மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 33 : சரஸ்வதி நதிக்கரையில்!

சரஸ்வதி நதிக்கரையில்!
பிரீமியம் ஸ்டோரி
News
சரஸ்வதி நதிக்கரையில்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் - படங்கள்: ம.செ

`அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்’ எனும் அற்புதமான ஆய்வு நூலை 1947 - ல் எழுதிய தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரியார் சென்று தரிசித்து, திருப் புகழில் பாடிய தலங்களை ஒருவாறு வகைப்படுத்தியுள்ளார். அதில் வட இந்தியத் தலங்கள் ஆறு என்ற எண்ணிக்கையில் பதிவு செய்கிறார்.

காசி, ஹரித்துவார் அடுத்து பஞ்சாப் மாகாணத்தில் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள வயிரவி வனத்து வடிவேலனை வாழ்த்தி, கயிலைமலையை தூரத்தே நின்று தொழுது சீவன் சிவ சொரூபம் என்பதை விளக்கி யுள்ளதாக விவரிக்கிறார்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

1954 - ம் ஆண்டில் திருப்புகழ் பாடல்களுக்கு எழுதிய உரை நூலில், ‘வயிரவி வனம்: இது பஞ்சாப் மாகாணத்தில் சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகத் தெரிகின்றது. ஆயினும் சரியான இடம் விளங்கவில்லை’ என்று தணிகைமணியார் பதிவு செய்கிறார்.

தணிகைவேலனின் தனிப்பெரும் கருணையால் எழுதப்பெற்ற அவருடைய உரை நூல்களில், சில இடங்களில் கந்தவேளே சில விஷயங்களை எழுதவைப்பான். அந்த வகையில், ‘சரியான இடம் விளங்கவில்லை எனினும் ஆய்வுக்குரியது’ போன்ற சொற்றொடர்கள், அவரது காலத்துக்குப் பிறகு ஆய்வு செய்வோருக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளன. அந்தவகையில் வயிரவி வனத்தைக் தேட முற்பட்டாலும், ஏறக்குறைய 40 ஆண்டுகள் தெளிவு கிடைக்கவில்லை.

வயிரவி வனம் தலத் திருப்புகழில் ‘மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்வயல் புடை கிடக்கு நீல மலர் வாவிவளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறுவயிரவி வனத்தின் மேவு பெருமாளே’என்று அருணகிரி நாதர் பாடுகிறார்.

வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்த மரங்கள் சூழ்ந்துள்ள - வயல்கள் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில், நீலோற்பல மலர்கள் மலர்ந்துள்ளன. அப்படி வளப்பம் வாய்ந்த கரைகளோடு சரஸ்வதி நதிக்கரையில் விளங்குகின்ற ‘வயிரவி வனம்’ என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, ஞானம் அருள்வாயே என்று வேண்டுகிறார்.

சரஸ்வதி நதிக்கரையில்
சரஸ்வதி நதிக்கரையில்

இத்தலப் பாடலில் இரண்டு விஷயங்கள்: ஒன்று சரஸ்வதி நதி, மற்றொன்று வயிரவி வனம். முதலில் நதியைத் தேடுவோம். வட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதி ஒன்றும் பாய்ந்ததாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பின்பு அந்த நதி திசைமாறி, எங்கோ மறைந்து விட்டது. நம் இல்லங்களில் நடைபெறும் பண்டிகைகளில், பூஜை செய்யும் போது கலச பூஜையில், ‘கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு’ என்று சொல்லி பாரதத்தில் பாயும் புண்ணிய நதிகளின் ஆகர்ஷணத்தைக் கலசத்தில் உள்ள நீருக்கு மந்திர ரூபமாக அளிக்கிறோம்.

அவற்றில் சரஸ்வதி நதியும் ஒன்று. அது எங்கே தோன்றியது, எங்கெல்லாம் ஓடி எப்போது மறைந்தது?

1920-ம் ஆண்டு மொஹஞ்சதாரோ நகரம் பூமிக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. அது சிந்து நதியின் அருகில் இருந்ததால் அதற்கு ‘சிந்து சமவெளி நாகரிகம்’ என்று பெயரிடப் பட்டது. பிறகு ஹரப்பா நகரம், லோதம் நகரம் என்று ஆயிரக்கணக்கான கட்டடப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மிகப்பெரிய நீண்டதொரு கலாசார அமைப்பு திகழ்ந்ததை, அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. இது, சிந்துசமவெளி நாகரிகம் என்று உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப் பெற்றது. இதைப் பற்றி வேதத்தில் மேற்கோள் கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய பழைமை வாய்ந்த இந்திய நாகரிகத் தில், சரஸ்வதி என்ற நதியும் இருந்தது பற்றி மகாபாரதத்தில் பேசப்படுகிறது. அந்த நதி எங்கே போயிற்று என்ற ஆய்வு மேற்கொண்டபோது, 1970- ம் ஆண்டு அமெரிக்க செயற்கைக்கோள் எடுத்த படம், வட இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மறைந்த நீர்நிலை களைப் பற்றித் தெளிவாக விளக்கியது.

இது, மறைந்த சரஸ்வதி நதியின் நீரோட்டம்தான் என்று உறுதி செய்யப்பட்டது. பிறகு சரஸ்வதி நதியின் முழு வரைபடமும் தயாரிக்கப்பெற்று தேடும் படலம் தொடங்கி, 1995-ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் 60 மீட்டருக்கு அடியில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. சரஸ்வதி நதி, கயிலாச மானசரோவர் மலைப்பகுதியில் தொடங்கி இமாலயத்தின் வழியாக... இன்றைய பாகிஸ்தான், நம்முடைய ராஜஸ்தான் வழியாக ‘நாரா’ பள்ளத்தாக்கைக் கடந்து அரபிக் கடலை அடைகிறது என்று ஆய்வு அறிக்கையில் தெளிவு கிடைத்தது.

சரஸ்வதி நதிக்கும், சிந்துநதிக்கும் இடைப் பட்ட பகுதியில்தான் மேற்கண்ட மொஹஞ்சதரோ, ஹரப்பா போன்ற கலாசார அமைப்புகள் இருந்தன. எனவே, இது சரஸ்வதி, சிந்து சமவெளி நாகரிகம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி விட்டது.

கண்டுகொண்டேன் கந்தனை - 33 : சரஸ்வதி நதிக்கரையில்!

மறைந்த சரஸ்வதி நதியை மீண்டும் வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளும் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த சரஸ்வதி நதிச் சமவெளி நாகரிகம் இருந்த பகுதியில் வாழ்ந்த பெருமக்களின் சந்ததியினர், இன்று உலகத்தின் பல பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் சரஸ்வதி நதிக் கலாச்சார மரபினர் என்று தங்களை பெருமையுடன் பறைசாற்றிக் கொள்கிறார்கள்.

இனி, ‘வயிரவி வனம்’ தேடலைத் தொடர் வோம். வட இந்தியாவில் ஒரு காலத்தில் ஓடிய சரஸ்வதி நதியின் கரையில் அமைந்த வயிரவி வனம் தலத்தைப் பற்றிய தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் எப்படி இந்த ஆய்வை மேற்கொள்வது? அருணகிரியார் வாழ்ந்த 14, 15-ம் நூற்றாண்டுகளுக்குப்பின் ஏறக்குறைய 250 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்குள் எத்தனையோ அரசியல், கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது புரியாத புதிராக இருந்து வந்தது.

ஒரு முறை, ஜபல்பூர் நாகராஜ சர்மா என்னும் ஆன்மிக எழுத்தாளரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் உள்ள நதிகள் பற்றி ‘நதிமூலம்’ என்றொரு விரிவான புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். வயிரவி வனம் என்று வட இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. தென்னிந்தியாவில் இந்த நதியின் பெயர் எங்கேயாவது உள்ளதா என்று தேடிப் பார்க்கலாமே என்று ஒரு தெளிவைக் காட்டினார்.

திருவான்மியூரில் உள்ள டாக்டர். உ.வே.சாமிநாதய்யர் நூலகத்தில் வேறு சில குறிப்புகள் எடுக்கச் சென்றபோது, ‘காஞ்சி புராணம்’ என்ற நூலைப் பார்க்க வேண்டிய அவசியம் வந்தது.

திருவாவடுதுறை ஆதீனத்து மாதவ சிவஞான யோகிகள் என்னும் மகான், காஞ்சிபுரத்தில் உள்ள திருவாவடுதுறை திருமடத்தில் இருந்து கொண்டு காஞ்சி புராணத்தை எழுதினார் என்பர். இப்புராணத்தின் முற்பகுதியை இவரும் பிற்பகுதியை இவரது மாணாக்கர் கவிராட்சச கச்சியப்ப முனிவரும் எழுதியதாகக் கூறுவர். காஞ்சி புராணத்தின் முற்பகுதியில் அத்தலத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.

இதில் `சிவாத்தான' படலம் என்பது ஒன்று. இது முன்பு காஞ்சி மாமுனிவர் தங்கியிருந்த தேனம்பாக்கம் பகுதியாகும். இப்படலத்தில் வரும் ஒரு பாடல்: `மேற்படு கலைமகள் நதி என வேற்றுரு வுறு சால்பிற்குஏற்புற அவயவம் அவைகலும் ஏத்தெழில் உருமாறித்தோற்றியவென அறல் மிசைவரு தூத்திரள் மணிமலர்கள் போற்றுறு பலகொடியுடன் எழில் பூத்தணவது நதியே’.

இதைத் தொடர்ந்து வரும் பாடல்களில், ‘வாணி நதி’, ‘நதி வாணி’ என்று வரும் நதியின் குறிப்பைக் கொண்டு, இது சரஸ்வதி நதியின் மறுபெயர் என்பதை அறிந்து, அந்த வரலாற்றை ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன்.

காஞ்சிபுரத்தில் பிரம்மா மிகப்பெரிய அச்வமேத யாகத்தைச் செய்ய முற்பட்டார். சரஸ்வதியோடு ஊடல் காரணமாக அவளை அழைக்கவில்லை.

மாயா சக்தியால் இதனை அறிந்த சரஸ்வதி தேவி, பத்தினி சமேதரராகச் செய்யவேண்டிய யாகத்தை, மனைவி உடன் இல்லாமல் செய்ய முற்பட்ட தன் கணவனின் யாகத்தை நிறுத்தப் புறப்பட்டாள். அளவற்ற கோபத்துடன் ரௌத்ராகாரமாக யாக பூமிக்கு வந்தாள். அங்கே நீரிலும் பின்னர் மரம் மூங்கில் முதலியவற்றிலும் மறைந்திருந்தாள்.

பிரம்மா எப்படியும் யாகத்தைத் தொடங்க வேண்டும் என்ற முடிவில், சாவித்திரி, காயத்ரி ஆகிய மனைவியருடன் தொடங்கினார். ஏற்கெனவே மிகுந்த கோபத்தில் இருந்த சரஸ்வதி, தன்னுடைய வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுக்க முற்பட்டாள்.

இதனை அறிந்த நாரத முனிவர் பிரம்மதேவனிடம், `‘கோபம்கொண்டுள்ள சரஸ்வதிதேவி, நீங்கள் இயற்றும் யாகத்தை அழிக்க, நதி வடிவமாய் நெருங்கி வருகிறார். எனவே விரைவாக அதனைத் தடை செய்வீர்'’ என்று அறிவுறுத்தினார்.

நான்முகன் உடனே சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமான் திருமாலை அழைத்து, நதியாக வரும் சரஸ்வதியின்ன் கோபம் தணித்து பிரம்மனின் யாகத்தை விரைந்து காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி திருமால் சரஸ்வதி நதியைத் தடுத்து நிறுத்த அணையெனக் குறுக்கே சயனித்தார்.

இதைக் கண்டு சரஸ்வதிதேவி முன்னேறிச் செல்ல முடியாமல், வெட்கம் அடைந்து, திரும்பி, கடல் நோக்கிச் சென்றாள்.

சிவபெருமான் சொன்ன வண்ணம் செய்தமையால் திருமாலுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

சரஸ்வதி நதியாளும் வேறொரு திருநாமத்தை ஏற்றாள்!

-காண்போம்...

ஆயுள் தேவதை பிரார்த்தனை!

யுளைப் பெருக்கும் அற்புத ஹோமம் ஆயுஷ்ய ஹோமம். இந்த ஹோமத்தைச் செய்யும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள், ஆயுள் தேவதையை மனதில் தியானித்து, தினமும் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்வது நல்லது.

கண்டுகொண்டேன் கந்தனை - 33 : சரஸ்வதி நதிக்கரையில்!

ஆயுர்தேஹி தனம்தேஹி வித்யாம்தேஹி மகேஸ்வரி

சமஸ்தம் அகிலான்தேஹி தேவிமே பரமேஸ்வரி

இதன் அர்த்தம், ‘தேவி! எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு. ஆயுள் மட்டும் போதுமா? அதனால், சுகமாக வாழத் தேவையான செல்வத்தையும் கொடு. வெறும் செல்வத்தைக் கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து நான் வீணாகிப் போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடு. அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடு’ என்பதாகும்.

தினசரி இந்தப் பிரார்த்தனையை மனப்பூர்வமாக செய்து வருபவர்கள் நூறு வயது வரை நலமுடன் வாழ சகல தேவ தைகளும் துணை செய்கிறார்கள்.