மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 9

வித்யாபதீஸ்வரர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யாபதீஸ்வரர் கோயில்

வழிகாட்டிய கல்வெட்டுகள்...

ருணகிரிநாதர் திருப்புகழில் போற்றியுள்ள சோமநாதன் மடம் தலத்தை உறுதிசெய்ய `12 புத்தூர்' வித்யாபதீஸ்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிந்தன. அங்கு படி எடுக்கப்பட்டுள்ள நான்கு கல்வெட்டுகளும் விஜயநகர அரசர்கள் காலத்தவை.

கோயில் மண்டபத்தின் வெளிப்புற தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, சக 1350 (1406)-விஜயநகர மஹாராயரின் குமார ரான வீரதேவமகாராயர் காலத்தில், புத்தூரகத்திலுள்ள (தற்காலம் 12 புத்தூர்) மகாஜனங்கள் நிலம் தானமா கக் கொடுத்த விவரத்தையும் அதன் நான்கு எல்லைகளையும் குறிப்பிடுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 9

கருவறையின் வடக்குப்புற வெளிச்சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது (A.R No 56 of 1900). இதன் காலம் - சக 1292 (1348-CE). இது, `வீரபொக்கண உடையார் (முதலாம் புக்கர்) - குமாரகம்பண்ண உடையார் காலத்தில், ஸாதாரண வருஷம்… பூர்வபக்ஷ ஸப்தமியும் ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற தினத்தில், வித்யாபதீஸ்வரமுடைய நாயனார் திருமகனார் சண்டேஸ்வர நாயனார் திருவுள்ளத்தாலே, இந்தத் திருக்கோயில் மடாபத்தியக் காணி ஆட்சி... அம்மையப்பரான ஸோமநாதஜீயர்க்கு மனையும், காணிஆட்சி பிள்ளைகள் தலைமுறையும், சந்தராதித்தார் உள்ளவரையும் நடத்திக்கொள்ள குடுத்தோம்' எனக் குறிப்பிடுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கண்ட கல்வெட்டு மூலம்தான் அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தைச் சரியாகத் தீர்மானிக்க முடிகிறது. ஏனெனில், இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் சோமநாத ஜீயர் அவரது சமகாலத்தவர் என்பது முக்கியச்செய்தியாகும் (தற்காலத்தில் ஜீயர் என்ற சொல் வைணவத் துறவிகளைக் குறிப்பிட்டாலும், அக்காலத்தில் கோயில் நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தவர்களை `ஜீயர்' என்ற சொல்லால் அழைப்பதைக் கல்வெட்டில் காணமுடிகிறது). இவ்வாறு புகழ்பெற்ற சோம நாத ஜீயர், இத்தலத்தில் மடம் அமைத்து இத்திருக்கோயிலில் பூஜை, திருப்பணி, திருவிழா முதலியனவற்றை நடத்திவந்துள்ளார் என்றும் அறியமுடிகிறது.

சோமநாதருக்குப் பிறகு அவரது நிர்வாகத் திறமையாலும், செல்வாக்காலும், புகழாலும், இவ்வூர் ‘ஐயன்புத்தூர்’ என்று மக்களிடையே பிரபலமாக அழைக்கப்பெற்றுள்ளது எனில், இந்தச் சோமநாதரது பக்தியையும், தவத்தையும், செல்வாக்கையும் உணரமுடியும்.

சரித்திர ஆசிரியர்கள் சிலர், அருணகிரியார் இரண்டாம் பிரபுட தேவராயர் (1422-1449 ACE) காலத்தவர் என்று குறிக்கிறார்கள். காரணம், திருவண்ணாமலையில் முருகப்பெருமான் (கம்பத்திலிருந்து அவர்) காட்சி கொடுத்தபோது பாடப்பட்டதாகக் கூறப்படும் பாடலில், ‘உதயதாப மார்பான பிரபுட தேவமாராயன் உளமும் ஆட வாழ்தேவர் பெருமாளே’ (அதல சேடனார் ஆட) என்ற வரியில் வரும் பிரபுடதேவ மகாராயர் (1422-1449) இவரே என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் ‘பிரபுடதேவமாராயன்’ என்பது விஜயநகர அரசர்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர் என்று சில சரித்திர ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

எனினும், சோமநாதரைப் பற்றி அருணகிரியார் பாடியுள்ளதையும் அவரைப் பற்றியுள்ள கல்வெட்டு முதலாம் புக்கரைக் குறிப்பிடுவதையும் கொண்டு அருணகிரிநாதர் முதலாம் புக்கர் (1335-1376) காலத்தில் வாழ்ந்தவர் என்பதை உறுதிசெய்கிறார்கள்.

கண்டுகொண்டேன் கந்தனை - 9

மேலும், வில்லிபுத்தூராருடன் அருணகிரியார்க்கு ஏற்பட்ட கவித்துவப் போட்டியில் பாடப்பெற்ற கந்தரந்தாதி நூலைக்கொண்டு, வில்லிபுத்தூரார் (1331-1383) அருணகிரிநாதரின் சமகாலத்தவர் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது. மேலும் அருணகிரிநாதரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் இரட்டைப் புலவர்கள் (1337-1361) பாடிய பாடல் ஒன்றில், அருணகிரிநாதரை ‘வாதுக்கழைத்த சம்பந்தாண்டானை’ப் பற்றிய குறிப்பு உள்ளது. திருவண்ணாமலைக் கல்வெட்டு ஒன்றில் ‘சம்பந்தாண் டான்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ பெயர்கள் உள்ளன. எனவே சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அருணகிரிநாதர் சுமார் 75 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்றும் அவர் வாழ்ந்த காலம் 1330 – 1405 என்றும் தீர்மானிக்கிறார்கள். அருணகிரியார், சோமநாதரைச் சந்தித்து அவரது மடத்தில் முருகப்பெருமானைத் திருப்புகழ்ப் பாடலில் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியமான சான்றாகும்.

புத்தூர் வித்யாபதீஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்கக் குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தின் தலைவர் ஆர்.உபேந்திரன், பொருளாளர் டாக்டர் கைலாச சுப்ரமண்யன் ஆகியோருடன் சென்றோம். அவ்வூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் என்னிடம், “உங்களால் எங்கள் கோயில் திருப்பணிக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கிடைத்தது ஐயா. மிக்க நன்றி” என்றார். “நான் அவ்வளவு தொகையைக் கொடுக்கவில்லையே” என்றேன். “தாங்கள் எழுதிய `அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலப் பயணம்' நூலைப் படித்து விட்டு, திருவான்மியூர் டாக்டர் ஒருவர் இங்கு வந்து கோயில் திருப்பணிக்காக, இத்தொகையை வழங்கினார்” என்று விவரமாகச் சொன்னார்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் புத்தூர் வித்யாபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது மூலஸ்தானம், மகாமண்டபம் முதலான திருப்பணிகள் ஓரளவு நிறைவுபெற்றிருந்தன. இத்திருப்பணிக்கு எப்படி நன்கொடை கிடைக்கிறது என்று உள்ளுர் பெருமக்களைக் கேட்டபோது, “ஆண்டுதோறும் மகாபாரதம் தெருக்கூத்து பலநாள்கள் நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் நன்கொடையில் திருப் பணியைச் செய்துவருகிறோம்” என்றார்கள். அவர்களது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி மகிழ்ந்தேன். நாங்கள் சென்றபோது வெளிப்பிராகாரத்தில் ஒரு லிங்கம் (பாணம்) மட்டும் காணப்பட்டது. ஆவுடையார் இல்லை. இது ஏதோ புதியதாகக் கிடைத்ததோ என்று ஊர்ப் பெரு மக்களிடம் வினவியபோது, “இதுதான் சாமி சிவலிங்கம்” என்றார் ஒருவர்.

``இது எங்கிருந்து கிடைத்தது'' என்றேன். “அதுதான் சாமி இங்குள்ள சிவலிங்கம்” என்றனர். “ஆவுடையார் எங்கே” என்றேன். “அது அந்த கொட்டகையில் உள்ளது” என்று (அஃறினையில்) பதில் வந்தது.

“லிங்கத்தை இங்கே கிடத்திவிட்டு, ஆவுடையாரை அங்கே அறையில் வைத்திருக் கிறீர்களே ஏன்” என்றேன். “இவ்வூருக்கு ஒரு (காவி அணிந்த) பெரியவர் வந்தார். அவர்தான் இந்த லிங்கத்தை இப்படிப் பிராகாரத்தில் கிடத்தினால், சீக்கிரம் திருப்பணி பூர்த்தியாகி உள்ளே கர்ப்ப கிரகத்துக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு (சிவபெருமானுக்கு) வரும் என்றார்'' என்று பதில் கிடைத்தது.

கண்டுகொண்டேன் கந்தனை - 9

இதைக் கேட்டவுடன் கோபம் எழுந்தாலும், அவர்களது அறியாமையை எண்ணி வருந்தியபடி, “உங்களுக்கெல்லாம் சிந்திக்கத் தெரியாதா? இவ்வளவு வசூல் செய்து திருப்பணி செய்கிறீர்கள். ஆனால், அர்த்தமில்லாமல் யாரோ உளறிய வார்த்தையைக் கொண்டு, பொறுப்பில்லாமல் இப்படிக் கிடத்தியிருக்கிறீர்களே...'' என்று சொல்லி, அங்கு குழுமியிருந்தவர்களைக் கொண்டு அந்த லிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து வைத்தோம்.

“சோமநாதரைப் போன்று தினமும் ஆத்மார்த்தமாக பூஜை செய்து வாருங்கள். ஆறே மாதத்தில் திருப்பணி பூர்த்தியாகிக் கும்பாபிஷேகம் நடைபெறும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வந்தோம்.

திருப்பணிகள் விரைவாக நடைபெற்றன. விநாயகர், முருகன், அட்சரவல்லி அம்பாள், சண்டேசர் முதலான சந்நிதிகள் தனித்தனியே சிற்றாலயங்களில் அமைக்கப்பெற்றன. அதற்கான தெய்வத்திருமேனிகளை கயிலைமணி சிவத்திரு பி.கே.சம்பந்தன் (வடபழநி) வழங்கினார். சோமநாதன் மடம் திருப்புகழ்க் கல்வெட்டைக் குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தார் பதித்தார்கள். சோமநாதன் மடம் பற்றிய தலவரலாற்றுக் கல்வெட்டுடன் அருணகிரிநாதர், சோமநாதர் ஆகியோரின் சிலா விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்று 8.7.2012 அன்று மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக யாகசாலை பொறுப்பை ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர்’ ஏற்று நடத்தினர். கும்பாபிஷேகத்தின் முதல்நாள் இரவு பெரும் மழை பெய்தது. அருணகிரியார், சோமநாதர் ஆகியோரின் குருவருளால் ஏற்றுக் கொண்ட பொறுப்பை நன்கு நிறைவேற்றி மகிழ்ந்தோம். இத்தலத்தில் அருளும் வித்யாபதீஸ்வரர் எல்லா வித்தைகளுக்கும் கலைகளுக்கும் அதிபதியாவார். எழுத்து வடிவமான அம்பிக்கை அட்சரவல்லி, இங்கு சிவபெருமானிடம் எல்லா வித்தைகளும் உபதேசிக்கப் பெற்றாள். அட்சரவல்லி சமேத வித்யாபதீஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் உள்ளதாகத் தெரியவில்லை

இத்தலத்து அம்பிகையும் இறைவனும் நாமெல்லாம் கல்வி கேள்விகளில் சிறந்து திகழ அருள்பாலிப்பவர்கள். அத்துடன், பேச்சுவராத நிலை, திக்குவாய் போன்ற குறைபாடுள்ள குழந்தைகளை இங்கு அழைத்து வந்து வழிபாடு செய்தால், அந்தப் பிரச்னைகள் நீங்கும்.

அதுமட்டுமல்ல! மனித வாழ்வில் ஏற்படும் விரோதம், அகப்பகை, புறப்பகை நீங்கும்படி, இத்தலத்து முருகனிடம் அருள வேண்டுகிறார் அருணகிரிநாதர். ஆம்! நீதிமன்ற வழக்குகளில் நியாயம் உள்ளவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் வெற்றிவேலன் இந்தத்தலத்து கந்தக் கடவுள் ஆவார். இத்தலத்துக்கு வந்து அன்புடன் வழிபாடு செய்வோர்க்கு அறிவாற்றல் பெருகும், விரோதம் அழியும், பக்தி வளரும், புகழ் பெருகும்; இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

- காண்போம்...

திருப்புகழ்

ஒருவழிபடாது மாயை இருவினைவிடாது நாளும்

உழலும் அநுராக மோக அநுபோகம்

உடலும் உயிர் தானும் மாயும் உணர்வில் ஒருகால் இராத

உளமு நெகிழ் வாகுமாரு அடியேனுக்(கு)

இரவு பகல் போன ஞான பரமசிவ யோகதீரம்

எனமொழியும் வீசு பாச கனகோப

எமபடரை மோது மோன உரையில் உபதேச வாளை

எனது பகைதீர நீயும் அருள்வாயே

அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை

அடைவு தவறாது பேணும் அறிவாளன்

அமணர் குலகாலனாகும் அரியதவராஜராஜன்

அவனி புகழ் சோமநாதன் மடமேவும்

முருக! பொரு சூரர் சேனை முறியவட மேருவீழ

முகர சலராசி வேக முனிவோனே.

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு

முனிய அறியாத தேவர் பெருமாளே.

- அருணகிரிநாதர்.