மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 16

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை

மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குறுநில மன்னனான ராஜகம்பீர சம்புவராயன் (1236-1263) படைவீட்டைத் தலைநகராகக்கொண்டு ராஜகம்பீர ராஜ்ஜியத்தை தோற்றுவித்தார்.

டவேடு ரேணுகாம்பாள் கோயிலின் மூலஸ்தானத்தில் வழிபாடு செய்தபோது, (சிரசு மட்டும் தெரியும் அளவில்) ரேணுகாம்பாள் அம்மனுக்கு முன்புறம் மிகச்சிறிய அளவில் பாணலிங்கம் காணப்பட்டது. அதை தரிசித்ததும் `இக்கோயில் ஒரு காலத்தில் சிவாலயமாக இருந்திருக்குமோ’ என்ற சிந்தனை எழுந்தது.

அதே சிந்தனையுடன் சென்னைக்குத் திரும்பினேன். சென்னை கோட்டையில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகத்துக்குச் சென்று படவேடு கோயிலில் உள்ள கல்வெட்டு விவரங்களைச் சேகரித்தேன். 1940 - 41-ம் ஆண்டில் படவேட்டில் மொத்தம் 40 கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளனர். அதில் ஒரு கல்வெட்டுச் செய்தி, ‘சக வருஷம் 1348 - பராபவ - ஐப்பசி முதல் தேதி, அமாவாசை, திங்கட்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் - தீபாவளித் திருநாளில், வீர விஜயராய மகாராஜனின் மகன் வீரபிரதாப தேவராய மகாராஜன் காலத்தில், வடபுரி என்னும் மருதரசர் படைவேடு ஊரில் உள்ள சோமநாத நாயனார் திருக்கோயிலில், மஞ்சக்கோன் அத்திகிரி நாதன் என்பவன், விளக்கு எரிக்கும் கடமை ஏற்க அதற்கான மானிய நிலத்தை (திருவிளக்குக்குடி) அளித்தான்' என்ற செய்தியைக் கூறுகிறது.

‘இவ்வூர் ஐயங்கொண்ட சோழ மண்டலத்தில் பல்குன்றக் கோட்டத்தில் உள்ள பங்களநாட்டில் உள்ள முருகமங்கலம் பற்றில் அமைந்துள்ளது’ என்றும் குறிப்பிடுகிறது. மற்றும் பல கல்வெட்டு களிலும் இக்கோயில் இறைவன் சோமநாதேஸ்வரர் என்றும் இவ்வூர் மருதரசர் படைவீடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆக தற்போதுள்ள படவேடு அக்காலத்தில் மருதரசர் படைவீடு என்றே அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

 படவேடு கோயில்
படவேடு கோயில்

மேலும், சக 1484-ம் ஆண்டு (அக்ஷய வருஷம் ஆடி மாதம்) கல்வெட்டில் உள்ள தகவல், மருதரசர் படைவீடு கோயிலிலுள்ள பிரசன்ன எக்கலாதேவி அம்மனுக்கு மகாநவமி, திருவாதிரை மற்றும் பங்குனி உத்திரநாளில் வஸ்திரங்கள், விளக்கு எரிக்க நெய் மற்றும் திருமஞ்சனத்துக்கு ஒரு வருடத்துக்குத் தேவைக்குப் பொருள்கள் அளிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இக்கல்வெட்டு மூலம் சோமநாதர் கோயிலில் இருந்த அம்பிகை ‘பிரசன்ன எக்கலாதேவி’ என்று அழைக்கப்பட்டாள் என்பதை அறிய முடிகிறது.

மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குறுநில மன்னனான ராஜகம்பீர சம்புவராயன் (1236-1263) படைவீட்டைத் தலைநகராகக்கொண்டு ராஜகம்பீர ராஜ்ஜியத்தை தோற்றுவித்தார். 1379-ம் ஆண்டுவரை இப்பகுதியை ஆண்ட மூன்றாம் ராஜநாராயணன் காலத்தில் சம்புவராயர் ஆட்சி முடிவுற்றது. நாற்புறமும் இயற்கை அரண்களாக அத்திமலை, கானமலை, வெள்ளிமலை, புஷ்பகிரிமலை ஆகிய மலைகள் சூழ்ந்த இந்தப்பகுதியில் தமது கோட்டையை ராஜகம்பீர சம்புவராயன் அமைத்தார். இந்தக் கோட்டைக்குள் அம்மையப்ப ஈஸ்வரர் என்னும் சிவன் கோயிலை இவ்வரசன் கட்டினார். ‘மருதரசர் படைவீடு’ என்று இக்கோட்டை நகரை அழைத்தார்.

இந்நகரின் மேற்கில் மலையில் சிறு ஓடையாகத் தோன்றி ஆரணிக்கருகில் நாக ஆற்றுடன் சேரும் படைவீடு ஆறு, ‘கமண்டல நதி’ என்ற பெயரில் ஓடுகிறது. கோட்டையின் மதிலருகே கிழக்குப்புறத்தில் உபதேசராமர் (யோகராமர்) கோயில் உள்ளது. கோட்டையின் மேற்புற அரணாக அமைந்துள்ள அத்திமலைமீது ஒரு காவற்கோட்டையை அமைத்தார், சம்புவராயர். அங்குள்ள கோயில் கோட்டை வரதராஜப் பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது.

படவேடு கோயில்
படவேடு கோயில்

கிழக்கு வாயிலான ‘சேனைக்கு மீண்டான் வாசல்’ இன்று ‘சந்தவாசல்’ என்று மருவி வழங்கு கிறது. இவ்வூரின் வழியாகக் கோட்டை நகருக்குள் நுழையுமிடத்தில் முருகன் கோயில் இருந்ததாக (ARE 63 OF 1933-34) ஒரு கல்வெட்டு கூறுகிறது.

சம்புவராய மன்னர்கள் மிகுந்த இறையுணர்வும் சிறந்த கலையுணர்வும் மிக்கவர்களாகத் திகழ்ந்துள் ளனர். கோயில்களின் பூஜை, திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற நில தானங்கள் வழங்கியுள்ளனர். மன்னர்களைப் போன்றே அறப்பண்பும், இறை பக்தியும், கொடையுள்ளமும் மிக்க பக்தர்கள் கோயில் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

படைவேட்டில் சோமநாதேஸ்வரர் ஆலயத்தில் இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், பிரசன்ன எக்கலாதேவி அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியும் கட்டப்பட்டிருந்தன. எனவேதான் சுவாமி சந்நிதி கருவறைக்குப் பின்புறம் ஆறுமுகப்பெருமான் சந்நிதி அமைந்தது. சுற்றிலும் சிவன் கோயில்களில் உள்ள வழக்கமான பரிவார தேவதைகள் சந்நிதியும் முன்புறத்தில் நந்தியும் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. சிவன் கோயிலாக விளங்கிய இந்த ஆலயம், கால ஓட்டத்தில் ரேணுகாதேவி அம்மன் கோயிலாக மாற்றப்பட்டது.

படவேடு கோயில்
படவேடு கோயில்

இங்குள்ள பெரிய லிங்கத்தை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக சிறிய பாண லிங்கத்தை வைத்து விட்டனர். சிவன் சந்நிதியில் ரேணுகாதேவியின் சிலை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது. அம்மன் சந்நிதியாக விளங்கிய இடம் தற்போது அம்மன் உற்சவர் வைக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. சம்புவராயர் காலத்தில் உள்ள கல்வெட்டுகள் இரண்டைத் தவிர மீதியுள்ள கல்வெட்டுகள், உளி கொண்டு கொத்தி வழவழப்பாக்கும் பணியால் பலியிடப்பட்டுள்ளன (ஆதாரம்: டாக்டர் ஜி.தங்கவேலு மற்றும் இல. தியாகராஜன் இருவரும் எழுதியுள்ள சம்புவராயர் வரலாறு நூல்).

சில ஆண்டுகளுக்கு முன்பு பனையூர் ஆர். உபேந்திரா, கீழப்பழந்தை கே.ஈ. ரெங்கராஜன் ஆகியோருடன் படைவேடு கோயிலை மீண்டும் தரிசிக்கச் சென்றேன். கருவறையின் பின்புறம் இருந்த ஆறுமுகர் சந்நிதியை அங்கிருந்து இடம் மாற்றி மேற்கு கோபுர வாயிலுக்கருகில் புதிதாகக் கட்டியுள்ளனர். வடக்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி சோமநாதர் சந்நிதியும் தெற்கு பார்த்த உமாமகேஸ்வரி அம்மன் சந்நிதியும் புதிதாகக் கட்டப்பெற்றுள்ளன. பிரசன்ன எக்கலாதேவி தற்போது உமாமகேஸ்வரியாகக் காட்சி அளிக்கிறாள்.

படவேடு கோயில்
படவேடு கோயில்

சிவன் சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் இங்கு அமைப்பதற்கான காரணம் பற்றி விசாரித்த போது, `இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ய முற்பட்டபோது, இங்கு முன்பிருந்த சோமநாதேஸ்வரர் மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பிரச்ன ஜோதிடர் கூறியதால் இவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன' என்கிறார்கள். மேலும் ஆரணி ஜாகீர்தார் வசமிருந்த இக்கோயில், இந்துசமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டபோது சிவன் கோயிலாகவே ஆவணங்களில் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிப்பரவிய சோமீசர் கோயில் குறிப்பில் உள்ளதுபோல் ‘மருதரசர் படைவிடுதி’ என்ற சொல் கல்வெட்டில் காணப்படுவதையும், கோயில் சிவாலயமாகவே திகழ்ந்ததற்கான தரவுகளையும் கொண்டு இத்தலமே திருப்புகழ்ப் பாடல்பெற்ற சோமீசர் கோயில் என்பதைத் திருவருள் துணைகொண்டு உறுதி செய்ய முடிந்தது. சோமீசர் கோயில்தனில் மகிழ்வுபெற உறை முருகன் ஆறுமுகம் பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வயானை சமேதராக அருட்காட்சி வழங்குகிறார்.

படவேடு கோயிலின் அருகில் மலைமீது ஒரு தனி முருகன் கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அருணகிரிநாதர், ‘மாக சஞ்சார முகில்’ என்று தொடங்கும் திருப்புகழில் ‘ராஜகம்பீர வளநாட்டு மலை’ என்று குறிப்பிடும் மலை, இந்த ராஜகம்பீரன் மலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதுவும் ஆய்வுக்குரியதாகும்.

படவேடு ராமநாதபுரம் பகுதியில் சிறிய மலைமீது, அத்திமலைப் பெருமாள் கோயில் என்னும் லட்சுமி நரசிம்மர் கோயில் அருமையாகத் திருப்பணி செய்யப்பெற்றுள்ளது. அங்கே, வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

சோமீசர் கோயில் திருப்புகழின் பிற்பகுதியில் வரும் நரசிம்மாவதார வர்ணனை, இந்த நரசிம்மர் கோயிலை அருணகிரிநாதர் தரிசித்து அதன் தாக்கத்தால் ஏற்பட்டது என்று கருத இடமுண்டு. இத்திருக்கோயிலில் நரசிம்மரது வலதுபுறம் லட்சுமித் தாயார் அஞ்சலி முத்திரையில் அருள்பாலிப்பது அற்புதமான அரிய காட்சியாகும்.

படவேடு கோயில்
படவேடு கோயில்

இக்கோயிலுக்கருகில் நின்று படைவீடு ஊரைப் பார்வை யிட்டால் ஏதோ ஊட்டி போன்ற மலைப்பிரதேசத்தில் நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றும். அத்தகைய வளப்பம் நிறைந்து வாழை, தென்னை, பாக்கு முதலான மரங்களுடன் அப்பப்பா... அற்புதம், அற்புதம்... பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

இந்தச் செழிப்பையும் அழகை யும் அருமையையும் இத்தலத் திருப்புகழில் அருணகிரியார் ஒரு நாடகக் காட்சி போன்று நமக்குக் காட்டுகிறார்.

வண்டுகள் இசை எழுப்பு கின்றன; தோகை நிறைந்த அழகான மயில் நடனம் இடுகின்றன. அங்கே ஆகாசத்தை ஊடுருவிச்செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள பாக்கு மரத்தின் விரிந்த குலைகள், மாலைகள் (ஹாரம்) போல ஆபரணமாக விளங்குகின்றன (பாடல் - வண்டு; ஆடல் - மயில்; கமுகின் குலைகள் - ஆடல் பாடலுக்கு ஆபரணங்கள் தரும் தலைவர்). இப்படி மதில் சூழ்ந்துள்ள மருதரசர் படை விடுதி என்று மேற்கண்ட வளமும் செழுமையையும் பார்த்துதான் அருணகிரியார் பாடியிருப்பார் போலும்!

இந்து சமயநெறியில் இறையுணர்வு - இறைச் சிந்தனை தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகும். ‘இரை தேடுவதோடு இறையும் தேடு’ என்பது ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்வாக்கு. காலையில் எழுந்தது முதல் இரவு துயில் கொள்ளச் செல்லும் வரை நம்முடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நம் முன்னோர்கள் இதற்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். இதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம், காலம், நாள் என வகுப்பதைத் தாண்டி, இதை வாழும் முறையாகவே அமைத்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம்முடைய சொற்பொழிவிலும், நூல்களிலும் தினசரி அனுஷ்டானமாக திருப்புகழ்ப் பாடல்களின் வரிகளை எடுத்துக் கூறுவார்.

காலையில் எழுந்தவுடன் வழிபாடு தொடங்கும்போது, வெளியே புறப்படும் போது, ஒரு செயலைத் தொடங்கும்போது, உணவு உண்ணும்போது, மாலையில் தீபம் ஏற்றும்போது, இரவில் படுக்கும்போது... இப்படி ஒவ்வொரு வேளையும் திருப்புகழ் வரிகளைச் சிந்திக்கச் சொல்வார்.

இரவு துயில் கொள்ளச் செல்லுமுன் கீழ்க்காணும் திருப்புகழ் வரிகளைக் குறிப்பிடுவார்.

`இரவினிடை துயிலுகினும்

யாரோடு பேசுகினும் இளமையும்

உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்

இருபதமும் அறுமுகமும்

யான் ஓத ஞானமதை அருள்வாயே'

இரவில் தூங்கினாலும், யாருடனாவது பேசிக்கொண்டிருந் தாலும் உன்னுடைய இளமையையும், உன்னுடைய அழகு புனைந்த பன்னிரண்டு தோள் வரிசையையும், இரண்டு திருவடி களையும், ஆறுமுகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தை அருள்புரிவீராக என்பது இப்பாடலின் கருத்து.

மேற்கண்ட அற்புதமான சிந்தனைக்கு விருந்தான நித்ய அனுஷ்டானத்துக்கு உரிய இந்தத் திருப்புகழ் வரிகள் ‘சோமீசர் கோயில்’ என்னும் தலத்தில் அருணகிரியார் பாடியுள்ள மகுட அடியாகும். இரவில் துயில் கொள்ளும் முன் இவ்வரிகளை நாமும் படித்துப் பயனடைவோம்.

- காண்போம்...