்றனர். இது பெரும் தவறு.

சண்டேசர், இடையறாத தியானத்தில் இருப்பவர். அவரிடம் நமது வருகையையும் பிரார்த் தனையையும் தெரிவிக்கும் வகையில் அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல் சண்டேசரை, ‘செவிட்டுச் சாமி’ என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும், சொடுக்கவும் செய்தால்தான் அவரது அருள் கிடைக்கும் என்றும் கூறுவது தவறு!

சண்டேசர் சந்நிதியை முழுமையாக வலம் வரக் கூடாது. சந்நிதிக்கு வலமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்து விட்டு, வந்த வழியே (அரை வட்டமாக) திரும்ப வேண்டும்.

பக்தர்களுக்கு அனுமதியளித்து, அவர்களை கோயிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர். அது போல், சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உரியது.

கோயிலில் முதலில் விநாயகரையும் நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால் தான் சிவ வழிபாடு முழுமை பெறும்.

ஆலயத்தின் சிறப்புகள்

சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு தரும் திருத்தலம் இது. இங்கே திருமுடி, பிறை, ஜடாமண்டலம், குண்டலம், கங்கை ஆகியவற்றை தரித்தவராக, அர்த்தநாரீஸ்வர் போன்ற முகமண்டலத்துடன் சண்டீசர் காட்சி தருகிறார். வேறெங்கும் காண்பதற்கரிய திருக்கோலம் இது.

உத்திர நட்சத்திர தினங்களில் இந்தத் தலத்தில் அருளும் சண்டிகேஸ்வரரை அர்ச்சித்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சண்டீசர் சித்தி அடைந்த தலம் (தை - உத்திரம்) ‘திருவாப்பாடி’ என்ற பெயருடன் இத்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பைரவர் திருமேனியும் விசேஷ அம்சத்துடன் திகழ்கிறது. அவரின் மேனியில் தட்டினால் வெண்கலச் சத்தம் எழுமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism