மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்!

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தன்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

காஞ்சி வயிரவி வனம்

(தொடர்ச்சி...)

நான்முகன் ஏற்பாடு செய்திருந்த யாகத்தை அழித்துவிடும் ஆவேசத்துடன் நதியாய் மாறிப் பாய்ந்து வந்தாள் சரஸ்வதிதேவி என்று பார்த்தோம். பிரம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரின் யாகத்தைக் காக்கும்படி திருமாலிடம் கேட்டுக்கொண்டார் ஈசன்.

அதன்படி திருமால் சரஸ்வதி நதியைத் தடுத்து நிறுத்த அணையெனக் குறுக்கே சயனித்தார். இதைக் கண்டு சரஸ்வதிதேவி முன்னேறிச் செல்ல முடியாமல் வெட்கம் அடைந்து, திரும்பி கடல் நோக்கிச் சென்றாள். சிவபெருமான் சொன்ன வண்ணம் செய்தமையால் திருமாலுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

சரஸ்வதி நதி ‘வேகவதி நதி’ என்ற திருப் பெயரை ஏற்றாள். நானிலம் எங்கும் செழிக்கும் விதம் பாய்ந்து, அனைவருக்கும் இன்ப வாழ்வை அளிப்பாள் வேகவதி என்று போற்றப்பட்டாள்.

சொன்ன வண்ணம் செய்த நீ

சொன்ன வண்ணம் செய்தவன்

என்ன என்றும் ஓங்குதி இத்திரு பெருநதி

மன்னு வல்வினை எலாம் வாட்டு வேகவதி என

இந்நிலத்தினிற் சிறந்தின்ப வாழ்வளிக்கவே...’

இப்படி, மாதவ சிவஞான யோகிகள் பாடியருளிய காஞ்சி புராணத்தில், சிவாத்தான படலத்தில் மேற்காணும் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன திருமால் வெள்ளத்தைத் தடுக்க அணை போல் சயனித்தபோது, சரஸ்வதி வெஃகினதால் (வெட்கம் அடைந்ததால்) அந்தத் திருத்தலத்துக்கு ‘திருவெஃகா’ என்று பெயர் உண்டாயிற்று என்பர்.

சரஸ்வதிதேவி, நதி உருவில் வந்து சிவபெருமான் அருளால் வேகவதி என பெயர் பெற்ற வரலாற்றை நோக்கும்போது, காஞ்சிபுரத்தில்தான் இந்த ‘வயிரவி வனம்’ இருக்கவேண்டும் என்பது நமக்கு உறுதியாயிற்று.

மேலும் வட இந்தியாவில் பைரவி என்று அழைக்கப்படும் பெயர், நம் தமிழ் இலக்கியங் களில் பெரும்பாலும் வயிரவன், வயிரவி என்றுதான் காணப்பெறும். இதனிடையே ‘சிவ சுந்தரி’ ஆன்மிக இதழின் ஆசிரியரான ஆட்சிலிங்கம் அவர்களிடம் இது விஷயமாகப் பேசியபோது, காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையத்தில் அஷ்ட பைரவர் கோயில் ஒன்று உண்டு என்று குறிப்பிட்டார்.

அந்தக் கோயிலை தரிசிக்க சத்குரு, கார்த்திகேயன் ஆகியோருடன் புறப்பட்டோம். `கச்சி மேற்றளி’ எனும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் அமைந்துள்ள இடம், காஞ்சிபுரத்தில் `பிள்ளையார் பாளையம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு அருள்மிகு சோழீச்வரர் கோயில் அமைந்துள்ளது.

சோழர்கள் காலத்தில் பெரும் சிறப்புடன் அவர்களால் போற்றப் பட்டதால், அவர்கள் பெயராலேயே இந்தக் கோயில் சோழீச்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்துக்கு அஷ்ட பைரவ மூர்த்திகளும் வந்து, பெரிய சோலையின் நடுவில் தத்தம் பெயரால் சிவலிங்கங்களை அமைத்து, சிறப்பாக பூஜித்து பேறு பெற்றுள்ளனர்.

கண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்!

ஒரே மதிலுக்குள் அந்த லிங்கங்கள் எட்டுக்கும் தனித்தனி சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. இந்த லிங்கங்கள் அவற்றை வழிபட்ட வயிரவர்களின் திருப்பெயரிலேயே உள்ளன. அவை:

1. அஜிதாங்க பைரவ லிங்கம்

2. குரு பைரவ லிங்கம்

3. சண்ட பைரவ லிங்கம்

4. குரோதன பைரவ லிங்கம்

5. உன்மத்த பைரவ லிங்கம்

6. கபால பைரவ லிங்கம்

7. பீஷ்ண பைரவ லிங்கம்

8. சம்ஹார பைரவ லிங்கம்

இங்ஙனம் அஷ்ட பைரவர்களும் வழிபட்டதால் இந்தத் திருத்தலம் அஷ்டபைரவர் க்ஷேத்திரம் என்று அழைக்கப்பெறுகிறது. சோழர்கள், பைரவர்மீது மிகுந்த பக்தி கொண்டு, சிவலிங்க வடிவம் அமைத்து வழிபட் டுள்ளதால் சோழீச்வரர் கோயில் என வழங்கப்படுகிறது.

இக்கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த வாயிலின் தென்புறம் விநாயகரும் வடபுறம் முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.

முருகன் சந்நிதிக்கு முன்பாக பெரிய மண்டபம் உள்ளது. இவர்களை வணங்கி உள்ளே சென்றால், அகன்ற பிராகாரத்தை வலம் வரும்போது, மேற்படி அஷ்டபைரவ சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

எட்டாவது பைரவர் வழிபட்ட அருள்மிகு சம்ஹார பைரவ லிங்கம் கோயிலின் மத்தியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.

சம்ஹார பைரவ லிங்கத்தின் பின்புறம் சுவரில் சோமாஸ்கந்த வடிவம் அமைந்துள்ளது. இந்த லிங்க மூர்த்தி தன் பக்தர்களின் பகைவர்களை சம்ஹரிப்பதுடன், அடியார்களுக்கு மகிழ்ச்சியையும் மனத்துக்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறார்.

சோழர்களின் காலத்தில் இக்கோயில் அதி உன்னத நிலையில் போற்றப் பட்டதாக இருந்தாலும், தற்போது அவர்களின் கட்டடக்கலை அமைப்பு முறைகளைக் காண முடியவில்லை. கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தைச் சுற்றி வேகவதி ஆற்றின் கரையில் அநேக வனங்கள் இருந்தன. ஆனால், கால வெள்ளத்தில் அவை அழிந்துபோயின. தேவாரப் பாடல் பெற்ற தலமான `கச்சி நெறி காரைக்காடு’ என்ற தலம் வேகவதி ஆற்றின் கரையிலேயே இருப்பதாகும்.

கண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்!

இங்கு ஆற்றோரம் தும்பை வனம் என்னும் இடமும் உள்ளது. அங்கு காஞ்சியின் காவல் தெய்வமான தும்பை வன மாகாளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இந்த வகையில், வயிரவ மூர்த்திகள் எழுந்தருளி இருந்த வனம் வயிரவி வனம் என்று அழைக்கப்பட்டது.

உருத்திரர்கள் கோயில்கள் நிறைந்த பகுதி உருத்திர சோலை என்றாயிற்று.

பெருநிலப்பரப்பில் இருந்த இந்த வனங்கள், அரசியலார் மற்றும் மக்களின் ஆக்கிரமிப்புப் பேராசையால் தற்போது ‘வனம் எங்கே’ என்று தேடும் அளவில் குறுகி உள்ளதுதான் உண்மை.

வயிரவர்கள் உக்கிரமூர்த்திகளாக இருந்தாலும் ஞானவான்களாகவே போற்றப்படுகின்றனர். ஞானவாணியான சரஸ்வதி நதியின் கரையில் ஞானேஸ்வரர்களாக விளங்கும் வயிரவர்களின் பரிவாரமாக வீற்றிருக்கும் ஞானகுருநாதனிடம் ஞானத்தை அருளுக என்று வேண்டுவதாக இத்தல திருப்புகழ் அமைந்துள்ளமை சிந்தனைக்குரியது.

‘முருகா! நின் பதமலர் உளத்தில் நாளும் நினையுறு கருத்தர்தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே’ என்கிறார் அருணகிரியார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்!

திருப்புகழ் தல வரலாற்று ஆய்வில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக விளக்கம் காண முடியாமல் இருந்த `சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம்’ பற்றிய தெளிவான விளக்கத்தைக் ‘காஞ்சி புராணம்’ நமக்கு உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

திருப்புகழ் அடியார்கள் காஞ்சிபுரம் செல்லும்போது, அருள்மிகு சோழீச்வரர் ஆலயத்துக்குச் சென்று, அந்த வயிரவி வனத்தில் மேவும் வடிவழகனாகிய வேலனை வழிபட்டு, ஞானம் பெறலாமே!

-காண்போம்...