திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 13

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

டலூர் நீதிமன்றத்தில், 1871-ம் ஆண்டு, ஒருநாள் - தில்லை நடராஜர் கோயில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தீட்சிதர்கள் தங்களுக்குள்ள பரம்பரை பூஜை செய்யும் உரிமையை நிலைநாட்டப் பல்வேறு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதில் ஒரு பாடலை யும் சாட்சியாகக் காட்டினர்.

அந்தப் பாடல் வரிகளில் உள்ள சந்த அழகும் பொருள் அழகும் அங்கு எழுத்தாளராகப் பணிபுரிந்த வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப் பிள்ளை என்னும் சிவனருள்செல்வரை மிகவும் ஈர்த்தன. அந்தப் பாடல், அருணகிரிநாத சுவாமிகள் சிதம்பரம் திருத்தலத்தில் (14-ம் நூற்றாண்டில்) பாடிய ‘தாதுமலர் முடியாலே’ என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடல்.

இதையறிந்த அப்பெருமகனாருக்கு அதைப் போல சந்தத் திருப்புகழ்ப் பாடல்கள்கொண்ட ஏட்டுச் சுவடிகளைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. திருத்தணி முருகனுக்கு வழிவழியாகத் திருத்தொண்டு செய்யும் குடும்பத்தில் வந்த சுப்பிரமணியப் பிள்ளையவர்களின் பெரும் முயற்சியால், அருணகிரிநாதர் காலத்துக்கு ஏறக்குறைய 500 ஆண்டுகள் கழித்து திருப்புகழ்ப் பாடல்கள் முதன்முதலில் அச்சேறின.

கண்டுகொண்டேன் கந்தனை - 13

அருணகிரிநாத சுவாமிகள் 16,000 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளதாக அக்காலத்தில் பொதுமக்களிடையே ஒரு கருத்து நிலவிவந்தது. எனினும், பல இடங்களில் தேடி அலைந்து 603 திருப்புகழ்ப் பாடல்கள் கொண்ட முதல் பாகத்தை 1894-ல் சுப்பிரமணியப் பிள்ளை அச்சிட்டு வெளியிட்டார். இரண்டாவது தொகுதி, 545 பாடல்களுடன் 1902-ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது அச்சிடப்பட்டுள்ள பல்வேறு திருப் புகழ்ப் பதிப்புகளுக்கு வ.த.சுப்ரமணியப் பிள்ளையவர்களின் பதிப்பே மூலப்படியாகும்.

அன்னாரின் திருமகனார் தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை, மேலும் சேகரித்த பாடல்களுடன் 1921-ல் 1,304 பாடல்களைப் பதிப்பித்தார். சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பின்படி 1,361 பாடல்கள் உள்ளன. திருமுருக வாரியார் சுவாமிகள், தமது பதிப்பில் 1,315 திருப்புகழ்ப் பாடல்களை அச்சிட்டுள்ளார்.

சேலம் சுவாமி குஹானந்தா திருப்புகழ் சபைக் காக 2006-ல் அடியேன் தொகுத்துக்கொடுத்த பதிப்பில் 1,331 பாடல்கள் அச்சிடப் பெற்றுள்ளன. இது 2006, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் இதுவரை மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன.

கண்டுகொண்டேன் கந்தனை - 13

சேலம் பதிப்பு, வடக்கு உச்சியிலுள்ள கயிலை மலையில் தொடங்கி தென்கோடியில் உள்ள கதிர்காமத்தில் நிறைவுபெறும் வகையில் திருத்தலக் குறிப்புகளுடன் தொகுக்கப்பெற்றுள்ளது மற்றும் பொதுப்பாடல்களுடன் அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்புகள், வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருஎழு கூற்றிருக்கை ஆகியவற் றுடன் (மாவட்டவாரியாக வரைபடங்களுடன்), செம்பதிப்பாக 1,318 பக்கங்களில் அச்சிடப் பெற்றுள்ளது.

திருப்புகழ்த் தலங்கள் பற்றிய ஆய்வை 1977-ம் ஆண்டு மேற்கொண்டபோது, சென்னை - திருவான்மியூர் கலாக்ஷேத்ரா அருகிலுள்ள டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூலகத்துக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. அங்குள்ள பழைய தல புராண நூல்கள் மற்றும் தமிழ்த் தாத்தா அவர்கள் சேகரித்துவைத்திருந்த தலக்குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டாக்டர் உ.வே.சா அவர்களின் பெயரர் திரு. கி. சுப்ரமணிய ஐயரை அடிக்கடிச் சந்திப்பது உண்டு. அவரும் அவ்வப்போது எனக்கு வழிகாட்டுவார். அந்த நூலகத்தில் கௌரவக் காப்பாட்சியாளராக இருந்துவந்தவர் தமிழறிஞர் மு.கோ.ராமன். (இவர் திராவிடக் கவிமணி வே. முத்துசுவாமி ஐயர் என்னும் மகாவித்வானின் புதல்வர்). ஒருநாள் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் 3000-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சுவடிகள் உள்ளன என்று தெரிவித்தார்.

அவற்றில் 16 திருப்புகழ்ச் சுவடிகள் மற்றும் கந்தரநுபூதி சுவடிகளும் உள்ளன என்றும் அவற்றை இதுவரை ஒருவரும் ஆய்வு செய்யவில்லை என்றும் கூறினார். அவற்றில் ஏதாவது புதிய திருப்புகழ்ப் பாடல் கிடைக்க வாய்ப்புண்டு என்று அவர் தெரிவித்ததும், அதைப் பற்றியே பல நாள்கள் - மாதங்கள் சிந்தித்தவாறு இருந்தேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 13

திருவனந்தபுரம் சென்று அந்தச் சுவடிகளைப் பார்த்து புதிய பாடல்களைத் தேட வேண்டும் என்ற ஆவலில், சில திருப்புகழ்ச் சபையினரிடம் இதைப்பற்றி விவரித்தேன். ஆனால், ஒருவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதில் ஆர்வமும் அவர்களுக்கு இல்லை. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. 2000-வது ஆண்டில் மு.கோ.ராமனின் வழிகாட்டுதலின்படி, கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் இ.நாச்சிமுத்துவுக்கு விவரமாகக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. திருப்புகழ் மற்றும் முருகன் பற்றிய பல்வேறு சுவடி களின் விவரங்களை அனுப்பியிருந்தார்.

கேரளப் பல்கலைக்கழகம் காரிய வட்டத் திலுள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பொறுப்பாளர் டாக்டர் திருமதி பி. விசாலாட்சி அம்மையாரைத் தொடர்புகொண்டு, அவரிடம் அனுமதி பெற்று சுவடிகளைப் பார்வையிடலாம் என எழுதியிருந்தார். அந்த அம்மையாருக்கும் கடிதம் எழுதினேன். அவர்களும் அனுமதி அளித்ததுடன், டாக்டர் நாச்சிமுத்து மூலம் ஏதாவது ஒரு நபரின் உதவியுடன் பார்வையிடலாம் எனத் தெரிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் உடனே அதற்கு என்னால் ஏற்பாடு செய்ய இயலவில்லை.

2006-ம் ஆண்டு அருணகிரிநாதர் அருளிய நூல்கள் அனைத்தையும் செம்பதிப்பாக வெளியிட முருகன் திருவருள் கூடிவந்தது. ‘இனியும் கால தாமதம் செய்யக் கூடாது’ என்று தீர்மானித்து, அலுவலகத்தில் 10 நாள்கள் விடுமுறை பெற்று திருவனந்தபுரம் சென்றேன். அங்கு என் சகோதரியின் மகள் இல்லத்தில் தங்கியிருந்து, தினமும் கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்துக்குச் சென்று சுவடிகளைப் பார்வையிட முற்பட்டேன். டாக்டர் நாச்சிமுத்து, தமிழ்த்துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த எம். பிரபாகரன் என்பவரைச் சுவடிகள் வாசிக்க உதவியாளராக ஏற்பாடு செய்தார். திருமதி விசாலாட்சி அவர்கள் அனைத்துச் சுவடிகளையும் எடுத்து அளித்தார்.

தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இருவரும் சுவடியில் மூழ்குவோம். பிரபாகரன் சுவடிகளைப் படிப்பார். நான் திருப்புகழ் முதலடி அகராதியை வைத்துக்கொண்டு சுவடியில் உள்ள பாடல் முன்பே அச்சாகியுள்ளதா என்று பார்த்து வருவேன். இதனிடையே பல பாடல்களில் நிறைய பாடபேதங்கள் காணப் பட்டன. அவற்றைக் குறிப்பு எடுக்க ஆரம்பித்தால், நமது ஆய்வு நிறைவடைய பல மாதங்கள் ஆகும்போல் தோன்றியது. எனவே, `பாடல் முதல் அடி - கடைசி அடி - அது என்ன தலம்...' என்ற முறையில் அணுகினேன். சில ஏடுகளில் பாதி பாடல்தான் இருக்கும். அடுத்த ஏட்டில், அதன் தொடர்ச்சியில்லாமல் வேறு பாடலின் நடுவரி காணப்படும். ஒரே குழப்பம்தான். பொறுமையைச் சோதிக்கும் பெரிய வேலை. மத்தியான வேளையில் சுவையான சாப்பாடும் கிடைத்தது.

கண்டுகொண்டேன் கந்தனை - 13

‘மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்.... கருமமே கண் ஆயினார்’ என்று சிறுவயதில் பள்ளியில் படித்த பாடல் நினைவுக்கு வந்தது. இவ்வாறாக ஒன்பது நாள்கள் சுவடிகளைப் பார்த்து, படித்து ஒரு புதிய பாடலும் கிடைக்காத நிலையில் மனம் தளர்ச்சியுற்றது. புதிதாக எதுவும் கிடைக்காமல் போனாலும் சுவடி முழுமை யும் பார்த்தோம் என மனநிறைவு போதும் என்று எண்ணினேன். பத்தாவது நாள் இரவு சென்னைக்குக் கிளம்ப வேண்டும். அன்று மாலையில், கந்தனின் கருணை என்னைச் சிலிர்க்க வைத்தது.

சுவடி எண் 9210. `இது ராமநாத குருக்கள், சேத்தூர் என்பவரிடமிருந்து 25-9-1941 அன்று பெறப்பட்டது' என்று சுவடியின் மேல் எழுதப் பட்டிருந்தது. அந்தச் சுவடியில் மூன்று பாடல்கள் புதிதாகக் கிடைத்தன. அதில் இரண்டு பாடல்கள் இருந்த ஏடு ஆங்காங்கே (ஓட்டையுடன்) சிதைந் திருந்தது. ஒருபாடல் மட்டும் முருகன் திருவருளால் ஒரே ஏட்டில் முழுமையாகக் கிடைத்தது. அதில் அப்பாடலின் சந்தக் குழிப்பும் இருந்ததுதான் ஆச்சர்யமான விஷயம்.

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து வாராதுபோல் வந்த மாமணியாகக் கருதினேன். கந்தன் கருணை நமக்குப் பூரணமாக உள்ளதை உணர்ந்து இன்புற்றேன். ‘எமை பணிவிதிக்கும் சாமி’ என்று அருணகிரியார் பாடியது போல், தமிழறிஞர் மு. கோ. இராமனைச் சந்தித்தது முதற்கொண்டு, திருப்புகழ்ச்சுவடிகளைப் பார்த்துப் படித்து பெற்ற அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அப்பாடல் இதோ:

தந்தந் தானன தானன தானன

தந்தந் தானன தானன தானன

தந்தந் தானன தானன தானன தனதான

வம்பும் கோபமு மேவசு ராதிகள்

வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்

மண்டும் போர் செயும் வேளையின்னோரை வெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக

ரும்பந் தேனிகர் பாவுரை மாதுள

தஞ்சம் பாரென வோதுவ நீ அருள் புரிவாயே

அன்பென் றேவிழி சேர்குற மாதுதன்

இன்பந் தேடிமுன் னோர் கணி யாகவும்

மன்றுன் பால்வர வோகம தாவுற வனைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாளிகள்

எங்கும் தாமரை மாமலர் சூழ்திரு

செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.

பெரும்பாலான திருப்புகழ்ப் பாடல்கள் ‘பெருமாளே’ என்று முடிவடையும். சில பாடல்கள் ‘தம்பிரானே’ என வரும். ஆனால், இப்பாடல் ‘முருகோனே’ என்று நிறைவுபெறுகிறது (சரணக் கமலாலயத்தை - திருவேரகம்; சரத்தே உதித்தாய் - கதிர்காமம் ஆகிய திருப்புகழ்ப் பாடல்கள் ‘முருகோனே’ என்று முடிவடைகின்றன). இப்பாடலில் வரும் செங்குன்றாபுரம் என்ற தலம் கேரளாவில் உள்ள செங்கனூராக இருக்கலாம் என முதலில் ஊகித்தேன்.

கூகுள் வலைத்தளத்தில் செங்குன்றாபுரம் ஊரைத் தேடியபோது இப்பெயருடைய ஊர் விருதுநகர் அருகில் 10 கி.மீ தொலைவில் உள்ளதை அறிய முடிந்தது. அப்போது சிவகாசியில் பணிபுரிந்து வந்த திருப்புகழ் ஆர்வலர் உடுமலைப்பேட்டை கே.ஹரிசங்கரிடம் இதன் விவரம் சொல்ல, அவர் தம் நண்பருடன் நேரில் சென்று தகவல்களைச் சேகரித்து அளித்தார்.

‘அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் - திருப்புகழ்த் தலப்பயணம்’ நூல் மூன்றாவது பதிப்பு 2008-ல் வெளிவந்தபோது, இத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் ஒரே திருப் புகழ்த் தலம் இதுவேயாகும். விருதுநகரிலிருந்து வத்தாயிருப்பு மார்க்கத்தில் எரிச்சநத்தம் செல்லும் வழியில், 12 கி.மீ தொலைவில் உள்ளது, செங்குன்றாபுரம்.

இத்தலம் குறித்து விரிவாக அறிவோம். கூடவே, கரபுரம் தலத்துச் சர்க்கரைப்பொங்கல் விநியோகக் காட்சிக்கும் `பரவி உனது...' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலுக்குமான தொடர்பையும் சுவைபடத் தெரிந்துகொள்வோம்!

- காண்போம்...