Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்
‘அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் - திருப்புகழ்த் தலப்பயணம்’ நூலுக்கான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கி பல தலங்களைத் தரிசித்துக் கொண்டிருந்த நேரம்.

தலங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை எடுத்துக்கொண்டு தேனம்பாக்கத்தில் காஞ்சி காமகோடி மகா சுவாமிகளை தரிசிக்கச் சென்றேன்.

ஒரு வீட்டின் திண்ணையில் சுவாமிகள் அமர்ந்திருந்தார். அதிக கூட்டம் இல்லை. சுவாமிகள் திருவடியில் வீழ்ந்து வணங்கினேன். பெட்டியைத் திறந்து சேகரித்த தல விவரங்களைக் காட்டினேன், அவற்றைப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்தவர், “திருப்புகழ்ப் பாட்டெல்லாம் இதோட சேர்க்கப் போறியோல்லியோ?” என்று வினவினார். “அப்படியே செய்கிறேன் சுவாமி” என்று பதில் சொன்னேன். மகானின் ஆசி பெற்று திரும்பினேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

நுாலாக வெளிவருவதற்குப் பலரையும் சந்தித்தது பெரிய அனுபவம். ஒருமுறை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்து இந்நூல் பதிப்புக்குச் சினிமா தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் ஏற்பாடு செய்து உதவ கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த நேரம் தேவரே அங்கு வந்தார். `ஆஹா... பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போலாயிற்றே' என்று உள்ளம் களித்தேன். தேவர் பேச ஆரம்பித்தார். தான் எடுக்கப்போகும் சினிமாவின் கதையொன்றை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டே போனவர் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, மேற்கொண்டு கதையை எப்படிக் கொண்டுபோகலாம் என்று வாரியார் சுவாமிகளிடம் ஆலோசனைக் கேட்டார். வாரியார் தலையைச் சொரிந்து கொண்டார். `இதனிடையே நம்முடைய விஷயத்தைத் தேவரிடம் சொல்வாரா மாட்டாரா' என்ற எதிர்பார்ப்புடன் நான் நின்றிருந்தேன்.கொஞ்ச நேரத்தில் தேவரும் புறப்பட்டார். நானும் பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்!

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

இவ்வாறு பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்ததில் நான் கற்றுக் கொண்ட பாடம் `முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதே. கந்தன் அருள் எந்த நேரத்தில் வர வேண்டுமோ அப்போதுதான் கிடைக்கும்.

1979-ம் ஆண்டு திருவல்லிக்கேணி முருகன் திருவருட் சங்கத்தின் வெள்ளி விழாவுக்கு, அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் யு. சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் தலைமை தாங்கினார். அந்த ஆண்டில் சங்கத்தின் சார்பில், திருப்புகழ்ப் பாடல்பெற்ற 25 திருக்கோயில்களில் திருப்புகழ்ப் பாடல் பொறித்த கல்வெட்டுகளைப் பதித்தோம். எனவே, அவருடன் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தது முருகன் திருவருளே!

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

அவர் மிகச் சிறந்த நிர்வாகி. இலக்கிய ஆர்வலர். பண்பாடு நிறைந்தவர். எந்த விஷயத்தையும் நாளைக்குப் பார்க்கலாம் என்று தள்ளிவைக்க மாட்டார். கோயில்கள் சம்பந்தமாக ஏதாவது பிரச்னை அல்லது உதவி வேண்டி அவரிடம் சென்றால், தமக்குக் கீழே பணியாற்றும் துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரைக் கூப்பிட மாட்டார். தாமே சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க செய்வார். அதுதான் அவரது நிர்வாகத்திறன். அவர் பணியாற்றிய காலம் அத்துறையின் பொற்காலம் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள். கோயில் மரியாதை, பிரசாதம் முதலியவற்றை ஏற்கமாட்டார்.

அருணகிரிநாத சுவாமிகள் சுவாமிமலையில் பாடியருளிய `திரு எழுகூற்றிருக்கை' என்னும் தேர்வடிவில் அமைந்த சித்திரக்கவியை பளிங்குக் கல்லில் பதித்தபோது, அதன் திறப்பு விழாவுக்கு ஆணையர் வந்தார். தமிழ் இலக்கியத்தில் இம்மாதிரி அமைந்த மற்ற சித்ர கவிகளான... திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நக்கீர தேவநாயனார் ஆகியோர் பாடியருளிய திரு எழுகூற்றிருக்கைகளைத் தேர் வடிவில் சுவரில் பதிக்க உடனே ஏற்பாடு செய்தார்.

அத்துடன் அவற்றுக்கு விவேகானந்தா கல்லூரி தமிழ்ப் பேராசிரியரான ஶ்ரீ சி.ஜெகந்தாசார்யரைக் கொண்டு விரிவுரை எழுதவைத்து, படங்களுடன் நூலைத் தயாரித்து திருவண்ணாமலை கோயில் சார்பில் வெளிவரச் செய்தார். அதற்கான படங்களுடன் நூலைத் தயாரிக்கும் பணி அடியேனுக்குக் கிடைத்தது, நான் பெற்ற பெரும்பேறு.

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

என் பெரிய சகோதரர் சேக்கிழார் தாசன் பேராசிரியர் டாக்டர் ஆர்.ராமசேஷனும் நானும் இணைந்து தயாரித்த `அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த்தலப் பயணம்' என்னும் நூலை, சுவாமிமலை ஶ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயில் சார்பில் வெளிவர ஏற்பாடு செய்தார் ஆணையர். 624 பக்கங் களுடன் பல திருத்தல முருகன் படங்களுடன் உருவான அந்நூலை, அன்றைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இராம வீரப்பன், 15.9.1981 அன்று சுவாமிமலைத் திருக்கோயிலில் வெளியிட, ஆணையர் எங்களைக் கௌரவித்து மகிழ்ந்தார்.

திருப்புகழ்த் தலப்பயண நூல் வெளிவருவதற்கும் ஒரு சுப்பிரமணியன்தான் வர வேண்டும் என்பது கந்தனின் திருவருள் போலும்!

திருப்புகழ்த் தலப்பயண நூல் வெளிவருவதற் கும் ஒரு சுப்பிரமணியன்தான் வர வேண்டும் என்பது கந்தன் திருவருளால் நான் உணர்ந்த அனுபவமாகும். இப்போது நான்கு பதிப்புகள் வந்துவிட்டன என்பது நமக்குக் கிடைத்த பேரருளாகும்.

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

முதற்பதிப்பில், சில தலங்களின் இருப்பிடத் தைச் சரியாக அறிய இயலவில்லை. சில தலங்களின் இருப்பிடம் இதுதான் என்று உறுதியாகத் தீர்மானிக்க இயலவில்லை. காரணம், ஒரே பெயரில் பல ஊர்கள் அமைந்தது ஒன்று, காலமாறுபாட்டில் ஊரின் பெயர்கள் மருவி, மாறி அமைந்தது மற்றொன்று. அந்த முறையில் ‘பாக்கம்' என்ற பெயரில் ஒரு திருப்புகழ்த் தலத்தை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

பொதுவாக கடற்கரைச் சிற்றூர்கள், பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரத்தில் பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பல இடங்கள் உள்ளன.

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் பாக்கம் என்ற பெயர்களுடன் முடியக்கூடிய ஊர்கள் ஏறக்குறைய நூறுக்கு மேல் உள்ளன. செங்கல்பட்டு, மதுராந்தகம், பொன்னேரி, திருவள்ளூர், குடியாத்தம், வேலூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய வட்டங்களில் `பாக்கம்' என்ற பெயரில் அமைந்த ஊர்கள் உள்ளன. எனவே, அருணகிரியார் எந்தப் பாக்கத்தில் உள்ள முருகன்மீது திருப்புகழைப் பாடினார் என்பது சரியாக விளங்கவில்லை.

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

முக்கியமான காரணம், அத்தலத்தைப் பற்றிய எந்த அகச்சான்றும் பாடலில் இல்லை. கோயில்கள் இருந்தாலும் அவற்றின் பழைமை, கட்டப்பட்ட காலம், விக்ரஹ அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு தெளிவான முடிவுக்கு வருவதில் சிரமங்கள் இருந்தன.

திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி வழியில் கடுவனூர் அருகில் உள்ள பாக்கம் என்ற ஊரில், ஶ்ரீசுகந்த குந்தளாம்பிகை சமேத ஶ்ரீசோளீச்வரர் கோயில் உள்ளது. கோயிலின் சிறுபாதைமேல் முருகன் கோயில் தனியாக அமைந்துள்ளது. இத்தலத்தில் ஆறுமுகசுவாமி தனிக்கோயில் ஒன்றும் உள்ளது.

கண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்

முதற்பதிப்பில் இக்கோயிலே திருப்புகழ் பாடல் பெற்றதாக இருக்கும் என்று எழுதினோம். தணிகைமணி அவர்கள் குறிப்பிடும் திருநின்றவூருக்கு அருகில் உள்ள பாக்கம் திருக்கோயில், பிற்காலத்தது என்ற ஆய்வில் அதை எடுத்துக் கொள்ளவில்லை.

நீண்ட கால குழப்பத்துக்குப் பிறகு அருணகிரியாரும் பாம்பனாரும் பாடிப் பரவிய பாக்கம் என்ற தலம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது என்பதை ஒரு முருகனடியாரைக் கொண்டே முருகப்பெருமான் உணர்த்திய லீலை அற்புதமானது. தண்டையும் கிண்கிணியும் ஒலிசெய்ய கழலணிந்து அழகு பொருந்திய சேவடியைத் தூக்கி திருக்கூத்தாடும் பாக்கம் கந்தனைக் கண்ணாறக் கண்டுகொண்டோம்!

- காண்போம் ...