Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 18

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 18

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை

ராவ்பகதூர் தணிகைமணி டாக்டர் வ.சு செங்கல்வராயப் பிள்ளை 1952-ம் ஆண்டு வைகாசி விசாகத் திருநாளில் (69-வது வயதில்) அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் முதலான நூல்களுக்கு உரை எழுதத் தொடங்கினார். முருகவேளின் திருவருள் துணைகொண்டு 1957-ம் ஆண்டு பங்குனி உத்திர நன்னாளில் (73-வது வயதில்) அதை நிறைவு செய்தார். அதை ‘முருகவேள் பன்னிரு திருமுறை’ என ஆறு தொகுதிகளாக வரிசைப்படுத்தினார்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி - பழநி ஆகிய தலங்களின் பாடல்கள் முதல் தொகுதி. சுவாமிமலை குன்றுதோறாடல் (33 மலைத்தலங்கள்), பழமுதிர்ச் சோலைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி. பஞ்சபூதத் தலங்கள் மூன்றாம் தொகுதி. காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தலங்கள் நான்காம் தொகுதி ஆகும்.பொதுத் திருப்புகழ்ப் பாடல்களை ஐந்தாம் தொகுதியாகவும் துதிப்பாடல்கள், அடியார்கள் வரலாறு ஆகியவற்றை ஆறாம் தொகுதியாகவும் அமைத்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 18

இதில் நான்காம் தொகுதியில் பாடல் எண் 989 முதல் 995 வரை உள்ள ஏழு தலங்களை இடம்விளங்காத தலங்கள் என்று பட்டியலிட்டுள்ளார். அதில் ஐந்தாவது தலமாக ‘முள்வாய்’ என்னும் (மின்னார் பயந்த மைந்தர் என்று தொடங்கும்) பாடல் வருகிறது. ‘இத்தலம் சித்தூரிலிருந்து பலமனேரி போகும் வழியில் ஏழாவது மைலில் உளதென்பர்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தணிகைமணி எழுதிய அற்புதமான ஆராய்ச்சி நூல் ‘அருணகிரிநாதர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்’ என்பதாகும்.

1947-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற இந்நூலை அருணகிரிநாதர் தமது தல யாத்திரையைத் திருவண்ணாமலையிலிருந்து தொடங்கி எந்த மார்க்கமாக, எப்படிச் சென்று தரிசித் திருப்பார் என்ற யூகத்தில் ஒரு வழிகாட்டி நூலாக உருவாக்கியுள்ளார். அந்தந்தத் தலப் பாடல்களில் உள்ள அற்புதமான கருப்பொருள் மற்றும் வேண்டுகோள் முதலானவற்றை அவர் தொகுத்து எழுதியுள்ள முறை மிக அருமை!

கந்தவேளே அவர் உள்ளத்தில் புகுந்து அதை எழுதவைத்திருப்பார் என்பதைப் படிப்பவர்கள் உணர முடியும்.

அந்த ஆராய்ச்சி நூலில் (பக்கம் 118) அருணகிரிநாதர், திருவேற்காடு தலத்தை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டு பாக்கம், பழையனூர், திருவாலங்காடு ஆகிய தலங்களுக் குச் சென்று வழிபட்டார் என விவரிக்கிறார். காளியோடு ஆடல்வல்லான் (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய திருவாலங்காடு, ரத்னசபை எனப் புகழ்பெற்ற மணி அம்பலமாகும்.

இதைத் தொடர்ந்து அவர் தரிசித்தது ‘முள்வாய்’ எனக் காட்டுகிறார். நமது ஆய்வில் தமிழ்நாடு அரசு 1972-ல் வெளியிட்ட ‘கிராமங்களின் அகரவரிசைப்பட்டியல்’ நூலில் இப்பெயருள்ள கிராமம் உள்ளதா என்று தேடினேன்.

அப்போதைய வடஆற்காடு மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகாவில் ‘முள்வாய்’ கிராமம் அமைந்துள்ளதை அறிந்தேன் (தணிகைமணி 1947-ல் வெளியிட்ட தமது ஆய்வு நூலில் திருவாலங்காடு அருகில் முள்வாய் உள்ளது என்று எழுதியுள்ளதை நோக்கும்போது, முருகப் பெருமானே அவருக்கு இதை உணர்த்தியுள்ளான் என்று நான் கருதுகிறேன்). மேலும், முள்வாய் என்ற பெயரில் தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் ஊர் இருப்பதாக அறிய முடியவில்லை.

1980- ம் ஆண்டில் ஒரு நாள் ‘முள்வாய்’ தலத்தைத் தேடி அரக்கோணம் பேருந்தில் புறப்பட்டேன். திருவாலங்காடு தாண்டி ‘முள்வாய்ப் பாளையம்’ என்று ஒரு கைகாட்டி காணப்பட்டது.

அந்த இடத்தில் இரண்டு பேர் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ‘முள்வாய்’ ஊரைப் பற்றி விசாரித்தேன். அங்குள்ள ஒற்றையடிப் பாதையைக் காட்டி அதில் ஐந்து கி.மீ நடந்துதான் செல்லவேண்டும் என்றும் வேறு வாகன வசதி எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தனர். கையில் எடுத்துச்சென்ற காலை உணவான தோசையைச் சாப்பிட்டு, நீரை அருந்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன். வழியில் ஒரு மனிதர்கூடத் தென்படவில்லை.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

சுமார் இரண்டு கி.மீ நடந்திருப்பேன். அந்த ஒற்றையடிப்பாதை இரண்டாகப் பிரிந்தது. ‘கந்தப் பெருமானே! எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெரியவில்லையே’ என்று மனம் கலங்கினேன். இருப்பினும் ஏதோ ஓர் உந்துதலில் இடப்புறம் திரும்பும் பாதையில் பயணித்தேன்.

வழியில் எங்கு நோக்கினும் மரம், செடி எதுவும் இல்லை. ‘பொட்டல்வெளி’ என்று சொல்வார்களே அதேதான். ஆனால், தரையில் எங்கு நோக்கினும் பல்வேறு வடிவங்களில் சிறிதும் பெரிதுமாகப் பலவித நிறங்களில் கூழாங்கற்கள் காட்சியளித்தன. சதுரமாக, வட்டமாக, முட்டை வடிவில், கூம்பு வடிவில் என ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாகத் திகழ்ந்தன.

எனக்குப் பிடித்த ஒன்றிரண்டு கற்களை எடுத்து பையில் போட்டுக்கொண்டேன். போகும் வழியில் ஏற்கெனவே பார்த்ததைவிட அழகான கல் ஒன்றைக் கண்டால் அதையும் எடுத்துக் கொண்டேன். இப்படியாக என் பை கனக்க ஆரம்பித்தது. நான்கு கி.மீ நடந்திருப்பேன். வழியில் இருவர் வேலி கட்டிக்கொண்டிருந்தனர்.

அந்த ஊரில் அவர்கள்தான் நான் சந்தித்த முதல் மனிதர்கள். “ஐயா முள்வாய்ப் பாளையம் இந்த ஊர்தானே?” என்று அவர்களிடம் கேட்டேன். “ஆமாம்; இன்னும் கொஞ்சதூரம் நடந்து செல்ல வேண்டும்” என்றார்கள்.

ஒருவழியாக முள்வாய்ப் பாளையம் கிராமத்தை வந்தடைந்தேன். அங்குள்ள மக்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். அவர்களிடம் அங்கு சிவன் கோயில் அல்லது முருகன் கோயில் ஏதாவது உள்ளதா என்று கேட்டேன். தெருவில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அங்கு சென்று விசாரிக்குமாறு கூறினார்கள். அந்த வீட்டில் இருப்பவர்தான் அந்த கிராமத்துப் பெரிய மனிதர் போலும்!

அவ்வீட்டின் வாயிலில் பலர் நின்றிருந்தார்கள். அவர்களிடம் நான் வந்த விவரத்தைச் சொன் னேன். அப்படி எதுவும் கோயில் இல்லை என்றார்கள். வேறு ஒரு தகவலையும் சொன் னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குளம் வெட்ட இவ்வூரில் தோண்டியபோது நீளவடிவில் பாறைக்கற்கள் இருந்தனவாம். அந்த இடத்தில் கோயில் ஏதாவது இருந்திருக்கலாம் என்றும் மேற்கொண்டு அங்கே தோண்டவில்லை என்றும் சொன்னார்கள்.

முள்வாய் மிகச் சிறிய கிராமம். மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்வது புரிந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்தேன். இவ்வூரின் ஒரு பகுதி தாழ்வான நீர்ப்பரப்பில் உள்ளது. அந்த இடத்தில் பழங்கால பானை ஓடுகள் முதலியன கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் கோயில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிய முடிகிறது. அகழ்வாய்வு செய்தால் விவரம் தெரியவரும்.

இந்தக் கிராமத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் (பஜனை கோயில்) மட்டுமே உள்ளது. `பாம்பனையில் பள்ளிகொண்டு பாஞ்ச சன்னியம் எனும் சங்கை ஊதுகின்றான் மேகவண்ணன். `பல நூல்களும் பல சாத்திரங்களும் முழங்க தேவர்களும் மயங்கும்படி பலவித பண்களை ஊதிய திருமாலின் மருகோனே' என்று கண்ணனின் பெருமையை இத்தலத் திருப்புகழில் பாடுகிறார் அருணகிரியார். என்ன பொருத்தம் பாருங்கள்! இங்கே மாமனோடு மருமகனையும் மானசீகமாகக் கண்டு இன்புற்றேன்.

பாளையக்காரர்கள் ஒரு காலத்தில் ஆண்டதால் இவ்வூர் முள்வாய்ப் பாளையம் எனப் பெயர் பெற்றது. இதனருகில் பழைய பாளையம், வேலூர்ப் பாளையம் என்ற பெயர்களில் கிராமங்கள் உள்ளன. அருணகிரிநாதர், வேலூர் என்று பாடியுள்ள தலம் இந்த வேலூர்ப் பாளையமாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. எனவே, முள்வாய் ஊரிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஐந்து கி.மீ நடந்து வேலூர்ப் பாளையம் ஊரை அடைந்தேன். அங்கு சிவாலயம் எதுவும் இல்லை. விக்கிரகம் இல்லாத கோயில் ஒன்றும் பெருமாள் கோயிலும் இருந்தன. பெருமாள் கோயிலில் பட்டர் உச்சிகால பூஜை முடித்து தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 18

‘அங்கு அரக்கோணம் டவுன் பஸ் வரும் என்றார்கள்’ காத்திருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தேன்.

எதிரில் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தபோதுதான் சட்டைப்

பையில் பார்த்தேன். சரியாக 25 காசுகள் மட்டுமே இருந்தன. அப்போது, சென்ட்ரலில் இருந்து சிம்சன் வரை டிக்கெட் 25 காசுகள். ஐஸ் ஹவுஸ் செல்ல முப்பது காசுகள் ஆகும்.

இப்போது என்ன செய்வது. யாரிடம் ஐந்து பைசா கடன் கேட்பது. வேறு வழியின்றி நடக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே பல கிலோ மீட்டர் நடந்ததோடு சேர்த்து மீண்டும் சிம்சன் நிறுத்தம் வரை நடந்து வந்து பஸ் ஏறி இல்லத்தை அடைந்தேன்.

என் அண்ணா சேக்கிழார்தாசன், பேராசிரியர் டாக்டர் ஆர். ராமசேஷன் அன்று நமது இல்லத்துக்கு வந்திருந்தார். (அவரும் நானும் இணைந்து தொகுத்த ‘அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்... திருப்புகழ்த்தலப் பயணம்’ நூல் 1981-ம் ஆண்டு சுவாமிமலைத் திருக் கோயில் சார்பில் வெளியிடப் பெற்றது). முள்வாய் சென்றுவந்த அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தை எழுத்து எண்ணிப் பயின்ற அவர், அப்பர் அருளிய வினாவிடைத் திருத்தாண்டகப் பாடலை விளக்கி, தகுந்ததோர் அறிவுறுத்தலையும் அளித்தார்.

- இன்னும் வரும்...