மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கதிர்காமம் கோயிலின் மூலஸ்தான சந்நிதியின் முன்புறம் ஏழு திரைகள் தொங்குகின்றன. முதல் திரையில் வள்ளி-தேவசேனை சமேதராக மயில் வாகனத்தில் அமர்ந்த முருகனின் வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியமே இங்கு மூலவராக வழிபடப் பெறுகிறது.

கதிர்காமம் கந்தனை பூஜிக்கும் கப்புராளைமார், ஏழு திரைகளைத் தாண்டி கருவறை என்று சொல்லப்படும் அறைக்குள் சென்று பூஜை செய்து வருவார். உள்ளே யந்திரம் உள்ள பெட்டி இருக்கிறது என்று கூறுவார்கள். அங்கு என்ன இருக்கிறது என்பது கப்புராளைமார்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அது பெரிய ரகசியமாகவே உள்ளது. அறையில் பூஜை முடித்து வந்து, முதல் திரையில் உள்ள ஓவிய முருகனுக்குத் தீபாராதனை நிகழ்த்துவர். திரைக்குத் தீபாராதனை முடிந்ததும் வெளிமுற்றத்துக்கு வந்து தொலைவில் தெரியும் கதிர்காம மலையை நோக்கித் தீபாராதனை காட்டுவார்.

கந்தன்
கந்தன்

கதிரமலை உச்சியில் முருகனுடைய `கதிர்வேல்’ இருக்கிறது. இம்மலையில் கிடைக்கிற விபூதிதான் கதிர்காமக் கோயில் பிரசாதமாக அளிக்கப்படுகிறது என்கிறார்கள். வழிபாடு முடிந்த அரைமணி நேரத்தில் கோயிலை மூடிவிடுகிறார்கள் (காலை 5 மணி, 10 மணி, மாலை 6 மணி என்று மூன்று வேளை சந்நிதி திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது). மறுபடியும் கோயில் திறக்கும் வரை கோயிலின் பின்புறம் உள்ள மிகப் பெரிய அரச மரத்தடியில் மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள்.

நாங்கள் சென்றபோது, காலை 10 மணி அளவில் கோயில் சந்நிதி திறக்கும் வரை வரிசையாக நின்றிருந்தோம். அரச மரத்திலுள்ள குரங்குகள், நமது பழத்தட்டில் உள்ள வாழைப்பழங்களை மிகவும் சுவாதீனமாக எடுத்துச் சென்று, பழத்தை அழகாக உரித்து உண்டு மொத்த சீப்பிலுள்ள தோலையும் நிதானமாகக் கீழே போடுவதை மிகவும் ரசித்து மகிழ்ந்தோம். இந்த அரச மரம், அசோக மன்னரின் மகள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து நட்ட அரசமரக் கிளையிலிருந்து வளர்ந்ததாகக் கூறுகிறார்கள். இங்குள்ள விநாயகர், தெய்வானை ஆகிய சந்நிதிகள் இந்துக்களால் பூஜை செய்யப்படுகின்றன. வள்ளியம்மையார் கோயிலைச் சிங்களவர்கள் பூஜிக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் திரை ஓவியத்துக்கே வழிபாடு. எங்குமே சிலைகள் காணப்படவில்லை (கண்டியிலுள்ள முருகன் கோயிலிலும் அப்படித்தான்). வள்ளியம்மை கோயிலிலிருந்து கந்தன் கோயில் வரையுள்ள நீண்ட வீதியில் மக்கள் காவடி எடுத்து, பறை முழக்கி, ஆட்டம் ஆடி வருவதைக் கண்டோம். காவடி எடுப்போர் மேல்நாட்டு முறையில் ஆடை அணிந்து வருவதைப் பார்க்கும்போது வித்தியாசமாகத் தோன்றும்.

கதிர்காமம் முருகன் உண்டியலில் காசோலை!

காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்து மத வழிபாட்டு முறையில் உள்ள சடங்குகள் இன்னும் அங்கே பல்வேறு மக்களால் நடைபெற்று வருகின்றன. தமிழ் இந்துக்கள் கதிர்காமக் கோயிலைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 1908-ம் ஆண்டு முதல் கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்றாலும் அவை நிறைவேறவில்லை. இன்றைக்கும் கதிர்காமம் பௌத்த மத ஆலய பரிபாலனச் சட்டத்தின் கீழேயே நிர்வாகம் பெற்று வருகிறது.

கந்தன்
கந்தன்

நாடு, மதம், சாதி, இனம், மொழி போன்ற எந்த வேறுபாடுமின்றி அனைத்து மக்களும் வந்து வழிபடும் திருத்தலம் கதிர்காமம். மந்திர, தந்திர, வைதீக, ஆகம கிரியைகள் எதுவும் இல்லாமல், அகத்தில் அன்பை நிறைத்து இறைவழிபாடு நடைபெறும் தலம் இது மட்டுமே!

உலகத்திலேயே கதிர்காம முருகனுக்கு மட்டும்தான் உண்டியலில் காசோலை எழுதிப் போடும் பழக்கம் உள்ளதாம். கதிர்காம முருகன் பெயருக்குக் காசோலை (செக்) எழுதிப் போட்டால் அது செல்லுபடியாகும் என்கிறார்கள்.

கி.மு 300-ல் விஜயன் என்ற அரசன் கதிரை ஆண்டவருக்கும் ஒரு கோயில் அமைத்தான் என்று யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. கி.மு 2-ம் நூற்றாண்டில் துட்டகெமனு என்ற சிங்கள அரசன், எல்லாளன் எனும் புகழ்பெற்ற தமிழ் அரசனை வெல்லும் ஆற்றலைத் தனக்குத் தந்தருளுமாறு கதிரை மலைக் கந்தனை வேண்டினான். வேலனின் அருள்பெற்றுப் பகைவனை வென்று, தம் விரதப்படி கி.மு 101-ல் கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டியதாக `கந்த உபாத்’ என்னும் சிங்கள நூல் குறிப்பிடுகிறது. தற்போதுள்ள கதிர்காம ஆலயம் 1581-ல் முதலாம் ராஜசிங்கம் எனும் அரசனால் கட்டப்பட்டது. எனினும் வரலாற்று அறிஞர்கள் பலரும் 1634-ல் இரண்டாம் ராஜ சிங்கம் கட்டியதாகக் கருதுகிறார்கள்.அருணகிரிநாதர் கதிர்காமக் கந்தனை வழிபட்டுப் பாடியுள்ள 13 திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருப்புகழ்தான் இந்த முருகன் மீது பாடப்பெற்ற முதல் பிரபந்தம் என்று அறிய முடிகிறது. அருணை முனிவர் காலத்தில், இத்தலம் அருவியாலும் பேரொலி கொண்ட கடல் போல் அலை மோதிவரும் வடவையாறு எனும் நதியாலும் (மாணிக்க கங்கை) குளிர்ச்சி நிறைந்து திகழ்ந்தது போலும்.

கதிரமலையில் கிடைக்கிற விபூதிதான் கதிர்காமக் கோயில் பிரசாதமாக அளிக்கப்படுகிறது
கந்தன்
கந்தன்

சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமன் ஸ்ரீராமபிரான் தந்தருளிய பொன்னாலாகிய அழகிய மோதிரத்தைச் சீதைக்கு அளித்தபின், கதிர்காமத்தில் உள்ள கந்தனிடம் அருள்பெற்றுத் திரும்பினார் என்ற செய்தியை அருணகிரியாரது ராமாயணத்தில் மட்டுமே காண முடியும்!

கதிர் காமத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழா, ஆடி மாதம் திருவோணம் பௌர்ணமியன்று நிகழும் `ஆடிவேல் உற்சவம்’. இது 10 நாள்கள் நடக்கும். அப்போது, கருவறையில் உள்ள யந்திரப் பேழையை அர்ச்சகர் வெளியே எடுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏறி பவனி வருவார். மாணிக்கக் கங்கையில் தீர்த்தம் கொடுக்கப்படும். இந்த விழாவில் காவடி எடுத்து வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.

கதிர்காம மலை சந்தன மரங்கள் நிறைந்த காடாக உள்ளது. மக்கள் நடந்தே மலை ஏறிச் செல்கிறார்கள். ஜீப் வசதியும் உள்ளது. மலை உச்சியில் வேல் நடப்பட்டுள்ளது. அதற்குக் கதிர் வேல் என்று பெயர். அதற்கு அருகிலுள்ள ஒரு கோயிலிலும் திரைவழிபாடுதான் நடைபெறுகிறது. கதிர்காமத்துக்குச் சற்று வடக்கில் `செல்லக் கதிர்காமம்’ என்ற ஊர் உள்ளது. இங்குதான் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இந்த இடத்துக்கு `வள்ளித் தீவு’ என்றும் பெயராம். வள்ளி - கந்தன் திருமணத்துக்கு உதவிய விநாயகர், மாணிக்கக் கங்கைக்கரையில் கோயில் கொண்டுள்ளார் என்கிறார்கள்.

கதிர்காம மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும் வேடுவர்களுக்கு கந்தப்பெருமானே கண்கண்ட தெய்வம். வள்ளித் திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்றும், முருகன் தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்றும் போற்றுகின்றனர். இங்கு கதிரை மலைக்கு அருகிலுள்ள மலையை வள்ளி மலை என்றழைக்கிறார்கள். தமிழ் மொழியறியாத அங்குள்ள வேடுவர் தலைவர் `பண்டிஹோத்தோ’ என்பவர் ஒருமுறை தெரிவித்த தகவல், செய்தித்தாளில் வந்துள்ளது. மிக சுவாரஸ்யமான தகவல் அது!

- காண்போம்...

வடக்குப் பார்த்த சிவனும் மடக்குப் போன்ற லிங்கமும்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 நிமிட நடை தூரத்தில் இருக்கிறது அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில். ராமனின் மைந்தர்கள் குசனும் லவனும் வழிபட்டு அருள்பெற்றதால், குசலவபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இக்கோயில் குறித்து ஒரு பாடல் உண்டு.

கண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)

கோயம்பேடு என்ற ஊரும் இல்லை

குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை

வடக்குப் பார்த்த சிவனும் இல்லை

மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை.

உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் இது ஒன்றுதான். இந்த ஈஸ்வரனின் பெயர் வேறு எந்தத் தலத்திலும் இறைவனுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் வடக்கு நோக்கி அருள்கிறார் இங்குள்ள ஈசன். இவரின் லிங்கத் திருமேனியில் பாணமானது, மடக்கையைக் (பானையை மூடப் பயன்படும் மூடியை) கவிழ்த்தது போன்று திகழுமாம். இப்படியான சிறப்பம்சம் வேறு தலங்களில் இல்லை எனும் கருத்தைச் சொல்லும் பாடல் இது.

- எம்.அபர்ணா, சென்னை-21