Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 35: திரியம்பகம் மருவிய திருமுருகன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திரியம்பகம் மருவிய திருமுருகன்!
திரியம்பகம் மருவிய திருமுருகன்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண யஜுர் வேதத்தின் மிகவும் சிறந்த பகுதியாக, ஸ்ரீருத்ரம் என்ற மகா மந்திரம் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதன் இதய ஸ்தானத்தில் சிவ பஞ்சாக்ஷர மந்திரம் பிரகாசிக்கின்றது.

‘ருத்ர’ என்னும் சொல், `தன்னை வணங்கும் பக்தர்களின் எல்லா வகையான துன்பங்களையும் களைபவர்' என்னும் பொருளுடையது. இத்தகைய பெருமை வாய்ந்த ருத்ர மூர்த்தியின் சிறப்பியல்புகளைத் தெளிவாக விளக்கும் வேதப்பகுதியே ‘நமகம்’ எனப்படும் ஸ்ரீருத்ரம் ஆகும். இதன் பதினோராவது பாகத்தில் பன்னிரண்டாவது மந்திரம் அநேகமாக பலரும் அறிந்த ஒன்றாகும்.

‘த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்

உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்'

இதன் அழகான தமிழ் மொழிப் பெயர்ப்பு...

‘இயற்கை நறுமணம் உடைய தேவரே,

ஈடில்லா கருணையால் அடியாரை வாழ்விக்கும்

வியத்தகு முக்கண் உடைய எம்பெரும

வினயமாகப் போற்றி அஞ்சலி செய்தோம்

வெள்ளரிப்பழம் காம்பினின்று விடுபடுவது ஒப்ப

மேவிய உமது அருளால் மரணத்திலிருந்து விடுபடவும்

தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்

திசை மாறாது என்றும் வாழ்ந்திடுவோமாக.'

இப்படி அற்புதமான பொருளுடன் கூடிய இந்த மந்திரத்தில் திரியம்பகம் என்ற சொல் சிவ பெருமானின் முக்கண்ணைக் குறிப்பதாகும்.

பாரததேசத்தின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ‘திரியம்பகேசம்’ என்பது மகாராஷ்டி ராவில் நாசிக் அருகில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலும் திரியம்பகேஸ்வரர் ஒரே ஒரு தலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது இருப்பிடம் திரியம்பகம்புரம் என்னும் தலமாகும்

அந்தத் தலத்தின் பெயரும் மறைந்துபோக, அதன் இருப்பிடத்தைத் தேடி கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான கதை. அருணகிரிநாதர் தமது தல யாத்திரையில், திரியம்பகம்புரத்தில் உள்ள கந்தவேளை தரிசிக்கிறார்.

‘கன முறுந் த்ரியம்பகபுர மருவிய கவுரி தந்த கந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழவல பெருமாளே’ (உரையொழிந்து) என்று அழைக்கிறார்.

கனம் என்ற சொல்லுக்கு சீர்மை, செறிவு, நிறைவு, பெருமை, மிகுதி வன்மை, திரட்சி, நன்மதிப்பு போன்ற பல பொருள்கள் உண்டு.

கண்டுகொண்டேன் கந்தனை - 35: திரியம்பகம் மருவிய திருமுருகன்!

ஒரு காலத்தில் இவ்வாறு பெருமையுடனும் புகழுடனும் திகழ்ந்த திரியம்பகம் இன்று வரைபடத்தில் காணமுடியாதபடி ஓரிரு நூற்றாண்டுகளில் மறைந்தது எப்படி?

தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் நூலில் இத்தலத்தை ‘மதுர மாணிக்கம் என்னும் தலம்' என்பர். திருவாரூரிலிருந்து எட்டு மைல் என்று குறிப்பிட்டுள்ளார்.

1978 - ம் ஆண்டு மதுர மாணிக்கம் என்ற ஊரைத் தேடிச் சென்றபோது இந்தப் பெயருடைய இடம், பெரும்பண்ணையூர் அருகில் வயல் வழியாக காட்சி தந்தது. இதன் மறுபகுதி எருமைத்தலை என்று அழைக்கப்பட்டது.

திரியம்பகபுரம் எனும் கௌரவமான பெயர் எப்படி `எருமைத்தலை' என்றாயிற்று என்பது தெரியவில்லை. ஊரும் இல்லை கோயிலுமில்லை!

தமிழ்நாடு அரசு 1972 - ல் அச்சிட்ட கிராமங்களின் அகரவரிசைப்பட்டியல் எனும் புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களின் பெயர்களும் மாவட்ட வாரியாக - தாலூகா வாரியாக காணப்படுகின்றன. ஆனால், நன்னிலம் வட்டத்தில் திரியம்பகபுரம், மதுரமாணிக்கம், எருமைத் தலை ஆகிய எந்த பெயரும் காணப் படாதது ஆச்சரியமாக இருந்தது.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, ஏறக்குறைய 650 ஆண்டுகளுக்குள் பெயர் இருப்பிடம் இரண்டுமே மறைந்து போனது என்ன மாயமோ?

இந்த நிலையில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமுருகனின் திருவருளால், இந்தத் தலத்தைப் பற்றி ஆராய ஒரு காரில் புறப்பட்டோம். திருவாளர்கள் பழையபாளையம் கிருஷ்ணமூர்த்தி, சீர்காழி நாராயணன், சென்னை கோபண்ணா ஆகியோர் உடன் வந்தனர்.

சேங்காலிபுரத்திலிருந்து வயல்வெளியில் காரில் சென்றபோது சரியான வழித்தடம் இல்லாமல் ஓரிடத்தில் வண்டி நின்றது. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தபோது, எதிரில் ‘திரியம்பகம்புரம் சுடுகாடு’ என்ற பெயர்களுடன் கூடிய கொட்டகை கண்ணில் தென்பட்டது.

உள்ளத்தில் ஆச்சரியமும் உடலில் சிலிர்ப்பும் ஏற்பட்டது. ‘காடுடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்’ என்று பாடிய திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் நினைவுக்கு வந்தது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவெண் பாக்கத்தில் `உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே’ என்று இறைவன் சொன்னது போல ‘எங்கெல்லாமோ பல வருஷங்களாக தேடுகிறாயே... நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்று எம்பெருமான் காட்டிய அருளிய கருணையை எண்ணினால் மயிர்கூச்செறிகிறது.

அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றபோது ஒரு மேட்டில் காளியம்மன், பிடாரி அம்மன் கோயில்கள் காணப்பட்டன. காஞ்சி மாமுனிவரின் ஆக்ஞைப்படி இந்தத் திரியம்பகபுரத்தில் மேற்படி கோயில்கள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றதைக் கல்வெட்டில் பதித்திருந்ததைக் கண்டபோது, அது திரியம்பகபுரம் இருப்பிடத்தை உறுதி செய்வதற்கான இரண்டாவது சாட்சியாக அமைந்தது. ஆனாலும், நாம் தேடி வந்த திரியம்பகேசுவர் இன்னும் நமக்கு லிங்க வடிவில் காட்சி தரவில்லையே என்ற ஏக்கத்தில் தொடர்ந்து பெரும்பண்ணையூர் ஊருக்குள் நுழைந்தோம்.

கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரிக்கலாம் என்று அங்கு சென்றபோது, அடுத்த வீதியில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பாப்பா சுப்பிரமணியம் என்பவர் இல்லத்தைக் காட்டினர்.

அவரிடம் நாங்கள் தேடி வந்த விவரத்தைச் சொன்னபோது, திரியம்பகம் தமது சொந்த ஊர் என்றும் தற்போது ஊர் முழுவதுமே வயல் வெளியாக உள்ளது என்றும் சொன்னார். தமது இளம் வயதில் சிவன்கோயில் இடிபாடுகளைப் பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

தலத்தின் மேன்மையை அறியாதிருந்த தாலும் பலரும் கோயில் இடங்களை ஆக்கிரமித்ததாலும் திரியகம்புரம் கோயில், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டதை உணர்ந்து வருந்தினோம்.

‘ப்ரவசன திலகம்’ சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர் மற்றும் அவர் உறவினர்களின் குலதெய்வமான பால சாஸ்தா கோயில், இந்தத் திரியம்பக புரத்தின் ஒரு பகுதியில், வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது.

‘த்ரியம்பக புராதீசம் கணாதிப ஸமன் விதம் கஜாருடம் அஹம்வந்தே சாஸ்தாரம் குலதைவதம்' என்ற ஸ்லோகத்தை, அவர்கள் தம்முடைய கதாகாலட்சேபங் களில் சொல்லுவது வழக்கம்.

இந்த சாஸ்தா கோயில் உள்ள பகுதியை எருமைத்தலை என்று அழைக்கிறார்கள். என்னே காலத்தின் கோலம்!

கண்டுகொண்டேன் கந்தனை - 35: திரியம்பகம் மருவிய திருமுருகன்!

திரியம்பகம் கோயில் இருந்த இடத்தை 11-1- 2011 அன்று மீண்டும் ஒருமுறை தேடிச் சென்றோம். அங்கு வயல்வெளியில் வேலை செய்யும் உழவர் ஒருவர் அழைத்துச் சென்று வழிகாட்டினார்.

அப்போது பகல் 12 மணி. உச்சி வெயில் வேளையில் வயல் வரப்புகளைத் தாண்டி ஒரு மேட்டில் சிவலிங்கத்த்ன் காட்சி கிடைத்தது. சதுர ஆவுடையாருடன் சாய்ந்த நிலையில் முட்புதர்கள் நிறைந்த இடத்தில் காணப்பட்டது.

அருகில் பெரிய பாம்புப் புற்று இருந்தது. அழைத்துச் சென்றவரிடம் விசாரித்த போது பல உண்மைகள் வெளிப் பட்டன. பெரும்பண்ணையூரில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரும்பாலான மக்களை மதமாற்றம் செய்தார் களாம்.

திரியம்பகபுரத்தில் வாழ்ந்த பெருமக்கள் வேத வேள்விகளிலும் சாஸ்திரம் சம்பிரதாயங்களிலும் தலைசிறந்தவர்கள். வாஜ பேய யாகம் முதலியன செய்து அனுஷ்டானம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள்.

மதமாற்றம் முதலிய தொல்லைகளாலும் தங்களுடைய ஆசார அனுஷ்டானங்களுக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டதாலும் அவர்கள் சேங்காலிபுரம், வடகுடி, கண்டரமாணிக்கம் முதலான ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்று அறிய முடிந்தது.

மேலும் `ஸ்ம்ருதி முக்தா பலம்' (வைத்யநாதீயம்)என்னும் ஆசார அனுஷ்டான நூலை இயற்றிய பிரம்ம ஸ்ரீவைத்தியநாத தீட்சிதர் திரியகம்புரத்தைச் சார்ந்தவர் என்று கூறுகிறார்கள்.

உச்சி வெயில் நேரத்தில் முக்கண் இறைவர் திரியம்ப கேஸ்வரர் நமக்கு அருளாசி வழங்கி மகிழ்ச்சியையும் தெம்பையும் அளித்தார்.

அவரது திருவருள் துணைகொண்டு அருணகிரியார் பாடிய திரியகம்புரத்தில் திருக்கோயில் எழும்ப வேண்டி, 2012 - ம் ஆண்டு கணபதி ஹோமத்துடன் லிங்கம் இருந்த அதே இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது.

திரு.பாப்பா சுப்பிரமணியம் அவர்கள் மிகவும் ஒத்துழைப்பு நல்கினார். திருப்பணி வேலைகள் தொடங்கு வதற்கு மூலக்காரணமாக இருந்து பெருமளவில் பொருள் உதவி செய்தவர், கயிலைமாமணி சென்னை வடபழநி பி.கே.சம்பந்தம் அவர்கள்.

அவரின் தகப்பனார் தெய்வத்திரு பி.எஸ்.கிருஷ்ணய்யர் என்ற மிகச் சிறந்த திருப்புகழ் அடியார், வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளின் சீடர் ஆவார். அவர்களின் குடும்பமே முருகப்பெருமான் திருவருளை முழுவதும் பெற்ற திருப்புகழ் குடும்பம் ஆகும்.

திரியம்பகேஸ்வரரின் சிவலிங்கத் திருமேனி மட்டுமே கிடைக்கப் பெற்ற நிலையில், கணபதி, முருகன், கௌரி சண்டேஸ்வரர், துர்கை, அருணகிரிநாதர், நந்தி, முதலான விக்கிரகங்கள் புதிதாகச் செய்யப்பெற்றன.

திருப்பணி நடைபெற்றபோது அவ்வூர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் மூங்கில் புதரில் ஒரு சிவலிங்கம் கிடைக்கப்பெற்று, அதனையும் பிரதிஷ்டை செய்தோம்.

மூலஸ்தானம், அம்பாள் சந்நிதி முன் மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் திருப்பணி நிறைவுபெற்று 25.3.2015 புதன்கிழமையன்று, சிறுவாபுரி முருகன் அபிஷேக குழுவினரால், மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப் பெற்றது.

சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தார் திரியும்பகபுரம் திருப்புகழை கல்வெட்டில் பதித்துள்ளார்கள். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு சம்பந்தம் அவர்கள் முயற்சியில் சுற்றுப்புறச் சுவர் கட்டப் பட்டது. அப்போது, மேலும் ஒரு சிவலிங்கம் பூமியிலிருந்து வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான இந்தத் தலம் எங்கே உள்ளது தெரியுமா?

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில், பெரும்பண்ணையூரிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் சேங்காலிபுரத்திலிருந்து ஒரு ஒரு கி.மீ. தூரத்திலும் திரியம்பகபுரம் கோயில் அமைந்துள்ளது.

நாச்சியார் கோயில், நன்னிலம் வழியில் திருவிடைச்சேரி எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரம்.

இந்தத் திருத்தலத்தின் அருகில் `தலை யாலங்காடு' என்று அப்பர் பெருமான் பாடிப் பரவிய அருள்மிகு நடனேச்வர நாதர் (ஆடல்வல்லநாதர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ள குடவாயில், எண்கண், கூந்தலூர், திருவீழிமிழலை, திலதைப்பதி முதலான திருத்தலங்கள் சூழ அமைந்துள்ளது திரியம்பகபுரம்.

1981-ம் ஆண்டு என் சகோதரர் சேக்கிழார்தாசன் பேராசிரியர் டாக்டர்.ஆர். ராமசேஷன் அவர்களுடன் நானும் இணைந்து எழுதிய ‘அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில் திருப்புகழ் களப்பயணம்’ நூலில் இவ்வாறு குறிப்பிட்டோம்...

‘திரியம்பகபுரத்தில் கந்தனைக் கண்டு அருணகிரிநாதர் புனிதத் திருவடி தோய்ந்து பரவிய நிலையில், நாமும் பணிய முடியவில்லையே' என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.

35 ஆண்டுகளுக்குப்பின் அடியார்களின் பேருதவிகளினால் திரியம்பகேஸ்வரர் திருக்கோயில் மீண்டும் எழும்பிட, அதை முருகன் அடியார்கள் தரிசித்து இன்புற திருவருள் கூட்டி வைத்தது, வாழ்வில் மறக்க இயலாதது.

அரக்கோணம் அருகில் முள்வாய் என்னும் திருப்புகழ் தலத்தின் இருப்பிடம் தெரிந்தது. ஆனால், கோயில் இல்லை. இங்கே திரியம்பகபுரம் ஊர், கோயில் இரண்டுமே மறைந்திருந்தன.

அருணகிரிநாதர் தரிசித்து திருப் புகழ் பாடியதால் தேடித் தெரிந்து ஊரை உண்டாக்கி, கோயில் கட்டி கும்பாபி ஷேகம் செய்தது, மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும்.

‘திருப்புகழைப் பாடுவோர், தல வழிபாடு செய்வோர் மற்றும் அடியார்கள் அனைவரும் அவசியம் திரியம்பகபுரத்தை தரிசித்து வர வேண்டும்’ என்பதே எங்கள் அன்பான வேண்டுகோளாகும். திரியம்பகபுர தரிசனம் உங்களுக்கு முருகப் பெருமானின் திருவருளைப் பரிபூரண மாகப் பெற்றுத் தரும்!

- காண்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு