மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 8

வள்ளி கல்யாண சுந்தரர்
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளி கல்யாண சுந்தரர்

‘வள்ளி கல்யாண சுந்தரர்’

ந்தவேள் ஆற்றுப்படுத்திய வகையில், சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினரால், 12 - 6 -1994 அன்று ‘வள்ளி மணவாளப் பெருமான்’ எனும் ‘வள்ளி கல்யாண சுந்தரர்’ பஞ்சலோக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. தேசிய விருதுபெற்ற சிற்பக்கலைச் செல்வர் சுவாமிமலை எஸ். தேவசேனாபதி ஸ்தபதியார் இந்தப் பஞ்சலோகப் படிமத்தை உருவாக்கினார்.

இவ்வடிவத்துக்கும் சிறுவாபுரி மூலஸ்தான விக்கிரகத்துக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. இங்குள்ள மூலவர், பின் இரு கரங்களில் கமண்டலம், ஜபமாலை கொண்டுள்ள பிரமசாஸ்தா வடிவம். அதே அமைப்பில் வலதுபுறம் வள்ளி சேர்ந்தால், அந்தக் கோலத்தை `வள்ளிகல்யாண சுந்தரர்' என்று சிற்ப நூல் குறிப்பிடும். எனவே, சிறுவாபுரி மூலவரைப் போன்றே இந்த உற்சவரும் கமண்டலம் ஜப மாலையுடன் காட்சியளிப்பது, ஓர் அற்புதமான ஒற்றுமை. உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதப் படைப்பு இது!

எஸ்.தேவசேனாபதி ஸ்தபதி
எஸ்.தேவசேனாபதி ஸ்தபதி

வள்ளிநாயகியை முருகப்பெருமான் கைத் தலம் பற்றிய பாணிக்கிரகண கோலத்தில், உலக உயிர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் அற்புதமான திருமணக்கோலம் இது. வள்ளியின் வலக்கரத்தைப் பற்றியிருக்கும் மாப்பிள்ளை முருகன் மிடுக்காகக் காட்சியளிக்க, நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் தலையைச் சற்று சாய்த்து எழிலுடன் நிற்கிறாள் வள்ளி. இடது பாதம் ஊன்றி, வலது பாதம் எடுத்து நடந்து வரும் அழகு, அப்பப்பா... பார்த்துக்கொண்டேயிருக்கலாம்!

நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ‘ வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதற்கு நிதர்சனமான பொருளை - அர்த்தத்தைச் சிறுவாபுரியில் மட்டுமே காணமுடியும். வீட்டைக் கட்டவும் திருமணம் செய்துகொள்ளவும் சிறுவாபுரி முருகன் தயவை நாடி, பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தினமும் வரிசையில் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்தர்களுக்கு, இவ்வுலகில் வாழச் சொந்தவீடும் திருமணப் பேறும் அருளும் சிறுவாபுரி முருகனின் கருணை அளவிடற்கரியது.

வண்ணச்சரபம் மகான் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள் எனும் அருளாளரின் பெயரர் தவத்திரு முருகதாச சுவாமிகளிடம், சிறுவாபுரிக்கு ஒரு பதிகம் பாடிக் கொடுக்குமாறு (1985-ல்) வேண்டினேன்.

‘ஒரு பதிகம் என்ன தம்பி... ஆயிரம் பதிகம் பாடலாம். ஆனால் யார் எழுதுவது’ என்று ஒரு கேள்விகேட்டார் பாருங்கள்... நான் அசந்தே போய்விட்டேன்!

அவர் அருளிச்செய்த சிறுவை நகர் குகன் பதிகத்தில் ஒரு பாடலில்... ‘திருத்தலங்கள் பலவும் அன்பர் சென்று வணங்கிடல்போல் சீரடியார் திரண்டுவரும் சிறுவைநகர்க் குகனே’ என்பது அவரது அருள்வாக்கு. அதை மெய்ப்பிக்கிறது, இன்று சிறுவாபுரியில் அளவுக்கு அதிகமான அலைமோதும் கூட்டம்!

கண்டுகொண்டேன் கந்தனை - 8

சில ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் சிறுவாபுரி கோயிலில் ஒருவரைச் சந்தித்து, ``எத்தனை ஆண்டுகளாக இத்திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வருகிறீர்கள்'' என்று கேட்டேன்.

அதற்கு அவர், “மூன்று ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறேன். ஏற்கெனவே, இரண்டு வீடுகள் கட்டிவிட்டேன். மூன்றாவது வீடு வேண்டி முருகனிடம் வருகிறேன்” என்றார்.

மனிதனின் ஆசைக்கு அளவில்லை. ஆனாலும் கந்தப் பெருமான், ‘அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்தருள் பெருமாள்’ என்ற அருணகிரியாரின் சத்யவாக்குப்படி அருளும் இறைவன் அல்லவா! (ஆனால், நானோ என் மனைவியோ சிறுவாபுரி முருகனிடம் சொந்தவீடு வேண்டிப் பிரார்த்தனை செய்துகொண்டதில்லை; சென்னையிலோ அல்லது சொந்த ஊரிலோ வீடு கட்டிக்கொள்ளவும் இல்லை).

இன்று சிறுவாபுரியில் நாம் காணும் காட்சி இதுதான். பிரார்த்தனையுடன் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களில் பலரிடம், வள்ளி மணவாளப் பெருமானுக்கு அபிஷேக அலங்காரம் செய்து இன்புற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. ஏதோ அவசரகதியில் ஆறு வாரம், ஏழு வாரம் (இது என்ன கணக்கு என்று புரியவில்லை) வந்து தரிசனம் செய்வதோடு சரி. இதற்குச் சில வழிகாட்டிகளும் உள்ளனர். ஆலயம் சார்ந்த பெருமக்களும் அபிஷேக வழிபாட்டில் ஆர்வம்

காட்டுவதில்லை. அதனால், பெரும்பாலான கோயில் களில் உற்சவ மூர்த்திகள் ஆண்டுக்கு ஒருமுறை அபிஷேகம் காண்பதே அரிதாகிவிட்டது!

பஞ்சலோக விக்கிரகங்களுக்குப் பழச்சாறு (புளிப்புச் சத்து) சேர்க்கவில்லையென்றால், நாளடைவில் அவ்வடிவமே பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும். ஏனெனில், அவை பல உலோகங்களை ஒன்றாகச் சேர்த்து உருக்கி வார்க்கப்பட்டவை. முன்புறம் முகம் மட்டும் பளிச்சென்றிருக்கும். பின்புறமோ பாசி - களிம்பு ஏறிப் பார்ப்பதற்கே வேதனையாக இருக்கும். இதற்கெல்லாம் அர்ச்சகரோடு சேவார்த்திகளின் ஆர்வமும் ஈடுபாடும் இல்லாததே காரணம் என்பதுதான் உண்மை.

சிறுவாபுரி முருகனோடு 40 ஆண்டுகளாகத் தொடரும் உறவில், எத்தனை எத்தனையோ அனுபவங்கள்; சிந்தையில் குடிகொண்ட சிறுவை முருகனின் அருளாடல்கள்! வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமானாக அனைவருக்கும் திருவருள் பாலிக்கும் அவனின் அருள்திறத்தை அளவிடவா இயலும்!

சோமநாத மடம்!

ருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய திருப்புகழ்ப் பாடல்கள் பதினாறாயிரம் என்பர். ஆனால் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை (சேலம் குஹானந்தா திருப்புகழ்ச் சபை பதிப்பின்படி) 1,331 பாடல்களே. இதில் 206 தலப் பாடல்கள், 24 வைப்புத்தலங்கள் மற்றும் பொதுத் திருப்புகழ்ப் பாடல்கள் ஆகியவை அடங்கும்.

அருணகிரியார் தாம் பாடியுள்ள திருப்புகழ்ப் பாடல்களில், மூன்றுபேரைக் குறிப்பிட்டுப் போற்றுகிறார்.

ஒருவர் பழநிக்கு அருகில் வாழ்ந்த ‘வீரைவரு கலிசைச் சேவகன்’ எனும் ‘காவேரிச் சேவகன்’. இரண்டாமவர் ‘சோமநாதன்’. மூன்றாமவர் திருவண்ணாமலைப் பகுதியில் அரசாண்ட பிரபுடதேவராயன். இந்த மூவருமே அருணகிரி நாதரின் சமகாலத்தவர் ஆவர்.

இவர்களில் சோமநாதன் என்பவர், ஒரு மடாதிபதி. மடம் அமைத்து அதில் முருகப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தவர். அவருடைய சிவ வழிபாட்டின் செம்மை யையும் தவத் தூய்மையையும் அருணகிரியார் (‘ஒருவழிபடாது’ எனத் தொடங்கும் ஒரு திருப்புகழில்) சிறப்பாகப் போற்றியுள்ளார்.

இந்தச் சோமநாதர், அண்ணாமலையாரைத் தம் ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அமணர் குலத்தைக் கண்டித்தவர்; அரிய தவராஜ ராஜராக விளங்கியவர். அக்காலத்தில் பெரும்புகழ்பெற்றவர். இவ்வாறு அரிய அறிவாளராக விளங்கிய சோமநாதர், தமக்குரிய மடத்தில் முருகவேளை வழிபட்ட சிறப்பினை அருணகிரியார் வியந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ்ப் பாடல்கள்... பல தலங்களுக்கு உரியவை, பொதுப் பாடல்கள் என்று இரண்டு வகைகளில் அடங்கும். ஆனால், அவர் ஒரு மடத்தில் விளங்கும் முருகவேளைப் பாடியது என்பது, சோமநாதன் மடம் மற்றும் பெரிய மடத்தில் அருளும் இறைவனை மட்டுமே. சோமநாதன் மடம், திருப்புகழ் வரலாற்றுச் சிறப்புடையது மட்டுமல்ல; கந்தப்பெருமானின் பெருங்கருணையைக் காட்டும் அற்புதமான மகுடவரிகளைக் கொண்டதும் ஆகும்.

ஒருவரிடம் நாம் பொருள் வேண்டியோ அல்லது உதவி வேண்டியோ ஒருமுறை செல்லலாம்; இரண்டுமுறை செல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைவார்; கோபப்படுவார். இது இயற்கை. ஆனால், நாம் நம் குறைகளை ஒருவரிடம் கோடி முறை சென்று சொன்னாலும் அவர் கோபமடையாமல் வேண்டியதைக் கொடுப்பாராம். யார் அவர் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

அவர்தான் கருணைக்கடல் கந்தப்பெருமான்!

`மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும்

வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே' - என்ற அருமையான வரிகளைத் தமது ஒவ்வொரு சொற்பொழிவிலும் சொல்லி இன்புறுவார் வான் கலந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

சோமநாதன் மடம் என்று அருணகிரிநாதர் போற்றும் திருப்புகழ்த் தலத்துக்குரிய பாடலில்தான், மேற்கண்ட அற்புதமான ஆறுமுகப் பரமனின் அருட்பெருமையைக்காட்டும் மகுடவரி உள்ளது.

சோமநாதர் மடத்தின் இருப்பிடம் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காததால், ‘அருணகிரி நாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த்தலப் பயணம்’ முதல் இரண்டு பதிப்புகளில், அதனைப் பற்றி பதிவு செய்ய இயலவில்லை. மூன்றாவது பதிப்பு அச்சிடத் தொடங்கியபோது சோமநாதன் மடம் பற்றிய ஆய்வைத் தீவிரமாக மேற்கொண்டேன்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – முள்ளண்டிரம் வழியில் உள்ள 12 புத்தூர் கிராமத்தில் அந்த மடம் இருந்ததாகத் தெரியவந்தது. ஆற்காடு – ஆரணி வழியில் தாமரைப் பாக்கத்திலிருந்து 5 கி.மீ; ஆரணியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரை, கண்டமங்கலம் - முள்ளண்டிரம் வழியாகவும் அடையலாம்.

வருவாய்த்துறை பிரிவின்படி இவ்வூர் `12 புத்தூர்' என்றழைக்கப்படுகிறது. வேலூரில் வசிக்கும் திருக்குராவடித் தொண்டர் திரு ஆர். சுப்ரமண்யன் அவர்களை இந்த ஊருக்குச் அனுப்பி, முதல் தகவல் சேகரித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அவ்வூருக்குச் சென்றபோது, அங்குள்ள ஸ்ரீவித்யபதீஸ்வரர் சிவாலயம் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருக்க, திருப்பணி யைத் தொடங்கியிருந்தார்கள். அங்கு லிங்கத் திருமேனியும் நந்தியும் மட்டுமே இருந்தன. முழுவதும் கருங்கல்லால் ஆன திருக்கோயில். மற்றபடி தகவல்கள் எதுவும் சரியாகக் கிடைக்க வில்லை; சோமநாதன் மடத்தின் இருப்பிடம் தெரியவரவில்லை.

இவ்வூருக்கு அருகில் உள்ள முள்ளண்டிரம் என்ற ஊரில் அருணகிரிநாதர் அவதரித்தார் என்ற தகவல் ஒன்றுண்டு. வடமொழி வல்லுநர்களான `டிண்டிமக் கவிகள்' பலர் வாழ்ந்த ஊர் இது. கல்வெட்டு அறிஞர் டி.ஏ.கோபிநாத் அவர்கள் `விபாஹபத்ர மாலிகா' என்னும் சுவடியைக் குறிப்பிட்டு, அதில் வரும் அருணகிரிநாதர் எனும் டிண்டிமக் கவி, திருப்புகழையும் பாடியிருக்கலாம் என்று ஊகித்து எழுதியுள்ளார்!

- காண்போம்...

அலங்கார நாயகி!

ர்வேஸ்வரனின் திருவடியைக் காண மகாவிஷ்ணு பூமியைத் தோண்டிச் சென்று தோல்வியோடு மீண்டும் வெளிவந்த தலம் அரித்துவார மங்கலம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 8

இந்தத் திருத்தலத்தை,‘திரு அரதைப் பெரும்பாழி’ என்று கொண்டாடினர் நாயன்மார்கள். கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது அரித்துவாரமங்கலம். இந்த ஊரில் உள்ள பாதாளேஸ்வரர் கோயிலில் அருளும் அம்பிகை, திருமணம் முடித்த புதுப்பெண்ணைப் போல் பேரழகோடும் சர்வ அலங்காரத்தோடும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அன்னை, அலங்கார அம்மை அல்லது அலங்கார நாயகி' என்றே அழைக்கப்படுகிறாள்.

திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இந்த அம்மையிடம் வேண்டிக் கொண்டால், வெகு விரைவில் கல்யாண அலங்காரத்துக்குத் தயாராகிவிடுவார்கள்; அவர்களுக்கு , மனதுக்கினிய வாழ்க்கைத் துணை அமையும் என்பது நம்பிக்கை.

- ஆர்.சுப்பு, நெல்லை-2