Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 10

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்

கண்டுகொண்டேன் கந்தனை - 10

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்

Published:Updated:
மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்

ருணகிரிநாத சுவாமிகள் தமது தல யாத்திரையின்போது மதுராந்தகம் வந்தார். அந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் கந்தவேளை, ‘ஆறு திருமுகங்களுடன் கம்பீரமோடு வீறுடனே வீற்றிருக்கும் பாக்கியவானே, சம்பத்து உள்ளவனே, மதுராந்தக மகாநகரத்தில் விளங்குகின்ற முருகா, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே...’ என்று திருப்புகழில் போற்றிப் பாடினார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 10

இந்தத் திருக்கோயில், மதுராந்தகம் ஊருக்குப் புறத்தே (சென்னையிலிருந்து செல்லும்போது), இடது புறம் வயல்மேட்டில் காணப்படுகிறது.

மிகச் சிறிய கோயிலில் ‘பாண்டீஸ்வரர்’ என்ற பெயரில் சிவலிங்கமும் ஆறுமுக ஸ்வாமி மயில்மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் மூர்த்தமும் உள்ளன. இவ்வடிவங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது அதன் முன்புறம் புதிதாக ஒரு கோயில் கட்டி அதில் புதிதாக ஒரு ஆறுமுகப் பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். அத்துடன் ‘மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம்’ என்று அருணகிரிநாதர் பாடியுள்ள இரண்டு பாடல்களையும் சேர்த்து இங்குப் பதித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம்’ என்று அருணகிரிநாதர் பாடிப்பரவிய தலம், ‘மதுராந்தக மாநகரம் திகழ் முருகன்’ என்ற தலத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வை மேற்கொண்டோம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 10

தணிகைமணி தமது திருப்புகழ் உரை நூலில், ‘மதுராந்தகத்தில், வடதிருச்சிற்றம்பலம் எனப்பெயர் வழங்கிய முருகன் ஆலயம், அருணகிரியார் காலத்தில் இருந்தது போலும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அருணகிரிநாதர் தாம் தரிசித்துப் பாடும் திருப் புகழ்த் தலங்கள் சிலவற்றுக்குத் தலப் பெயருக்கு ஏற்றவாறு சந்தம் அமைத்துப்பாடுவார்.

‘தனதாந்த தத்த தனன தத்தத் தந்த தத்த தந்த

மதுராந்த கத்து வடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த’

- என்ற சந்தக் குழிப்பில் திருப்புகழைப் பாடியுள்ளது, சந்தக்கவி பாடுவதில் அவர் ஈடு இணையற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். ‘மதுராந்த கத்து - என்பதற்கு தனதாந்த தத்த’ என்று ஆரம்பித்துள்ளதை நோக்கும்போது, இந்தச் சந்தக் குழிப்பைக் கொண்டே அது எந்தத் தலத்துக்குரியது என்று தீர்மானிக்க முடியும். இங்கே கிடைத்துள்ள இரண்டு பாடல்களும் ஒரே சந்தக் குழிப்பில் அமைந்தவை.

தலத்தின் பெயர் மதுராந்தகத்து வட திருச் சிற்றம்பலம் என்று வருகிறதல்லவா! இது, ஆடல்வல்லானோடும் சிதம்பரத்தோடும் தொடர்புடையதாகி இருக்கும் என்ற யூகத்தில் மதுராந்தகம் அருகிலுள்ள ஊர்ப்பெயர்களை ஆய்வு செய்தபோது ‘புலிப்பரக் கோயில்’ என்ற பெயரில் உள்ள தலம் தெரிய வந்தது.

புலிப்பரக் கோயிலை தரிசிக்க நண்பர் எஸ். நாராயண சுவாமியும் நானும் புறப்பட்டோம். அவர் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்தவர். விடுமுறை நாள்களில் இருவரும் பல தலங்களுக்குச் சென்று தரிசித்து தல வரலாற்றை சேகரித்து வருவதை வழக்கமாகக் கொண் டிருந்தோம். சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில், இடதுபுறம் சாலை பிரியும் படாளம் (கூட்ரோடு) என்ற இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது புலிப்பரக் கோயில். செங்கல்பட்டு - தச்சூர் கூட்ரோடு வழி மற்றும் செங்கல்பட்டு - கடப்பாக்கம் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் மூலம் இத்தலத்தை அடைய முடியும்.

கண்டுகொண்டேன் கந்தனை - 10

புலி என்ற பெயர் தொடர்புடைய தலங்கள் பலவற்றிலும் சுவாமியின் திருநாமம் ‘வியாக்ர புரீஸ்வரர்’ என்றே அமைந்திருக்கும். தில்லையில் வியாக்ரபாத முனிவருக்கு நடராஜப்பெருமான் நடனத்தைக் காட்டியருளினார். வியாக்ரபாதர் வழிபட்ட தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. தொண்டை மண்டலத்தில் செங்கல்பட்டு அருகில் புலிப்பாக்கம், சென்னையில் உள்ள (கோடம்பாக்கம் பகுதியில்) புலியூர், மற்றும் உத்திரமேரூர் - மாகறல் அருகில் உள்ள திருப்புலி வனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் கரூருக்குக் கிழக்கே ஒரு புலியூர், பெரம்பலூர், துறையூர் தெற்கில் புலிவலம் ஆகிய தலங்களிலும் இறைவன் திருப்பெயர் வியாக்ர புரீஸ்வரர் என்பதாகும்.

முற்பிறப்பில் கௌதமராய் விளங்கிய மத்யந்த முனிவரின் குமாரராய் அவதரித்தவர் வியாக்ரபாதர். ‘தேனீக்கள் தீண்டுவதால் சிவ பூஜைக்குரிய மலர்கள் கெட்டுவிடும்’ என்பதால், இருட்டில் பூக்களைப் பறிக்க, இறைவனிடம் வேண்டி புலிக்கால்களைப் பெற்றவர். அவர் பூசித்ததால் அது புலிப்பரக் கோயிலாயிற்று.

புலிப்பரக்கோயிலின் சிவாசார்யர் வயதான பெரியவர். அவர், எங்களுக்குக் கோயிலைச் சுற்றிக் காண்பித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். திருக்கழுக்குன்றத் தலபுராணம் (வடமொழி) 22-வது அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய சுவையான தகவல் கிடைத்தது.

`திருக்கழுக்குன்றத்தில் வியாக்ரபாதரால் பூசிக்கப்பட்டுப் பின்னர் கரிகாலச்சோழனால் ஆலயம் கட்டப்பட்டது. சிதம்பர கனகசபாபதி மூர்த்தியின் திருநடனம் கண்டு உண்ணும் நியமம் பூண்ட அந்தச் சிதம்பரம் போல், கனகசபையோடு ஆனந்த தாண்டவம் இவ்விடத்தே கிடைக்கப் பெற்றது. எனவே இத்தலத்துக்குச் சிவபெருமானால் ‘வியாக்ரபாதபுரம்’ என்று பெயர் அருளப்பெற்றது. வியாக்ரபாத முனிவருக்குக் கனகசபாபதி தரிசனம் கொடுத்தருளியதால் அப்பெருமான் ஹேமசபேசர் எனவும் அழைக்கப்பட்டார்.'

- இதுதான் அந்தத் தகவல்!

வட பொன்னம்பலம், அருணகிரிநாதரின் திருப்புகழில் `வடதிருச்சிற்றம்பலம்' எனப் போற்றப்படுகிறது.

புலிப்பரக் கோயில் திருத்தலத்தில் ஸ்ரீபால குசாம்பிகா சமேத ஸ்ரீவியாக்ரபுரீச்வரர் அருள் பாலிக்கிறார். சோழர் பாணியில் அமைந்த தூங்கானை மாடக்கோயில் இது. அதாவது கஜப்ருஷ்ட வடிவம். யானைப் படுத்துக்கொண்ட அமைப்பில் - அரை வட்டத்துடன் கூடிய செவ்வகம் போன்றது. விஜயநகர மன்னர்கள் காலத்துக் கலைசெறிந்த பிரமாண்ட மண்டபம்.

வியாக்ரபாதருக்கு நடன தரிசனம் காட்டிய தலம் என்பதால், ஆடியபாதனுக்குத் தனி அம்பலமும் அதில் படைப்புச் சிற்பங்களுடன் தூண்களும் நிறுவப்பெற்றுள்ளன. முன்புறத்தில் விசாலமான மண்டபம். தட்சிணாமூர்த்தியின் இரண்டு வடிவங்கள், கஜசம்ஹார மூர்த்தி, பிட்சாடனர் முதலான சிற்பங்கள் அற்புதமானவை.

கோயில் உள்வாயில் நிலைப்படி முகப்பில் சிவலிங்கத்துக்கு எட்டு வகை உபசாரங்களைச் செய்யும் அஷ்ட ரம்பையர் உள்ளனர். அப்சரப் பெண்கள் அஷ்டோபசாரங்கள் செய்யும் இந்த அற்புதக் காட்சி, புதுமையான அரிய சிற்பத் தொகுதியாகும்.

இங்கு நாம் தரிசிக்கவேண்டிய இன்னும்பல அற்புதங்கள் உண்டு!

- காண்போம்...

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பகவானின் திருக்கதை!

கிருஷ்ணன் எனும் வடமொழிச் சொல்லுக்கு `பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்ப வன்' என்று பொருள். ஸ்ரீகிருஷ்ண சரித்திரமே ஆனந்தம்தானே!

கண்டுகொண்டேன் கந்தனை - 10

ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ண சரித்திரமும் வேறுவேறல்ல. ஆகவே, மற்ற நூல்களைப் படிப்பதைவிட, ஸ்ரீபாகவதம் படிப்பது உயர்ந்தது. மகாபாரதத்தை இயற்றிய வியாசரே, ஸ்ரீபாகவதத் தையும் எழுதினார். அவரே, மகாபாரதத்தால் கிடைக்காத ஆனந்தம் பாகவதத்தால் தமக்குக் கிடைத்ததாகப் பரவசப்படுகிறார்.

பகவானைப் பற்றிப் பேசுவதால், ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்துக்குப் பாகவதம் என்று திருப்பெயர். கேட்பவர் மற்றும் படிப்பவர் மனத்தில் பக்தியை விதைத்து, முக்தி மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் அற்புதப் பொக்கிஷம் பாகவதம். ஏகாதசி திதிநாள்கள், கோகுலாஷ்டமி முதலான அவதார தினங்கள், புரட்டாசி புண்ணிய காலம் மற்றும் சனிக்கிழமைகளில் பாகவதம் படித்து பகவானை வழிபட்டால், எண்ணிய காரியம் எல்லாம் இனிதே நிறைவேறும்.

- தி.அ.ஸ்ரீநிதி, சென்னை-4