Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 20

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 20

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

`வெள்ளிநகர்' என்று அருணகிரிநாதர் போற்றும் வெள்ளிகரம் திருக் கோயிலில் பிராகார வலம் வந்துகொண்டிருந்தோம் அல்லவா! தெற்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபம் வழியாக கோயிலின் உள்புறம் சென்று, மகா மண்டபத்தில் ஒருபுறத்தில் அருள்பாலிக்கும் கணபதியை தரிசித்தோம். மறுபுறத்தில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார் ஒருவர். அவர்தான் கண்ணப்ப நாயனார். அவர் அளித்த (எச்சில்) உணவை ஏற்றுக்கொண்ட காளத்திநாதர், தம் கண்ணில் குருதி ஒழுகவைத்து லீலை புரிந்தார் என்பதை இத்தலத் திருப்புகழில் அருணகிரியார் ஓவியமாக வரைகிறார்!

கந்தன்
கந்தன்

விநாயகருக்கு வலதுபுறம் ஆறுமுகனின் அற்புதமான வடிவம், பன்னிரு கரங்களில் ஆயுதங்களுடன் மயில்மீது அமர்ந்த கோலம் மிக மிக அழகு. இந்த சண்முகர் ஒருகாலத்தில் ஊர் எல்லையில் தனிக்கோயிலில் திகழ்ந்தவர். (அக்கோயில் தற்போது முள் செடிகளாலும் மரங்களாலும் சூழப்பட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அதேபோல வயல்வெளியில் பழுதடைந்த பிரசன்ன விநாயகர் கோயிலும் முத்தீச்வரர் கோயிலும் உள்ளன).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருவறை அரைவட்ட வடிவில் கஜப்ருஷ்ட அமைப்பில் உள்ளது. மூலவர் பதினாறு பட்டைகளுடன் கூடிய க்ஷோடச தாராலிங்கம்; பிருத்வீச்வரர் என்ற பெயருடன் அருள்கிறார். இக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி யைச் சற்று அசைபோட்டு பார்க்கும்போது, அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன.

கந்தன்
கந்தன்

காஞ்சியில் ராஜசிம்மப் பல்லவன் கட்டிய கயிலாயநாதர் கோயில், புகழ்பெற்ற சிற்பக் கருவூலம். அந்தக் கோயிலில் சிவ லீலைகளைச் சித்திரிக்கும் அற்புதமான சிற்பங்களை அவன் உருவாக்கியதுடன், பதினாறு பட்டைகளுடன் கூடிய தாராலிங்கத்தைக் கருவறையில் பிரதிஷ்டை செய்தான். லிங்கத்தின் பின்புறம் கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தரை வடித்தான். கயிலைமலை போன்று விமானம் உயர்ந்து தோன்றும் இக்கோயிலை ‘தென் கயிலாயம்’ என்று அனைவரும் அழைப்பர்.

ராஜசிம்மன் ஒருமுறை தனது ஆளுகைக்கு உட்பட்ட வடபகுதிக்குத் தன் பரிவாரங்களுடன் விஜயம் செய்தான். அவன் முகாமிட்டிருந்த இடம் அற்புதமான சூழலில் மலையும், வயல்களும், சோலைகளும், நீரோடையும் நிறைந்த மிகவும் ரம்யமான பகுதியாகும்.

அன்று சித்திரா பௌர்ணமி நன்னாள். மலையும் ஊரும் வெண்நிலவின் கிரணங்கள் பட்டு வெள்ளிமயமாகப் பிரகாசத்துடன் காட்சி யளித்தன. கயிலைமலைக்கு வெள்ளிமலை என்றும் பெயரல்லவா. மன்னவன் முகாமிட்டிருந்த இடத்திலுள்ள மலைக்கும் ‘ரஜதகிரி’ (வெள்ளி மலை) என்று பெயர். ஊரின் பெயரும் வெள்ளிகரம் என்னும் வெள்ளிநகர்.

`ஆஹா... என்ன பொருத்தம்' - பல்லவ அரசன் சிந்தனையில் பரவசமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. இந்த வெள்ளிநகரில் கயிலைநாதனுக்கு ஒரு கோயில் அமைக்கவேண்டும் என்று அன்றிரவே தீர்மானித்தான். அதுவும் காஞ்சியில் கயிலாசநாதர் கோயிலில் உள்ளதுபோல் பதினாறு பட்டையுடன் கூடிய தாராலிங்க வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யவேண்டும். அப்பெருமானைப் பஞ்ச பூதத் தலங்களில் மண் (பிருத்வி) தலமான தமது காஞ்சியை நினைவுகூரும் வகையில், பிருத்வீச்வரர் என்று அழைக்கவேண்டும் எனத் தீர்மானித்து வெள்ளிகரத்தில் திருக்கோயில் நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டான். அடுத்த ஆண்டு அதே சித்ரா பௌர்ணமி நன்னாளில் கும்பாபிஷேகம் செய்து, அடியார்களுக்கு அன்னம்பாலித்து வெள்ளிமலை வள்ளலையும் வெள்ளிகரம் மக்களையும் குளிர்வித்தான்.

பச்சை கலந்த வெண்மையுடன் திகழும் பிருத்வீச்வரரின் லிங்க வடிவழகை எப்படி வருணிப்பது... சந்திரனின் பதினாறு கலைகளும் பதினாறு பட்டைகளாகக் கொண்டுள்ளதால் இதை ‘சந்திரகலா லிங்கம்’ என்றும் அழைப்பர். இவ்வகை லிங்கத்தை வழிபடுவோர் இறைவனோடு இரண்டறக் கலக்கும் தன்மையைப் பெறுவர். இதை ‘சாயுஜ்ய லிங்கம்’ என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன. இவ்வகை லிங்கங்களை அமைக்கக் குளிர்ச்சிமிக்கக் கல்லைத் தேர்ந்தெடுத்துப் பல்லவ அரசர்கள் வடிவமைத்தனர். இத்தகைய தாராலிங்கங்களை உச்சிவேளையில் தொட்டாலும் சில்லென்று குளிர்ச்சியாக இருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கைக் குளம் அருகில் உள்ள நவலிங்கக் கோயிலின் மையத்தில் அமைந்துள்ள தாராலிங்கம், காஞ்சி கயிலாசநாதர் கோயில் தாராலிங்கம், பழமண்ணிப் படிக்கரை (இலுப்பைப்பட்டு) கோயிலில் பீமன் பூஜித்த தாராலிங்கம், பழையாறை மேற்றளியில் திகழும் தாராலிங்கம் ஆகியவை இதேபோன்று அமைந்திருக்கும்.

பட்டைகளைத் தீட்டி தாராலிங்கங்களை பல்லவ அரசர்கள் மட்டுமே சிறப்பாக அமைத்துள்ளனர். இவ்வகை லிங்கங்களின் மீது தாரா பாத்திரத்தை வைத்து அபிஷேகம் செய்யும்போது, அந்தத் தீர்த்தம் பட்டைகளின் வழியே பல திசைகளாகப் பிரிந்து வழிந்தோடுவது இன்பம் பயப்பதாகவும் இறைவன் இன்னருள் சுரப்பதாகவும் திகழும். பிருத்வீச்வரப் பெருமானின் இந்தத் தாராலிங்கத்துக்குத் திங்கள்கிழமை மற்றும் பௌர்ணமி நாள்களில் சாயரட்சை வேளையில் அபிஷேகம் செய்து, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவோர், பதினாறு வகை பேறுகளையும் எளிதில் பெற்று இன்பமாக வாழ்வர் என்று புராணங்கள் இயம்புகின்றன.

வடக்குத் திருச்சுற்றில் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் உலகீன்ற பச்சை உமையம்மை, பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் புவனேஸ்வரி அம்பிகையாக அருள்காட்சி வழங்குகிறாள்.

பிருத்வீச்வரப் பெருமானுக்கு மிகவும் பொருத்தமாக எங்கும் வியாபித்து புவனத் தைப் படைத்து, காத்து அருளும் அருள்சக்தி இந்த அம்பிகை. வடக்குப் பிராகாரத்தில் சண்டேசர் மிகப்பெரிய திருமேனியுடன் விளங்கு கிறார். ஈசான்ய திசையில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலஸ்தானக் கருவறையின் வெளிப்புறம் கஜப்ருஷ்டமாக இருந்தது. திருப்பணி என்ற பெயரில் ஒரு சிவில் இன்ஜினீயர் - ரசனையற்றவர் கலையழகைக் குலைத்து இதைச் சுற்றிலும் கருங்கற்களை ஒட்டி செவ்வக வடிவில் மாற்றியுள்ளதைப் பார்க்கும் போது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.

இங்குள்ள ரஜதகிரி என்னும் வெள்ளி மலையின் மேல், சந்திரன் வழிபட்ட சோமநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ‘அடலரி மகவு’ என்று தொடங்கும் இத்தலத் திருப்புகழில்,

`விடதர திகுண ரசசிதர் நிமலர்

வெள்ளிமலைச் சுயம்பு குருநாதா'

என்று பாடுகிறார் அருணகிரியார். `விஷத்தை கண்டத்தில் தரித்தவர்; மேம்பட்ட சிறந்த குணத்தைக் கொண்டவர்; சந்திரனைச் சடையில் தரித்தவர்; பரிசுத்தர்; வெள்ளிமலையில் வீற்றிருக் கும் சுயம்பு...’ என்று கருத்துடைய பாடல் இது.

மேலும் ‘பூமியதனிற் ப்ரபுவான...’ என்று தொடங்கும் திருப்புகழ் (இதனைக் கயிலை மலைக்குரியதாகக் கொண்டாலும்) ‘ரஜதகிரிப் பெருமாளே’ என்று முடிகிறது. இம்மலைக்கும் அதே பெயர்தானே. ஆக, இந்தத் திருப்புகழையும் இதற்குரியதாகக் கொள்ளலாம் அல்லவா!

மலைக்கோயிலில் உள்ள அம்பிகையின் பெயர் மரகதவல்லி. மலைக்கு மேல் செல்ல படிகள் உள்ளன. இங்கு பௌர்ணமி தோறும் அடியார்கள் கிரிவலம் வருகின்றனர். மலையின் மேல் முருகனின் பாதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் கோயில், ராமர் கோயில் (பஜனை கோயில்) மற்றும் விநாயகர் கோயிலும் உள்ளன. இவ்வூரைச் சுற்றிலும் உள்ள மக்களோடு வெள்ளிகரம் மக்களும் சேர்ந்து நகரி ஆற்றங்கரையில் உள்ள தர்மராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழா நடத்துகின்றனர்.

ஒரு காலத்தில் கார்வேட்டி நகர் ஜமீன்தார்களால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்துவந்துள்ளது. 2007-ம் ஆண்டு, மீண்டும் வெள்ளிகரம் சென்று வந்தோம். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளின் சீடர் பி.எஸ்.கிருஷ்ணய்யரின் குமாரர் கயிலைமணி பி.கே. சம்பந்தமும் வந்திருந்தார். அவர் இந்தக் கோயிலின் முருகன் சந்நிதியைப் புதிதாகக் கட்டலாம் என்று தீர்மானித்தார்.

- காண்போம்...