மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 25

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கருணை பொழி கிருபை முந்தப்

பரிவினொடு கவுரி கொஞ்ச

கலகலென வரு கடம்பத் திருமார்பா

கரிமுகவர் தமையன் என்றுற்

றிடும் இளைய குமர பண்பிற்

கனககிரி இலகு கந்தப் பெருமாளே

ந்தத் திருப்புகழில், `செருவிலகும் அசுரர் மங்கக் குலகிரிகள் நடுநடுங்கச் சிலுசிலுவென அலைகுலுங்கத் திடமான செயமுதவும் பொருங்கைத் தலம் இமிலம் அயில் கொளுஞ்சத் தியைவிடுதல் புரியும் முன்பில் குழகோனே' என்று சூரனை சம்ஹரிக்க சக்திவேலை ஏவிய செய்தியை நினைவுறுத்தும் அருணகிரியாரின் சிந்தனைத் திறன் வியக்கத்தக்கது!

அருணகிரியார் தரிசித்த கனககிரித் தலம் எது என்பதை தணிகைமணியார் திருப்புகழ் உரைநூலில், `இது கிணற்றுக்கடவு என்று அழைக்கப்படும் தலம்; கோயம்புத்தூரிலிருந்து 12 மைல்' என்று குறிப்பிட்டுள்ளதுடன், `வடஆற்காடு போளூர் புகைவண்டி நிலையத் துக்குக் கிழக்கே 9 மைல் தொலைவில் தேவிகாபுரம் என வழங்குவர். மலை - கனகாசலம்' என்று குறிப்பிடுகிறார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதை தேவிகாபுரமாகவே காட்டுகிறார்.

கந்தன்
கந்தன்

கிணற்றுக்கடவு மலைக்கோயில் அருணகிரியார் காலத்துக்குப் பிற்பட்டது என்று அறிய முடிகிறது. இதனிடையே சேலம் மாவட்டம், காகாப்பாளையம் மலைக்கோயிலையும் கனககிரி என்றழைப்பர். ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள கண்டியம் கோயிலையும் கனககிரி என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், அருணகிரிநாத சுவாமிகள் பாடிப் பரவிய கனககிரி மலைக்கோயில் தேவிகா புரமே என்பதைக் கோயிலின் தொன்மை மற்றும் கல்வெட்டு முதலான ஆதாரங்களைக் கொண்டு உறுதிசெய்ய முடிகிறது.

கனககிரியை தரிசிக்கும் திட்டமுடன் (1978-ல்) என் நண்பன் நாராயணசாமியும் நானும் புறப்பட்டு தேவிகாபுரம் சென்றோம். சென்னையிலிருந்து ஆரணி - திருவண்ணாமலை செல்லும் வழியில், 160 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந் துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து தேவிகாபுரம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

நாங்கள் அவ்வூருக்குச் சென்றபோது மாலைவேளை. அங்கிருந்த ஶ்ரீ தேவசேனாபதி குருக்கள் என்னும் சிவாசார்யர் மிகுந்த பிரியத்துடன் எங்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார். முதலில் பெரியநாயகி என்னும் பிரஹன்நாயகி அம்மனை தரிசிக்கச் சென்றோம்.

கந்தன்
கந்தன்

ஊரின் நடுவே பெரியநாயகி அம்மன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் 150 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்த நிலையில் உயரமான ராஜகோபுரம் இதுவேயாகும். இக்கோபுரத்தின் நுழைவாயிலில் சிற்பங்கள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

லிங்கோத்பவர், கங்காதரர், யோக தட்சிணாமூர்த்தி, கால பைரவர், துர்கை, மகிஷாசுரமர்த்தினி, வேணுகோபாலர், யோக நரசிம்மர் முதலான பல சிற்பங்கள் முகலாயர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளதைக் காண மனம் வேதனைப்படுகிறது. ராஜகோபுர விதானத் தில் திகழும் அஷ்டதிக்கு பாலகர்களின் சிற்பங்கள் அழகுமிக்கவை.

மூலஸ்தானத்தில் உலகை ஆளும் பெரிய நாயகியாகிய பிரஹன்நாயகி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட் சாட்சி வழங்குகிறாள்.

கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபம், குதிரைகளுடன்கூடிய தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மதிற்சுவர் 475 அடி நீளமும் 250 அடி அகலமும் 30 அடி உயரமும் (கோயிலின் பரப்பு ஏறக்குறைய 1,19,000 சதுரஅடி) கொண்டு பிரமாண்டமாக அமைந்துள்ளதைக் காணும்போது, ‘தேவிகாபுரம் மதிலழகு’ என்று இப்பகுதியில் பிரசித்தமாக வழங்கி வருவதை உணர முடிகிறது. இந்த மதிற்சுவரில் நீண்ட பெரிய அளவில் இருக்கும் யானை, வராகம், குதிரை, மான், நரி ரிஷபக் குஞ்சரம் போன்ற சிற்பத் தொகுதிகள் வேறெந்த கோயிலிலும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

மூன்று பிராகாரங்களுடன் அமைந்த இக்கோயிலில் முதல் சுற்றில் உள்ள - ஐந்து கற்களை ஒன்றிணைத்துச் செய்யப்பட்ட விநாயகர் வடிவம் சிறப்பு அம்சமாகும். வலப்பக்கத்தில் ஆறுமுகப்பரமன் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள சேனானி என்னும் சேனாபதி வடிவம் குமார தந்திரம் என்னும் சிற்ப நூலில் உள்ளபடி அமைந்துள்ளது.

`வீரர்களுள் யான் சேனானியாகத் (முருகனாக) திகழ்கிறேன்' என்று கண்ணன் கீதையில் சொல்கிறார். வீரர்களுள் மாவீரன் முருகன். வீரம்பெற விரும்புவோர் முருகனையே வழிபடுவர். மௌரியப் பேரரசில் கோட்டையில் சேனானியின் வடிவம் அமைத்த செய்தியை சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரம்’ குறிப்பிடுகிறது.

சூரபதுமனை வெற்றிகொள்ள வேண்டி தேவர்களின் படைகளுக்குத் தலைமையேற்றான் கந்தன். அதனால்தான், தேவசேனாபதி என்றழைக்கப்பட்டான். சேனாபதியாகிய இத்திருக்கோலத்தில் குமரவேள் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டிருப்பதாக ‘குமார தந்திரம்’ குறிப்பிடுகிறது. வலக்கரங்கள் ஆறில் சக்தி, வாள், சூலம், சக்கரம், அங்குசம் முதலியன கொண்டு ஒரு கரத்தில் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடக்கரங்களில் வஜ்ரசக்தி, தாமரை, பாசம், தண்டாயுதம், கதை ஆகியவற்றையும், ஒரு கரத்தால் அபய முத்திரையைக் காட்டியும் அருள்கிறார்.வானவர் தானைத் தலைவனான சேனாபதியின் கம்பீரமான இவ்வடிவத்தை வழிபடுவதால், போர் மற்றும் பந்தயங்களில் வெற்றி நிச்சயம் என்பது முன்னோர்கள் கண்ட அனுபவ உண்மை.

வெளிப்பிராகாரத்தில் பலவிதமான மரங்கள், பூஞ்செடிகள், நட்சத்திர மரங்கள் ஆகியன நன்கு பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள திருக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

36 தூண்கள் உள்ள மகா மண்டபத்தில் பெரிய புராணச் சிற்பங்கள், காலசம்ஹார மூர்த்தி, பார்வதி யின் தவம், திருமால் அவதாரங்கள், அர்ச்சுனன் தவம் போன்றவை அமைந்துள்ளன. இதையடுத்துள்ள இரண்டாவது கோபுரம் ஐந்து நிலைகளுடன் திகழ்கிறது.

மகா மண்டபம்
மகா மண்டபம்

இரண்டாவது பிராகாரத்தில் உள்ள நடராஜர் மண்டபத்திலும் தூண்சிற்பங்கள் மிக மிக அழகாக உள்ளன. மூன்றாவது பிராகாரத்தில் விநாயகர், விஷ்ணு, வள்ளி தேவசேனை சமேத கந்தப்பெருமான், சண்டேசர் சந்நிதிகளும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதி அற்புதப் படைப்பாகும். திருமயிலையில் சம்பந்தர் எலும்பைப் பெண் ஆக்கியது; திருவோத்தூர் (செய்யாறு) திருக்கோயிலில் ஆண் பனையை, பெண் பனையாக்கியது; அவிநாசியில் சுந்தரர் முதலை உண்ட பாலனை (பல ஆண்டுகள் கழித்து) உயிருடன் மீட்டது; மனுவேந்தன் பசுவுக்கு நீதி வழங்கியது; ராமன் அம்பால் மராமரங்களைத் துளைத்தது முதலானவை சிற்பக் கலையின் அருமை பெருமைகளைப் பறைசாற்றுகின்றன.

மூலஸ்தானத்தில் உலகை ஆளும் பெரிய நாயகியாகிய பிரஹன்நாயகி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட் சாட்சி வழங்குகிறாள். மேற்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்திட, முன் இருகரங்கள் அபயவரத முத்திரைகளுடன் உள்ளன. தமிழகத்தில் மூன்று பெரிய பிராகாரங்களுடன் பராசக்தி தேவிக்கு அமைந்த பிரமாண்டமான ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அற்புதமான சிற்பக் கருவூலங்கள் நிறைந்த இக்கோயில் மக்கள் அதிகம் சென்று வழிபடப் பெறாமல் குடத்தில் இட்ட விளக்கு போல் மங்கியிருப்பது வருத்தமாக உள்ளது.

கனககிரி மலையில் அருளாட்சி செய்யும் பொன்மலை நாதரை தரிசிக்க 302 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். மலையிலிருந்து சுற்றிலும் பார்த்தால் திருவண்ணாமலை, பர்வதமலை, சம்பத்கிரி மலை, திருமலை ஆகிய மலைகளைக் காணலாம். இத்திருக்கோயிலில் மூன்று நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம் உள்ளது. கொடி மரம் தாண்டி உட்பிராகாரத்தில் விநாயகர், அருணகிரியார் பாடிப் பரவிய கனககிரி ஆறுமுகப்பரமன், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னிகையர், விசாலாட்சி, சண்டேசர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

உள்மண்டபத் தூண்களில் விஜய நகர அரசர்கள் கலைப்பாணியில் அமைந்த எழில் மிகு சிற்பங்கள் பார்க்க வேண்டியவை. ஒன்பது பெண்கள் ஒன்றுசேர்ந்து யானை போன்று காட்சியளிக்கும் நவநாரி குஞ்சரம், ரிஷபம் - யானை இரண்டுக்கும் பொதுவாக ஒரே தலைகொண்ட ரிஷப குஞ்சரம், கஜசம்ஹாரம், பிட்சாடனர், மோகினி ஆகிய சிற்பங்கள் கண்ணைக் கவருபவை. மூலவர் கனககிரீஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி. இங்கே காசிவிஸ்வநாதர் எனும் லிங்கத் திருமேனியையும் தரிசிக்கிறோம். (மலைமேல் கனக கிரீஸ்வரருக்கு அம்பிகை சந்நிதி இல்லை; மலையடிவாரம் பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி சந்நிதி இல்லை). இத்தலத்தில் கீழ்க்கோயிலையும் மலைக் கோயிலையும் சென்று தரிசித்தால்தான் சுவாமி, அம்பாள் இருவரையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் தனியே அமைந்துள்ளது. ஒன்பது கற்களால் கட்டப்பெற்ற இக்கோயிலைச் சிம்மத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையைச் சுற்றிலும் கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன. விஜயநகர அரசர்கள் கலைப்பாணியில் அமைந்த அழகான கோயில். கனககிரி கோயில் அருகில் உள்ள சிறு குன்றில் பாலமுருகன் திருக்கோயில் ஒன்று கட்டப்பெற்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் 1973-ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றுள்ளது.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் மலையிலுள்ள கனககிரீஸ்வர் கோயில் இரண்டிலும் சேர்த்து 55 கல்வெட்டுகளை, 1912-ம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர். `ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் பல்குறை கோட்டத்து மேல்குன்ற நாட்டு ராஜகம்பீரன் மலையை அடுத்த முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவிகாபுரம்' என்று கல்வெட்டுகள் இவ்வூரைக் குறிப்பிடுகின்றன.

மருதரசர் படைவீட்டைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்ட சம்புவராயர் காலத்துக் கல்வெட்டுகளே இக்கோயிலில் அதிகமாகக் காணப்படுகின்றன. இக்கோயிலுக் குத் தானமாக அளிக்கப்பட்ட பல ஊர்களின் பெயர்களும் கல்வெட்டில் பதிவாகியுள்ளன. கோயில் நிர்வாகம், திருவிழாக்கள், குத்தகை நிலங்கள் குறித்த பல்வேறு செய்திகளை நாம் அறிய முடிகிறது.

விஜயநகரப் பேரரசராகத் திகழ்ந்த நரச நாயகர் மகன் கிருஷ்ண தேவராயர் பிறந்த மண் இந்தத் தேவிகாபுரம் என்ற கருத்தும் உண்டு. தேவிகாபுரத்தில் ‘பிக்ஷாமடம்’ என்று ஒன்றிருந்ததாகவும் இதன் தலைமையிடம் காசி என்பதும் இதன் கிளை திருக்கோவலூரிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மடத்தின் தனாதிகாரியாக இருந்த ஈசான்ய சிவாசார்யர் மற்றும் விஸ்வேஸ்வர சிவசார்யர் ஆகியோர் இக்கோயிலை மேற்பார்வை செய்துள்ளதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதைத்தவிர கோளகி என்ற மடமும் இவ்வூரில் இருந்துள்ளது.

கனககிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று மலையில் மூன்று கால அபிஷேக வழிபாடும் அம்மன் கோயிலில் விடியற்காலை ஒருகாலமும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள ஜி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அவரின் தந்தையார் காலம் முதல்) இந்த வைபவத்தைப் பொதுமக்கள் நன்கொடையுடன் அருமையாக நடத்தி வருவது போற்றத்தக்கது.

இங்கு பங்குனி உத்திரப் பெருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இதைத் தவிர ஒவ்வொரு மாதமும் விசேஷ நாள்களில் அபிஷேக வழிபாடும் தை மாதம் பூசத்தன்று சேக்கிழார் விழாவும் நடத்திவருகிறார்கள். கார்த்திகைத் தீபத்தன்று கனககிரி மற்றும் பாலமுருகன் மலையைச் சுற்றிலும் கிரிவலம் வருவதும் உண்டு. தேவிகாபுரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் எங்களை அழைத்துச் சென்று பொறுமையாக தரிசனம் செய்வித்துப் பல செய்திகளையும் விவரமாகத் தெரிவித்தார் தேவசேனாதிபதி குருக்கள்.

மேலும், அவ்வூரில் வாழ்ந்த தமிழாசிரியர் ஒருவர் இல்லத்துக்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே மாலை ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை செல்ல பஸ் வசதி எதுவும் இல்லை என்றும் அவரது இல்லத்திலே இரவு உணவு உண்டு, அங்கேயே தங்கி, காலையில் செல்லாம் என்றார் சிவசார்யர். வறுமையிற் செம்மையாக அன்றிரவு எங்கள் இருவருக்கும் நல்ல விருந்தோம்பல் செய்து படுப்பதற்குப் பாய், தலையணை அளித்து அவர் அளித்த உபசாரங்களை மறக்க இயலாது. சில மாதங்கள் கழித்து சென்னையிலிருந்து முருகன் திருவருட்சங்கத்தாருடன் தேவிகாபுரம் யாத்திரை வந்தபோது, அந்த அருமையான மனிதர் இறைவன் திருவடி நிழலை அடைந்த விவரம் மனத்தில் வேதனையை அளித்தது.

தேவிகாபுரம் தேவசேனாதிபதி சிவாசார்யர் போன்று ஒரு சிலரே நம் மனத்தில் இடம் பிடித்த வர்கள். இவரைப் போன்றோர் ஒருசில மணி நேரம் பழகினாலும் அன்பாலும் பண்பாலும் நம் மனத்தில் நீங்கா இடம்பெற்றுவிடுவார்கள்!

- தரிசிப்போம்...