Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 12

ஆறுமுகப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகப் பெருமான்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 12

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
ஆறுமுகப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகப் பெருமான்

கரபுரத்து ஆறுமுகப் பெருமான்!

ருணகிரிநாதர் அருளிச்செய்த பெரும்பாலான திருப்புகழ்ப் பாடல்களின் நடுவரியில், ஒரு வேண்டுகோளை வைத்திருப்பார். அதனைப் பெரியோர்கள் ‘மகுட அடி’ என்று குறிப்பிடுவர். ஒரு பாடலின் சாரம் அல்லது பிழிந்த சுவையாக அந்த மகுட அடி விளங்கும். மானுடப் பிறப்பில் நாம் மேன்மை அடைவதற்கான அத்தனை விஷயங்களையும் முருகப்பெருமானிடம் வேண்டும் வகையில் அவை அமைந்திருக்கும் என்பதைப் படித்து, சுவைத்து இன்புற வேண்டும். அவற்றில் ஒன்று...

கண்டுகொண்டேன் கந்தனை - 12

`என்னுடைய சகல துக்கங்களும் நீங்கவும், நற்குணங்கள் வரவும், உலகில் புகழ்பெற்று வாழவும் வேண்டிய யோக்கியதையை - மதிப்பைப் பெற்று, உன் அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படியாக உனது திருவருளைத் தந்தருள்க.'

சகல துக்கமும் அறச் சகலசற் குணம் வரத்

தரணியிற் புகழ்பெறத் தகைமை பெற்றுனது பொற்

சரணம் எப்பொழுதும் நட் பொடு நினைந்திட அருள்தருவாயே!

இந்த ஒரு வரியைத் தினமும் காலையிலும் மாலையிலும் ஒருமுறையாவது நாமும் முருகனிடம் வேண்டலாம் அல்லவா? இந்த மகுட அடியைக் கொண்ட (‘ஒருவரைச் சிறுமனை...’ என்று தொடங்கும்) திருப்புகழ், ‘திருக்கர புரம்’ எனும் தலத்துக்குரியதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தணிகைமணி அவர்கள் திருப்புகழ் உரை நூலில், ‘கரபுரம்’ என்று வரக்கூடிய மூன்று பாடல்களை ‘விரிஞ்சிபுரம்’ எனும் தலத்துக்குரியதாகக் கொள்வார். ஏனெனில், அத்தலத்துக்குக் ‘கரபுரி’ என்றும் பெயர் உண்டு. இருப்பினும் ‘திருவிரிஞ்சைமேவு பெருமாளே’ என்று முடியக்கூடிய இரண்டு திருப்புகழ்ப் பாடல் களும் உள்ளன. எனவே, கரபுரம் என்பது வேறு தலமாக இருக்குமோ என்ற சிந்தனையில் ஆய்வை மேற்கொண்டேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

‘கழனி நெடுவாளை கமுகொடிய மோது கரபுரியில் வீறுபெருமாளே’ (கழனியில் - வயலில் இருக்கும் பெரிய வாளை மீன்கள், பாக்குமரம் ஒடியும்படி மோதுகின்ற கரபுரியில் வீற்றிருக்கும் பெருமாள்) எனும் இந்த ஈற்றடியைக் கொண்ட (குலையமயிரோதி - பாடல் 673) ஒரு பாடலைத் திருப்புகழ் உரைநூலில் தணிகைமணி அவர்கள் சேர்த்துள்ளார்.

இதைப்பற்றிக் கூறும்போது, `இவ்வாறே முடிவதாகப் பல பாடல்கள் இருக்கக் கண்டு, என் தந்தையார் (வ.த.சுப்ரமண்ய பிள்ளை) அவர்கள், அப்பாடல்கள் அருணகிரியார் வாக்காக இரா என்று அச்சிற் சேர்க்காது விட்டுவிட்டனர். யாமும் அவை தமைச் சேர்க்கவில்லை' என்று அவரே குறிப்பிட்டுள்ளார். சைவ சித்தாந்த மகாசமாஜத்தினர் (1935) பதிப்பித்த திருப்புகழ் நூலில் மேற்கண்ட ஈற்றடியைக் கொண்ட 10 பாடல்களைச் சேர்த்துள்ளனர். இவை சந்தப்பாவில் அமைந்த பதிகங்களாகும். எனவே, தணிகைமணியவர்கள் தமது பதிப்பில் ஒரு பாடலை மட்டும் சேர்த்து மேற்கண்ட குறிப்பை எழுதியுள்ளார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டானம் திருத்தாண்டகப் பதிகத்தில், ‘மிக்க கண்ணார்நுதலார் கரபுரமும் கபாலியார் தம் காப்புக்களே (தெண்ணீர்)’ என்று கரபுரத்தைப் (தேவார வைப்புத் தலமாகப்) போற்றியுள்ளார். எனவே, கரபுரம் தேவார காலத்தைச் சேர்ந்த கோயில் என்று அறிய முடிகிறது. இது சம்பந்தமாக கல்வெட்டு விவரங்களைத் தேடியபோது, தற்போதுள்ள ‘திருப்பாற்கடல்’ என்ற திருத்தலத்தில் ‘கரபுரீஸ்வரர் கோயில்’ என்ற சிவாலயம் உள்ளதை அறிந்தேன்.

இத்தலம் சென்னை - வேலூர் தேசிய நெடுஞ் சாலையில் காவிரிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு எதிரில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலத்தில் ஐந்து சிவாலயங்கள் இருந்தன. இந்தக் கரபுரீஸ்வரர் கோயிலோடு தொடர்புடைய தூஷணேச்வரர் கோயிலில், ஆவுடையார்மீது திருமாலை நிறுத்தி ‘பிரசன்ன வேங்கடேஸ்வரர்’ என்ற பெயரால் திருமால் அழைக்கப்பெறுகிறார். இக்கோயிலை ஒட்டியே பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

கரபுரீஸ்வரர் கோயில் மிகத் தொன்மையானது. இத்திருக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னன் பரகேசரி வர்மன், முதலாம் பராந்தகன், பார்த்திவேந்திரிவர்மன், மூன்றாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், சுந்தரபாண்டியன், இரண்டாம் தேவராயன், வீரகம்பண்ண உடையார், விஜயகண்ட கோபாலன் முதலான அரசர்கள் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

‘படுவூர்க்கோட்டத்துக் காவிரிப்பாக்கமாகிய அமநி நாராயண சதுர்வேதி மங்கலத்துச் சபையிலுள்ள சம்வத்சர வாரிய பெருமக்கள் (ஆண்டுதோறும் கண்காணிக்கும் குழுவினர்) தோட்ட வாரிய பெருமக்கள், ஏரிவாரியப் பெருமக்கள், கழநி வாரிய பெருமக்கள் ஸ்ரீவட வீரநாராயண பெருமக்கள், பஞ்சவாரிய பெரு மக்கள், கணக்கு வாரிய பெருமக்கள், கலிங்கு (மதகுகளைக் கண்காணிக்கும்) வாரிய பெருமக்கள், தடவழி (குளங்களைக் கண்காணிக்கும்) வாரிய பெருமக்கள், பட்டர்கள், விசிஷ்டர்கள், ஊராள் கின்ற பல்லவன் பிரமாதிராயன், கண்காணி அரும்பா கிழான் ஆகியோர் இவ்வூர் பெரியதளி (பெரிய கோயிலான கரபுரீச்வரர்) அபிஷேக மண்டபத்தே கூடியிருந்தபோது, திருக்கரபுரத்து பெருமான் கோயில் சிவபிராமணன் மாகண்ட நன்பெருமாள், கரபுரத்துப் பெருமானுக்கு அர்ச்சனா போகமான தோட்டமும் புலமும் ஆறு உடைத்து மணல் இட்டுக் கிடந்ததென்று விண்ணப்பம் செய்தார்.

சபையார் அதை ஏற்று, அதற்குப் பதிலாக ஒச்சேரி என்னும் பிடாகை (சிற்றூரில்) மஞ்சிக்கம் (தரிசு அல்லது புறம்போக்கு) நிலத்தில் 1400 குழியைக் கொடுத்து, திருக்கரபுரத்துப் பெருமான் அடிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருநாழி (அளவு) அரிசியால் ஒரு பொழுது திருவமுதுக்கும், மூன்று சந்தியும் ஒரு விளக்குக் கொளுத்திக்கொண்டு திருவாராதனை செய்வதற்குமாக அர்ச்சனா போகமாகக் கொடுத்துள்ளனர் (இக்கல்வெட்டில் நான்கு எல்லைகளைக் குறிக்கும் இடத்து, ‘கிழக்கு எல்லையாக திருப்பன்றீஸ்வரத்து திரு மூலட் டானத்துப் பெருமானடிகள் உதமாதம் பட்டிக்குக் கிழக்கும்...’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இது தாமல் ஊரிலுள்ள வராஹீஸ்வரர் திருக்கோயிலாகும்). சோழர்கள் காலத்தில் ஊர் நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி வந்தார்கள் என்பதற்கு மேற்கூறிய கல்வெட்டு ஓர் அருமையான சான்று.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

இத்திருக்கோயிலுள்ள எல்லா கல்வெட்டு களிலும் திருக்கரபுரத்துப் பெருமான் என்றே இறைவன் குறிக்கப்பெறுகிறார். ராமாயணத்தில் வரும் கரன், தூஷணன் ஆகியோர் பூஜித்த இறைவன் என புராணக் குறிப்புடன் இறைவன் திருநாமம் கரபுரீஸ்வரர், தூஷணேஸ்வரர் என்று வந்துள்ளது என்கிறார்கள். மேலும் திருப்பாற்கடல் என்ற பெயர் மிகப் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். கரபுரம் என்பதே இவ்வூரின் பழைய பெயராகும்.

அருணகிரிநாதர் பாடிய கரபுரத்து ஆறுமுகப் பெருமான் திருக்கோயிலை தரிசிக்க நாற்பது ஆண்டுகளுக்குமுன் என் நண்பன் நாராயண சாமியுடன் இவ்வூருக்குச் சென்றேன்.

இவ்வூரில் இக்கோயிலைப் பற்றி விசாரித்த போது, ‘இக்கோயிலில் ஐந்துதலை நாகப்பாம்பு உள்ளது; விஷ ஜந்துக்கள் அதிகம்...' என்று எங்களைப் பயமுறுத்தினார்கள். ‘ஐந்துதலை நாகத்தை இங்கேயாவது ஒருமுறை பார்க்கலாமே!’ என்ற ஆர்வத்துடன் நாங்கள் இருவரும் கரபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் வயது முதிர்ந்த டி.எஸ்.ஏகாம்பர சிவசார்யர், அவர் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவருக்கு இக்கோயிலைப் பற்றிய விவரங்கள் எதுவும் சொல்ல இயலவில்லை. கோயிலைச் சுற்றிப் பார்த்தோம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

பிராகாரம் முழுவதும் காடுபோல மரம், செடி, கொடியுடன் திகழ்ந்தது. கஜப்ருஷ்ட விமானத்துடன் கூடிய வேலைப்பாடு மிக்க கற்றளி. மூர்த்தங்கள் பல்லவர் மற்றும் முற்காலச் சோழர் காலத்தவை. அம்பிகை. உண்ணாமுலையம்மை (அபித குஜாம்பாள்) கரபுரீஸ்வரம் பெருமானுடன் அருள்காட்சியளிக்கிறார். பன்னிரு கரங்களுடன் மயில் மீதமர்ந்த ஆறுமுகப்பெருமானின் எழிற் கோலம் நம்மைச் சிலிர்க்கவைத்தது. இருபுறம் தேவிமார் விளங்குகின்றனர். இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று நூறாண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று தோன்றியது.

இத்தலத்துத் திருப்புகழில், அற்புதமாக ஓர் இயற்கைக் காட்சியைக் நம்மைக் காட்டுகிறார் அருணகிரியார். பாக்குமரத்தில் பழங்கள் நன்கு பழுத்து குலை அற்று விழுகிறதாம். அதன் கீழே உள்ள வாழைப்பழங்கள்மீது அவை விழுவதால்... அந்த அதிர்ச்சியால் அங்குள்ள கரும்பினின்றும் முத்துகள் உதிர்கின்றனவாம். அங்கே ‘கயல் மீன்கள் குதித்து விளையாடும் பெருமை வாய்ந்த வயல்கள் விளங்கும் அழகைக்கொண்ட கரபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானே!’ என்று அத்தலத்தின் வளமையையும் செழுமையையும் விவரிக்கிறார் அருணகிரியார்.

கமுகினில் குலையறக் கதலியில் கனி யுகக்

கழையின்முத் துமுதிரக் கயல்குதித் துலவுநற்

கனவயல் திகழ்திருக் கரபுரத் தறுமுகப் பெருமாளே.

கரபுரத்தை தரிசித்து வந்தபின் சில ஆண்டுகள் கழித்து தில்லை - திருவிடைக்கழி பாத யாத்திரையில் டி.சுந்தரராஜ் என்ற முருகனடியாரைச் சந்தித்தேன். திருப்புகழ்த் தலங்களைப் பற்றி என்னிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

கரபுரீஸ்வரர் கோயிலைப்பற்றி அவரிடம் விவரமாகச் சொன்னவுடன் அடுத்த வாரமே அத்திருக்கோயிலுக்குச் சென்று தரிசித்தார். அத்துடன், கோயில் குருக்களின் வறுமை நிலைமையைக் கண்டு மாதாமாதம் ஒரு தொகையை அவருக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்தக் கோயிலுக்கு அவர் சென்றபோது, அந்தக் குருக்கள் அந்தத் தொகையில் சில திருப்பணிகளைச் செய்திருப்பதைக் கண்டார். உடனே திருப்பணிக்கு என்று கொஞ்சம் அதிகத் தொகையை அளித்தார். இப்படி ஏறக்குறைய ரூபாய் 75,000 வரை திருப் பணிக்குச் செலவிட்டார்.

இதனிடையே அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், அவருக்கு (பணியில் இருக்கும் போது) வரவேண்டிய பதவி உயர்வுக்கான தொகை ஒன்றை வங்கி நிர்வாகம் கணக்கிட்டு அனுப்பிவைத்தது. அந்தத் தொகை ஏற்கெனவே இவர் திருப்பணிக்கு செலவிட்ட அதே அளவு தொகைதான். ‘முருகப்பெருமான் அதை நன்கொடையாகத் திரும்ப அளித்தான்’ என்று மகிழ்ந்து, அத்தொகையையும் திருப்பணிக்கே அளித்து மனநிறைவு கொண்டார்.

அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஒரு முறை என்னிடம் “நீங்கள் எப்படியாவது மீதித் திருப் பணியை முடித்துக் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்.

இப்பணியை எப்படி எடுத்து முடிப்பது என்று எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. இதனிடையே அவர் முருகன் திருவடிகளை அடைந்தார். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த முருகனடியார் வீ.வேங்கடசாமி அவர்கள் இந்தத் திருப்பணியில் ஆர்வம் காட்டினார். அவருடன் சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு மற்றும் சுந்தரராஜ் குடும்பத்தினர் பொருளுதவியுடன், கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்து மற்ற திருப் பணிகளையும் முடித்தோம்.

21.2.2000 அன்று கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக நேரத்தில் எங்கிருந்து மேகம் வந்ததோ தெரியவில்லை. முருகப் பெருமான் அருளை மழையாகப் பொழிய வைத்து எங்களை ஆனந்தக் கடலில் திளைக்கச் செய்தார்.

சமீபத்தில் இத்திருக்கோயிலை தரிசிக்க கீழ்ப்பழந்தை ரங்கராஜன் மற்றும் வேலூர் சுப்ரமண்யன் ஆகியோருடன் சென்றிருந்தேன். கோயில் அற்புதமாகப் பராமரிக்கப்பெற்று வருகிறது; என் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை! (கோயில் தொடர்புக்கு : 79046 04989).

2000-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின்போது, ஆலையிலிருந்து புதிதாகக் காய்ச்சிய 100 கிலோ வெல்லத்தை ஓரன்பர் எங்களிடம் கொடுத்து, கும்பாபிஷேகத்தின்போது சர்க்கரைப் பொங்கல் தயாரித்து மக்களுக்கு வழங்குமாறு வேண்டினார்.

அதன்படி பெரிய அளவில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடைபெற்றது. மக்களெல் லாம் விழுந்தடித்துக்கொண்டு சர்க்கரைப் பொங்கலை ருசித்துச் சாப்பிட்டது மறக்க முடியாத காட்சியாகும்.

இதற்கும் இந்தத் தலத்தில் அருணகிரியார் பாடிய `பரவி உனது...' என்று தொடங்கும் திருப்புகழுக்கும் ஒரு தொடர்புள்ளதைப் பிறகு உணர்ந்தேன்!

- காண்போம்...

துறவியின் பதில்!

துறவி ஒருவரைக் காணச் சென்றார் அந்தச் செல்வந்தர். ஆசிரமத்தில் தம்முடைய அறையில் வீற்றிருந்த துறவி, செல்வந்தரை வரவேற்று ஆசி கூறினார். அந்த அறையில் சில சுவடிகளும் எளிமையான கயிற்றுக் கட்டிலும் மட்டுமே இருந்தன.

இதைக்கண்டு வியப்படைந்த செல்வந்தர், ``இந்த அறையில் பொருள்களே இல்லையே! உங்கள் பொருள்கள் எங்கே’’ எனக் கேட்டார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 12

அதற்குத் துறவி, ``உங்களிடமும்தான் இப்போது பொருள்கள் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட செல்வந்தர், ``நான் இங்கே விருந்தினராக வந்திருக்கிறேன். கொஞ்ச நேரத்தைக் கழிக்கப்போகிறேன். இங்கே எனக்கு எதற்குப் பொருள்கள்’’ என்று கேட்டார்.

இப்போது துறவி பதில் சொன்னார்: ``அன்பரே! நானும் இந்த உலகில் ஒரு விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன்!’’

செல்வந்தர் மெய்யான தத்துவத்தைப் புரிந்துகொண்டார்!

- பிரசன்னா, கரூர்