மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 26

திருப்போரூர் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்போரூர் முருகன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

புகழ் மணக்கும் திருப்போரூர்

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்

பாயில் கிடவாமல் பாவியேன் - காயத்தை

ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா! நின்

சீரடிக் கீழ் வைப்பாய் தெரிந்து.

- ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள்

‘மனித வாழ்க்கையில் மிகவும் துன்பம் தரக்கூடிய நேரம் நோயினால் அவதிப்படும் நாள்களே. அதற்காவது மருந்து, மாத்திரை முதலியன கை கொடுக்கும். அதைவிட வேதனை தரக் கூடியது தாம் பெற்ற மக்களாலோ அல்லது தம்முடைய தொழில், சொத்து முதலான காரணங்களாலோ மனம் நொந்து அவஸ்தைப்படுவது. இதற்கு எந்தவித மருத்துவமும் செய்ய முடியாது.

திருப்போரூர் முருகன்
திருப்போரூர் முருகன்

இதற்கு அடுத்த நிலை மாதக்கணக்கில் - வருடக் கணக்கில் பேச்சற்று உடல் செயல்படாமல் படுக்கையில் கிடத்தலாகும். `இதில் எந்த வகையிலும் இந்த உடல் அவதிப்படாமல் தன் உயிர் நீக்கி உன் திருவடிக்குக் கீழ் சேர்க்க வேண்டும்’ என்று திருப்போரூர் கந்தனிடம் வேண்டுகிறார் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள். மகா ஞானியான சிதம்பர சுவாமிகள் அருளிய ‘திருப்போரூர் சந்நிதி முறை’ என்ற நூலில் உள்ளது இந்தப் பாடல். தனக்காகவா சுவாமிகள் பாடினார்... நமக்காக அல்லவா...!

1992 – ம் ஆண்டு ஒருநாள் சென்னை வானொலி நிலையத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்த பி.ஆர். குமார் தொலைபேசியில் அழைத்தார். திருப்போரூர் முருகன் கோயிலைப் பற்றிய ஒளிச் சித்திரம் நிகழ்ச்சிக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

திருப்போரூர் முருகன்
திருப்போரூர் முருகன்

திருப்போரூர் இறைவன் மீது அருணகிரிநாத சுவாமிகள் நான்கு திருப்புகழ் பாடல்களை அருளிச் செய்துள்ளார். 17- ம் நூற்றாண்டில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் என்னும் அருளாளரோ திருப்போரூர் கந்த பெருமானுக்குக் கற்கோயிலைக் கட்டியதுடன் 726 பாடல்கள் கொண்ட ‘திருப்போரூர் சந்நிதிமுறை’ எனும் அற்புதமான சொற்கோயிலையும் அளித்துள்ளார்.

திருப்போரூர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்தேன். திருப்போரூர் சந்நிதிமுறை நூலை ஒருமுறை படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. கோயிலில் அந்நூல் கிடைக்கவில்லை. பிறகு நூலகத்திற்குச் சென்று பார்த்தபோது இந்நூலின் அருமைபெருமைகளை உணர முடிந்தது. ஒவ்வொரு பாடலும் ஊனையும், உயிரையும் உருக வைத்தது.

முருகப்பெருமானை முத்தமிழால் பாடிப் பரவிப் பேறு பெற்ற சான்றோர் வரிசையில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள். கந்தவேள் சந்நிதியில் தம் குறைகளை முறையிட்டு அருள்பெற வழிகாட்டிய முதல் நூல் இந்தத் திருப்போரூர் சந்நிதிமுறை. ‘சந்திதி முறை’ என்னும் இலக்கிய வடிவத்துக்கு முதல் நூல் இது. இதனைப் பின்பற்றி திருத்தணிகைச் சந்நிதிமுறை, திருமுல்லைவாயில் வைஷ்ணவி சந்நிதிமுறை போன்ற நூல்கள் பாடப் பெற்றன.

திருப்போரூர்த் திருக்கோயில் சார்பில் 1967 - ம் ஆண்டு இந்நூல் அச்சிடப்பெற்றது. பிறகு யாருமே இதனைப் பதிப்பிக்கவில்லை. எனவே இதனை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது.

திருப்போரூர் முருகன்
திருப்போரூர் முருகன்

இதன் முதற்பதிப்பு 1854-ல் வந்ததாகத் தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து 1871, 1885, 1892, 1893 ஆகிய ஆண்டுகளிலும், 1927, 1941, 1948, 1967 ஆகிய ஆண்டுகளிலும் வெளி வந்துள்ளன. 1892-ல் வெளி வந்த டி.கே.சுப்பராய செட்டியார் பதிப்பு ஒன்று லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது.

திருப்போரூர் சந்நிதிமுறைப் பாடல்களைப் படித்துச் சுவைத்து அந்தச் சிந்தனையிலே ஊறியிருந்தபோது ஒரு நாள் கே. மோகன் எனும் முருகனடியார் என்னைத் தேடிவந்தார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் ‘அபிராமி பிரிண்டிங் ஒர்க்ஸ்’ என்னும் அச்சுக் கூடத்தை நடத்தி வந்தார்.

திருத்தணிகை முருகனிடம் மிகுந்த பக்தி கொண்ட அவர் குடும்பத்தினர் 1972-ம் ஆண்டுமுதல் தணிகை முருகன் சந்நிதியில் காவடி எடுத்து அன்னதானம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தார்கள்.

அவரிடம் திருப்போரூர் சந்நிதிமுறை நூலை மறுபடியும் அச்சிட வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ``உடனே அச்சிட ஏற்பாடு செய்கிறேன்'' என்று என்னை ஊக்கப்படுத்தியதுடன், அந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் சென்னைக் கந்தகோட்டம் கந்தசுவாமி கோயிலில் இந்நூலை வெளியிட்டு அருள்பணி செய்த அவரின் முருக பக்தியையும் தொண்டுள்ளத்தையும் மறக்க இயலாது. (அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகளை அவரே அச்சிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது).

சிறுவாபுரி முருகன் கோயிலின் திருப் புகழையும், அத்தலப் பெருமைகளையும் மக்களிடையே ஆற்றுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தால் ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ என்ற அமைப்பை 1981-ம் ஆண்டு தொடங்கினோம். 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சென்னையிலிருந்து சிறுவாபுரிக்குப் பாதயாத்திரை நடத்தினோம். இதைப்போல ஆண்டுதோறும் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கும் பாதயாத்திரை நடத்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பாடு செய்தோம். அக்காலத்தில் திருப்போரூர் செல்லும் (பழைய மாமல்லபுரம்) சாலையில் கேளம்பாக்கம் தாண்டினால் வீடுகளோ, மரங்களோ, ஒதுங்குவதற்கு எந்த வசதியோ கிடையாது.

அந்நிலையில் பாதயாத்திரைக்கு வந்திருந்த நெய்வேலி பக்தர் செல்வராஜ் என்பவர் வெயிலின் தாக்கத்தால் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அப்போது அவர் அருகே வந்த அறிமுகமில்லாத ஒருவர், “இந்தச் செருப்பை அணிந்து நடந்து செல்லுங்கள்” என்று கூறி, தன் காலணிகளை அளித்தார். நெய்வேலி பக்தரும் ஏற்றுக்கொண்டார்.

பாத யாத்திரை அன்பர்கள் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் திருமடத்தை வழிபாடு செய்து விட்டு கோயிலின் கோபுர வாயிலை அடைந்த தும் தன் காலணியைத் திரும்பக் கேட்டார் அந்த மனிதர். செல்வராஜ் அவரிடம் நன்றி சொல்லிவிட்டு, அவரின் பெயர் என்ன என்று வினவினார். ‘ஆறுமுகம்’ என்று சொல்லி விட்டுச் சென்றார் அந்த நபர்.

கோயிலுக்குள் நுழைந்த நெய்வேலி பக்தருக்கு ஆச்சர்யம் அளித்தது, அங்கே கண்ணில்பட்ட வாசகம் - ‘ஆறுமுகம் துணை செய்யும்.’

நெய்வேலி பக்தர் இதனை நம்மிடம் சொல்லும்போது ஒரு பரவச நிலையில் காணப்பட்டார். சந்நிதி முறையில் மாலை என்ற பகுதியில் உள்ள ஒரு பாடலில் ‘உள்ளம் உருக வரும் ஒண்போரூர் ஐயன் அருள் வெள்ள முற நெஞ்சே விரும்பு’ என்ற வரிகளைச் சிந்தித்தபோது நமக்கும் சிலிர்ப்பு ஏற்பட்டது.

போரி, போரிமாநகர், திருப்போரூர், யுத்தபுரி, சமரபுரி, சமரப்பதி என்று பலபெயர்களைக் கொண்ட இத்தலம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் 42-வது கி.மீ அமைந்துள்ளது. சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

கந்தவேள் அசுரர்களை எதிர்த்து மூன்று இடங்களில் போர்புரிந்தார். கடலிலே போர் புரிந்த இடம் திருச்செந்தூர். நிலத்திலே போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம். ஆகாயத்தில் போர் புரிந்த தலம் திருப்போரூர். மாயை அடங்கியது திருச்செந்தூரில். கன்மம் அடங்கிய இடம் பரங்குன்றம். ஆணவம் அடங்கிய இடம் திருப்போரூர்.

-காண்போம்...