மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 28 கதிர்காம மறைபொருள்!

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல் பெற்ற 206 தலங்களில் குன்று தோறாடல்... –அதாவது, மலைக்கோயில்கள் 36 ஆகும். இதில் வடக்கே உச்சியில் உள்ளது கயிலைமலை; தென்கோடியில் உள்ளது கதிர்காமம் (இலங்கை).

இந்தியாவில் உள்ளவர்களுக்குக் கயிலைமலை எப்படி மிக முக்கியமான திருத்தலமோ, அதைப் போல இலங்கை நாட்டில் புகழ்பெற்ற புனிதமான திருத்தலமாகக் கதிர்காமம் அனைவராலும் வழிபடப் பெறுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 28 கதிர்காம மறைபொருள்!

இதைவிட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் இந்த இரண்டு புகழ்பெற்ற திருத்தலங்களும் ஒரே தீர்க்க ரேகையில் (81 டிகிரி கிழக்கு) நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. இந்த இரண்டு முக்கியமான திருத்தலங்களுக்கிடையேதான் மற்ற திருப்புகழ்த் தலங்கள் உள்ளன.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

இலங்கையில் உள்ள திருக்கோணமலை, அருக்கோணாமலை (நகுலேச்வரம் என்னும் கிரிமலை), கதிர்காமம் ஆகிய மூன்று திருத்தலங்களும் திருப்புகழ்ப் பாடல் பெற்றவை. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் எழில்மிகு அம்பாந்தோட்டையிலிருந்து 95 கி.மீ தொலைவிலும், திஸமராம என்ற ஊரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் கதிர்காமம் உள்ளது.

இவ்வூர் சிறிய கிராமம் எனினும் தற்போது வெளிநாட்டவர் வருகையையொட்டி வசதியான ஹோட்டல்களைக் கட்டியுள்ளனர். கோயில் அருகே ‘மாணிக்க கங்கை’ என்னும் ஆறு ஓடுகிறது. `மணிதரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாள் காண்' என்னும் அருணகிரியார் வாக்குக்குக்கிணங்க முற்காலத்தில் பொன்னையும் மணிகளையும் ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வரும் அழகான இடமாக இது இருந்தது. தற்போது ஆறு குறுகலாக உள்ளது.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

கதிர்காமக் கடவுளை `கத்தரகம தெய்யோ' என்று சிங்களவர்கள் அழைக்கிறார்கள். ‘தெய்யோ’ என்பது ஒரு மரத்தின் (கருங்காலியின்) பெயராம். அந்த மரம் அடர்ந்த காடு ஆதலால் ‘கத்தரகம’ என்று பெயர் வந்ததாம். கார்த்திகேயனான முருகன்தான் வாழும் கிராமமாக இவ்வூரைக்கொண்டதால் கார்த்திகேய கிராமம் என்ற பெயர் ஏற்பட்டு, பிறகு கதிர்காமம் என்றாயிற்று என்பாரும் உளர். ‘கதிர்’ என்றால் ஒளி, ‘காம’ என்பது கிராமம் என்பதன் திரிபு. முருகவேள் ஒளியாகத் திகழும் கிராமம் கதிர்காமம். தவிர கதிர் ஒளி, காமம் - அன்பு எனப் பொருள் கொண்டு ஒளியும் அன்பும் கலந்து விளங்கும் இடம் கதிர்காமம் என்றும் கூறலாம். ஆறு கதிர் (தீப) பொறிகளாகத் தோன்றிய ஆறுமுகன் வள்ளியிடம் காதல் கொண்டு மணம்புரிந்த இடம் கதிர்காமம் என்றும் கூறுகிறார்கள். அருவ நிலையில் முருகன் எழுந்தருளியிருக்கும் இந்த மலையை `ஜோதிஷ் காமகிரி' என்று தக்ஷிண கயிலாய மான்மியம் என்ற நூல் விவரிக்கிறது.

இலங்கையி்ன் அதிசயங்களில் ஒன்றாகிய கதிர்காமத்துக்குச் செல்கிறவர்கள் அங்குள்ள கோயிலைக் காணலாம். தீர்த்தத்தைக் காணலாம். மூர்த்தியைக் காண முடியாது. மர்ம ரகசியம், மூடு மந்திரம், விளங்காத புதிர், விடைகாண முடியாதது என்று இப்படித் தொகுத்துச் சொன்னால் அதுதான் கதிர்காமம்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

சென்னையிலுள்ள திருப்புகழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.சுந்தரம் அவர்கள் தீவிரமான முருகபக்தர் (சென்னை பெசன்ட் நகர் அறுபடை வீடு கோயில் அறக்கட்டளையின் தலைவரும் அவரே) 2003-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் கதிர்காம யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார்.

நாங்கள் 30 பேர். சென்னையிலிருந்து புறப்பட்டு கொழும்பு சென்றோம். ஜனவரி 18-ம் தேதி கண்டி சென்று அங்கிருந்து ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு மாலையில் கதிர்காமத்தை வந்தடைந்தோம். 19-ம் தேதி முழுவதும் கந்தனைக் காண எண்ணி கதிர்காமத்திலே காத்திருந்தது இனிமையான மறக்க முடியாத அனுபவம்.

கதிர்காமக்கந்தனை பூஜை செய்பவர்களை `கப்புராளைமார்’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் விபூதி பூசுவதாகத் தெரியவில்லை!

காலையில் மாணிக்க கங்கையில் நீராடி அங்குள்ள விநாயகரை வழிபட்டோம். பிறகு கதிர்காம முருகன் கோயிலுக்குப் புறப்பட்டோம். வழியில் பூக்கள், பழங்கள் முதலியன விற்கும் கடைகள் உள்ளன. அங்கு பழங்களை நறுக்கியே கொடுக்கிறார்கள். பூஜைக்குரிய மலர்கள், பழங்கள், தேங்காய், காகிதப்பூ மாலை, கற்பூரம் முதலியவற்றை மக்கள் கொண்டு செல்கிறார்கள். வடக்கு தெற்காக அமைந்துள்ள வீதியில் கதிர்காம வேலன் ஆலயம் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. தெற்கு கோடியில் வள்ளியம்மை கோயில் வடக்குப் பார்த்து உள்ளது.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் ஆலயத்தின் முகப்பில் ஒரு வளைவு உள்ளது. அதில் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. உள்ளே திறந்தவெளியைத் தாண்டி கதிர்காம முருகன் கோயில். அதன் வலப்புறம் விநாயகர் கோயில். அதற்கு அருகில் பெருமாள் சந்நிதி என்று சொல்லப்படும் இடத்தில் புத்தர் சிலையை வைத்துள்ளனர். வெளிபிராகாரத்தில் முருகனுக்கு இடப்புறம் தெய்வானை சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.

கோயில் என்றால் நம் நாட்டில் உள்ளது போல் ராஜ கோபுரம், முன் மண்டபம், மகா மண்டபம், கர்ப்பகிரகம் என்று எதுவும் கிடையாது. கதிர்காமக் கந்தன் ஆலயம் மேற்கூரை செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. வாயிற்கதவுகள் பித்தளையால் மூடப்பெற்று வேலைப்பாடுகளுடன் அரண்மனைக் கதவுகள் போல உள்ளன. உள்ளே அழகான மரத் தூண்கள் உள்ளன. வெண்கல மணிகள், சேவல் விளக்குகளும் இரண்டு புறமும் வைத்துள்ளனர். கந்தபுராணக் காட்சிகள் படங்களாக உள்மண்டபத்தில் சுற்றிலும் காணப்படுகின்றன. ஒரு மேடையின் மீது (தெற்கு நோக்கி) உள்ள மூலஸ்தான சந்நிதியின் முன்புறம் ஏழு திரைகள் தொங்குகின்றன. முதல் திரையில் வள்ளி தேவசேனை சமேதராக மயில் வாகனத்தில் அமர்ந்த முருகனின் வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியமே இங்கு மூலவராக வழிபடப் பெறுகிறது. இங்குள்ள வண்ணப்படங்கள் ஒன்றில் அருணகிரிநாதர் முருகனை வழிபடுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. `இறவாமல் பிறவாமல்…' என்று தொடங்கும் அவிநாசி திருப்புகழின் கடைசி அடியான `அறம் நாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே' என்று மாற்றி எழுதி வைத்துள்ளார்கள்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

கதிர்காமக் கந்தனை பூஜை செய்பவர்கள் சிங்களவர்கள். இவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் விபூதி பூசுவதாகத் தெரியவில்லை. `கப்புராளைமார்' என்று அவர்களை அழைக்கிறார்கள். பூஜையைத் தொடங்கு முன்பு வாய், மூக்கு, காது முதலியவற்றைத் துணியினால் கட்டிக் கொள்கிறார்கள். கையில் உள்ள பிரசாதத் தட்டுடன் ஏழு திரைகளைத் தாண்டி கருவறை என்று சொல்லப்படும் அறைக்குள் சென்று பூஜை செய்து வருவார்கள்.

உள்ளே யந்திரம் உள்ள பெட்டி உள்ளது என்று கூறுவார்கள். அங்கு என்ன இருக்கிறது என்பது அவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அது பெரிய ரகசியமாகவே உள்ளது.

- காண்போம்...

கண்டுகொண்டேன் கந்தனை - 28 கதிர்காம மறைபொருள்!

விசேஷ தீபாராதனை!

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் மற்றும் காஞ்சி ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சாயரட்ச தீபாராதனை 11 அடுக்குகளைக் கொண்டது. இது போன்று 11 அடுக்கு தீபாராதனையை வேறெங்கும் காண்பது அரிது.

- வி.சந்திரசேகரன், கும்பகோணம்