மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 22

இளம்பிறை நாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
இளம்பிறை நாயகர்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

அர்ஜுனன் வழிபட்ட காமத்தூர்!

ரணியிலிருந்து படவேடு செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவிலுள்ளது பாளயம் எனும் ஊர். இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள காமக்கூர் எனும் தலமே திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடும் காமத்தூராக இருக்கக்கூடும் என்று எண்ணியதோடு, அந்தத் தலத்தை நேரில் சென்றும் தரிசித்தோம். அந்த அனுபவத்தை சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தோம்.

காமாட்சியம்மை அருளும் தலம், காமனின் மனைவி வழிபட்டு அருள்பெற்ற தலம்... இந்தக் காரணங்கள் மட்டுமன்றி, இவ்வூரின் பெயருக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 22

காமகோடி எனும் ருத்திர கணிகைக்கு இறைவன் அருள்புரிந்ததால், இத்தலத்துக்குக் காமகோடிபுரம் என்று பெயர் வந்ததாகதல புராணம் குறிப்பிடுகிறது.

அர்ஜுனன் தனது தல யாத்திரையின்போது இங்கு வந்து நீராடி வழிபட்ட திருக்குளம், தற்போது தாமரைக்குளம் என்றழைக்கப்படுகிறது. அவன் வழிபட்ட சிவலிங்கம் இருந்த சிற்றாலயம் தற்போது இல்லை. ஆனால், சிவலிங்கத் திருமேனி மட்டும் உள்ளது.

தென்னாட்டில் நான்கு வேதங்களையும் முறை யாகக் கற்றுணர்ந்த சதுர்வேத சர்மா என்னும் அந்தணன், தினமும் முத்தீ வளர்த்து தர்ம சாஸ்திரப்படி இல்லறம் நடத்திவந்தான். இந்நிலையில் அவன் தந்தை சிவபதம் அடைந்தார். அவருடைய எலும்புகளை ஒரு பானையிலிட்டு காசிக்குச்சென்று கங்கையில் அவற்றைக் கரைக்கத் திட்டமிட்டுக் கிளம்பினான்.

தன்னுடன் துணைக்கு ஒருவனையும் அழைத்துக்கொண்டான். அவனிடம் அந்தப் பானையில் உள்ள பொருள் என்ன என்பதைச் சொல்லவில்லை. யாத்திரையில் சீர்காழி, சிதம்பரம், திருவண்ணாமலை முதலான தலங்களை தரிசித்துவரும் வழியில் இந்தக் காம நகரத்தை அடைந்தான்.

இளம்பிறை நாயகர்
இளம்பிறை நாயகர்

இங்குள்ள சிவாலயத்தை வழிபட வேண்டி, தாம் கொண்டுவந்த பானையை ஒரு மரக் கிளையில் தொங்கும்படிக் கட்டிவிட்டுத் தன்னுடன் வந்தவனிடம் அதை கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படிக் கூறிவிட்டு நீராடச் சென்றான்.

உடன் வந்தவனுக்கு, `பானையில் என்ன இருக்கிறது' என்று பார்த்துவிடவேண்டுமென்ற ஆவல். ஆகவே, மரத்திலேறி அந்தப் பானையைத் திறந்துபார்த்தான். அந்தப் பானைக்குள் அலரி மலர்கள் நிறைய இருந்தன. சதுர்வேத சர்மா நீராடி ஜப தபங்களை முடித்து வந்ததும், அவனிடம் பானைக்குள் அலரி மலர்கள் இருப்பதைத் தெரிவித்தான். சர்மா நம்பவில்லை; தானும் பானையைத் திறந்து பார்த்தான். உள்ளே அலரிப் பூக்கள் இருந்ததைக் கண்டு வியந்தான். அப்போது ஓர் அசரீரி ‘இந்தத் தலம் மகா புனிதமான காசிக்கு நிகரானது. இங்குள்ள கமண்டல நதியில் இந்த மலர்களைச் செலுத்திவிடு. கங்கையில் செலுத்திய புண்ணியம் உண்டாகும்' என்று ஒலித்தது.

சர்மாவின் உடல் சிலிர்த்தது. இவ்வளவு புனிதம் வாய்ந்த இந்தத் தலத்தில் இறைவன் தனக்கு அளித்த பேரருளை எண்ணி இன்புற்று அந்தப் பானையிலுள்ள மலர்களைக் கமண்டல நதியில் சேர்த்ததுடன், சந்திரசேகர பெருமானை வழிபட்டு பேறுபெற்றான் என்கிறது தலபுராணம்.

இதம் காமபுரீ சாதி விஸ்வே ஸோ சந்திர சேகர:

கமண்டல நதி கங்கா அமிர்தாம்பா அன்னபூர்ணிகா:

என்று தல புராண ஸ்லோகம் குறிப்பிடுகிறது. இத்தலத்தில் இறந்தவர்களுக்கான (பித்ரு) காரியங்களைச் சிரத்தையுடன் செய்தால், காசியில் செய்த புண்ணியமும் பலனும் கிடைக்குமாம்!

சோழர் காலத்துக் கட்டட அமைப்பைக் கொண்ட இத்திருக்கோயில் நன்கு திருப்பணி செய்யப்பெற்று பராமரிக்கப்படுகிறது. சமீபத்தில் நண்பர்கள் ஆரணி சதீஷ், அரங்கராஜன், உபேந்திரன் ஆகியோருடன் தரிசனத்துக்குச் சென்றேன். நாற்பதாண்டுகளுக்குப் பிறகு காணும் போது பழைய நினைவுகளுடன் வலம் வந்தேன்.

குறிப்பாக காமத்தூர் திருப்புகழ்ப் பாடல் கல்வெட்டில் பதிக்கப்பெற்றிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இத்தலம், திருப்புகழ்ப் பாடல் பெற்ற தலம் என்று முருகனடியார்கள் வழிபாடு பெருகி வளரும் என்பதில் ஐயமில்லை (தொடர்புக்கு: மணிகண்ட குருக்கள் - 94865 19555, 90872 25939).

திருவிடைக்கழி தரிசனம்!

ண்டன் பி.பி.சி (British Broad Casting Corporation)யில் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிய தமிழறிஞர் சோ.சிவபாதசுந்தரம் மிகச் சிறந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்னும் சைவ சமய வித்தகரின் மாணாக் கரின் மாணாக்கர். இவரின் தந்தை சைவப் புலவர் சோமசுந்தரம் பிள்ளை. சிவபாதசுந்தரம் 1947–ல் ‘மணிவாசகர் அடிச் சுவட்டில்’ என்ற நூலையும் 1971–ல் ‘கௌதம புத்தர் அடிச்சுவட்டில்' என்ற நூலையும் எழுதிப் பிரபலமானவர்.

திருவிடைக்கழி திருக்கோயில்
திருவிடைக்கழி திருக்கோயில்

தொழில் அதிபர் அருட் செல்வர் நா.மகாலிங்கம் சிவபாத சுந்தரத்திடம் ‘சேக்கிழார் அடிச்சுவட்டில்’ என்ற நூலை எழுதும்படி வேண்டுகோள்விடுத்தார். தன் `சக்தி அறக்கட்டளை' மூலம் பிரயாண வசதிகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து 63 நாயன்மார்கள் பிறந்த ஊர்களுக்கும் நேரில் சென்று தகவல் திரட்டி அந்த யாத்திரை நூலை உருவாக்க உதவினார்.

‘சேக்கிழார் அடிச்சுவட்டில் - அறுபத்து மூவர் வரலாறும் யாத்திரையும்’ என்ற பெயரில் அந்த நூல் 14-4-1978 அன்று திருமயிலை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வெளியிடப் பட்டது. அந்த வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். மகாலிங்கம் அவர்கள் தன் உரையில் “இதைப்போன்று அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்; வள்ளலார் அடிச்சுவட்டில் முதலான நூல்களையும் உருவாக்க வேண்டும்” என்னும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு முந்தைய ஆண்டில்தான் அருணகிரி நாதர் சென்று தரிசித்த தலங்களைப் பற்றிய ஆய்வைத் தொடங்கி, தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியிருந்தோம். அவரது உரையைக் கேட்டு மிகவும் குதூகலம் அடைந்து அன்றே மகாலிங்கம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் அக்கடிதம் அவரது பார்வைக்குச் சென்றதோ என்னவோ? முருகப்பெருமான்தான் அறிவார்! ஆனால், 1998-ம் ஆண்டு டிசம்பரில் ‘அருண கிரிநாதர் அடிச்சுவட்டில் - திருப்புகழ்த் தலப்பயணம்’ நூலின் இரண்டாம் பதிப்பை திருமயிலை கபாலிச்சரத்தில் அருட்செல்வர் வெளியிட்டார் என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சி!

திருப்புகழ்த் தலபயண ஆய்வைத் தொடங்கிய 1977 முதல், பல தலங்களுக்கும் சென்று தகவல் சேகரித்து வந்த நிலையில், ஒரு ஞாயிறன்று காலையில், முதன்முறையாக திருவிடைக்கழி எனும் தலத்துக்குச் சென்றேன். திருக்கடவூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் தில்லையாடி வழியாக திருவிடைக்கழியை அடையலாம். பஸ், ஆட்டோ வசதிகள் உள்ளன. அங்கே கோயிலின் வெளிப் பிராகாரத்தின் வடமேற்கில், அருணகிரியார் பாடியபடியே குராமரம் ஒன்று நான்குபுறமும் கிளை விரித்து நிழல் தந்தபடி காட்சியளித்தது.

அம்மரத்தினடியில் அமர்ந்திருந்தார் ஒருவர். பச்சை வேட்டியும் கண்ணாடியும் அணிந்து, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், நெற்றியில் திருநீறு துலங்க தீர்க்கமான பார்வையுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு வணக்கம் தெரிவித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அந்த அடியார் அத்தலத்தில் அருமை பெருமைகளை விடாமல் சொல்லிக்கொண்டே போனார். யோசித்துப் பேசவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆற்று வெள்ளம்போல் பிரவாகமாக வந்து கொண்டிருந்தது. அவர், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் ஆறுமுக மங்கலமுடையார் என்னும் திருவருட்செல்வர்.

அவரது பேச்சு என்னை மிகவும் ஈர்த்தது. சென்னையில் முருகன் திருவருட்சங்கத்தின் சார்பில், அந்த வருடம் நடைபெறவுள்ள கந்தசஷ்டி விழாவில் ஒரு நாள் குராவடிக் குமரனைப் பற்றி சொற்பொழிவாற்ற அவரை ஏற்பாடு செய்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பலநூறு மாணவர்களை அழைத்துக்கொண்டு 1982-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் சிதம்பரத்திலிருந்து திருவிடைக்கழிக்குச் செல்லும்படி அவர் தொடங்கிவைத்த பாத யாத்திரைக்குச் சென்ற ஆண்டு 38-வது வருடமாகும். இந்தப் பாத யாத்திரையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொள்வது ஒரு மாபெரும் ஆன்மிக எழுச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருள்செல்வரின் மூலம் இத்தல மகிமை யைச் செவிமடுத்தது பெரும் பாக்கியமே!

- காண்போம்...

செல்வம் தருவார் பைரவர்!

சிவனாரின் வீர அம்சங்களில் ஒன்று பைரவ மூர்த்தம். பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்ததே பைரவர் அவதாரம். பிரம்மாவின் தலையை பைரவர் கிள்ளிய ஸ்தலம்தான் திருக்கண்டியூர். தஞ்சை- திருவையாறு பாதையில் உள்ளது.

சிவன் கோயிலில் தரிசனம் முடிந்ததும் சண்டிகேஸ்வரரை வணங்குவது போல் தவறாமல் பைரவரையும் வணங்க வேண்டும். பைரவரை வணங்கினால் சனீஸ்வரரின் பாதிப்பு குறையும். செல்வம் பெருகும். இழந்த பொருள்கள் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

- கே.அபர்ணா, தூத்துக்குடி