மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 19

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

ல்லத்துக்கு வந்திருந்த எண் அண்ணா சேக்கிழார்தாசன், பேராசிரியர் டாக்டர் ஆர். ராமசேஷன் அவர்களிடம் முள்வாய் சென்று அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

அவர் சேக்கிழாரின் பெரியபுராணத்தை எழுத்து எண்ணிப் பயின்றவர். சைவத் திருமுறை களில் ஆழங்கால்பட்டவர். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதின வித்வானாக விளங்கிய சித்தாந்த சைவமணி த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு பல நூல்களைப் பதிப்பிக்க உதவியதுடன், பல நூல்களையும் அச்சிட்டவர். அவர் என்னிடம் சொன்னார்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

``பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந் திருப்பவன் இறைவன். அப்பெருமானின் உருவத் தையும் வண்ணத்தையும் அவன் அருளால்தான் காணமுடியுமே அன்றி... இப்படிப்பட்டவன், இவ்வண்ணத்தான், இவ்வடிவினன்; இவன் இறைவன் என்று எழுதிக்காட்ட முடியுமா! ஆக, அவனருள் இருந்தால் நீ கொண்டு வந்த கருங்கல்லிலும் இறையுருவத்தைக் காண முடியும்'' என்று அப்பர் அருளிய வினா விடைத் திருத்தாண்டகப் பாடலை விளக்கி வழிகாட்டினார்.

அன்றிரவு முழுவதும் முள்வாய் சென்று வந்த சிந்தனையில் கழிந்ததால், உறக்கம் வரவில்லை. பரம்பொருளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அருணகிரிநாதர் பல திருப்புகழில் விளக்குகிறார்.

`காண்பதற்கு இயலாதது; உருவமும் அருவமும் கொண்டது; மாயப்பொருளாய் நின்று, இவ்வுடலால் அறிய முடியாத வகையில் இருப்பது; வேற்றுமை ஒற்றுமை எனப்படும் தன்மைகளுடன் உலகமாய் வளர்வதும், பீடம், லிங்கம் எனப்படும் பேருடையதாக விளங்கு வதும் பரம்பொருள். அந்தப் பரம்பொருளை மனத்தால் அளவிட்டுத் தேட முடியாது.

அவன், இவன், உவன் என்றும் அவள், இவள், உவள் என்றும் அது, இது, உது (உது - தூரத்துக்கும் சமீபத்துக்கும் இடையிலுள் ளதைக் குறிக்கும் சுட்டுப்பெயர்) என்றும் குறிப்பதற்கு இயலாத வகையில் திகழ்வது. உருவம் இன்மை, உருவம் உடைமை, இவை இரண்டும் நீங்கின தன்மையைக் கொண்ட பொருள்தான் `பதி' எனப்படும் கடவுள்' என்று விவரிக்கிறார்.

நான் பார்த்த கூழாங்கற்களில் கந்த னின் கவின்மிகு காட்சியைக் கண்டு மகிழ முடிந்தது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நான்குமுறை முள்வாய் சென்று வந்தோம். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட திருப்புகழ் அறிஞர், அருணகிரிதாசன் டாக்டர் ம.ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்துச் சென்று முள்வாய் மக்களோடு பேசினோம்.

பல வருஷங்களுக்கு முன்பு கோயில் கட்டுவதற்கென்றே ஒருவர் நிலத்தை எழுதிவைத்துள்ளார் என்ற புதுத் தகவலைத் தெரிவித்தார்கள். நாங்கள் எங்கள் செலவில் முருகனுக்குக் கோயில் கட்டித் தருகிறோம் என்று சொன்னவு டன், ``ஐயா! நீங்கள் கோயில் கட்டு வீர்கள். யார் தினமும் பூஜை செய்வது. அதற்கு இவ்வூரில் வசதி இல்லையே!'' என்றார்கள். அவர்கள் கேள்வி நியாயமானதுதான். கந்தன்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்!

வெள்ளிகரத்தில் நவரத்தினத் திருப்புகழ்!

`என்னுடன் வருகிறாயா? எமது ஊரான திருத்தணிகை, உன்னுடைய வள்ளிமலையிலிருந்து இருபத்தைந்து மைல்தான். இரண்டு ஊரும் ஒன்றுதான்; இரண்டு ஊருக்கும் மத்தியில் ஒரே ஒரு வயல்தான். அவ்வளவு அருகில் உள்ளது' என்று முருகப்பெருமான் வள்ளியின்மேல் கொண்ட காதலால் வள்ளியின் தினைப்புனத்துக்குச் சென்று சாமர்த்தியமாகப் பேசுகிறான்.

வள்ளியின் கரம்பிடிக்க விரும்பிய கந்தன் அவளை அழைத்த இந்த அன்பு வேண்டுகோளை, அருணகிரியாரின் சந்தத் தமிழில் நாம் சுவைக்கலாம்.

“வதன சரோருக நயன சிலிமுக

வள்ளிப் புனத்தில் நின்று

வாராய்ப்பதி காதம் காதரை ஒன்றுமூரும்

வயலும் ஒரே இடை...”

(காதம் - 10 மைல்; `காதம் காதம் அரை' - 25 மைல்)

சாதாரணமாக மக்கள் தமது பேச்சு வழக்கில் அதிகமான தொலைவு இருந் தாலும் ‘கூப்பிடு தூரத்தில் உள்ளது’ என்பார்கள். அதைப்போல முருகனும் வள்ளியிடம் பேசுகிறான். இந்த அழகான ரசனை மிகுந்த காட்சியை ‘வெள்ளி கரம்’ என்ற தலத்துப் பாடலில் நாம் படித்து இன்புற முடிகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 19

‘வெள்ளிகரம் - வெள்ளிநகர்’ என்று அருணகிரிநாதர் பாடும் இத்தலத்துக்கு ஒன்பது அழகான திருப்புகழ்ப்பாடல்கள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ்ப் பாடல்களில் எட்டுவிதமான கலப்பு சந்தங்கள் உள்ள ஒரே பாடல் ‘வதன சரோருக’ என்று தொடங்கும் வெள்ளிகரம் தலத்துக்குரிய பாடல்தான்.

மேலும் ‘கள்ளமுள்ள வல்ல வல்லி...’ என்று தொடங்கும் பாடலில் 70 எழுத்துகள் ‘ள், ள, ல், ல’ ஆக வந்துள்ளது அற்புதம். “வெள்ளிகரத்துத் திருப்புகழ் ஒன்பதும் ‘தய்ய’ சந்தம் கலந்தன. வாய்ச் சொல்லழகும், பொருள் அழகும் நிரம்பி நவரத்தினங்கள் போல விளங்கி ‘நவரத்தினத் திருப் புகழ்’ எனும்படிப் பொலிகின்றன” என்று நயம்பட கூறுவார் தணிகை மணி அவர்கள்.

அதுமட்டுமா! இந்த ஒன்பது பாடல்களிலும் வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப்புனம், அவள் கொடுத்த தினைமாவு, அவள் மேல் மையல்கொண்ட கந்தன், அவன் அவளைக் கரம்பிடித்து மணந்த அழகு என்று வள்ளிநாயகியை மட்டுமே பேசிய அருணகிரியார், தேவசேனையைப்பற்றி ஒரு சிறு குறிப்பும் காட்டவில்லையே! ஒருவேளை வள்ளியைக் கரம்பற்றிய காரணத்தால் `வெள்ளிகரம்' பாடலில் இப்படிப் பாடியிருப்பாரோ! இது சிந்தனைக்குரியது.

திருத்தணிகையிலிருந்து பள்ளிப்பட்டு செல்லும் வழியில் உள்ளது வெள்ளிகரம். பள்ளிப்பட்டிலிருந்து தென்மேற்கே இரண்டு கி.மீ தொலைவில் நகரி ஆற்றின் தென்கரையில் உள்ளது. நகரியிலிருந்து பள்ளிப்பட்டு வழியாகவும் இவ்வூரை அடையலாம். இத்தலத்தை தரிசித்து தகவல் சேகரிக்க எண்ணி வெள்ளிகரம் தபால் அலுவலருக்குக் கடிதம் எழுதினேன். போஸ்ட்மாஸ்டர் பொன்னுசாமி என்பவர் பதில் எழுதியிருந்தார்.

அதன்படி 1979-ம் ஆண்டில் ஒரு நாள் புறப்பட்டுத் திருத்தணி சென்று அங்கிருந்து பள்ளிப்பட்டு பஸ்ஸில் ஏறினேன். அக்காலத்தில் வெள்ளிகரம் அருகில் நகரி ஆற்றில் பாலம் கிடையாது. ஆற்றில் தண்ணீர் நிறைய இருந்ததால் கரையிலேயே பஸ்ஸை நிறுத்திவிட்டார்கள். ஆற்றில் இறங்கி நடந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு வரை நீர் சூழ்ந்துவிட்டது.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

எப்படியோ எதிர்கரை சென்று வெள்ளிகரத்துக்கு வழி கேட்டேன். ‘அடாடா! இவ்வளவு தூரம் ஏன் வந்தீர்கள்? எதிர்ப்புறமே உள்ளதே!’ என்றார்கள். அந்த இடத்தில் ஆறு, இரண்டு பகுதியாகப் பிரிந்து செல்வது எனக்குத் தெரியாது. வயற்காட்டில் இறங்கிச் சுற்றிக்கொண்டு வெள்ளிகரம் தபால் அலுவலகத்தை அடைந்தேன். போஸ்ட் மாஸ்டர் தெலுங்கு மொழிக்காரர். தமிழ் படிக்கத் தெரியாது. நான் சென்ற அதே நேரம் ஒரு பெண்மணி நான் எழுதிய கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.

சுற்றிலும் நெல்வயல்களும் கரும்புத் தோட்டங் களும் தாடகங்களும் சூழ்ந்து, `மெள்ள மள்ளார் கொய்யு நெல்லின் வெள்ள வெள்ளிநகர்' என்று அருணகிரியார் கூறுவதற்கு ஏற்ப மிகவும் ரம்மியமான காட்சி. ஆனால், நல்ல பசி நேரத்தில் இளநீர்கூட அங்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இயற்கையை ரசித்த திருப்தியில் வெள்ளிகரம் திருக்கோயிலில் நுழைந்தேன். கோயில் முன்புறம் கோபுரம் இல்லை. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்களும் சரிவரஇல்லை. உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் தாண்டி தென்பகுதியில் உள்ள மண்டபம் வழியாக உட்புறம் செல்ல வேண்டும்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

வெளிப்பிராகாரத்தில் தென்மேற்கில் வெள்ளி விநாயகர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். வடமேற்கில் முருகன் சந்நிதி மிகத் தாழ்வாகவும் குறுகலாகவும் அமைந்திருந்தது. முருகப்பெருமான் மூன்றடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பின் இருகரங்களில் வஜ்ர சக்தியும் வலக்கரம் அபய முத்திரையிலும் முன் இடக்கரம் இடுப்பிலும் வைத்துள்ள அமைப்பு. பின்புறம் மயில் உள்ளது. இருபுறமும் தேவியர் காட்சியளிக்கின்றனர்.

சிற்ப அமைப்பை நோக்கும்போது இங்கு முதலில் முருகனும் வள்ளியும் மட்டுமே இருந்து பிறகு தெய்வயானை விக்ரகத்தை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வள்ளி சற்று உயரமாகவும், தெய்வயானை அதிக உயரம் இல்லாமலும் இருப் பதைக் காண முடிகிறது. (மேலும் அருணகிரிநாதர் வெள்ளிகரம் முருகனைப் பாடியுள்ள ஒன்பது திருப்புகழிலும் வள்ளியை மட்டுமே சிறப்பித்துப் போற்றியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது).

தெற்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் வழியாகக் கோயில் உட்புறம் சென்றால் மகா மண்டபத்தில் ஒருபுறம் விநாயகர் அருள, மறுபுறம் கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார் ஒருவர். அவர் யார் தெரியுமா?

- இன்னும் வரும்...