Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்

ஞானமலையில் கோலக் குமரன்
பிரீமியம் ஸ்டோரி
ஞானமலையில் கோலக் குமரன்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
ஞானமலையில் கோலக் குமரன்
பிரீமியம் ஸ்டோரி
ஞானமலையில் கோலக் குமரன்
‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பது நம் நாட்டின் முதுமொழி. `பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமான்' என்று பாடி மகிழ்வார் அருணகிரிநாதர்.

‘குன்றுதோறாடும் நின்றதன் பண்பே’ என்று திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடு கிறார் நக்கீரர்.

குன்றுதோறாடும் முருகன் தலங்களுக்கெல் லாம் சென்று அபிஷேக வழிபாடுகளைச் சிறப்பாக நிகழ்த்தி வரும் ‘குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டு குழு’ என்ற அடியார் திருக்கூட்டம் திருப்பூரில் திகழ்கிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்

கடந்த 50 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான திருக்கோயில்களில் அபிஷேக வழிபாடுகள் செய்து சாதனை புரிந்துள்ளனர். இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலான நாடுகளுக்கும் சென்று, குன்றுகள் தோறும் அருள்பாலிக்கும் குமரனை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிப் பரவிய தலங்களில், இன்று நமக்குக் கிடைத் துள்ள குன்றுதோறாடல் - மலைத்தலங்கள், கயிலை மலை முதல் கதிர்காமம் வரையிலும் 34 ஆகும். இவற்றில் ஒன்று ஞானமலை.

ஒப்பற்ற இந்தத் தலத்துக்கு இரண்டு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. (கோலமதி வதனம் என்று தொடங்கும் திருப்புகழில் `பழநி ஞான மலையில் வளர் பெருமாளே’ என்று பழநியைப் பாடுகிறார்).

ஞானமலைப் பாடலுக்கு உரை எழுதிய தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, `இத்தலம் இடம் விளங்கவில்லை. நாமக்கல்லுக்கு அருகில் நைனாமலை என்ற மலை ஒன்று உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ் பயணம் நூல் 1981-ல் வெளி வந்தபோது, அதன் முதற் பதிப்பில் நாங்களும் ஞானமலையை இடம் விளங் காத தலமாகவே பதிவு செய்திருந்தோம். எனினும், தொடர்ந்து அதன் இருப்பிடத் தைத் தேடிக் கொண்டிருந்தோம்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

கோவை மாவட்டம், அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், புஞ்சை புளியம்பட்டி அருகில் உள்ள `இரும்பறைக்கு' என்ற ஊருக்கு அருகில் உள்ளது ஓதிமலை என்ற தலம். 1,800 படிகளுக்கு மேல் அமைந்துள்ள இந்த மலைக்கோயிலில் ஐந்து முகம் எட்டுக் கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு குமார சுப்பிரமணியர். இந்தத் திருக்கோலம் வேறெங்கும் இல்லாதது.

அங்கு தரிசிக்கச் சென்றிருந்தபோது, `இந்தத் தலத்துக்கு ஞானம் ஓதிய மலை (ஓதல் - உபதேசித்தல்) என்ற சிறப்புண்டு' என்று அர்ச்சகர் தெரிவித்தார். எனவே, அருணகிரியார் திருப்புகழில் பரவிய ஞானமலை இதுவாக இருக்குமோ என்று எனக்குள் ஓர் ஐயம் எழுந்தது. எனினும் வேறு தகவல்கள் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, ஓதி மலையே ஞான மலையாக இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்ய இயலவில்லை.

1998-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதியன்று, அலுவலகத்தில் தினசரி இதழைப் பார்த்தபோது `சம்புவராயர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு' என்றொரு செய்தி கண்ணில் பட்டது. பொதுவாகவே கல்வெட்டு, பூமியிலிருந்து சிலைகள், நாணயம் போன்றவை கிடைப்பது பற்றிய செய்திகளைத் தவறாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அதன் மூலம் நாம் தேடும் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கலாம் என்பதே காரணம். இந்தச் சம்புவராயர் கல்வெட்டைப் பற்றி பார்த்தபோது, உள்ளத்தில் ஆர்வமும் உடலில் சிலிர்ப்பும் ஏற்பட்டன.

வட ஆற்காடு மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுகா, கோவிந்தச்சேரி என்ற ஊரில் சம்புவ ராயர் காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது 14 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் படை வீட்டைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தைச் சம்புவராய மன்னர்கள் அரசாண்டனர்.

கண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்

இவர்களில் ‘வென்று மண்கொண்ட சம்புவ ராயர்' குறிப்பிடத்தக்கவர். இவர் 1322 முதல் 1340 வரை தொண்டை மண்டலத்தை ஆண்டார். இவருக்கு ‘தென்திசை வென்றான்’ ‘திருமல்லிநாதன்’ ‘ஏகாம்பரநாதன்’ ஆகிய பெயர் களும் உண்டு. இவர் காலத்துக் கல்வெட்டு ஒன்று வாலாஜா பேட்டை அருகிலுள்ள கோவிந்தச்சேரி எனும் ஊரில், ஞானமலையில் உள்ள பாறையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு, ஞானமலையின் தென் புறத்தில் அமைந்துள்ள நீர்ச் சுனைக்கும் படிக்கட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டில் ‘சகலலோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயனின் 18-வது ஆட்சியாண்டில் (1340), சம்புராப் பழரையார் மகன் காளிங்க ராயன் என்பவன், இவ்வூர் ஞானமலைக்கு மேல் உள்ள கோயிலுக்குச் செல்ல படிகளை அமைத்தான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காளிங்கராயன் - வென்று மண் கொண்ட சம்புவராயர், முதலாம் ராஜ நாராயணன், இரண்டாம் ராஜ நாராயணன் முதலிய சம்புவராயர்களின் காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தான். இதுவரை கிடைத் துள்ள கல்வெட்டுகளில், இதில் மட்டுமே இவனுடைய தந்தையின் பெயர் சம்புரா பழரையர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட இக்கல்வெட்டை வேலூர் அரசு அருங்காட்சியகக் காப்பாளர் காந்தி, காவேரிப் பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் கண்டுபிடித்து ஆய்வு செய்து, இத்தகவலைத் தெரிவித்தனர்.

இதுவே கல்வெட்டு குறித்து நாளிதழில் இடம்பெற்றிருந்த செய்தி ஆகும். நான் கந்தனின் கருணையை எண்ணிச் சிலிர்த்தேன். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக நான் தேடிவந்த ஞானமலையின் இருப்பிடத்தை அறிவித்த கந்தனின் பேரருளை என்னென்பது?

திருவண்ணாமலையில் இருக்கும் எனது அருமை தம்பி முரளிதரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன்.கோவிந்தச்சேரிக்குச் சென்று ஞானமலை கோயிலை தரிசித்து, அதுபற்றிய முதல் தகவல் விவரங்களை அனுப்பி உதவ கேட்டிருந்தேன். அதன்படி முரளி அங்கு சென்று கோயிலை தரிசித்து, தர்மகர்த்தாவாக இருந்த பழனி முதலியார் என்பவரைச் சந்தித்து பல தகவல்களைக் கடிதத்தில் அனுப்பியிருந்தார்.

கடிதத்தின் நிறைவில், `நாம் இந்த கோயிலைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். பிரச்னை இல்லாத கோயில்; மக்கள் மிகவும் நல்லவர்கள். முருகன் அழகு, அதைவிட அவர் அமர்ந்த அந்த மலை அழகு. `அனைவருக்கும் ஞானத்தை அள்ளி தருவேன்' என்பது போல் மலையடிவாரத்தில் பள்ளிக் கூடம்; எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் பழனி முதலியார்; இயற்கை அன்னையின் பசுமை இவை அனைத்தும் அனைவரையும் வியக்கவைக்கும்' என்று முடித்திருந்தார்.

கந்தவேள் தமது விருப்பத்தை எப்படி அடியார்களின் எண்ணத்தில் பிரதிபலிக்க வைக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

கோயிலின் இன்றைய வளர்ச்சி அப்பப்பா... எவ்வளவு மாற்றங்கள்? 22 ஆண்டுகள் கழித்து அக்கடிதத்தை இன்று படிக்கும்போதும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது!

நான் தேடிக்கொண்டிருந்த ஞானமலையை ஞானபண்டிதன் நமக்குக் காட்டிவிட்டான். அங்கு சென்று விரிவான விவரங்களைச் சேகரிக்க அடியார்கள் சிலருடன் புறப்பட் டோம். மலைக்கு மேல் செல்ல ஒழுங்கான படிகள் இல்லை. படிகட்ட முயற்சி செய்துள் ளார்கள். ஆனால், செம்மையாக அமைக்க இயலவில்லை. ஏற்கெனவே காளிங்கராயன் பாறையில் வெட்டிய படிகளில் ஏறி வருவது மிகவும் சிரமம்.

மலைக்குமேல் சமவெளியாக உள்ள பகுதியில் சிறிய மூலஸ்தானம் விமானத்துடன் திகழ்ந்தது. அர்த்த மண்டபம் வெளி மண்டபம் எல்லாம் மிகப் பழைமையானவை. கோயிலைச் சுற்றி வெட்டவெளியாக இருந்தது.

மூலஸ்தானத்தில் கந்தவேள் சுமார் நான்கடி உயரத்தில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத் தில் அருள்கிறார். அவருடைய பின் கரங்களில் கமண்டலம்; ஜபமாலை. முன் வலக்கரம் அபய முத்திரை காட்ட, முன் இடக்கரத்தை இடுப்பில் வைத்த அமைப்பு. பொதுவாக தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் மற்றும் முற்கால சோழர் காலக் கோயில்களில், இந்த பிரம்ம சாஸ்தா வடிவம்தான் காணப்படுகின்றன.

தலைக்கோலம் - கரண்டமகுடம், மார்பில் வாகுவலயம், அணிகலன்கள் கொண்டுள்ள அழகான திருவுருவ அமைப்பு. இருபுறமும் வள்ளி, தேவயானை இருவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

பிரணவத்துக்குப் பொருள் கூற இயலாத பிரம்மனைக் குட்டி சிறையிலிட்டு, தாமே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டதற்கு அடையாளமாக, பிரம்ம கமண்டலமும் ஜபமாலையும் தரித்த கோலமே பிரம்ம சாஸ்தா வடிவமாகும். ஞானம் கைகூடுவதற்கு - ஞான ஸித்தி பெறுவதற்குக் கந்தவேளின் இந்த பிரம்ம சாஸ்தா திருவடிவை வழிபடவேண்டும்.

எனவே, பல்லவர்கள் இந்த அமைப்பை மிகவும் போற்றினார். ஞானமலையில் இந்த வடிவம் அமைந்துள்ளது மிகவும் பொருத்தம். மூலஸ்தான சிற்ப வடிவம் பல்லவர் காலத்தது என்பதால், சுமார் 1400 ஆண்டுகள் பழமை யானது என்பதை அறியலாம். வெளி மண்டபத்தில் அப்போது மிக அழகான மயில் வடிவச் சிற்பம் காட்சியளித்தது.

கோயிலுக்கு அருகில் தென்மேற்கில் மற்றும் ஒரு சுனை உள்ளது. அந்தக் காலத்தில் இந்தச் சுனையின் நீரை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மலையின் மேற்புறம் ஒரு மண்டபம் போல் காட்சியளித்த சந்நிதியில் சிவலிங்கம் காணப் பட்டது. இந்த மண்டபத்தின் பின்புறம் பாறைச் சரிவில் முருகனின் பாதம் பதிந்த இடம் என்று, கற்பாறையில் திகழந்த பாதச் சுவடுகளை ஊர் மக்கள் நம்மிடம் காட்ட, மிகுந்த பரவசத்துக்குள்ளானோம் நாம்.

- காண்போம்...

‘மாப்பிள்ளைசாமி’

யிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி - ஆகிய மூன்று சிவத்தலங்களிலும் உள்ள இறைவனை ‘மாப்பிள்ளைசாமி’ என்று அழைக்கின்றனர். இவற்றில் அருள் புரியும் இறைவனையும் அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தால் தடைப்பட்ட திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

கண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்

கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூரில் இறங்கி கோனேரிராஜபுரம் செல்ல வேண்டும். பிறகு மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும். நிறைவாக, கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் குத்தாலத்தில் இறங்கி, அங்கிருந்து திருமணஞ்சேரிக்குச் சென்று தரிசித்து வர வேண்டும்.

- ஆர்.கண்ணன், கும்பகோணம்