மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 15

சுப்ரமண்யர்
பிரீமியம் ஸ்டோரி
News
சுப்ரமண்யர்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

ருணகிரிநாதர் சென்று தரிசித்த தலங்களில் ‘சோமீசர் கோயில்’ எனும் தலத்தின் சரியான இருப்பிடத்தை உறுதிசெய்வது பெரிய சவாலாக அமைந்தது. ‘கரிய குழல் சரிய முகம்...’ என்று தொடங்கும் அந்தத் திருப்புகழ்,

‘மருதரசர் படை விடுதி வீடாக நாடி மிக

மழவிடையின் மிசையின் வரு சோமீசர் கோயில் தனில்

மகிழ்வு பெற உறைமுருக னேபேணு வானவர்கள் பெருமாளே’ - என்று நிறைவு பெறுகிறது. இதற்குத் தணிகைமணி அவர்கள் தமது உரையில் `மருத நிலத்து மன்னர்கள் பாசறைக்குத் தக்கத் தலம் என மிக விரும்பத்தக்கதான - இளமை வாய்ந்த இடபத்தின் மேல் ஏறி வரும் சோமீசர் எனும் திருநாமம் உடைய சிவபிரானது கோயிலில் (சோமீசர் கோயிலில்) மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே' என்று எழுதியுள்ளார்.

பாடலின் உரையில் அடிக்குறிப்பு ஒன்றும் காட்டுகிறார். இத்திருப்புகழில் வரும் `படைவீடு' என்பது இன்னதென்று, பத்துப்பாட்டில் ஒன்றாகிய மலைபடுகடாத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. `சேயாற்றங்கரையில் நவீரம் என்னும் மலையில் காரியுண்டிக் கடவுளின் கோயில் சேனைகளால் சூழப்பட்டிருந்தது' என்று சொல்லியிருத்தல், இக்கருத்தைப் புலப்படுத்தும். `நன்னன் என்பான் அந்த தலத்தைப் பாதுகாப்பதற்காகப் படைகளை அங்கு வைத்திருந்தான்' (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - பக்கம் 57) என்று குறிப்பிட்டு, `இந்த ஈற்றடியின் பொருள் பின்னும் ஆராயத்தக்கது' என்று எழுதியுள்ளார்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

தணிகைமணி அவர்களின் உரைநூல்களை ஆழ்ந்து படித்தவர்கள், தணிகைப்பெருமான் அவரது சிந்தையில் உறைந்து திருப்புகழுக்கு உரை காண வைத்தார் என்பதை நிச்சயம் உணர்வார்கள். அந்த வகையில், ‘இந்த ஈற்றடியின் பொருள் பின்னும் ஆராயத்தக்கது’ என்ற குறிப்பு, நமது தல ஆய்வுக்குத் துருப்புச்சீட்டாக அமைந்தது.

தலங்களை ஆய்வு செய்யும்போது கல்வெட்டுகளும் இலக்கியச் சான்றுகளும் பெரிதும் துணை நிற்கும். சில தலங்களின் பெயர்கள் சம்பந்தமேயில்லாமல் மாற்றம் பெற்றுள்ளன. உதாரணமாக ‘திருஅரசிலி’ என்னும் தலத்தின் தற்காலப் பெயர் ‘ஒழுந்தியாப்பட்டு’. அரசிலி என்று கேட்டால் ஒருவருக்கும் புரியாது. எனவே, தற்கால ஊர்ப்பெயரை மட்டும் வைத்துப் பாடல்பெற்ற தலங்களை அறிய முடியாது.

இனி, சோமீசர் கோயிலுக்கு வருவோம். தணிகைமணி அவர்கள் `இது கும்பகோணத்தில் உள்ள தேவார வைப்பு தலமான சோமநாதர் கோயில்' என்று சுட்டியுள்ளார். அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலப்பயணம் நூலில், `இத்தலம் கும்பகோணத்தில் உள்ள சோமேச்வரன் கோயில்' என்றே முதல் இரண்டு பதிப்புகளில் பதிவு செய்தோம்.

சுப்ரமண்யர் சந்நிதி
சுப்ரமண்யர் சந்நிதி

2008-ம் ஆண்டு மூன்றாவது பதிப்பு தயாரிக் கும்போது, இந்த சோமீசர் கோயில் குறித்து மறு ஆய்வு செய்யலாமே என்று எண்ணினேன். தணிகைமணி அவர்கள் அடிக்குறிப்பில் காட்டி யுள்ளபடி, நவீரம் எனும் மலையில் காரியுண்டிக் கடவுளின் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கலாம் என்ற யூகத்தில் ஆய்வை மேற்கொண்டேன்.

நவீரமலையில் ‘காரியுண்டிக் கடவுள்’ வீற்றிருப்பதாகப் பத்துப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ‘காரி’ என்பதற்குக் கருமை என்று பொருள். இங்கு கருமைதோய்ந்த நீலநிறமுடைய நஞ்சைக் குறிக்கும் என்று கொள்ளலாம். ஆக, காரியுண்டிக் கடவுள் என்பது ஆலம் உண்ட நீலகண்டனைக் குறிப்பதாகும். இப்பெயர் பிற்காலத்தில் காரிகண்ட ஈச்வரன், கரை கண்ட ஈச்வரன், கரை கண்டேச்வரன் என்றெல்லாம் மருவியுள்ளது. எனவே, பர்வதமலை அடிவாரத்தில் சுற்றிலும் அமைந்துள்ள ஏழு சிவ தலங்களில் இறைவன் ‘சப்த கரை கண்ட ஈஸ்வரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

முற்காலத்தில் நவீரமலை என்றழைக்கப்பட்ட இடம், தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத் தில் போளூரை அடுத்த பர்வதமலையாகும். இதற்கு திரிசூலம், தென்மல்லிகார்ச்சுனம் (வடமல்லிகார்ச்சுனம் என்பது ஸ்ரீசைலம் என்னும் பருவதம் - ஆந்திராவில் உள்ளது), சித்த சைவம், தென்கயிலாயம், பல்குன்ற கோட்டம் என்னும் பல பெயர்கள் உண்டு. இந்த மலைக்குமேல் மல்லிகார்ச்சுன சுவாமி கோயில் அமைந்துள்ளது.

சப்த கரை கண்ட ஈஸ்வரன்
சப்த கரை கண்ட ஈஸ்வரன்

சங்க காலத்தில் ‘செங்கண்மா’ என்று வழங்கப் பெற்ற இடம், தற்போது ‘செங்கம்’ என்ற பெயரில் திருவண்ணாமலைக்கு மேற்கே 31 கி.மீ சேயாற்றங்கரையில் அமைந்துள்ளது. இதைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிபுரிந்த நன்னன், பர்வதமலையில் (நவீரமலை) எழுந்தருளியுள்ள நீலகண்டப் பெருமானைக் குலதெய்வமாக வழிபட்டு வந்தான்.

மலையின் உச்சியில் நீலகண்டப்பெருமானுக்குக் கோயில் கட்டியதோடு பாதாளச் சுனையையும், தாம் அங்கு தங்கி வழிபடுவதற்கு ஒரு கோட்டையையும் அமைத்திருந்தான். நீலகண்டேஸ்வரரின் பேரருளால் இம்மன்னன் பெருஞ்செல்வமும் பேராற்றலும் பெற்று, தன் பகைவர்களை வென்று வாகைசூடி வல்லரசனாகவும் நல்லரசனாகவும் ஆட்சிபுரிந்தான் என்று அறிய முடிகிறது.

‘சோமீசர் கோயில்’ என்று அருணகிரிநாதர் பாடியுள்ள திருப்புகழில் உள்ளபடி, நன்னன் பாசறை அமைத்து காரியுண்டிக் கடவுள் கோயிலையும், ஊரையும் பாதுகாத்தான் என்ற குறிப்போடு தொடர்புடைய தலம் எது என்று பர்வத மலையைச் சுற்றியுள்ள பல தலங்களில் ஆய்வு செய்தோம்.

திருவண்ணாமலைக்கு மேற்கே 33 கி.மீ தொலைவில், வேலூர் செல்லும் சாலையில், சேயாற்றின் வடகரையில் பர்வத மலைக்கு அருகில் அமைந்துள்ள தலம் போளூர். இங்குள்ள திருக்கோயிலில் இறைவன் ‘சோமநாதேஸ்வரர்’ என்றும் அம்பிகை ‘பாலசௌந்தரி’ என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர் சந்நிதி அமைந்துள்ளது.

சுப்ரமண்யர்
சுப்ரமண்யர்

இத்தலக் குறிப்புகளை நேரில் சென்று முதலில் சேகரித்து உதவியவர் வேலூர் ஆர். சுப்ரமணியன். இந்த சோமநாதேஸ்வரர் கோயிலே அருணகிரியார் பாடிய சோமீசர் கோயிலாக இருக்கும் எனத் தீர்மானித்து ‘அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்’ மூன்றாவது பதிப்பில் அதை உறுதி செய்தோம்.

ஒருமுறை திருவண்ணாமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில், படவேடு ரேணுகாம்பாள் கோயிலை வழிபடச் சென்றேன். என்னுடன் குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத் தலைவர் ஆர்.உபேந்திராவும் வந்திருந்தார். அன்று திருப்பூர் குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவைச் சேர்ந்த ஆர்.சண்முகம் மற்றும் அடியார்கள் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகில், மலையிலுள்ள முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளை நடத்தினர். அவர்களோடு அந்த வைபவத்தைக் கண்டுகளித்துவிட்டு வரும்போது, ரேணுகாம்பாள் கோயிலில் மதில்களில் சுதையினால் அமைந்த ரிஷபங்கள் காணப்பட்டதைப் பார்த்தேன். கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் தாண்டி அம்மன் சந்நிதிக்கு முன்புறம் (சிம்மத்துக்குப் பதிலாக) நந்தி வாகனம் இருந்தது.

கோயிலைச் சுற்றி வலம்வரும்போது கருவறை யின் பின்புறம் கிழக்கு நோக்கி ஆறுமுகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக அருள்பாலிக்கும் அழகான சிற்றாலயம் இருந்தது. பொதுவாக அம்மன் கோயில்களில் கருவறைக்குப் பின்புறம் முருகன் சந்நிதியைக் காண்பது அரிது. இந்தச் சிந்தனையுடன் மூலஸ்தானத்தில் வழிபாடு செய்த போது, ரேணுகாம்பாளுக்கு முன்புறம் மிகச்சிறிய அளவில் திகழ்ந்த பாணலிங்கத்தை தரிசித்ததும் எனக்குள் ஓர் எண்ணவோட்டம் எழுந்தது!

- காண்போம்...

தொட்டித் திருமஞ்சனம்!

துரைக்கு அருகில் கோயில்கொண்டிருக்கும் கள்ளழகர், ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்திபெற்றது. இதுபோல... ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியின்போது நடைபெறும் மற்றொரு வைபவம்- தொட்டித் திருமஞ்சனம்!

கள்ளழகர்
கள்ளழகர்

அன்றைய தினம், எண்ணெய்க் காப்பிட்ட நிலையில், மலைக்கு மேல் உள்ள சுனையில் எழுந்தருள்கிறார் பெருமாள். அப்போது, பெருமாளின் திருமேனியின் மீது அருவி நீர் வழிந்தபடி இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இந்தக் காட்சியைக் காண வரும் பக்தர்கள்மீது சுனையின் நீரைத் தெளிப்பார்கள். இந்த தொட்டித் திருமஞ்சனம் குறித்து ஒரு கதை உண்டு.

பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த திருமலையாண்டான் மறைந்ததும், அவரின் மகன் சுந்தரதோளுடையான் திதி செய்ய முற்பட்டபோது, திதி காரியங்களைச் செய்து கொடுக்க அந்தணர் எவரும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், பெருமாளே அந்தணராக வந்து திதி செய்து, உணவருந்திச் சென்றாராம். இதனால், திருமலையாண்டான் நினைவாக ஆண்டு தோறும் ஐப்பசி வளர்பிறை துவாதசி நாளில், எண்ணெய் தேய்த்துக்கொண்டு சுனையில் வந்து பெருமாள் நீராடுவதாக ஐதிகம்.

- அபர்ணா, சென்னை-4