திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 17

ஸ்ரீமுருகப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமுருகப் பெருமான்

திருப்புகழ்ப் பாடல்பெற்ற தலங்களில் ‘அத்திப் பட்டு’ என்ற பெயரில் அமைந்த ஊர் இந்த வகையில் அடங்கும்.

மிழகத்தில் ஒரே பெயரில் அமைந்த ஊர்கள் பல உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களை நிர்ணயம் செய்வதற்கு, சேக்கிழாரின் பெரியபுராணம் பெரிதும் உதவியாக அமைந்தது. தேவார மூவர் தரிசித்துப் பாடிப் பரவிய தல வரிசை அமைப்பில் - அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வரலாற்றில் சேக்கிழார் விரிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால், அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ள தலங்களின் இருப்பிடத்தை உறுதிசெய்வதற்குப் பெரியபுராணம் போல ஒரு வழிகாட்டி நூல் அமையவில்லை. திருப்புகழில் பாடல்பெற்ற தலங்களின் பெயரில் பல ஊர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

ஒரு தலத்தின் வரலாறு, புராணச் செய்திகள், இலக்கியச் சான்று, உற்சவ விவரம், இருப்பிட வர்ணனை என்று ஏதாவது ஒன்று அந்தப் பாடலில் இருந்தால் மட்டுமே, அந்தத் தலத்தின் இருப்பிடத்தை உறுதிசெய்ய இயலும். மேலும், அந்த ஊரில் சிவாலயமோ அல்லது தனி முருகன் ஆலயமோ இல்லையெனில் ‘அது பாடல் பெற்ற தலம்தானா’ என்பதை நிச்சயமாகக் கூற இயலாது. அப்படியே திருக்கோயில் அமைந்திருந்தாலும் அக்கோயில் எப்போது கட்டப்பெற்றது, யார் யார் திருப்பணி செய்துள்ளார்கள் போன்ற பல விஷயங்களை ஆதாரமாகக்கொண்டுதான் அந்தத் தலத்தைப் பாடல்பெற்றதாக நிர்ணயம் செய்ய இயலும். மேற்கண்ட எந்தக் குறிப்பும் இல்லாமல் தலப்பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் இருப்பிடத்தை உறுதிசெய்வது மிகக் கடினம்.

திருப்புகழ்ப் பாடல்பெற்ற தலங்களில் ‘அத்திப் பட்டு’ என்ற பெயரில் அமைந்த ஊர் இந்த வகையில் அடங்கும். இதில் எந்த அத்திப்பட்டு அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல் பெற்றது என்ற கேள்வியை எழுப்பினால், அவரவர் தமக்குத் தெரிந்த ‘அத்திப்பட்டு’ ஊரைப் பற்றி குறிப்பிடுவார்களே தவிர, வேறு தகவல் எதுவும் கிடைக்காது.

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீமுருகப் பெருமான்

திருப்புகழ் உரையாசிரியர் டாக்டர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை, `புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வக்கோட்டை யிலிருந்து ஏழு மைல் தொலைவிலும், தென் ஆற்காடு ஜில்லாவில் திருவெண்ணெய்நல்லூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சப் டிஸ்ட்ரிக்ட்டுகளிலும், வட ஆற்காடு ஜில்லா சைதாப்பேட்டை சப்டிஸ்ட்ரிக்டிலும், அத்திப்பட்டு எனப் பெயரில் கிராமங்கள் உள்ளன' என்று எழுதி யுள்ளார். ஆனால், புதுக்கோட்டை அருகில் விசாரித்ததில், அப்பெயரில் ஊர் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் உள்ள `கிராமங்கள் அட்ட வணை'யின் துணைகொண்டு நாம் ஆய்வு செய்த வகையில், பல்வேறு மாவட்டங்களில் ‘அத்திப்பட்டு’ பெயரில் 15 ஊர்கள் உள்ளன. அவை அரக்கோணம், செங்கம், சிதம்பரம், கடலூர், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், பொன்னேரி, சைதாப்பேட்டை, திருத்தணி, திருமங்கலம், சேலம் முதலான தாலுகாக்களில் உள்ளன.

இதில் எந்தத் தாலுகாவில் உள்ளது, நாம் தேடும் அத்திப்பட்டு?

தபால்துறை வெளியிட்டுள்ள கிளை அஞ்சல் நிலைய முகவரிகள்கொண்ட புத்தகத்தின் உதவி கொண்டு மேற்கண்ட அனைத்து ‘அத்திப்பட்டு’ கிராமங்களின் தபால் நிலைய அலுவலருக்கு ‘ரிப்ளை கார்டு’ எழுதினேன்.

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீமுருகப் பெருமான்

“தங்கள் ஊரில் ஏதாவது சிவன் கோயில் அல்லது முருகன் கோயில் உள்ளதா? அதன் விவரம் தங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து பதில் எழுதுங்கள் அல்லது விவரம் தெரிந்த நபரிடம் இக்கடிதத்தைக் கொடுத்துப் பதில் எழுத உதவுங்கள். மிக்க நன்றி” என்பதே அக்கடிதத்தின் வாசகம்.

இந்த முயற்சிக்கு ஒரு சில ‘அத்திப்பட்டு’ கிராம தபால் அலுவலர்களிடமிருந்து பதில் வந்தது. `எங்களூரில் தாங்கள் குறிப்பிடும் எந்தக் கோயி லும் இல்லை. கிராம தேவதை கோயில் மட்டுமே உள்ளது' என்ற பதில்தான் கிடைத்தது.

கந்தவேள் கருணை வைத்தால் எந்த வேலையும் எளிதில் முடியும் அல்லவா?

முருகன் செய்த அந்தத் திருவிளையாடலை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

தொடர்ந்து சிதம்பரம், கடலூர், உளுந்தூர் பேட்டை ஆகிய வட்டங்களில் உள்ள அத்திப்பட்டு பெயருடைய நான்கு கிராமங்களிலிருந்து தபால் நிலைய அதிகாரிகள் பதில் எழுதியிருந்தார்கள். அதிலிருந்த வரிகள்தான் நமது ஆய்வுக்கு ஆதாரச் சுருதி; சிந்தனைக்கு விருந்து; இத்தலம் குறித்தத் தேடலுக்கு முற்றுப்புள்ளி.

`நீங்கள் தேடும் அத்திப்பட்டு இந்த ஊர் அல்ல. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் முருகன் கோயில் நீங்கள் தேடும் ஊராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த இடத்தின் பழைய பெயர் ‘அத்திப்பட்டு’ ஆகும்' என்பதே அந்தக் கடிதங்களின் சாரம்.

இது எப்படி சாத்தியம். அந்த நான்கு தபால் நிலைய அலுவலர்களும் ஒருவரையொருவர் சந்திக்கவோ அல்லது வேறு வகையில் தகவல் பரிமாறிக்கொள்ளவோ வாய்ப்பு இல்லையே! பிறகு எப்படி, இந்தப் பதில் கிடைத்தது. அதுதான் கந்தவேள் கருணை.

ஒருவேளை தபால் நிலைய அலுவலர் உள்ளத்தில் முருகப்பெருமான் உணர்த்தியிருப்பாரோ!

எதுவாகிலும் அந்தக் கடிதங்களைப் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. உடனே என்னுடைய நண்பரும் திருப்புகழ் ஆர்வலருமான எஸ்.சந்திரசேகரனைத் தொடர்புகொண்டேன். அவர் அப்போது நெய்வேலி ஸ்டேட் பேங்க் கிளையில் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே, நன்னிலம் பகுதியில் சுற்றியுள்ள திருப்புகழ்த் தலங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்துத் தந்து உதவியவர்.

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீமுருகப் பெருமான்

உடனே அவரிடம் நெய்வேலி கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்புகொண்டு, வில்லுடையான்பட்டு கோயில் அமைந்துள்ள பகுதி நிலவருவாய்த்துறை பதிவேட்டில் ‘அத்திப் பட்டு’ என்று இருக்கிறதா’ என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அந்த அலுவலரைச் சந்தித்து அதை உறுதி செய்தார்.

இப்போது, நெய்வேலி நகரியம் அமைந்துள்ள பகுதி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பெரிய நிலப்பரப்பாகும். அதில் அத்திப்பட்டு கிராமமும் ஒன்று. நெய்வேலி பற்றிய சுவாரஸ்யமான வரலாறு ஒன்றுண்டு.

1935-ம் ஆண்டுக்குமுன் நெய்வேலி என்ற கிராமத்தில், ஜம்புலிங்க முதலியார் தன் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டினார். அப்போது கிடைத்த கருமையான பொருளை அரசுக்கு அனுப்பிவைத்தார். அரசாங்கம் அதனை ஆய்வகத் தில் சோதனை செய்து அது பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) எனக் கண்டுபிடித்தது.

அதன் பிறகுதான், 1956-ம் ஆண்டு மத்திய அரசு நிலக்கரியைத் தோண்டி எடுத்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்’ (NLC) என்ற நிறுவனத்தை ஏற்படுத் தியது. நிலக்கரியை வெட்டி எடுக்கவும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு கட்டவும், அலுவலகங்கள் கட்டவும் நில ஆர்ஜிதம் செய்து, முன்பு குறிப்பிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த மக்களுக்கு வேறு ஊர்களில் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

கந்தவேள் கருணையால் அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பரவிய ‘அத்திப்பட்டு’ கிராமத்தில் அமைந்துள்ளதும், தற்போது மக்களால் ‘வில்லுடையான்பட்டு’ என அழைக்கப் பெறும் தலத்தில் உள்ளதுமான திருக்கோயிலுக்குள் செல்கிறோம். இங்கு முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

ஒரு முகம் இரண்டு கரங்களுடன் இடக்கரத்தில் வில்லும் வலக்கரத்தில் அம்பும் கொண்டுள்ளார். இருபுறமும் முறையே வள்ளி, தெய்வானை இருவரும் திகழ்கிறார்கள். சிவலிங்க வடிவில் அமைந்த ஒரே பீடத்தில் முன்புறம் முருகன், வள்ளி, தெய்வானை வடிவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. இம்மாதிரி சிவலிங்கம் போன்ற அமைப்பை வேறெங்கும் காண்பது அரிது. சிவனும் முருகனும் ஒருவரே என்ற ஒப்பற்ற தத்துவத்தைக் காட்டும் அமைப்பு என்று சொல்லலாம். அத்திக் கிறை சத்திச்சரவணன் வில்லுடன் திகழ்கின்ற காரணத்தால் ‘வில்லுடையான்பட்டு’ என்று பெயர் அமைந்தது போலும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீமுருகப் பெருமான்

வில்லை ஏந்திய வீரக் கோலம் தனிச் சிறப்பு உடையது. சிற்ப நூலில் இவ்வடிவம் ‘சம்ஹாரமூர்த்தி’ என்றழைக்கப்பெறுகிறது. பஞ்சலோகப் படிமங்களில் அமைந்துள்ள வில்லேந்திய கோலம், பெரும்பாலும் வலக் காலை மயில்மீது வைத்த நிலையிலும், வலது முன் கையில் அம்பும், இடது முன் கையில் வில்லும், பின் இரு கரங்களில் சத்தியும் வஜ்ராயுதமும் கொண்டுள்ளதாக இருக்கும். இம்மாதிரி (சம்ஹாரமூர்த்தி) வடிவங்கள் தமிழகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட கோயில்களில் காணப்படுவது, இவ்வடிவத்தின் அருமையையும் பெருமையை யும் உணர்த்தும்.

இத்திருக்கோயிலில் விஸ்வநாதர், விசாலாட்சி, தண்டபாணி, அருணகிரிநாதர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. உற்சவரும் மூலவரைப் போன்று திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டு, விரித்த சடையுடன் வேடர் கோலத்தில் இரு தேவியர் சூழ விளங்குகிறார். இவ்வூரில் வாழ்ந்த குகதாசர் என்ற திருப்புகழ் அடியார் அருணகிரிநாதரின் ‘அத்திப்பட்டு’ திருப்புகழ்ப் பாடலை கல்வெட்டில் பதித்துள்ளார்.

வண்ணச்சரபம் மகான் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள், சுவாமி வளையாபதி சாந்தயோகி, அருட்கவி ஸ்ரீசாதுராம் சுவாமிகள் முதலான அருளாளர்கள் வில்லுடையான்பட்டு வேலனைப் பாடியுள்ளார்கள். ‘சித்ர காடவ பல்லவன்’ என்னும் பல்லவ வம்சத்து மன்னனால் இக்கோயில் கட்டப் பட்டதாகக் கூறுகிறார்கள்.

தினமும் நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்புடையது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் காவடி சுமந்தபடி முருக நாமத்தை முழக்கிவரும் அற்புதக் காட்சி கண்டு இன்புறத் தக்கது. கந்தசஷ்டி, தைப்பூசம் முதலான விழாக் களும் நன்கு நடைபெறுகின்றன. கோயிலுக்கு எதிரில் சரவண தீர்த்தம் என்னும் திருக்குளமும் மிகப் பழைமையான வன்னி மரமும் உள்ளன.

“பன்னிரு கரங்களுடன் பல்வகைப் படைக் கலங்களையும் உடையவன் ஆறுமுகப் பரமன். இடையில் உடைவாள் திகழும். ஒளிகொண்ட பருத்த தோள்களுடையவன். பன்னிரு காதணிகள், பாம்பை அடக்கும் மயில்; வேல், சேவல், கூர்மையான சூலாயுதம் ஆகியவற்றுடன் ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்தவன். இப்படியான முருகனையும் அவனது வெற்றியையும் விரும்பித் தியானிப்பதை விடுத்துப் பாழான எண்ணங்களிலும் செயல்களிலும் மயக்கம் கொள் ளலாமா. நீ இந்த அடிமையை நினைத்துச் சொர்க்கலோக ஊருக்குப் போகும் வழியை ‘இதுதான் வழி’ எனக் காட்டி, உனது அழகிய திருவடியைத் தந்தருளுக' என வேண்டுகிறார் அருணகிரியார்.

‘வில்’ என்ற சொல்லுக்கு ‘ஒளி’ என்ற பொருளும் உண்டு. எனவேதான் ஒளிவீசுகின்ற நீண்டவில்லைப் பிடித்த வெற்றி யுடையவன் என்று பாடுகிறார்.

`அருணமணி வெயில்பரவு பத்துத் திக்கு மிகு

அழகுபொதி மதர்மகுட தத்தித் தத்தி வயர்

அணிய கயலுகளும் வயல்

அத்தில்பட்டில் உறைபெருமாளே'

`செம்மணிகள் பத்து திக்குகளிலும் ஒளிவீசித் திகழ, மிக்க அழகு நிறைந்து (மதர்) செழிப்புடன் விளங்கும் மணி முடியை உடையவனே! குதித்துக் குதித்து வளர்கின்ற வரிசையாக உள்ள (அல்லது அழகிய) கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமானே! உனது அழகிய திருவடியைத் தந்தருள்க' என்பது இப்பாடலின் கருத்து.

- காண்போம்...

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீமுருகப் பெருமான்

கந்தனும் ராதையும்!

மிழ்க் கடவுளான ஸ்ரீமுருகப் பெருமானுக்கும் கண்ணனின் காதலியான ராதா தேவிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

கந்தனின் அவதார நட்சத்திரம் விசாகம். ராதையும் கோகுலாஷ்டமிக்கு அடுத்துவரும் அஷ்டமியும் விசாக நட்சத்திரமும் இணைந்த நாளில்தான் அவதரித்தாள். விசாக நட்சத்திரத்தை ‘ராதா’ என்ற பெயரிலேயே வேதம் குறிப்பிடுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம் கர்க ஸம்ஹிதை, ராதா - கிருஷ்ணன் இருவருக்கும் திருமணம் ஆனதும் வைகாசி விசாகத் திருநாளில்தான் என்கிறது. குன்றிருக்கும் இடங்களிலெல்லாம் குமரன் வசிக்கிறான். ராதை பிறந்ததும் பர்ஸான என்ற பிரம்ம மலையில்தான்.

முருகப் பெருமானை சிவாம்சம் என்கிறது கந்த புராணம். சிவபெருமானே ராதையாக அவதரித்தார் என்கிறது தேவி புராணம். ஆக, கந்தன் ராதை இருவருக்கும் சிவ அம்சங்கள் நிறைந்திருப்பது புரியும்.

- ராதா ராமதாஸ், பாண்டிச்சேரி.