Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், படங்கள்: லட்சுமி நாராயணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், படங்கள்: லட்சுமி நாராயணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை
ஞானமலையில் அருளும் கந்தப்பெருமானை, திருவண்ணா மலையின் அறுமுகனாகவே காண்கிறார் அருணகிரிநாதர். அங்கு அவருக்கு முருகன் பேரருள் புரிந்து திருவடி தீட்சை அளித்த காட்சிகள் அவரின் மனக்கண் முன் தோன்றுகின்றன.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அக்காலத்தில் மனைவி, ஊரில் உள்ள மற்ற மகளிர் அனைவரும் தன்னைக் கண்டு நகைக்க... தந்தை, உறவினர் ஆகியோர் தம்மை வெறுத்துக் கூறிய பழிச்சொற்களைத் தாங்கமாட்டாமல், ‘இந்தப் பிறவியை ஏன் எடுத்தோம்’ என மனம் சலித்து, அவர் உயிரை விடத் துணிந்தபோது, கந்தன் காலடியைக் காட்டிக் கருணை புரிந்தார் அல்லவா... அந்தத் திருவடிக் காட்சியை மீண்டும் இங்கே அருள்புரிய வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

மனையவள் நகைக்க ஊரின் அனைவரு நகைக்க லோக

மகளிரு நகைக்க தாதை தமரோடும்

மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப யாரும்

வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை

அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்

அகமதை எடுத்த சேமம் இதுவோ என்று

அடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது

அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே!

அடியவர் உயிரைக் காத்த அந்த ஆறுமுகப் பரமன், இங்கே நீலச் சிகண்டியில் ஏறி கோலக் குறத்தியுடன் வந்து அருள் காட்சி நல்கி, அருணகிரியாருக்கு யோகாநுபூதியை உபதேசித்துத் திருவடி தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்கிறார்.

`ஆஹா, என்ன அற்புதம்’ என மனம் உருகி, `யோகாநுபூதி அளித்த பாதம் அல்லவா இது?’ என்று ஆனந்தப் பரவசத்தால் ஆர்ப்பரிக்கிறார்அருணகிரி நாதர். இச்செய்தியை இதே திருப்புகழில் நாம் காண முடிகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

இப்படி அருட்பேறு கிடைக்கப்பெற்ற இந்தத் தலத்துக்கு `ஞான மலை’ என்று பெயரிட்டவர் அருணகிரிநாதரே. அதற்கு முன் இந்தப் பெயர் இத்தலத்துக்கு இல்லை என்பதை, தற்போதுள்ள ஊர்ப் பெயரைக் (கோவிந்தச்சேரி) கொண்டே அறியமுடியும். ஞானம் கைவரப் பெற்றது, யோகாநுபூதி கிடைத்தது என்பதாலேயே ஞானமலை என்றாயிற்று எனலாம்.

அருணகிரியார் வாழ்வில் இத்தகைய அகச்சான்று (திருவண்ணாமலையில் பெற்ற அருட்பேறு) அமைந்துள்ளதை, ஞானமலைத் திருப்புகழில் மட்டுமே காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உயிரை விடப் போனபோது, முருகன் காட்சியளித்த வரலாறுக்கு மேற்படித் திருப்புகழில் மட்டுமே சான்று உள்ளது.

சிவக்குமரன் திருவருளால், சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷே கத்தை 2000-ம் ஆண்டு சிறப்பாக நடத்தினர். அதைத்தொடர்ந்து ஞானமலை முருகன் அவர்களை அழைத்துப் பணி செய்ய விதித்தான். 2001-ம் ஆண்டு மலை மேல் செல்வதற்குப் படிகள் கட்டும் திருப்பணியைத் தொடங்கினர். அடுத்த ஆண்டு அதன் நிறைவு விழாவை... 15.9.2002 அன்று பல திருப்புகழ் சபைகள் கலந்துகொண்டு மாபெரும் திருப் புகழ் திருப்படி விழாவாக நடத்தினர். படித் திருப்பணிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள அன்பர்களிடமிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்தும் நன்கொடை கிடைக்கப்பெற்றது.

பின்னர், மலையடிவாரத்தில் படி தொடங் கும் இடத்தில் ஞான சக்தி கணபதி கோயிலைக் கட்டி, சிவன் கோயிலில் ஞானகிரீஸ்வரர், ஞானப்பூங்கோதை முதலான பஞ்சமூர்த்தி சந்நிதிகளுடன் மூலஸ்தானத் திருப்பணியை நிறைவு செய்து, 4.4.2004 அன்று பங்குனி உத்திர நன்னாளில், சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினரால் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பெற்றது.

மலைமேல் அபிஷேகம் மற்றும் குடிநீர் வசதி உள்ளது. வனத்துறை மற்றும் அகத்தியர் பசுமை உலகம் அடியார்கள் உதவியுடன் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆழ்ந்த பக்தி,அனுபவத் திறமை மற்றும் செயலாற்றும் திறத்தால், செந்தில் அடிமை திருவருட் தொண்டர் டாக்டர் எஸ் சுந்தரம் அவர்களது பெரு முயற்சியால், ஞான மலை அடிவாரத்தில் ஞானாஸ்ரமம் திருமாளிகை உருவாகியுள்ளது. இதன் கீழ்தளத்தில் மிக விசாலமாக `திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்கம்’ அமைந்துள்ளது.

தொடர்ந்து, கந்தவேளின் கால் பதிந்த புனித இடத்தில், அடியார்கள் அங்கப் பிரதட்சனம் (உடலால் வலம் வருதல்) மற்றும் தியானம் செய்ய வசதியாக ஒரு மண்டபம் கட்ட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை முருகன் அருட் செல்வர்கள் சிலர் முன்வைத்தனர். அதன்படி 2010-ம் ஆண்டு பாத மண்டப் பணி தொடங்கப்பட்டது.

ஞானம் என்பதற்குத் `திருவடி’ என்றும் பொருள் உண்டு. எனவே ஞானமலை என்பதைத் `திருவடி பதிந்துள்ள மலை’ என்றும் அழைக்கலாம். திருப்பணி நடை பெற்ற தருணம், ஞானபுரீஸ்வரர் கோயில் கருவறையில் தரை சமமாக இல்லாததால் அபிஷேக நீர் ஆங்காங்கே தேங்குவதைக் கருத்தில் கொண்டு, தரையைக் கொத்திப் பூசலாம் என்று அந்த இடம் கொத்திவைக்கப்பட்டது. அன்றிரவு 4.10.2010 ஞானமலையில் ஸித்தி பெற்ற ஞானவெளிச் சித்தரைப் பற்றிய வரலாற்றை இறைவன் வெளிப்படுத்திய நிகழ்ச்சியை மறக்க இயலாது.

ஞானமலை முருகனிடம் யோகாநுபூதி பெற்ற அருணகிரிநாதரைப் பரமகுருவாகக் கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் ஞானவெளிச் சித்தர். அவர், இந்த ஞான மலையில் பல்லாண்டுகள் தவம் இருந்தார்.

மக்களுக்குக் குருடு, ஊமை, மலடு போன்ற குறைகளை நீக்கிப் பலவித நோய்களுக்கும் மருந்து அளித்து ஞான உபதேசம் செய்து வந்தார். வெப்பாலைப் பால், எருக்கம்பால், மகிழமரப் பால், அரளிப்பால், ஆலம்பால் ஆகியவற்றைக் கொண்டு அவர் நோய்களை நீக்கியதால் `பஞ்சபாலை சித்தர்’ என்றும் `பாலைச் சித்தர்’ என்றும் மக்களால் அழைக்கப்பெற்றார்.

இந்தச் செய்திகளை அன்றிரவு ஞானமலை முருகன் உணர்த்தினார்.

மறுநாள் காலை ஞானகிரீஸ்வரர் சந்நிதியில் மூலஸ்தானத்தின் கீழே மூன்றுக்கு மூன்று அடி சதுரத்தில் பாறை மூடப்பட்டு இருந்ததை அறிய முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில ஆண்டுகள் முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு சிவராத்திரி அன்று, மயிலாப்பூர் தணிகாசலம் எனும் அடியார் இச்சந்நிதியில் வெளி மண்டபத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் ஓர் அரிய ஒளிக்காட்சியைக் கண்டார். இங்கு ஸித்தர் நடமாட்டம் உள்ளது என்பதை அருகிலிருந்த அவரின் நண்பர் மயிலை சுரேஷ்குமாரிடம் தெரிவித்தார்.

அந்தச் சித்தரின் திருவுருவைச் சுவாமி கோயில் மண்டபத் தூணில் இறைவன் காட்டி அருளினார் முருகன். சித்தர் சமாதி கொண்டுள்ள இடத்தில், அருள்மிகு ஞான கிரீஸ்வரர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அவர் தியானம் செய்த இடமான முருகனின் பாதம் பதிந்த புனித பூமியில், அருள் அதிர்வு நிறைந்திருப்பதை நாம் உணரலாம்.

`நீல சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்' என்று பாடிய அருணகிரியாருக்கு, அப்படியே அருட்காட்சி அளித்த கோலத்தில் - ‘குறமகள் தழுவிய குமரன்’ எனும் அற்புத பஞ்சலோக விக்கிரகம் 28.10.2007-ம் அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுவாமிமலையில் புகழ்பெற்ற சிற்ப கலாநிதி தேவசேனாதிபதி ஸ்தபதியாரின் குமாரர்களால் இவ்வடிவம் தயாரிக்கப்பெற்றது. ஞான மலையில் மட்டுமே அற்புதமான இந்த அருள் வடிவைக் காணமுடியும். பின்னர், மூலஸ்தானத்துக்குத் தென்புறம் 2,112 சதுர அடி பரப்பளவில் ஞானவேல் மண்டபம் கட்டப்பட்டு, 27.11.2014 சுப்ரமண்ய சஷ்டி அன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கே 6 அடி உயரமுள்ள ஞான பூரண சக்தி எனும் பஞ்சலோக ஞானவேலும் அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு சஷ்டியன்றும் பூஜை நடைபெறுகிறது.

காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில், மங்கலம் கோவிந்தச்சேரி சாலையின் தொடக்கத்தில், ஞானமலை ஞானபண்டிதன் சுவாமி திருக்கோயிலின் அலங்கார வளைவு 28.10.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஞானபண்டித சுவாமி கோயிலின் வடபுறம் மிகப் பிரமாண்டமான கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மயில் மண்டபம் ஆகியவற்றுடனான சந்நிதி மிக அற்புதமாகக் கட்டப்பட்டு, மூலஸ்தானத்தில் குறமகள் தழுவிய குமரனைப் பிரதிஷ்டை செய்து 1.7.2018 அன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் பல்வேறு காலங்களில் நடைபெற்ற மேற்கண்ட திருப்பணிகளுக்குப் பொருளுதவி செய்து உதவிய அடியார்கள், ஆன்மிகச் செல்வர்கள் அனைவரும், ஞான மலை முருகனின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கப்பெறுவார்கள்.

இக்கோயிலில் நடைபெற்றுள்ள கட்டுமானப்பணிகள், மண்டபங்கள் அனைத்தையும் வடிவமைத்துக் கட்டி முடித்த பெருமை, வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும், நாகர்கோவில் சிவராஜதுரை எனும் அடியாரைச் சாரும். அவரை ஞானமலை முருகன் ஈர்த்து ஆட்கொண்டார் என்பதே உண்மை.

ஞானபண்டிதனின் கோயில் அமைந்துள்ள கோவிந்தச்சேரி கிராமம், முழு சுகாதாரத் திட்டத்தை நன்கு நிறைவேற்றி, 2005-ம் ஆண்டு ஜனாதிபதியின் `நிர்மல் புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளது. 2004 - ல் நமது கிராமத் திட்டத்தில் முதல் பரிசையும் பெற்றுள்ளது. அப்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அறங்காவலர் வெங்கடேசன் இவ்வூர் மற்றும் கோயில் வளர்ச்சியில் ஆர்வத்துடன் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது.

மாதாமாதம் கிருத்திகையன்றும் பௌர்ணமியன்றும், ஞானகிரி முருகன் அன்னதானக் குழு(வாலாஜா & தாம்பரம்) சார்பில், ஓம் பிரகாஷ் அவர்களின் முயற்சியில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது.

ஞானாஸ்ரமத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலவசப் பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப் பெறுகின்றன.

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், ஏகதின லட்சார்ச்சனை, அருணகிரி நாதருக்குக் காட்சி விழா, குறமகள் தழுவிய குமரன் விக்கிரகம் கிரிவலம் வருதல், திருப்புகழ் திருப்படி விழா, வேல் பூஜை முதலியன 19 ஆண்டுகளாக நடை பெற்று வருகின்றன.

அற்புதம் நிறைந்த ஞான மலையில் கந்தன் பொற் பாதத்தை தரிசித்து, அவரின் திருவருளால் அனைவரும் இன்புற்று பல்லாண்டு இனிது வாழ வேண்டுகிறோம்!

மாணிக்கம் ஒத்த மலர்த்தாள் தலைமிசை வைத்து நித்தம்

பேணிப் பணிய வகை தெரிந்தாரும் பெயற்கரிய

ஆனிப் பொன்னே எனது ஆவியும் யாக்கையும் ஆக்கமெல்லாம்

காணிக்கையாக தந்தேன் முருகா! எனைக் கண்டு கொள்ளே!

- முருகர் அந்தாதி

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள்.

சக்தி விகடனும் அகத்தியர் பசுமைக்குடில் அமைப் பினரும் இணைந்து, 2019-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று, ஏகாம்பரநல்லூர் எனும் தலத்தில், சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

அற்புதமான அந்த வைபவத்தில் சக்தி விகடன் ஆசிரியர் குழுவினர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமனுடன் நானும் கலந்து கொண்டேன். அந்தத் தருணத்தில், திருப்புகழ் தலங் களைத் தேடிச் சென்றபோது எனக்குக் கிடைத்த அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டேன். `அந்த அனுபவங்களைத் தொடராகத் தரலாமே'' என்றார் இதழின் ஆசிரியர்.

நானோ `இது சுய பிரதாபம் ஆகி விடுமே’ என்று பயந்தேன். `நீங்கள் நினைப்பது போல் அல்ல; தல ஆய்வு செய்வோருக்கு

இந்த அனுபவத் தேடல்கள் வழிகாட்டியாக அமை யும்’’ என்றார் ஆசிரியர். `கண்டு கொண்டேன் கந்தனை’ எனும் தலைப்பையும் ஆசிரியர் குழுவினர் பரிந்துரைத்தனர்.

‘`நானே கந்தனைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... நீங்களோ `கண்டு கொண்டேன் கந்தனை’ என்கிறீர்களே...’’ என்றேன்.

``நீங்கள் எழுதத் தொடங்குங்கள் கந்தனைக் காண்பீர்கள்’’ என்று கூறி, ஊக்கம் அளித்தார்கள்.

கடந்த 37 இதழ்களாக எழுதிய வற்றில் வாசர்களுக்கு ஏதாவது பயனுள்ள செய்தியையோ மகிழ்ச்சியோ கிடைத்து இருப்பின், அது கந்தன் கொடுத்த வரப் பிரசாதம் என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். குறைகள் இருப்பின் அவற்றை ஏற்று, ஆதரவு அளித்த வாசகர்களுக்கும் அனைவருக்கும் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.

முருகா சரணம்!

அபூர்வ விரதங்கள்!

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

உமா மகேஸ்வர பூஜை: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

விரத நாள்களில் சாப்பிடலாமா?

கண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்!

உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்துவது விரதத்தைக் கெடுக்காது. சில விரதங்களில் இரவில் மட்டும் உணவருந்த லாம். உடல், உள்ளம் ஆகியவை பலவீனமாக இருந்தால், மதியம் உணவையும் இரவில் பலகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம், அரிசி உணவை மட்டுமே உண்பவரானால், அதைத் தவிர்த்து கோதுமையைப் பயன்படுத்தலாம். அதாவது விரதத்தன்று அரிசியை முற்றிலுமாக விலக்கி, மற்ற பண்டங்களைப் பயன்படுத்தலாம். வீம்புக்காக உணவை முற்றிலுமாகத் துறப்பது தவறு. உடல் நலனைக் கருத்தில் கொண்டு விரதத்தில் மாற்றம் செய்ய, தர்மசாஸ்திரம் அனுமதிக்கிறது.

- ஆர்.ரமா, நெல்லை-2