மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பாக்கத்தில் அமர்ந்த பரமன் (சென்ற இதழ் தொடர்ச்சி...)

பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் அருளிய பாடல்களில் கரை கண்டவர் என்று சொல்லக் கூடிய முருகனடியார், முத்துக்குமர குருசாமி என்னும் தமிழறிஞர். மிகச் சிறந்த ஆழமான, அழுத்தமான சொற்பொழிவாளர். இவரை ‘சத்குரு’ என்று அனைவரும் அன்புடனும் பணிவுடனும் அழைப்பார்கள். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையில் இணைச் செயலராகப் பணியாற்றியவர்.

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் 6666-ல், எங்கேயாயினும் ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே பதில் சொல்லுவார். அவ்வளவு புலமையும் ஞாபகசக்தியும் உடையவர். அவரின் தந்தையார் கருமாரி தாசர் என்னும் வீரபத்திரர் மிகப்பெரும் புலவர். தமிழ் மொழியில் எந்தப் புலவரும் கவிஞரும் செய்யாத சாதனையாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மரபுக்கவிதைகளைப் பாடியவர். இவருடைய மொழி அறிவையும் புலமை ஆற்றலை யும் அரசாங்கமோ அல்லது தமிழ்வளர்ச்சி அமைப்புகளோ கண்டுகொள்ளாமல் விட்டது, வருந்தத் தக்க விஷயமே!

ஒரு முறை சத்குருவுடன் பேசிக்கொண்டிருந்த போது, `ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பாக்கம் என்ற தலத்தை தரிசித்துப் பாடியுள்ளார்' என்று தெரிவித்தார். உடனே பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் தொகுதியில், ஸ்ரீமத் குமார சுவாமியம் - சேத்திர காண்டம் பகுதியில், பத்தாவது பதிகமாக பாக்கம் தலத்தைப் பாடியுள்ளதைப் படித்து மகிழ்ந்தேன். அதன் நிறைவுப் பாடலில்

`தண்டை கிங்கிணி யார்ப்பவே

தங்கு செங்கழல் தூக்கியாடு

எண்டயங்கடல் வேற்பிரான்

இன்பு கொண்டு இனிது ஏற்றவூர்

அண்டர் அந்தணர் பாட்டெலாம்

அங்கொள் தண் தமிழாய்ச் சொல்வான்

பண்டரும் புகழ் சாற்றினோ னம்புகழ்ந்துள

பாக்கமே' - என்று பாடப்பட்டுள்ளது.

தண்டையும் கிண்கிணியும் ஒலி செய்ய, கழலணிந்து அழகு பொருந்திய சேவடியைத் தூக்கி திருக்கூத்தாடுகிறான். அத்தகைய பெருமை விளங்கும் வெற்றிவேலையுடைய இறைவன், மகிழ்ச்சி கொண்டு இனிதே எழுந்தருளியுள்ள ஊர் பாக்கம். அது தேவர், அந்தணர் முதலானோரும் பாடல்கள் யாவும் அழகிய தண்தமிழால் விளங்குமாறு திருப்புகழை அருளிய அருணகிரிநாத முனிவரும் புகழ்ந்த ஊர் ஆகும். இந்தப் பதிகத்தைச் சுவாமிகள் 1924-ம் ஆண்டு இரத்தாஷி வருடம் ஆடி மாதம் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாக்கம் முருகனை தரிசித்தபோது பாடியுள்ளார்.

அருணகிரிநாத சுவாமிகள் புகழ்ந்து பாடிய பாக்கம் எனும் தலம் இதுதான் என்று படித்தபோது, ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்ற அனுபூதி வரிகளின்படி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மூலம் நமக்குக் கிடைத்த பெரும் பேறு இது எனக் கருதி மகிழ்ந்தேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

பாம்பன் சுவாமிகள் தமது பதிகம் ஒவ்வொன்றிலும் நிறைவுப் பாடலில் அருணகிரியாரைப் போற்றுவார். அந்த முறையில் வேறு ஒருவரும் பாடியது இல்லை. பாம்பன் சுவாமிகளின் வாக்கு வேத வாக்கு போன்றதாகும். அருணகிரியாரும் பாம்பனாரும் பாடிப்பரவிய பாக்கம் முருகனை தரிசிக்க, சத்குரு மற்றும் அவரின் சீடர் கார்த்திகேயனுடன் புறப்பட்டோம்.

சென்னையிலிருந்து அம்பத்துர்-திருவள்ளுர் சாலையில், திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது பாக்கம். திருவள்ளூருக்குக் கிழக்கே 14 கி.மீ. தூரத்திலும் சென்னையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது. நீர் வளமும் நில வளமும் நிறைந்த இத்தலத்தில் கோயிலின் கிழக்குப்புறத்தில் திருக்குளம் காணப்படுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

வடக்கு திசை நோக்கி வாயிற்புறம் சிறு கோபுரத்துடன் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் தலவிருட்சம் கொன்றை மரம் காட்சி தருகிறது. மேற்குப் பிராகாரத்தில் மூலையில் மகா கணபதி சந்நிதி உள்ளது. அவருக்கு அருகே அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ள சிவசுப்ரமணியர், ஒருமுகம் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார். மிகச் சிறிய திருமேனி. இருபுறமும் வள்ளி-தேவசேனை இருவரும் உள்ளனர்.

அருணகிரியார் பாக்கம் முருகனைப் பாடியுள்ள திருப்புகழ் இரண்டு உள்ளன. அவற்றில் ஓன்றில், இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக, நம் சிந்தனைக்குத் தேவையான ஓர் அற்புதச் செய்தியைப் பதிவு செய்கிறார்.

`மனிதன் பிறந்து வளர்ந்தபின் பொருள் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்கிறான். அதற்காக இந்த உடற்கூட்டை விரும்பிச் சுமந்து பல ஊர்கள், நாடுகள் என அனைத்துக்கும் செல்கிறான். அங்கே பலவற்றைப் பார்த்து திரிந்து அலைச்சல் உறுகிறான். செல்வப் பேராசையால் இளைத்து வாடித் தளர்ச்சியடைகிறான்.

இதற்குக் காரணம் அவனை ஆட்டிப்படைக்கும் ஐம்புலன்களின் வேட்கைதான். அவற்றிலிருந்து விலகி ஒருமைப் பட்ட மனத்துடன், `முருகா! உன்னுடைய பெருமைகளைப் பாடிப் பாடி, உன் திருவடிகளை விரும்பி, அதனால் துன்பங்களைக் கடந்து நின்று, மோட்ச வீட்டுக்குள் புகுந்து இருந்து மகிழமாட்டேனா’ என்று ஏங்கிக் கேட்கிறார்.

நாமும் இந்தப் பிரார்த்தனையுடன் பாக்கம் முருகனை வழிபட்டு வலமாக வரும்போது, கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலஸ்தானத்தில் ஶ்ரீதழுவக்குழைந்தீசர் மிகச்சிறிய பாணத்துடன் அருள்கிறார்.

இவருக்கு இந்தப் பெயர் எப்படி அமைந்தது என்பதற்குக் காஞ்சி கயிலாசநாதர் கோயில் வரலாற்றுக்குச் செல்ல வேண்டும்.

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்தார்.

வெள்ளத்தால் லிங்கம் கரைந்துபோய்விடுமே என்று உமையம்மை அஞ்சி, லிங்கத்தைத் தழுவிக் காத்தாள். அப்படித் தழுவியபோது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பையும் முலைச் சுவடையும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். அதனால் இறைவனுக்குத் `தழுவக் குழைந்த நாதர்’ என்று பெயர் வந்தது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சிஏகம்பத்தில் இடக்கண் பார்வை பெற்றபோது பாடிய பதிகத்தில், இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

எள்கல் இன்றி இமையவர் கோனை

ஈசனை வழிபாடு செய்வாள்போல

உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை

வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி

வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட

கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்

காணக் கண் அடியேன் பெற்றவாறே

- என்று பாடியுள்ளார்.

இத்தல இறைவனை ஆலிங்கன பாலீச்வரர் என்றும் அழைக்கின்றனர். சந்திராஷ்டம தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து தூப-தீபம் ஏற்றி வழிபட்டால், அந்த தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

உள் மண்டபத்தில் தெற்குநோக்கி ஶ்ரீபாலாம்பிகை அருள்கிறாள். மகா மண்டபத் தில் தெற்குநோக்கி நடராஜர், சிவகாம சுந்தரி, மணிவாசகர் ஆகியோரின் உற்சவ விக்கிரகங்கள் உள்ளன. கருவறைக் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரின் வடிவங்கள் உள்ளன. சண்டேசர் சந்நிதி தனியாக உள்ளது.

இந்தத் திருக்கோயிலைப் பூசித்து வரும் சிவாசார்யர், அவரின் குமாரர் இருவரும் இந்தக் கோயிலை மிக அழகாகவும் தூய்மையாகவும் நிர்வகித்து வருகின்றனர்.

கூர்பித்த சூலதன னாற்குத்தி ஆவிகொடு

போத்துக்க மானகுறை யுடையேனைக்

கூப்பிட்டுஉ சாவருளி வாக்கிட்டு நாமமொழி

கோக்கைக்கு நூலறிவு தருவாயே

பாக்கொத்தி னால் இயலர் நோக்கைக்கு வேல்

கொடுயர் பாக்கத்தில் மேவவல

பெருமாளே!

(கார்க்கொத்த)

`இப்பிறப்பில் யமன் ஒருநாள் வந்து என் ஆவியைக் கொண்டுபோகும் குறைபாடு உடை யவன் நான். என்னை நீ கூப்பிட்டு உன் அருகே அழைத்து (செளக்கியமா... எப்படியிருக்கிறாய் என்றபடி) விசாரித்து, உன் திருநாமங்களைப் பாடுதற்குரிய நூலறிவை - ஞானத்தைத் தந்தருள்வாய்... பாக்கத்தில் மேவும் பெருமாளே' என்று அருணகிரியார் வேண்டுகிறார்.

நாமும் அவர் வழியில் பாக்கம் முருகனை வேண்டி வரம் பெறுவோம்.

- காண்போம்...

சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது அரக்கோணம். இந்த ஊரிலிருந்து தக்கோலம் செல்லும் பாதையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமாதலம்பாக்கம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்!

இங்கு அருளும் அருள்மிகு திருமாலீசர், திருமாலுக்குக் காட்சி தந்தவர். இவரின் லிங்கத் திருமேனி பொன்னிறமாய்த் திகழ்கிறது. லிங்க பாணத்தில், பாணத்தின் பின்புறம் வரை நீண்டு காணப்படும் பிரம்ம ரேகை கூடுதல் விசேஷம். இங்கு தன்வந்திரி அம்சத்துடன் அருளும் அருளும் ஶ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டால் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை.

- கே.குமார், சென்னை-44