Published:Updated:

நினை அவனை! - 16

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

அக்ரே வஹ்னி ப்ருஷ்ட்டே பானூ

ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு

கரதல பிக்ஷஸ் தருதல வாஸ

ததபிந முஞ்சதி ஆசாபாச

கருத்து : பிச்சை எடுக்கிறான். வாசமோ மரத்தடிதான். குடிசையில் பகலில் சூரியன் கொளுத்துகிறது. இரவிலோ முழந்தாளில் முகவாயைப் பதித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். என்றாலும், ஆசை வலையில் சிக்கிக்கொண்டு திண்டாடுகிறான்.

`ஆன்மா என்பது ரதத்தில் உட்கார்ந்திருப் பவன். உடல் என்பது ரதம். எந்த மனிதனின் அறிவு சாரதியாக இயங்கி, மனம் என்ற கடிவாளத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதோ, அவனது உலக யாத்திரைதான் வெற்றிகரமாக நடக்கும். அவனே தெய்வத்தின் பதத்தை எய்துவான்’ என்கிறது கடோபநிஷதம்.

நினை அவனை
நினை அவனை

மேலும், `எவனது மனம் தனது கெட்ட பழக்கங்களை விடாமல் இருக்கிறதோ, அமைதி அடையாமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறதோ... அவனால் அறிவைக்கொண்டு ஆன்மாவைப் பெற முடியாது’ என்றும் சொல்கிறது.

ஆனால், உடல் எனும் ரதத்தைச் செலுத்தும் அறிவு என்பது பெரும்பாலும் திரையால் ​மூடப் பட்டுள்ளது. அது ஒரு மாயத் திரை!

குரு ஒருவரும் அவரின் சீடனும் யாத்திரை சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் நதியில் கைகால்களைச் சுத்தம் செய்துவர குரு சென்றார். அருகிலிருந்த மரத்தின் கீழ் இருக்கை ஒன்றில் சீடன் அமர்ந்து கண்ணயர்ந்துவிட்டான். அவன் விழித்தபோது, அதே மர நிழலில் குரு தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துப் பதறிப் போனான்.

“அடடா பெருங்குற்றம் இழைத்துவிட்டேனே. நீங்கள் கீழே அமர்ந்திருக்க, நான் அதைவிட உயரமான இருக்கையில் அமரலாமா’’ என்றபடி தடாலென குருவின் கால்களில் விழுந்தான்.

“பரவாயில்லை விடு’’ என்றார் குரு. ஆனால், சீடனின் மனம் கேட்கவில்லை; மீண்டும் மீண்டும் தன் குற்றத்தைக்கூறி அரற்றியபடி இருந்தான். குரு புன்னகைத்தார்.

பிறகு அவரது பார்வை மரத்தின் மேல்புறமாக இருந்த கிளை ஒன்றின்மீது விழுந்தது. அந்த மரக்கிளையில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. இப்போது குரு மீண்டும் புன்னகைத்தார். சீடன் புரிந்துகொண்டு அமைதியானான்.

`நம் இருவரையும்விட உயர்ந்த இடத்தில் இந்தக் குரங்கு உட்கார்ந்திருக்கிறது. உயர உட்கார்ந்தாலும் குரங்கு குரங்குதானே’ என்பதை உணர்த்தியது அந்தப் பார்வை.

சுகங்களில் மட்டுமல்ல, துக்கங்களிலும் மாயையின் நிழல் அழுத்தமாகவே படிந்துள்ளது. பல நிகழ்ச்சிகளின்போது, அந்த நொடியில் நாம் அனுபவிக்கும் சோகம் மிகவும் பெரிதாகத் தெரியும். ஆனால், அது மாயைதான். நம் வாழ்வில் கடந்து செல்லப்போகும் பல கணங்களில் அதுவும் ஒன்று அவ்வளவே.

இந்த அத்தியாயத்தின் பஜகோவிந்த பாடலில் சுட்டிக்காட்டப்படும் மனிதனுக்கு எந்த வசதியும் இல்லை. ஒரு துறவி, எந்தவித சூழலில் வசிப்பாரோ அதேபோன்ற வாழ்க்கைமுறைதான் அவனுடையதும். ஆனால், ஒரு துறவியையும் அவனையும் ஒன்றாகக் கருத முடியுமா? இருவரையும் முக்கியமாக வித்தியாசப்படுத்துவது ஒன்றுதான். துறவி விடுதலையானவர். ஆனால், மரத்தடிவாசியோ ஆசைக் கயிறுகளால் கட்டப் பட்டவன்.

ராவணன்கூட துறவி வேடமிட்டிருக்கிறான். ஆனால், அப்போது அவன் மனத்தில் சீதையின்மீது மோகம் பொங்கிக்கொண்டிருந்தது. ஆக, வாழும் சூழலும் உடுத்தும் உடையும் ஒருவனை ஞானியாக்குவதில்லை. அதோடு மனத்தூய்மையும் சேரும்போதுதான் உயர்வு கிட்டும். எவ்வளவு ராட்சதர்கள் பெருந்தவம் செய்தார்கள். எத்தனை அரும்வரங்களைப் பெற்றார்கள். ஆனால், அவர்களது கதி என்னவானது... யோசித்துப் பாருங்கள்; மனத்தூய்மையின் மாண்பு புரியும்.

`ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்’ என்கிறது திருமந்திரம். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்’ என்கிற அளவுக்கு இது செல்கிறது. அதாவது முக்தியடைய வேண்டும் என்ற ஆசைகளை விட்டுவிட வேண்டும் என்கிறது. முக்தி விருப்பத்தையே ஒரு வேட்கை என்றால் நாம் வேறென்ன சொல்ல!

ஆசையின் மாயத்தன்மை குறித்து கோபிகை களில் ஒருத்தியான மைத்ரேயி கேள்வி கேட்க, கண்ணன் அவளுக்கு இப்படிப் பதிலளித்தான்.

“ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. தனக்கு என்ன வேண்டும் என்பதுகூட அதற்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்றை வேண்டி அழுதது. அதற்கு ஒரு பொம்மை கொடுக்கப்பட்டது. அதை இப்படியும் அப்படியுமாக திருப்பிப் பார்த்து விட்டுத் தூக்கி எறிந்துவிட்டது. பிறகு அந்தக் குழந்தைக்கு ஒரு பழம் கொடுக்கப்பட்டது. அதில் சிறிதளவு தின்றுவிட்டு கோபத்துடன் ​தூக்கி எறிந்தது. அதற்குப் பிறகு ஒரு படம், ஒரு புத்தகம், மற்றொரு பொம்மை என்றெல்லாம் அடுத்தடுத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் தனக்குத் தேவை எதுவோ அது கிடைக்கும்வரை குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. அந்தக் குழந்தையைப்போலவே, உனக்கு என்ன தேவை என்பது உனக்கே விளங்கவில்லை. ஒன்று மாற்றி ஒன்று என முயற்சி செய்கிறாய். உனக்குத் தேவைப்பட்டது கிடைக்கும்வரை மனம் சமாதானம் அடையவில்லை.

கண்ணன்
கண்ணன்

நீயே யோசித்துப் பார்... உனக்குப் பிடித்ததாக எது எதையோ நினைத்துக்கொண்டிருந்தாய். ஆனால், அவையெல்லாம் உனக்கு வெவ்வேறு கட்டங்களில் பிடிக்காமல் போயின. இப்போது சுயநலமில்லாத, பேரின்பத்தை அடைய முயற்சி செய்கிறாய்.

வழிப்பறிக் கொள்ளையன், கொலை செய்பவன், தேசபக்தன், காதல் கீதங்களை எழுதும் காதலன்... இப்படி யாராக இருந்தாலும் எல்லோருமே மகிழ்ச்சியை அடையவே முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் வெவ்வேறு பொருள்களில் மற்றும் உணர்வுகளில் மகிழ்ச்சியடைகிறார்கள். முடிவு ஒன்றுதான். ஆனால் அதை அடையும் வழிகள் வேறுவேறு.​ அவற்றில் சில நல்லவை, சில தீயவை. வேறு சில இரண்டுமற்றவை. வெளிப்புற ஆசைகளை வேட்டையாடிய பிறகுதான் உண்மையான, நிரந்தரமான ஆனந்தம் என்பது கிடைக்கும்’’ என்றார் பகவான் கிருஷ்ணர்.

குட்டிமான் ஒன்று தன் தாயைப் பார்த்து, “நாயைவிட நீங்கள் அளவில் பெரிதாக இருக்கிறீர் கள். உங்களால் வேகமாக ஓடவும் முடியும். உங்களுக்குக் கொம்புகளும் உள்ளன. நாய் எதிர்ப்பட்டால் உங்களால் எளிதாக அதனுடன் சண்டையிட்டு வெல்ல முடியும். அப்படியிருந்தும் ஏதாவது நாய் ஒன்று ​​தூரத்தில் குரைத்தால்கூட ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்?’’ என்று கேட்டது.

அதற்குத் தாய்மான், “நீ சொல்வதெல்லாமே உண்மைதான். என்றாலும் நாயின் குரைப்புச் சத்தத்தைக் கேட்டவுடனேயே என் வீரம் எனக்குக் கைகொடுக்கவில்லை. பயம்தான் உண்டாகிறது. ஓடத்தொடங்கி விடுகிறேன்’’ என்றது.

இப்படித்தான் நாம் நம் மனவலிமையை உணராமல், உணர்ந்தாலும் செயல்படுத்தாமல் மீண்டும் மீண்டும் நச்சுவட்டத்தில் சுழன்று கொண்டிருக்கிறோம்.

- நினைப்போம்...