Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 21

தேவியருடன் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
தேவியருடன் முருகன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கும்பாபிஷேகம்... பல்லவ போஜனம்!

வெள்ளிநகர் கோயிலில் முருகன் சந்நிதியைப் புதிதாகக் கட்டலாம் என்று கயிலைமணி பி.கே.சம்பந்தம் விருப்பம் தெரிவிக்க, ஏற்கெனவே அந்தக் கோயிலிலுள்ள சந்நிதியை இடிக்காமல், அதற்கு அருகில் புதியதாக முருகன் சந்நிதி கட்ட ஏற்பாடு செய்தோம்.

காமத்தூர் சிவாலயம்
காமத்தூர் சிவாலயம்

பழைய சந்நிதியில் அருணகிரிநாதரைப் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டோம். இதனிடையே விநாயகர் சந்நிதியும் மிகத் தாழ்வாக உள்ளதே என்று அதையும் புதிதாகக் கட்ட முற்பட்டோம். அதேபோல சண்டேஸர் சந்நிதி, சுவாமி, அம்பாள் கோயில் விமானத் திருப்பணி, கோஷ்டமூர்த்தங்களுக்கான சந்நிதி என அனைத்தையும் நிறைவு செய்தோம். பல திருப்புகழ் சபைகளோடு தொடர்புகொண்டு, அவர்களின் பங்களிப்போடு வெள்ளிகரம் தலத்துக்கான ஒன்பது பாடல்களையும் தல வரலாற்றையும் கல்வெட்டில் பதித்தோம்.

சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவின் முயற்சியால், 13. 2. 2009 அன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் அருணகிரிதாசன் முனைவர் ம. ராமகிருஷ்ணன் இத்தலத்தின் வரலாறு, திருப்புகழின் பெருமைகள் ஆகியவற்றைத் தெலுங்கு மொழியில் உரையாற்றி உள்ளூர் மக்களை மகிழ்வித்தார்.

வெள்ளிமலை முருகன்
வெள்ளிமலை முருகன்

அன்னதானப் பொறுப்பை நம் குழுவின் நளபாக நாயகர்களான வி.சுப்பிரமணி, கே.ராஜா, வீ.முரளீதரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சுவையான அமுதை வழங்கி (பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்மப் பல்லவன் காலத்தில் நடைபெற்றது போல) அனைவரையும் மகிழ்வித்தனர்.

இத்திருக்கோயிலில் விநாயகர், உமாசகிதர், சண்டேஸ்வரர், அஸ்திரதேவர், ஸ்ரீதேவி - பூதேவி சமேத விஜயராகவர் முதலான அனைத்து உற்சவமூர்த்தி விக்கிரகங்களும் உள்ளன. ஆனால், முருகன் சிலை இல்லை.

கும்பாபிஷேகத்தின்போது சித்தூரில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் 50,000 ரூபாயை நன்கொடையாக அளித்தனர். இத்தொகையை சாஸ்வதமாக உள்ள ஏதாவது ஒன்றுக்குப் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்தபோது, முருகப்பெருமான் உற்சவமூர்த்தியைச் செய்துவைக்கலாம் எனத் தோன்றியது. அதன்படி சுவாமிமலை தேவசேனாபதி ஸ்தபதியாரின் குமாரர்கள் மூலம் முருகன், வள்ளி விக்கிரகங்களை வடித்து மண்டலாபிஷேக பூர்த்தியன்று அதைப் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தோம்.

முருகன்
முருகன்

காமத்தூர் ஆடல்வல்லான்!

`பாகொத் தேசொற் பாகத்தாளை

பாரித் தார்நற் குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீல

பாலத் தேவப் பெருமாளே.'

‘வெல்லப்பாகுக்கு ஒப்பான இனிமை கொண்ட சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் பூரித்த நல்ல குமரேசனே!

இப்பூமியில் காமத்தூர் என்னும் தலத்தில் சீலம் நிறைந்த பாலகனே, தேவப் பெருமானே...’ என்று அருணகிரியார் காமத்தூர் முருகனைப் பாடி இன்புறுகிறார்.

‘ஆகத்தே தப்பாமல்...’ என்று தொடங்கும் இத்திருப்புகழ், அகப்பொருள் - நற்றாயிரங்கல் துறையில் அமைந்தது. தணிகைமணி அவர்கள் தமது திருப்புகழ் உரை நூலில் இத்தலத்தை இடம் விளங்காத் தலம் என்று காட்டுகிறார். எனினும், ‘அருணகிரிநாதர் வரலாறும் தல ஆராய்ச்சியும்’ என்னும் நூலில் ‘திருவோத்தூர் (தற்காலத்தில் செய்யாறு என்றழைக்கப்படும்) தலத்தை அடுத்து இதை தரிசித்துப் பிறகு காஞ்சிபுரம் திரும்பினார்’ என்று குறிப்பிடுகிறார்.

இளம்பிறை நாயகர், ஸ்ரீ காமாட்சி
இளம்பிறை நாயகர், ஸ்ரீ காமாட்சி

திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடி திருவோத்தூர் திருக்கோயிலிலிருந்த ஆண் பனை மரத்தைப் பெண் பனையாக மாற்றிய லீலையை அத்தலத் திருப்புகழில் பாராட்டிப் போற்றுகிறார் அருணகிரியார்.

காமத்தூர் என்ற பெயர்கொண்ட தலத்தை தமிழ்நாட்டில் உள்ள கிராம அகராதி பெயர்ப் புத்தகத்தில் காண இயலவில்லை. ஒரு நாள் மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் நூலகம் சென்றேன். அங்குள்ள நூல்கள் பெயர் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ‘காமக்கூர் எனும் காமநகர்ப் புராணம்’ என்ற புத்தகம் இருந்ததைக் கண்டேன். அந்நூல் 1831-ம் ஆண்டு வெளிவந்தது. ஆரணி ஜாகீர் காமக்கூர் மங்களக் கவிராயர் கந்தப் பிள்ளையவர்கள் எழுதிவைத்திருந்த ஏட்டுப் பிரதியை அவ்வூர் தமிழ்ப் பண்டிதர் மு.சுந்தர முதலியார் என்பவர் பரிசோதித்து, க.சுந்தரப்பிள்ளை, பு.அப்பு முதலியார், பா.சுபானுகிரி ஆகியோர் முயற்சியால் பதிக்கப்பட்டுள்ளது. வசன நடையில் அமைந்த இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பெரியோர்கள் பலரும் இத்தலத்தைக் காமநகர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

காமநகர்ப் புராணம் வரலாற்றுடன் சேர்ந்து பத்து சருக்கங்களைக் கொண்டுள்ளது. இத்தல மூர்த்தியான சந்திரசேகர சுவாமி எனும் இளம்பிறை நாயகர், அமிர்தவல்லி அம்பிகை வாழ்த்துப் பாடல்களில் ‘காமநகர்’ என்றும் ‘காமபுரி’ என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆக, அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ள காமத்தூர் இந்தக் காமக்கூராக இருக்கலாம் என எண்ணினேன். மேலும் தணிகைமணி அவர்களும் ‘செய்யாறு அருகில் இந்தத் தலம்’ என ஒரு குறிப்பைக் காட்டுகிறார். எனவே, நேரில் சென்று கோயிலை தரிசித்துத் தகவல் சேகரிக்கலாம் எனத் திட்டமிட்டேன். காமக்கூர் சந்திரசேகர சுவாமி திருக்கோயில் சிவாசார்யருக்குக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பதில் வந்தது. ‘நீங்கள் வந்து ஆராய்ச்சி செய்வதற்கு இக்கோயிலில் எதுவும் இல்லை; எனவே வர வேண்டாம்’ என்று எழுதியிருந்தார். ‘திருப்புகழ் தல ஆராய்ச்சி’ என்றவுடன் அவர் மனத்தில் என்ன தோன்றியதோ எனக்குப் புரியவில்லை. எனவே ‘எதற்கும் நேரில் சென்று பார்த்து வரலாமே’ என்று எண்ணினேன்.

தேவியருடன் முருகன்
தேவியருடன் முருகன்

1979-ம் ஆண்டு, ஒருநாள் காலை சென்னையி லிருந்து புறப்பட்டு ஆரணி சென்றேன். ஆரணியி லிருந்து படவேடு செல்லும் வழியில் ஆறாவது கிலோமீட்டரில் பாளயம் என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காமக்கூர். ஆரணி - சம்புவராயநல்லூர் வழிக்கு பஸ் வசதி உள்ளது. என் நண்பர் எஸ்.நாராயணசாமியும் உடன் வந்தார். ஆரணியிலிருந்து காமக்கூர் சென்றடையும்போது உச்சிப்பொழுதாகி விட்டது. நடுப்பகலில் ஆகாசவாணி செய்தி தேநீர்க்கடை ரேடியோவில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. குருக்கள் இல்லத்துக்குச் சென்றோம். எங்களை மேலும் கீழும் பார்த்தார். வரக்கூடாத அல்லது விருப்பமில்லாத விருந்தாளியைக் கண்டதுபோல் அவர் முகம் இறுகியது.

‘நீங்கள் ஃபோட்டோ எதுவும் எடுக்கக் கூடாது’ என்று ஆணையிட்டார்.

‘எங்களிடம் அதற்கான கருவிகள் எதுவும் இல்லை; சுவாமி தரிசனம் செய்யத்தான் வந்தோம்’ என்று சொன்னேன்.

சதுர தாண்டவர்
சதுர தாண்டவர்

வேண்டா வெறுப்பாக உடன் வந்து கோயிலைத் திறந்து ஒவ்வொரு சந்நிதியாகக் காட்டினார். எம்பெருமான் சந்திரசேகர சுவாமி அவரது மனத்தில் குளிர்ச்சியைத் தந்தாரோ என்னவோ தெரியவில்லை. நேரம் ஆக ஆக விருப்பமுடன் ஆர்வமாகப் பேசத் தொடங்கினார்.

கோயிலின் முன்புறம் பெரிய ராஜகோபுரம் உள்ளது. கொடிமரமும் பலிபீடமும் தாண்டி வெளிமண்டபத்தில் நின்ற கோலத்தில் அதிகார நந்தியை தரிசிக்கலாம். உள்ளே மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லானின் அற்புதத் திருமேனியைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். இடக்காலை முயலகன் மேல் ஊன்றி, வலக்லை இடக்காலின் பின்புறம் பின்னிய நிலையில் வைத்துத் திகழும் சதுர தாண்டவ அமைப்பு இது. முன் வலக்கரம் அபய முத்திரையும் முன் இடக்கரம் (பெண் பாகமாதலால்) உமையின் கரம்போல் நளினமாகத் தொங்கிய கோலம். பின் வலக்கரத்தில் டமருகம்; பின் இடக்கரத்தில் அக்னி; வலக்கரத்தில் பாம்பணி திகழ, விரித்த சடை ஜடாமகுடம் சுவாமிக்கு. முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாட, அருகில் திகழும் சிவகாமியைப் பார்த்து இன்பமுற மகிழ்கூர ஆடும் அந்த ஆடல்வல்லானின் அழகுத் திருமேனியை எப்படி வர்ணிப்பது? சோழர் காலத்துப் பஞ்சலோகப் படிமம். மிகவும் நேர்த்தியான கலைப் படைப்பு!

மூலஸ்தானத்தின் முன்புறம் துவார பாலகர்கள் சுமார் பத்து அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றனர். கருவறையில் சந்திரசேகரர் என்னும் இளம்பிறை நாயகர் மிகப்பெரிய லிங்கத் திருமேனியுடையவர். சுயம்புமூர்த்தியான இவருக்கு சுயம்பு நாதேஸ்வரர் என்னும் திருப் பெயரும் உண்டாம். வெளிமண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அமிர்தவல்லி என்னும் அமிர்தாம்பிகை அருள்பாலிக்கிறாள்.

வெளிச்சுற்றில் தென் மேற்கில் விஜய விநாயகர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறம் ஆறுமுகப் பரமன் பன்னிரு கரங்களுடன் மயில்மேல் அழகாகக் காட்சியளிக்கிறார். பின்புறம் திருவாச்சியுடன் அற்புதமான வேலைப்பாடு. இருபுறமும் வன மாதும் தேவ மாதும் எழிலுடன் விளங்குகின்றனர். மயிலின் முகம் வடக்கு நோக்கியுள்ளது. இங்குள்ள முருகன் உற்சவர், ஒருமுகம், நான்கு கரங்களுடன் தேவியர் சூழ திகழ்கிறார்.

இத்திருக்கோயிலில் வடமேற்கில் அமைந்துள்ள காமாட்சியம்பிகை சந்நிதி மிகவும் விசேஷ மானது. காமேஸ்வரியும் காமரூபிணியும் காமவர்த்தினி யுமாகிய காமாட்சியம்பிகை இங்கு அற்புதமான சாந்நித்தியத்துடன் அருள்புரிவதால் இத்தலம் காமத்தூர், காமபுரி என்று பெயர் ஏற்பட்டு, பிறகு காமக்கூர் என்று மருவி அழைக்கப் படலாயிற்று. தலபுராணத்தில் திரிபுர சுந்தரி என்று காணப்பட்டாலும் காஞ்சியிலுள்ள காமாட்சியின் திருவுருவைப் போல்தான் அருள்புரிகிறாள். அமர்ந்த கோலத்தில் வலது முன் கையில் பாசாங்குசமும், இடது முன் கரத்தில் நீலோத்பவமும் கரும்பு வில்லும் கொண்டுள்ள எழிற்கோலம் ரம்மியமாக உள்ளது. முன்புறம் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை உள்ளது. பிராகாரத்தில் சிம்ம வாகனம். ஒட்டுமொத்தத்தில் இந்த அம்பாளின் சந்நிதியை தரிசிக்கும்போது, ஒரு காலத்தில் ‘சக்திலோகம்’ போன்று அம்பிகையின் அருள் வெள்ளம் எல்லாத்திசைகளிலும் பரவித் திகழ்ந் ததை உணர முடிகிறது.

காஞ்சியிலுள்ள காமபீடம் போன்று இச்சந்நிதி அமைந்த காரணத்தால்தான், காமாட்சிக்குத் தொடர்புடைய தலப்பெயர் அமைந்தது என்று அறியமுடிகிறது. இங்கு வெள்ளிக்கிழமை, பௌர்ணமி மற்றும் நவராத்திரி சிறப்பு நாள்களில் விசேஷ அபிஷேக அலங்காரத்துடன் திரிசதி அர்ச்சனை வழிபாடு செய்வோர், சகலவிதமான பேறுகளையும் பெறுவர். ஒரு மண்டலம் சுத்தமான நெய்விளக்கேற்றி வழிபடுவோர்க்கு மனக்கவலையும், சங்கடங்களும் நீங்கி இனிய இல்லறம் வாய்க்கும். நம்பிக்கை மிகவும் அவசியம். இச்சந்நிதியின் முன்புறம் உள்ள துவாரபாலகி ஓசை நாயகியாக சப்த ஜாலங்களை வெளிப்படுத்துவது அற்புதம்!

பிராகாரத்தில் சஹஸ்ரலிங்கத்தையும், சண்டேசரையும் தரிசித்து வலம் வரும்போது தலவிருட்சமான மகிழ மரத்தைக் காணலாம். அதன்கீழ் மூன்று கருங்கல் குண்டுகள், அழகாக உருட்டித் தயாரித்துவைத்ததுபோல் வழவழவென்று காணப்படுகின்றன. 50 கிலோ எடைக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். இதற்கு ‘மாப்பிள்ளைக் கல்’ என்று பெயர் என்றார் குருக்கள். அப்படியென்றால் என்ன என்று கேட்டோம்.

அக்காலத்தில் இக்கருங்கல் குண்டு ஒன்றைத் தோளில் தாங்கி எவர் சுற்றி வருகிறாரோ அவருக்கே அந்த ஊரில் திருமணத்துக்குப் பெண் கொடுப்பார்களாம். அந்த ஊருக்கு மணமகனாக வருபவர் பலசாலியாகவும் நல்ல உடற்கட்டும் உள்ளவராக இருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். இப்போதும் இவ்வூரில் ஒரு சிலர் அதைத் தூக்கி தோளில் வைத்து வலம் வருவது உண்டு என்றார். (அப்போது எனக்குத் திருமணமாகி விட்டது. நண்பன் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான். ‘நீ முயற்சி செய்து பார்; இந்த ஊரில் பெண் கிடைக்கும்’ என்றேன் வேடிக்கையாக. ஓரிரு ஆண்டுகள் கழித்து சென்னையிலிருந்து முருகன் திருவருட்சங்கத்தினரோடு யாத்திரை வந்தபோது இவ்வூர் இளைஞர் ஒருவர் கல் குண்டை தூக்கித் தோளில் வைத்துக் காட்சி கொடுத்தது நினைவில் உள்ளது.)

கோயில் தரிசனம் முடித்த பின் சிவாசார்யார் தமது இல்லத்தில் உணவருந்திச் செல்லுமாறு உபசரித்தது மறக்க முடியாதது.

கோயிலுக்கருகில் கமண்டல நதி என்னும் காமநதி செல்கிறது. இத்தலத்தில் வழிபாடு செய்தவர்களில் முருகப் பெருமான், விவஸ்வான் என்னும் சூரிய குல அரசன், ஜெயங்கொண்டசோழன், அமணன் முதலானோர் பற்றித் தலபுராணம் விவரிக்கிறது. ரதிதேவி இங்கு இறைவனைப் பூஜித்து அவள் கணவன் மன்மதனைக் காணும் வரம் பெற்றாள்.

காமாட்சியம்மை அருளும் தலம், காமனின் மனைவி வழிபட்டு அருள்பெற்ற தலம்... இந்தக் காரணங்கள் மட்டுமன்றி இவ்வூரின் பெயருக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.

- காண்போம்...