மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 14

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

சர்க்கரைப்பொங்கல் விநியோகம்

`எங்கும் தாமரை மாமலர் சூழ்திரு செங்குன்றாபுரம்’ என்று அருணகிரியார் போற்றிப்பரவிய திருத்தலம் குறித்த தேடலின் விவரத்தைப் பார்த்தோம். தொடர்ந்து அந்தத் தலத்தின் சிறப்புகளைச் சொல்லுமுன், கரபுரம் தலத்து சர்க்கரைப்பொங்கல் சுவாரஸ்யம் குறித்து சொல்லிவிடுகிறேன்!

கரபுரம் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது குறித்து சொன்னேன். கும்பாபிஷேக நேரத்தில் எங்கிருந்து மேகம் வந்ததோ தெரியவில்லை. நல்ல மழை. முருகப்பெருமான் அருளை மழையாகப் பொழியவைத்து எங்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

கந்தன்
கந்தன்

கும்பாபிஷேகத் திருநாளன்று, ஆலையிலிருந்து புதிதாகக் காய்ச்சிய 100 கிலோ வெல்லத்தைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்து, சர்க்கரைப் பொங்கல் தயாரித்து, மக்களுக்கு வழங்குமாறு வேண்டிக்கொண்டார் அன்பர் ஒருவர். அதன்படி பெரியளவில் சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கப்பெற்று விநியோகம் நடைபெற்றது. மக்களெல்லாம் ஆர்வத்துடன் சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டு ருசித்துச் சாப்பிட்டது மறக்க முடியாத காட்சி.

இந்த சம்பவத்துக்கும் இத்தலத்தில் அருணகிரியார் பாடிய ‘பரவி உனது...’ என்று தொடங்கும் திருப்புகழுக்கும் தொடர்புள்ளதைப் பிறகு உணர்ந்தேன்.

`உன்னைப் போற்றி... உன்னுடைய அழகிய திருக்கரங்களையும், திருமுகங்களையும், முத்துமாலை அணிந்துள்ள திருமார்பையும், தேக ஒளியையும், நறுமண மலர் போன்ற திருவடிகளையும், உன்னிடம் பொருந்தியுள்ள சேவலையும் மயிலையும் உள்ளத்தில் அன்புடனே அழுந்திப் படியும்படி மனத்தினில் வைக்க வேண்டும். அதற்குத் திடமான சிவபக்தி மிகப்பெற்று, யாவரும் மகிழ்ச்சியுற அறநெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒருபிடி அளவேனும் உணவு இடாமல் நான் திரியலாமோ’ என்று வேண்டுகிறார் அருணகிரியார். பசியுடன் வரும் பொதுமக்களுக்கு அன்னமிடுதல் எவ்வளவு அவசியம் என்பதை எவ்வளவு அழகாக அருணகிரிநாதர் உணர்த்தி யுள்ளார் பார்த்தீர்களா!

கந்தன்
கந்தன்

இனி, செங்குன்றாபுரம் திருக்கோயிலை தரிசிக்கலாம்.

முருகனின் ஆலயம் பொலிவு பெறுமா?

விருதுநகரிலிருந்து வத்திராயிருப்பு மார்க்கத்தில், எரிச்சநத்தம் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்குன்றாபுரம். இங்குள்ள கயிலாசநாதர் கோயில், விண்ணகரப் பெருமாள் கோயில், எல்லையம்மன் கோயில் ஆகியவை இவ்வூரின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

கல்வெட்டுகளில் செங்குடி, சங்கநாதபுரம், செங்கண்மாநகரம், அபிமான மேருபுரம் எனப் பலவாறு இவ்வூர் காட்டப்படுகிறது. வணிகத்தில் இவ்வூர் சிறந்து விளங்கியிருந்ததையும் அறிய முடிகிறது.

சுவடி
சுவடி

கயிலாசநாதர் கோயில் கல்வெட்டில் இவ்விறைவர் `ஸ்ரீகைலாசம் நாற்பத் தெண்ணாயிரம் ஈதவரமுடைய நாயனார்’ எனக் குறிப்பிடப்பெறுகிறார். முதலாம் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தைச் சேர்ந்ததைக்கொண்டு, இது பாண்டியர் காலத்துக் கோயில் என்பதை உறுதி செய்கிறது கல்வெட்டு. விண்ணகரப் பெருமாள் கோயில் இறைவனை ‘விக்ரம பாண்டிய விண்ணகரம் எம்பெருமான்’ எனக் கல்வெட்டு தகவல் குறிப்பிடுகிறது. மேலும், இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள், நிபந்தங்கள் பற்றிய விவரங்களும் காணப்படுகின்றன.

செங்குன்றாபுரத்திலிருந்து வடக்கில் குமர குளம் கண்மாய்க் கரையில், மிகப் பழைமையான ஆறுமுகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. முன்பு வருவாய்த்துறை ஆவணங்களில்... செங்குன்றாபுரத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த இவ்வாலயம், தற்போது எல்லிங்க நாயகன்பட்டி என்ற ஊரின் எல்லையில் உள்ளது.

மூலமூர்த்தியான ஆறுமுகப்பெருமான் மயில்மீது அமர்ந்து இருபுறம் வள்ளி தேவசேனா சமேதராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியுள்ளது. கோயில் முன்புறம் கோபுரம் இல்லை. கோயிலின் மேல்தளம் முற்றிலும் சிதலமாகியுள்ளது. விமானத்தின் மேல் உள்ள மரம் மூலஸ்தானம் முற்றிலும் அடிவரை வேர்விட்டுள்ளது.

கந்தன் கோயில்
கந்தன் கோயில்

இந்தத் திருக்கோயிலில், வட்ட எழுத்துகளுடன் திகழும் ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதுவரை அவை பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் தமிழக அரசு தொல்லியல்துறையிடம் தெரிவித்தும் பலன் எதுவும் இல்லை. கல்வெட்டு விவரங்களை அறிந்தபிறகு இத்திருக்கோயில் பற்றிக் கட்டுரை எழுதலாம் எனக் கடந்த 14 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆகவே, இத்தலத்தின் திருப்புகழ் சுவடியிலிருந்து கிடைத்த பின்னும் இதுவரை எந்த பத்திரிகையிலும் கட்டுரையாக்கவில்லை (முதன்முதலில் சக்தி விகடனில்தான் இடம்பெறுகிறது).

இந்தத் திருக்கோயிலின் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் மீன் சின்னங்கள் ஆகியவற்றை நோக்கும்போது, இதன் கட்டுமானம் பாண்டியர் காலத்துத் திருப்பணி என அறிய முடிகிறது.

முதன்முதலில் செங்குன்றாபுரம் முருகனை வழிபட, கோவைவாழ் திருப்பணிச் செல்வர் டி.அருணாசலத்துடன் சென்றேன். அவரும் சென்னையிலுள்ள சம்பந்தம் (வடபழநி) என்ற அன்பரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்ய பலமுறை முயற்சிகள் செய்தும், கோயில் தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்காததால் பலன் இல்லாமல் போனதாம். நாளுக்கு நாள் கோயிலின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு, நாகர்கோவிலைச் சேர்ந்த த.பாலசுப்ரமணியன் மற்றும் சில அன்பர்களுடன் அங்கு சென்று திருப்பணி குறித்துப் பேசினோம்.

கந்தன்
கந்தன்

எங்களிடம், `ஆஹா! திருப்பணியை உடனே தொடங்கலாம்' என்று நேரில் சொல்லிவிட்டு, பிறகு தட்டிக்கழிக்கிறார்கள் கோயில் தரப்பில். என்ன காரணம் என்றும் புரியவில்லை. வெளியூர் அன்பர்களைப் போன்று உள்ளூர் மக்களும் இந்தக் கோயிலைப் பொலிவுபடுத்துவதில் ஆர்வம்காட்டினால் நன்றாக இருக்கும்.

14 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புகழ்ப் பாடல் வெளிச்சத்துக்கு வந்தது போல், திருப்பணிகள் செய்ய பெற்று ஆலயமும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். திருப்புகழ் அடியார்கள் பலரும் சென்று தரிசித்து இன்புற வேண்டும். அந்த நாள் எந்நாளோ!

- காண்போம்...