Published:Updated:

நினை அவனை! - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பெண் சிங்கம் ஒன்று சூலுற்றிருந்தது. நெடுநாள்களாக அதற்கு எந்த இரையும் கிடைக்கவில்லை. உணவுக்காகக் காடெங்கும் சுற்றியலைந்த சிங்கம், ஓரிடத்தில் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுமந்தையைக் கண்டு, அதை நெருங்கிச் சென்றது.

கா தே காந்தா கஸ்தே புத்ர

ஸம்ஸாரோய உயமதீவ விசித்ர

கஸ்ய த்வம் வா குத ஆயாத

தத்வம் சிந்தய ததிஹ ப்ராத

கருத்து: `உன் மனைவி யார், உன் மகன் யார்?

இந்த வாழ்க்கை விசித்திரமானது. நீ யார், எங்கிருந்து வந்தாய்... இந்தத் தத்துவத்தை எண்ணிப் பார்.’

பெண் சிங்கம் ஒன்று சூலுற்றிருந்தது. நெடுநாள்களாக அதற்கு எந்த இரையும் கிடைக்கவில்லை. உணவுக்காகக் காடெங்கும் சுற்றியலைந்த சிங்கம், ஓரிடத்தில் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுமந்தையைக் கண்டு, அதை நெருங்கிச் சென்றது.

சிங்கத்தைக் கண்ட ஆடுகள் சிதறி ஓடின. அதேநேரம், சிங்கத்துக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. குட்டி பிறந்ததும் தாய் இறந்துபோயிற்று.

சிதறி ஓடிய ஆடுகள் மெள்ள மெள்ள அங்கே வந்தன. பரிதாபமாகக் கிடந்த சிங்கக்குட்டியைக் கண்டதும் அவற்றுக்குக் கருணை பிறந்தது. அவை சிங்கக்குட்டியை தம்முடன் இட்டுச்சென்று வளர்க்கத் தொடங்கின. அது முதல், ஆடுகளோடு ஆடாக சிங்கக்குட்டியும் வளரலாயிற்று.

நினை அவனை! - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ஆட்டுக் குட்டிகள் ‘மே... மே...’ என்று கத்துவதைப் பார்த்து அவற்றைப் போலவே தானும் கத்திற்று. அவற்றைப் போலவே இதுவும் புல் மேய்ந்து பசியைத் தீர்த்துக் கொண்டது.

சிங்கக்குட்டி நாளடைவில் வளர்ந்து பெரிதானது. ஓர் இரவில் அந்த ஆட்டு மந்தையை முதிய சிங்கம் ஒன்று வந்து தாக்கியது. ஆடுகள் அங்குமிங்குமாக ஓடித் தப்பின. ஆனால் சிங்கக் குட்டி தன் இடத்தை விட்டு நகரவில்லை. சிறிது நேரம் சென்றதும் ‘மே... மே...’ என்று கத்தியபடி புல் மேயத் தொடங்கியது.

அதைக் கண்ட முதிய சிங்கம், `‘சிங்கக் குட்டியாகிய நீ ஏன் ஆடுகளோடு இருக்கிறாய். சிங்கமாக இருந்துகொண்டு புல்லைத் தின்கிறாயே... வெட்கமில்லையா’ என்று கேட்டது. சிங்கக் குட்டி குழப்பத்துடன் பார்த்தது. உடனே முதிய சிங்கம் அதை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த நதியின் கரைக்குச் சென்றது. ‘`முட்டாள் சிங்கக்குட்டியே, இந்தத் தண்ணீரில் நம் நிழல்களைப் பார். என்னைப்போலவே நீயும் ஒரு சிங்கம் என்பதைத் தெரிந்துகொள்’’ என்றது.

சந்தேகத்துடன் நீர்ப்பரப்பை எட்டிப்பார்த்த சிங்கக்குட்டி, தன் முகத்தையும் முதிய சிங்கத்தின் முகத்தையும் கண்டு, உண்மையைப் புரிந்து கொண்டது. முதிய சிங்கம் அதோடு விடாமல் சிங்கக்குட்டியை தன் குகைக்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்த மாமிசத் துண்டுகளை பலவந்தமாக அதன் வாயில் திணித்தது. முதலில் பிடிக்காவிட்டாலும் பின்னர் மாமிச ருசி சிங்கக் குட்டிக்குப் பிடித்துப்போனது. ஆடுகளோடு சேர்ந்து இருந்ததை ஒரு கனவாகவே எண்ணியது.

இதுபோன்றதுதான் ஆன்ம ஞானமும். அதாவது, எதுவாகவோ அல்லது யாரோவாகவோ தன்னை அறிந்திருப்பதிலிருந்து விடுபட்டுத் தன்னை அறிவது.

நினை அவனை! - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

கலியுகத்தில் இறைவன் குறித்த எண்ணம் குறையும் என்பதுடன், ‘நான் யார்?’ என்பது போன்ற ஆத்ம விசாரங்களும் இல்லாது போகும். இதுகுறித்து புராணத்தில் கூறப்படுவது இது...

`ஒழுக்கம் கெட்டவர்கள் நாட்டின் பல பகுதிகளையும் ஆட்சி புரிவார்கள். அவர்களுடைய ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும், பசுக்களும் வதைபடுவார்கள். உலகில் தருமம் சிறிது சிறிதாகக் குறைந்துபோகும்.

அப்போது, பொருளே உயர்ந்ததாக மதிக்கப்படும். வலிமை ஒன்றே சகல தருமங்களுக்கும் காரணமாக இருக்கும். பொய் சொல்லும் திறமைதான் வழக்கு களில் வெற்றியடையக் காரணமாக இருக்கும். நியாயமான தருமங்கள் வெற்றியைக் கொடுக்காது. கலியுகத்தில் ஈகை ஒன்றே தருமமாகக் கருதப்படும். யாகங்கள் புறக்கணிக்கப்படும்.

அவ்வாறு தருமம் அழிந்துபோகும் நிலையில், இந்தப் பூமியானது அநேக தோஷங்கள் நிறைந்ததாகி விடும். பலசாலியான ஒருவனே ஆட்சி செய்யும் நிலை உண்டாகும். அத்தகையவர்களின் கீழ் வாழ முடியாத நிலையில் மக்கள் பல இடங்களுக்கும் பெயர்ந்து சென்றுவிடுவார்கள்.

அவர்களுக்கு நல்ல உணவு, உடைகள் கிடைக்காது. அந்நிலையில் பூமியில் வாழும் மனிதனுடைய ஆயுள் காலம் இருபத்துமூன்று ஆண்டுகளாகவே இருக்கும். மக்கள் நாசமடை வார்கள். அப்போது கலியுகம் முடிவுக்கு வரும்.

அந்தத் தருணத்தில் `சம்பளம்' என்ற கிராமத்தில் உள்ள ஒரே ஒருவர் மட்டுமே நற்குணங்கள் நிறைந்தவராக இருப்பார்.

அந்த ஒரு நல்ல ஆத்மாவை உய்விப்பதற்காகச் சகல உலகங்களையும் சிருஷ்டித்து அருளும் ஸ்ரீவிஷ்ணு பகவான் கல்கி அவதாரம் எடுப்பார். துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்தருள்வார். அவ்வாறு கலியுகம் முழுவதும் முடிவடையும்போது சகலருக்கும் புத்தி தெளிவு ஏற்படும்!'

இப்பூவுலகில் மன்னர்கள் அனைவரும் தண்ணீரில் உண்டாகும் நுரைக்குச் சமமானவர்கள். ஆனால், அவர்கள் அதை உணராமல் எதிரிகளை வென்று பூமியைக் காப்பாற்ற எண்ணுகிறார்கள்.

இஷ்வாகு, மாந்தாதா, யயாதி முதலான மன்னர்கள் அனைவரும் மகா பராக்கிரமசாலிகளாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே காலப்போக்கில் மரணமடைந்து, கதைகளிலே கூறப்படும் பாத்திரங்களாகத்தான் ஆனார்கள். எவரும் நித்தியமில்லை. இனி வரும் மன்னர்களின் கதியும் இத்தகையதாகத்தானிருக்கும். ஆதலால் எவரும் அகந்தை கொள்ளக்கூடாது.

இதைச் சிறப்பாக விளக்குகிறது புத்தர் குறித்த ஒரு கதை.

ஒருமுறை புத்தர் ஓரிடத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு பெண்மணியும் நின்​று கொண்டிருந்தாள். புத்தரின் பிரசங்கம் முடிந்ததும் கூட்டம் கலையத்தொடங்கியது. அந்தப் பெண்மணியும் கிளம்புவதற்காக எழுந்தாள். அவளது முகத்தில் தெரிந்த பொலிவு புத்தரை யோசிக்கவைத்தது.

​‘`பெண்ணே நீ எங்கிருந்து வருகிறாய்’’ என்று கேட்டார். அவர்களின் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

``தெரியாது.’’

‘`நீ எங்கு சென்றுகொண்டிருக்கிறாய்?’’

‘`தெரியாது.’’

``உனக்குத் தெரியாதா?’’

``தெரியும்.’’

‘`உனக்குத் தெரியுமா?’’

‘`தெரியாது.’’

அந்தப் பெண்ணின் இத்தகைய பதில்களை அங்கிருந்தவர்கள் ரசிக்கவில்லை. அவர்கள் அவளைக் கண்டித்தனர். அவள், தன் பதில்களுக் கான உட்பொருளை விளக்கினாள்.

‘`நான் ஒரு சலவைக்காரப் பெண். உண்மையில் ‘எங்கிருந்து நான் தோன்றினேன்’ என்பது எனக்குத் தெரியாது. எனவே ‘எங்கிருந்து வருகிறாய்’ என்ற கேள்விக்குத் `தெரியாது' என்றேன்.

அடுத்ததாக எங்கு எப்படிப் பிறப்பேன் என்பதும் எனக்குத் தெரியாது. எனவே ‘நீ எங்கு சென்றுகொண்டிருக்கிறாய்’’ என்ற கேள்விக்கும் ‘தெரியாது’ என்று விடையளித்தேன்.

உலகைவிட்டுச் செல்லவேண்டும் என்பது தெரியும். ஆனால், எப்போது செல்வேன் என்பது தெரியாது. எனவே, அடுத்தடுத்தக் கேள்விகளுக்கு ‘தெரியும்’ என்றும் ‘தெரியாது’ என்றும் பதிலளித்தேன். ஆக, புத்தரின் மறைமுகக் கேள்விகளுக்கு, நான் என் மனதில் தோன்றிய விடைகளை அளித்தேன்’’ என்றாள்.

ஆம்! தான் உண்மையில் யார் என்பதைப் பற்றிய தெளிவு அவளுக்கு நன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் இந்தத் தெளிவு இருப்பதில்லை. இறைவனைப் பற்றி ஆயிரம் ஐயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றி ஒரு கேள்விகூட எழுப்பிக்கொள்வதில்லை!

ஒருமுறை சக்கரவர்த்தி அக்பர் தன் அரசவைக் கவிஞர் தான்சேனுடனும் படைவீரர்களுடனும் பயணம் செய்துகொண்டிருந்தார். அக்பரின் மனைவியும் குழந்தையும் உடனிருந்தனர்.

அப்போது அக்பர் தான்சேனிடம் ‘`கடவுள், தானே எதற்காக இந்த உலகில் அவதாரம் எடுக்க வேண்டும். சிறுசிறு தெய்வங்களை இந்த வேலை களைச் செய்யச் சொல்லலாமே’’ என்று கேட்டார். தான்சேன் பதில் பேசவில்லை. அவருக்குப் பதில் தெரியவில்லை என்று அக்பர் நினைத்தார். சற்று நேரத்தில் தான்சேன் துணியில் சுற்றப்பட்டிருந்த அக்பரின் குழந்தையைத் தூக்கி நீரில் வீசினார்.

இதைக் கண்ட அக்பர் `ஐயோ’ என்று அலறியவாறே நீரில் குதித்தார். பிறகுதான் தெரிந்தது, தான்சேன் வீசியது ஒரு பொம்மையைத்​தான் என்று. அக்பர் மீண்டும் படகில் ஏறியதும் தான்சேன் கேட்டார்...

‘`படகில் இத்தனை காவலாளிகள் இருக்கும்போது, அவர்களைப் பணிக்காமல் நீங்களே ஏன் நீரில் குதித்தீர்கள்?'’

அக்பருக்கு, இறைவனின் அவதார நோக்கம் புரிந்தது!

வாழ்க்கையின் விசி​த்திரப் போக்கை உணர்ந்து, இறைவன் குறித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பாமல் நம்பிக்கைக்கொள்ளுங்கள். அது நல்வினைகளை உருவாக்கும்.

- நினைப்போம்...

ஆடி மாத வழிபாடுகள்...

டி மாதம் அம்பிகையின் மாதம் என்பார்கள். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு என அந்த மாதம் முழுவதுமே அம்பிகைக்கான ஆராதனை நாள்கள் எனலாம்.

கடுமையான கோடை முடிந்து அந்த ஆண்டு முழுமைக்குமான மழை நல்லமுறையில் பெய்ய வேண்டும் என `மாரியை' வரவேற்க மாரியம்மனை வணங்குவது நெடுங்கால வழக்கம். அவ்வகையில் அம்மனை வழிபட உகந்த மாதமாகத் திகழ்கிறது ஆடி மாதம்.

நினை அவனை! - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

வெள்ளிக்கிழமை அம்மனின் சிறப்புக்குரிய நாள். இந்த நாளோடு தட்சிணாயன புண்ணிய காலமும் சேர்வதால், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்மனுக்கு மகிழ்வைத் தரும் நாள்களாகின்றன. `ஆடி வெள்ளி விரதம் தேடிவந்து செல்வம் தரும்' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி வெள்ளிக்கிழமையில், அம்மனை ஒரு குத்து விளக்கிலோ புனித கலசத்திலோ எழுந்தருளச் செய்து, வழிபடுவது சிறப்பானது.

அப்போது, அம்மனுக்குப் பால் பாயசம், அதிரசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்குதல் வேண்டும். பூஜையில் துர்காஷ்டகம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி சொல்வது கூடுதல் விசேஷம்.

அதேபோல், ஆடி மாத அம்மன் பூஜையின்போது, உங்களால் இயன்ற எண்ணிக்கையில் சுமங்கலிகளுக்குப் பழம், ரவிக்கை, சீப்பு, குங்குமம், மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல், தாம்பூலம் ஆகியவற்றை அளிப்பது சிறப்பு. இதனால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்!