மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 11

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை

இத்திருக்கோயிலில், 13 கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்

சோழர் பாணியில் அமைந்த தூங்கானை மாடக்கோயிலாகத் திகழும் புலிப்பரக்கோயிலின் தட்சிணாமூர்த்தி வடிவங்கள் மற்றும் அஷ்ட அரம்பையர் சிற்பத் தொகுப்பின் சிறப்புகளைப் பற்றிப் பார்த்தோம். அந்தக் கோயிலின் வெளிமண்டபத்துக்கு அருகில் கருவறையில் (தற்போது உள்மண்டபத்தில் பிரதிஷ்டையாகியுள்ளது) மனோன்மணி சொரூபமாய் அருளும் அம்பிகை, பின் இரு கரங்களில் தாமரை, ஆம்பல் மலர்களை ஏந்தியும் முன் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைக் காட்டியபடியும் காட்சி தருகிறாள். (பாசம், அங்குசமின்றி மலர்களோடு அருள்பாலிக்கும் அற்புதம்).

கண்டுகொண்டேன் கந்தனை - 11

கருவறை வெளிப்புற மாடங்களில் திகழும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை வடிவங்களுடன், திருக்காளத்திப் புராண சிற்பமும், உமா சகித மூர்த்தி, பைரவர் ஆகிய சிற்பங்களும் வனப்பு வாய்ந்தவையாகும். அர்த்த மண்டபத்தில் ஒரு நிலவறையைக் காண்பித்தார் அர்ச்சகர். மேற்புறம் கருங்கல்லால் ஆகிய மூடியை நகர்த்தினால் நிலவறையைக் காணலாம். மூடியின் அடிப்புறம் நகர்வதற்கு வசதியாக உருண்டையான கருங்கல்லைப் பந்துதாங்கி (BALLBEARINGS)யாக அமைத்துள்ளதைக் கண்டு வியப்புற்றோம்.

நிலவறையின் உட்புறம் ஒரு நபர் இறங்கும் அளவில் பாதை காணப்பட்டது. இந்த நிலவறை எதுவரை - எங்குச் செல்கிறது என்று தெரிய வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்தபோது அது மூடப்பட்டது என்கிறார்கள்.

அருணகிரிநாதர் பாடிப்பரவிய மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பல முருகன் தனிக்கோயிலில் அருள்கிறார். ஒரு முகம் நான்கு கரங்களுடன், அருகில் மயிலுடன் நின்ற திருக்கோலம். வெளிப் புறம் யானை வாகனம் உள்ளது. கிடைத்துள்ள இரண்டு திருப்புகழ்ப் பாடல்களில் ஒன்றில் வேடிக்கையாகக் கேட்கும் அழகு அருமை!

கண்டுகொண்டேன் கந்தனை - 11

“முருகா! பார்வதிதேவியின் பக்திக்கு உருகி தனது இடப் பாகத்தை தந்த சிவபெருமான் பலவித கூத்துகளையும் ஆடலையும் உடையவர்; ஜடையிலே கங்கையைக் கொண்டவர்; அவர் என்றும் உளதாகிய தன்மையைப் (நித்யத்வம்) பெற நீ அவருக்கு உபதேசித்தாய். சிறியவனாகிய எனக்கும் அதைச் சொல்லி உதவினால், உனது குருஸ்தானம் குறைந்துவிடுமா என்ன” என்று அவரோடு அசதியாடுதல் (பரிகசித்தல்) மிகவும் ரசனைமிக்கதாகும்.

`சயிலாங்க னைக்கு ருகி இ டப்பக்

கம்கொ டுத்த கம்பர் வெகுசாரி

சதிதாண்ட வத்தர் சடையிடத்துக்

கங்கை வைத்த நம்பர் உரைமாளச்

செயல்மாண்டு சித்தம் அவிழ நித்தத்

தவம் பெ றப்ப கர்ந்த உபதேசம்

சிறியேந்த னக்கும் உரைசெயிற்சற்

றுங்கு ருத்து வம்கு றையுமோதான்.’

இத்திருக்கோயிலில், 13 கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்றில், `ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து வடபிடாகையான மாத்தூரில் உள்ள உடையார் திருப்புலி பகவ நாயனார்' என்று இறைவன் குறிக்கப்பெறுகிறார். அக்காலத்தில் இவ்வூர் வடபிடாகையான மாத்தூர் என்றழைக்கப்பட்டது.

மிகப் பழைமையான 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில், மதுராந்தக சதுர்வேதி மங்கலத்தில் உள்ள உடையார் திருவெண் காடுடைய நாயனார் கோயிலுக்கும் (தற்காலம் கடப்பேரி) மாத்தூர் உடையார் திருப் புலிபகவர் கோயிலுக்கும் (இரண்டு ஊருக்கும்) வாதாவி நல்லூர் என்ற ஊர் தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தியைக் காணமுடிகிறது. மற்றும் பிரபுட தேவராயர், ராஜநாராயண சம்புவராயர், மல்லி நாதசம்புவராயர், புக்கண உடையார், விருப்பண்ண உடையார் ஆகிய அரசர்கள் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.

கண்டுகொண்டேன் கந்தனை - 11

புலி முனிவர் பூசித்தற்கு ஏற்ப, இவ்வூர் அடவி போன்று பலவிதமான மரங்கள் - சோலைகள் நிறைந்து மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. விதவிதமான பறவைகள் அவற்றின் வித்தியாசமான ஒலிகள்... ஆஹா, அற்புதமானச் சூழல் அது. ‘வளமிகு காடுகள் வாவென அழைக்கும். ஆனால் எனக்கோர் ஆயிரம் கடமைகள்; துயில் கொளு முன்பு முடித்திடல் வேண்டும்; தொலைவோ பலகல் நடந்திடவேண்டும்' எனும் ஆங்கிலக் கவியான ராபர்ட் பிராஸ்ட்டின் பாடல் வரிகள் என நினைவுக்கு வந்தன. சிற்ப நுட்ப வேலைகளோடு கூடிய `அரசர் கோயில்' எனும் திருமால் கோயில் இவ்வூர் அருகில் உள்ளது. அதில் ஓர் அதிசயம். தாயார் சந்நிதி முகப்பு மண்டபத்தில்... பதுங்கும் சிறிய யாளிகளின் தலையில் மெலிந்த நீண்ட பட்டை தீட்டிய கிளைத் தூண்கள் திகழ, அவை ஒவ்வொன்றும் உச்சியில் சற்றே மலர்ந்த தாமரைப் பலகையோடு பீடங்களைத் தாங்கியுள்ளது. அதன் மேல் திகழ்வது கொடிகளா, இல்லை கருங்கல்தானா என வியக்கும் வண்ணம்... சிற்பியின் சிந்தனை சிந்திய திசையெல்லாம் கல் வளைந்து கொடுத்துள்ள வேலைப்பாடு அற்புதம்!

அதற்குச் சிகரம் வைத்தாற்போல் நகாசு வேலை கொண்ட இந்த இழைவுகளுள் (தென்னம்) ஈர்க்கு நுழையும் துளையொன்றை குடைந் துள்ளார்கள். அந்தத் துவாரத்தின் வழியே ஈர்க்கைச் செலுத்தினால், மறுபக்கம் வெளிவரும் போது நான்காகவும் எட்டாகவும் பிளந்துவிடும் அதிசயம் நம்மை பிரமிக்கச் செய்யும்!

கூரான கத்தியைக்கொண்டு ஈர்க்கை இரண்டாகப் பிளப்பதே கடினம். இங்கு துளையோ மிகச் சிறியது. அதில் சிற்பி என்ன மாயத்தைப் புகுத்தினான் என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை! பெரும் தூணைச் சுற்றியுள்ள குழல் போன்ற சிறிய தூண்களைத் தட்டினால் சப்தஸ்வர நாதம் எழும்புகிறது. கற்பனைக்கு எட்டாத வகையில், கல்லிலே கலை வண்ணத்தை உருவாக்கிய அந்தச் சிற்பி படைப்புக் கடவுளோ? யாம் அறியோம்!

- காண்போம்...